மனோரமா உடல் நலம் தேறிவிட்ட நிலையில் சமீபத்தில் பிரபல பத்திரிகை ஒன்றிற்கு அளித்த பேட்டியில் மனம் திறந்து பல விஷயங்களைப் பகிர்ந்துள்ளார். கடவுள் அருளால் எனக்கு 1500 படங்களுக்கு மேல் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. என் எல்லா வெற்றிகளுக்கும் பின்னால் இருந்தவர் என் அம்மா தான். அவரில்லாமல் இருப்பது வருத்தமான விஷயமே.
இப்போதும் நடிக்கும் வாய்ப்புகள் வருகின்றன. என் உடல் நிலை காரணமாக நிறையப் படங்களை ஒப்புக்கொள்வதில்லை எனக் கூறியுள்ளார் மனோரமா.பேராண்டி என்னும் படத்தில் தற்சமயம் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளேன். என் வாழ்க்கையின் மாற்றத்திற்கு முக்கியக் காரணம் கண்ணதாசன் தான். நீ ஹீரோயினாக நடித்தால் கண்டிப்பாக 3 அல்லது 4 வருடங்களில் உன்னை மக்கள் சினிமா துறையிலிருந்து ஒதுக்கி விடுவார்கள் எனக் கூறி என்னை காமெடி நடிகையாக்கி என்னால் முடியும் என நம்பியவர் அவர் தான்.
ஒருவேளை சினிமாவிற்குள் வரவில்லையெனில் என் அம்மாவின் ஆசை நான் மருத்துவம் படிக்க வேண்டும் என்பதே. அதற்காக முயற்சியும் செய்தேன். ஆனால் இப்போது என் பேரன் டாக்டர். இந்த வருடத்தில் எனக்கு எந்தக் கவலையும் இல்லை. அடுத்த பிறப்பிருந்தால் அதிலும் இதே மனோரமாவாகவே பிறக்க ஆசைப்படுகிறேன். என் சினிமா வாழ்வில் எத்தனையோ நினைவுகள் உள்ளன. ஆனால் பல விஷயங்கள் மறந்துவிட்டன.
எனினும் என்னால் மறக்கவே முடியாத இப்போதும் மனதில் புதிதாக இருக்கும் நிகழ்வு நான் நாடகம் நடித்துக்கொண்டிருந்த வேளையில் நடந்தது. மதுரை, காரைக்குடி போன்ற இடங்களில் ஆண்டாள் அவள் ஆண்டாள் என்ற நாடகத்தில் நாயகி வேடம். அதில் நான் அமைச்சராக நடித்தேன். அப்போது 15 அடி படிக்கட்டுகளில் இருந்து நான் இறங்கும்படியான ஒரு காட்சி. அப்போது நாடகத்தில் தயாரிப்பாளர் ராஜேந்திரன் என்னிடம் ஒரு கண்ணாடியை போட்டுக்கொண்டு இறங்கும் படி சொன்னார்.
நான் படியில் ஏறி கண்ணாடியைப் போட்ட போது அனைத்தும் மங்கலாக தெரிந்தது. மேலும் 15 படிகள் 30 படிகள் போல்தெரிந்தன. எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. மக்கள் வேறு பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். சரி என தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கண்களை மூடிக்கொண்டே படியில் இறங்கினேன். நல்லவிதமா பாதுகாப்பா இறங்கிட்டேன். அன்னிக்கு நான் கீழ விழுந்திருந்தா இப்போ இந்த மனோரமாவை உயிரோட பார்த்திருக்க முடியாது என கூறி கண்கள் கலங்கியுள்ளார்.
No comments:
Post a Comment