சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

19 Sept 2015

வைகோ நல்ல தலைவர்தான்...ஆனால்? - ஓர் அலசல் ரிப்போர்ட்!

ரசியல் கட்சி உருவாக பல காரணங்கள் இருக்கலாம் அல்லது தேவைப்படலாம். ஆனால், கட்சி உடைவதற்கு ஒரு சில காரணங்கள் போதும். பெரும்பாலான சமயங்களில் ஒரே ஒரு காரணமே கட்சி உடைவதற்கு காரணமாக இருந்து விடுகிறது. எதிலும், சமரசம் செய்துகொள்ளப் போவதில்லை என்ற தலைவர்களின் முனைப்புதான் கட்சிகள் பிளவை சந்திக்க காரணமாக அமைகிறது. தமிழக அரசியல் களத்தை உற்று நோக்கினால் இதனை நாம் உறுதி செய்துகொள்ள முடியும்.

தலைவர்களின் தன் முனைப்பால் நிகழ்ந்த பிளவுகள்!

திராவிடர் இயக்கங்கள் பல பிரிவாய் சிதறி கிடப்பதற்குக்கூட தலைவர்களின் தன் முனைப்புதான் காரணமாய் அமைந்திருக்கிறது. மணியம்மை திருமணத்தை முன்னிட்டு பெரியாரிடம் இருந்து விலகி வந்தார் அண்ணா. அவரோடு வந்து தி.மு.க.வுக்கு கொள்கைகளை உருவாக்கிக் கொடுத்த ஈ.வி.கே.சம்பத், கருணாநிதியின் போக்கு பிடிக்காமல் கட்சியில் இருந்து விலகினார். அதே கருணாநிதியின் போக்கு பிடிக்காமல் தி.மு.க.வில் இருந்து வெளியேறி அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆரும், ம.தி.மு.க.வை வைகோவும் உருவாக்கினார்கள்.

எம்.ஜி.ஆர். காலத்துக்கு பின்னர் அ.தி.மு.க.வில் ஏற்பட்ட மிகப்பெரிய பிளவு ஜெயலலிதா - ஜானகி அணி பிளவுதான். தற்போதைய கருணாநிதி, ஜெயலலிதா காலத்தில் தி.மு.க.வில் இருந்து அ.தி.மு.க.வுக்கும், அ.தி.மு.க.வில் இருந்து தி.மு.க.வுக்கும் மாறி மாறி பயணிப்பது வாடிக்கையாகி விட்டது. தலைவர்களின் தன் முனைப்புதான் இதற்கும் கூட காரணமாய் சொல்லப்பட்டது.

அரசியல் சக்கரம் பின்னோக்கியும் சுழலும்!

தி.மு.க.வில் இருந்து பிரிந்து வைகோ உருவாக்கிய ம.தி.மு.க. மிகப்பெரிய பிளவுகளை சந்திக்கவில்லை என்றாலும், பிளவுகள் நிகழாமல் இல்லை. அரசியலில் சக்கரம் முன்னோக்கி மட்டுமல்ல, பின்னோக்கியும் சுழலக்கூடியது. அப்படி தி.மு.க.வில் இருந்து ம.தி.மு.க.வுக்கு வந்தவர்கள் பலர், ஒருவர் ஒருவராக மீண்டும் தி.மு.க.வில் தங்களை இணைத்துக்கொண்டனர். பொன்.முத்துராமலிங்கம், மீனாட்சி சுந்தரம், லக்குமணன், தங்கவேலு, கே.எஸ்.ராதாகிருஷ்ணன், செஞ்சி ராமச்சந்திரன், எல்.கணேசன், மு.கண்ணப்பன், நாஞ்சில் சம்பத் என முக்கிய தலைவர்கள் பலர் ஒவ்வொருவராக வெளியேறினார்கள். கட்சியின் தலைவர் வைகோவை குற்றஞ்சாட்டி தான் கட்சியை விட்டு வெளியேறினார்கள். இதில் செஞ்சி ராமச்சந்திரனும், எல்.கணேசனும் போட்டி ம.தி.மு.க.வை துவக்கும் அளவுக்கு பிரச்னை விஸ்வரூபமானது. நாஞ்சில் சம்பத் தவிர பெரும்பாலானோர் தி.மு.க.வில் ஐக்கியமானார்கள். நாஞ்சில் சம்பத் மட்டும் அ.தி.மு.க.வுக்கு சென்றார்.

