''பிறந்தது, வளர்ந்தது எல்லாமே கர்நாடகாவுலதான். பெங்களூருல கன்னட இலக்கியம் படிச்சேன். காலேஜ் லெக்சரர், ஃபேஷன் டிசைனிங்னு வாழ்க்கை போச்சு. அப்போ ஒரு படத்தோட ஷூட்டிங். அதில் வேலைபார்த்த என் நண்பரைப் பார்க்கப் போனேன். 'வந்தது வந்துட்ட... அப்படியே டைரக்டரைப் பார்த்துட்டுப் போ’னு சொன்னார். சரினு போய்ப் பார்த்தேன். அவர் என்ன நினைச்சாரோ தெரியலை, 'போய் போட்டோஸ் கொண்டு வாங்க’னு சொன்னார். அப்படிக் கிடைச்சதுதான் முதல் படவாய்ப்பு'' - அட்டகாசமாகச் சிரிக்கும் கிஷோர், தமிழ் சினிமாவின் குணச்சித்திரப் பாத்திரங்களில் பின்னியெடுக்கும் 'பொல்லாதவன்’.
'' 'ஆடுகளம்’, 'பொல்லாதவன்’, 'விசாரணை’னு இயக்குநர் வெற்றிமாறன் படங்களில் தொடர்ந்து நடிக்கிறீங்க. உங்களுக்குள்ள அப்படி என்ன கெமிஸ்ட்ரி?''
''என்கிட்ட எப்படி வேலை வாங்கணும்னு அவருக்கு நல்லா தெரியும். 'பொல்லாதவன்’ செல்வம், நார்த் மெட்ராஸ் ஆளு. அந்த ஸ்லாங், பாடிலாங்வேஜ்னு எல்லாமே சவால்தான். ஆனா, அந்த டீம் அவ்வளவு சப்போர்ட் பண்ணாங்க. விக்ரம் சுகுமாரனும் நரேன் சாரும்தான் நார்த் மெட்ராஸ் தமிழ் எப்படிப் பேசுறதுனு பயிற்சி கொடுத்தாங்க. டப்பிங்ல கூட இருந்ததும் அவங்கதான். எப்படியோ கஷ்டப்பட்டுப் பேசி முடிச்சேன். படம், ரிலீஸுக்குப் பிறகு எனக்கு எக்கச்சக்க ரெஸ்பான்ஸ். வெற்றிமாறன் போன் பண்ணி, 'படத்துல கிஷோர்தான் கரெக்ட்டா மெட்ராஸ் பாஷை பேசுறார்னு எல்லாரும் சொல்றாங்க’னு சொன்னார். கேட்கவே சந்தோஷமா இருந்துச்சு. ஆனா 'ஆடுகளம்’ பண்ணும்போது என்னால மதுரை ஸ்லாங் பேச முடியலை. நல்லவேளை எனக்கு சமுத்திரக்கனி சார் டப்பிங் பேசினார். 'ஆடுகளம்’ படத்தோட மொத்த டப்பிங்கும் 100 நாட்கள் பண்ணாங்களாம். என் கேரக்டருக்கு நான் டப்பிங் பேசியிருந்தா எனக்கு மட்டுமே 100 நாட்கள் ஆகியிருக்கும்.''
''வில்லனா நடித்து பேர் வாங்கிட்டீங்க. ஆனா, ஹீரோவா நடித்தபோது அந்த அளவுக்கு வரவேற்பு இல்லையே?''
'' 'சந்திரமுகி’ ஷூட்டிங்ல ரஜினி சாரைப் பார்த்தப்போ, நான் நடிச்ச 'கன்டி’ படத்தைக் குறிப்பிட்டு 'நல்லா நடிச்சிருந்தீங்க’னு சொன்னார். 'சூப்பர் ஸ்டார் வரைக்கும் நம்ம நடிப்பைப் பார்க்கிறாங்களா?!’னு ஒரே பரவசம். சினிமாவில் இன்னொரு பக்கமும் இருக்கத்தானே செய்யும்? 'போர்க்களம்’ படத்தின் வியாபாரம் வேற விஷயம்... ஆனால் கன்னடத்துல இப்பவும் புதுப் பசங்களுக்கு 'டெக்னிக்கலா நல்ல படம்’னு சொல்லி அதை ரெஃபர் பண்றாங்க. 'பார்வையற்றவரா நல்லா நடிச்சிருந்தீங்க’னு எனக்கும் நிறையப் பாராட்டுக்கள். ஆனா, என்ன பண்றது... சில பிரச்னைகளால் அந்தப் படம் அவ்வளவா ரீச் ஆகலை. படத்தின் டி.வி ரைட்ஸ்கூட விற்காம அப்படியே முடங்கிருச்சு. டி.வி முலமாக்கூட அது ஜனங்களுக்குப் போய் சேரலை.''
''கன்னட சினிமாவை யாரும் கவனிக்காத காலம் ஒண்ணு இருந்துச்சு. 'லூசியா’ படத்துக்குப் பிறகு அது அப்படியே மாறிடுச்சு. இதை எப்படிப் பார்க்கிறீங்க?''
''ராஜ்குமார், விஷ்ணுவர்தன் போன்ற நடிகர்கள் நடிச்ச காலம்தான், கன்னடத்துல கோல்டன் பீரியடு. மார்க்கெட், பட்ஜெட்னு நிறைய சிரமங்கள் இருந்தாலும் அப்போ அவ்வளவு நல்ல படங்கள் வரும். அதுக்குனு பெரிய ரசிகர் வட்டமும் இருந்தது. பாலுமகேந்திரா மாதிரி பெரிய லெஜண்ட், கன்னடத்துல அறிமுகமானது இதனாலதான். ஒருகட்டத்துக்கு மேல இது தேக்கநிலையை அடைஞ்சுருச்சு. புதுசா யோசிக்க ஆள் இல்லாம, செஞ்சதையே வேற வேற மாதிரி பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. தவிர, டெக்னிக்கலா சினிமா ஈஸியாக ஆரம்பிச்சதும், யார் வேணும்னாலும் சினிமா பண்ணலாம்கிற நிலைமை வந்தது. என்னதான் ஈஸின்னாலும் முறையான அனுபவம் இல்லாம எதுவும் பண்ண முடியாது. இப்போ ஒரு நல்ல டீம் இறங்கியிருக்காங்க. வித்தியாசமா யோசிக்கிறாங்க. அவங்க மேல நிறைய நம்பிக்கை இருக்கு.''
''இயற்கை விவசாயத்தில் உங்களுக்கு ஆர்வமாமே?''
''காலேஜ் படிக்கும்போதே மாட்டுப்பண்ணை வைக்க கடன் கேட்டு பேங்க்குக்குப் போனேன். அப்போல்லாம் கடன் வாங்குற அளவுக்கு என்கிட்ட சொத்து எதுவும் இல்லை. இப்போ கொஞ்சம் இடம் வாங்கி இயற்கை விவசாயம் செய்றேன். எனக்குத் தெரிஞ்சவங்களையும் பண்ண சொல்றேன். நம்ம பிள்ளைங்களுக்கு எந்தச் சொத்தும் விட்டுட்டுப் போகலைன்னாலும், சுத்தமான காற்றையும் நல்ல தண்ணியையுமாவது விட்டுட்டுப் போவோமே!''
No comments:
Post a Comment