இப்போது மீண்டும் ஒரு பிளவை சந்திக்கிறது ம.தி.மு.க. இதுவரை ஒருவர் ஒருவராக கட்சியை விட்டு வெளியேறியவர்கள், இப்போது அணியாக வெளியேறத் துவங்கியுள்ளனர். இந்த பிளவுக்கும் காரணமாய் சொல்லப்படுவது வைகோவின் அணுகுமுறைதான்.

ஆண்டுதோறும் ம.தி.மு.க. தவறாமல் கொண்டாடும் அண்ணா பிறந்த நாள் மாநாட்டு ஏற்பாடுகளின் போதுதான் இந்த பிளவுகள் நிகழத்துவங்கின. திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு விழா என்ற பெருமையோடு கொண்டாடப்பட்ட மாநாடு, வைகோவுக்கு மகிழ்ச்சியை அளித்திருக்க வேண்டும். ஆனால், அப்படி அமையாமல் பார்த்துக்கொண்டார்கள் வைகோவின் போக்கு பிடிக்காத இரண்டாம் கட்ட தலைவர்கள் சிலர்.

பரபரக்க வைத்த அந்தக் கடிதம்!

மாநாட்டுக்கு சில நாட்களுக்கு முன்னரே கட்சியில் அதிருப்தி வெளிப்பட்டது. உயர்மட்டக்குழு உறுப்பினர் கணேச மூர்த்தி,  வைகோவின் மீது அதிருப்தி கொண்டு வெளியேறுகிறார் என செய்தி வெளியானது. கணேச மூர்த்தி கட்சியை விட்டு வெளியேறுவதாக வெளியான அந்த செய்தியை கட்சியும் மறுத்தது. கணேச மூர்த்தியும் மறுத்தார். ஆனால், கட்சியில் அதிருப்தி இல்லை என கட்சியும் சொல்லவில்லை. கணேச மூர்த்தியும் சொல்லவில்லை.

அதே நேரத்தில் வைகோவையும், வைகோவின் போக்கையும் கடுமையாக விமர்சித்து,  'உண்மை தொண்டர்கள்'  எனும் பெயரில் ம.தி.மு.க. நிர்வாகிகளுக்கு கடிதம் ஒன்று வந்தது. 'அதிக சுடுகாடுகளுக்கு செல்பவன் நான் என வைகோ அடிக்கடி சொல்வார். போகிற போக்கில் கட்சியையும் அவர் சுடுகாட்டுக்கு கொண்டு சேர்க்காமல் விடமாட்டார்' என அந்தக் கடிதத்தில் சொல்லப்பட்டவை ஒவ்வொன்றும் மிகக் கடுமையான வார்த்தைகள். இந்த கடிதம் கட்சி நிர்வாகிகளிடம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆனால் நிர்வாகிகள் பலர் இந்த கடிதத்தைப் பார்த்து கொந்தளிக்கவில்லை.

'அ.தி.மு.க. வென்றாலும் பராவாயில்லை' - வைகோ

இந்த கடிதத்தின் தாக்கம் குறைவதற்கு முன்பாய் காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் பாலவாக்கம் சோமு தி.மு.க.வில் தன்னை இணைத்துக்கொண்டார்.
"கடந்த 2 மாதங்களுக்கு முன் ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. அரசை வீழ்த்த, தி.மு.க.வுடன் நாம் கூட்டணி வைத்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினோம். இதனை வைகோ ஏற்றுக்கொண்டு, தக்க தருணத்தில் அறிவிப்பேன் என்றார். ஆனால் கடந்த 7 ஆம் தேதி நடந்த ம.தி.மு.க. உயர்நிலைக்குழு கூட்டத்தில், 5 கட்சிகளுடன் தான் கூட்டணி என்றும், தி.மு.க.வுடன் கூட்டணி வைக்கப்போவதில்லை என்றும் சூரியன் உதிக்கும் திசை மாறினாலும் என் முடிவில் மாற்றம் இல்லை என்றும் வைகோ கூறினார்.

இது எங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 5 கட்சிகளுடன் போட்டியிடுவதால் வாக்குகள் பிரிந்து அ.தி.மு.க. வெற்றி பெற்றுவிடுமே என்று கேட்டோம். 'அ.தி.மு.க. வெற்றி பெறட்டும். தி.மு.க.வைவிட அ.தி.மு.க.வே மேல்' என்றார். இந்த பேச்சு என்னை போன்றவர்களை வெறுப்பு அடைய செய்தது. வைகோவை பொறுத்தவரையில், சட்டமன்றத் தேர்தலாக இருந்தாலும், நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தாலும் தி.மு.க.வுக்கு எதிராகவே முடிவு எடுப்பார். என்னை போன்றவர்கள் இதை வெகு நாட்களாக அறியாமல் இருந்து விட்டோம்" என்றார் பாலவாக்கம் சோமு.

மாநாட்டிலும் தென்பட்டது அதிருப்தி

அடுத்த ஓரிரு தினங்களில் திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் நடந்தது ம.தி.மு.க.வின் மாநாடு. மாநாட்டில் 'எல்லோரும் கட்சியை அழிக்க நினைக்கிறார்கள். அது ஒருபோதும் முடியாது' என கொந்தளிப்பார்கள் என எதிர்பார்த்திருப்பார் வைகோ. ஆனால், அப்படி நடக்கவில்லை. கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா மட்டும் தி.மு.க.வுக்கு எதிராய், வைகோவுக்கு ஆதரவாய் குரல் கொடுத்தார். தி.மு.க.வையும், கருணாநிதியையும் மல்லை சத்யா கடுமையாக திட்டித் தீர்த்தபோது மேடையில் இருந்த வைகோ, உற்சாகமாய் கை தட்டினார். ஆனால், தன்னோடு மேடையில் இருந்த ஓரிருவர் மட்டுமே கை தட்டினார்கள் என்பதை கவனிக்க தவறிவிட்டார் அல்லது அதை காணாததுபோல் இருந்துவிட்டார்.

அதே மாநாட்டில் பேசிய மற்றவர்கள் பொடி வைத்து பேசினர். 'நாம் நல்ல கட்சி என பெயர் எடுத்துள்ளோம். ஆனால், அதை நம்மால் பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை. வாக்கு வங்கியை பலப்படுத்த முடியவில்லை. அப்படியென்றால் நாம் ஏதோ தவறு செய்கிறோம் என்பதுதானே அர்த்தம்' என கட்சி நிர்வாகிகள் சிலர் பேசியது, வைகோவை நோக்கிய கேள்வியாகக்கூட இருக்கலாம். ஆனால், இதையும் வைகோ கவனிக்கவில்லை அல்லது கவனிக்காததுபோல் இருந்துகொண்டார்.

அதன் விளைவு மாநாட்டில் மது ஒழிப்பு - வைகோ பிரசாரக் கண்காட்சியை திறந்து வைத்த கட்சியின் பொருளாளர் மாசிலாமணி, மேடையில் வைகோவோடு முன்வரிசையில் அமர்ந்திருந்த மகளிர் அணி செயலாளர் குமாரி, கட்சியின் மாவட்ட செயலாளர்கள் சிலர் என கடந்த இரு தினங்களில் 5 கட்சி நிர்வாகிகள்,  கட்சியை விட்டு வெளியேறிவிட்டனர். இன்னும் இந்த பட்டியல் நீளுமோ என்பதுதான் ம.தி.மு.க. தொண்டனின் தற்போதைய கவலை.

திடீர் பிளவு: காரணம்தான் என்ன?

இந்த பிளவுக்கு என்னதான் காரணம்... கடிதமும், அதில் சொல்லப்பட்டவையும் உண்மைதானா? இதுகுறித்து ம.தி.மு.க.வினர் சிலரிடம் பேசினோம். விரக்தியோடுதான் பேசத்துவங்கினார்கள்.
"சரியான நேரத்தில், தவறான முடிவு எடுக்கும், சரியான தலைவர் வைகோ என ஒரு பேச்சு உண்டு. அதில் ம.தி.மு.க.வில் இருக்கும் பலருக்கே மாற்று கருத்து இருக்க வாய்ப்பு இல்லை. தேர்தல் அரசியலில் இருந்துகொண்டு, மக்கள் பிரதிநிதிகளைப் பெறாமல் இருப்பது சரியானது அல்ல. ம.தி.மு.க. நேர்மையான கட்சி என பெயர் கொண்டுள்ளது. நேர்மையான தலைவர் என வைகோவும் பெயர் எடுத்துள்ளார். ஆனால், தேர்தல் அரசியலில் நாம் தோற்க என்ன காரணம்? நம்மால் வாக்கு வங்கியைப் பலப்படுத்த முடியாதது ஏன்? இதைத்தான் நாம் திரும்ப திரும்ப கேட்கிறோம். கடந்த ஜூன் மாதத்தில் நடந்த உயர்நிலைக்குழு கூட்டத்தில் தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்போம் என்றார். தி.மு.க.வினருடன் நெருக்கமாக இருக்க வேண்டும் என்றும் சொன்னார்.

அதன் பின்னர் ஸ்டாலின், வைகோவை சந்தித்தார். கலைஞருடன் வைகோ பேசினார். கருணாநிதி இல்லத் திருமணத்துக்கு சென்று ஸ்டாலினையும், கலைஞரையும் பாராட்டினார். ஆனால், அடுத்த சில நாட்களில் நடந்தது என்ன என்பது எங்களுக்கு தெரியாது. தெரியப்படுத்தவும் இல்லை. கூட்டணி விஷயத்தில் அவசரப்பட வேண்டாம் என பலமுறை சொல்லியும், திருப்பூர் மாநாட்டில் தி.மு.க., அ.தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை என அறிவித்தார். இப்போது இதை அறிவிக்க வேண்டிய எந்த கட்டாயமும் இல்லை. இதுதான்  பலருக்கு அதிருப்தி ஏற்பட காரணம்.

இன்னும் இருக்கிறது. வைகோ சரியான தலைவர்தான். அதை யாரும் மறுக்கவில்லை. ஆனால், சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்காத சரியான தலைவராக இருப்பதில் என்ன பலன் கிடைக்கப்போகிறது? உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக முடிவெடுக்க வேண்டிய நேரத்தில் உணர்ச்சி வசப்பட்டு, அவசரப்பட்டு செயல்படுவது பலனளிக்காது என்பதை அவரிடம் பலமுறை சொல்லியாகிவிட்டது. பலமுறை அனுபவமாகவும் அவர் கற்றுக்கொண்டதுதான் இது. இருந்தாலும் அப்படித்தான் இருப்பேன் என்றால் என்னதான் செய்ய முடியும்?" என கொட்டித்தீர்க்கிறார்கள் கட்சியின் நிர்வாகிகள்.

வைகோ என்ன சொல்கிறார்?

ஆனால், வைகோ இதற்கு வேறு காரணத்தை சொல்கிறார். "ம.தி.மு.க.வை கருவறுக்க திட்டமிடுகிறது தி.மு.க. இதற்கு தி.மு.க. தலைவரும், அவரது மகனும்தான் இதற்கு காரணம். 1991ம் ஆண்டு என்மீது குற்றஞ்சாட்டி நிர்வாகிகளுக்கு கடிதம் எழுதி என்னை கட்சியை விட்டு நீக்கினார்கள். இப்போது ம.தி.மு.க.வை அழிக்க அதே முயற்சியை செய்கிறார்கள். ஸ்டாலினின் ஏற்பாட்டில்தான் இதெல்லாம் நடக்கிறது. இத்தனைக்கும் பிறகு நான் ஏன் தி.மு.க.வுடன் சேர வேண்டும்? தி.மு.க., அ.தி.மு.க. உடன் கூட்டணி வைத்தால் அவர்களின் பழிபாவங்களுக்கு நாமும் ஆளாக நேரிடும் என்பதால் அவர்களோடு கூட்டணி இல்லை என அறிவித்துள்ளோம். ம.தி.மு.க. தலைவர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம் அல்ல. தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம். தலைவர்கள் வெளியேறுவது கட்சியை பாதிக்காது. எம்.பி., எம்.எல்.ஏ. பதவி வேண்டும் என்பவர்கள் கட்சியை விட்டு வெளியேறுகிறார்கள்" என்கிறார் வைகோ.

இன்னும் பலர் ம.தி.மு.க.வில் இருந்து வெளியேறுவதாக சொல்கிறார்கள். அவர் வெளியேறுகிறார், இவர் வெளியேறுகிறார் என செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இவை உணமை என சொல்வதற்கில்லை என்றபோதிலும், நடக்காது என்றும் புறந்தள்ளி விட முடியாது. நெருப்பு இன்னும் முழுமையாக அணைந்து விடவில்லை. ஏனென்றால் ம.தி.மு.க.வில் இன்னும் புகைச்சல் இருக்கிறது. அப்படியென்றால் நெருப்பும் இருக்கத்தானே செய்யும். நெருப்பு எங்கே இருக்கிறது என்பதை கண்டறிந்து,  அதை அணைக்க வேண்டியதுதான் இப்போது செய்ய வேண்டியது. இல்லாவிட்டால் மீண்டும் தீ பற்றும். ம.தி.மு.க. உடைவதற்கான எல்லா காரியங்களும் நடந்து வருகிறது. அதை வைகோ உணர்ந்து கொள்ள வேண்டும்.

நாளை உயர்நிலைக்குழு கூட்டத்தை அவசர அவசரமாய் கூட்டியுள்ளார். வைகோ கவனமாய் இருக்க வேண்டிய நேரம் இது! 



No comments:

Post a Comment