சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

18 Sept 2015

அம்மா... அப்பா... நடுவில் குழந்தை...

தாயின் இறகுச் சூட்டில் இதம் பெறும் குஞ்சுப் பறவை போல, பெற்றோருடன் தங்களை இறுக்கிக் கொண்டு தூங்கும் குழந்தைகள் நிறைய. தாய்ப்பாலுக்காகவும் அரவணைப்புக்காகவும் அழும் பிஞ்சு சிசு முதல், 'பெட் டைம் ஸ்டோரீஸ்' கேட்டபடி அம்மா மீதோ... அப்பா மீதோ கால் போட்டால்தான் தூக்கமே வரும் என அடம் பிடிக்கும் சற்றே வளர்ந்த பிள்ளைகள் வரை... பெற்றோருடன் பெட்ரூமில் குழந்தைகளின் ஆக்கிரமிப்பு எப்போதும் உண்டு.
ஆனால், இப்படி பெற்றோருடன் உறங்கும் குழந்தைகளின் உடல், மனநலம் குறித்த அக்கறையில் இன்னொரு அதிர்ச்சிகரமான பக்கமும் இருக்கிறது என்றால், அலறத்தானே வேண்டியிருக்கும்!
முதலில் உடல் நலம் பற்றிப் பார்ப்போம். பிறந்தது முதல் ஒன்று அல்லது ஒன்றரை வயது வரை குழந்தைகளின் மத்தியில் நிகழும் காரணம் அறியப்படாத மரணங்களை 'சிட்ஸ்' (SIDS- Sudden infant death syndrome) என்கிறார்கள் மருத்துவர்கள். சர்வதேச அளவில் நான்கு வயது வரை சவாலாக இருப்பதும் இந்த விடை தெரியாத சிசு மரணங்கள்தான். மேற்படி அசம்பாவிதங்களைத் தவிர்க்க, அவ்வப்போது காரணங்களைக் கண்டுபிடித்துச் சொல்லி வருகிறது குழந்தை மருத்துவ வல்லுநர்கள் குழு. அப்படியான காரணங்களில் லேட்டஸ்டாக, குழந்தைகளுடன் ஒரே படுக்கையில் உறங்கும் பெற்றோர்களை நோக்கிச் சுட்டுவிரல் நீட்டியிருக்கிறது அமெரிக்கக் குழந்தை மருத்துவர்கள் சங்கம்.
பெற்றோர்க்கு அதிர்ச்சியளிக்கும் இந்தச் செய்தியை... திருச்சியைச் சேர்ந்த குழந்தை மருத்துவ நிபுணரான சுரேஷ் செல்லையா ஆமோதிக்கிறார்.

படுத்துக் கொண்டே பால் புகட்டாதீர்கள்!
''முதலாவது, ஒபிஸிட்டி எனப்படும் மிகை பருமன் நோய்க்கு ஆளாகியுள்ள பெற்றோர் மத்தியில் உறங்கும் குழந்தை, நிதர்சனத்தில் நெருக்கடியை உணர்கிறது. நள்ளிரவில் பாலுக்கு அழுமே என அருகிலேயே குழந்தையைத் தூங்க வைக்கும் தாய்மார்கள், அசதியில் பெரும்பாலும் படுத்துக்கொண்டே பால் புகட்டுவது குழந்தை யின் மூச்சுக்கு எமனாகிறது. அதேபோல பால் உறிஞ்சும் இடைவெளிகளில் குழந்தை அதிக அளவில் காற்றை விழுங்கியிருக்கும். புகை அல்லது மது பழக்கமுடைய அப்பாக்களுடன் குழந்தைகள் உறங்குவதிலும் ஆபத்து இருக்கிறது. இப்படிப் பல பிரச்னைகள், பெற்றோர் ஒரே படுக்கையைக் குழந்தையுடன் பகிர்ந்து கொள்வதால் ஏற்படுகின்றன. இதற்குத் தீர்வு, ஒரே அறை, ஆனால் அருகிலேயே வேறு படுக்கை என்பதுதான்'' என்ற சுரேஷ் செல்லையாவிடம், உலகளவில் 'சிட்ஸ்' மரணங்களின் பாதிப்பில் முன்னணியில் இருக்கும் பிற காரணிகளையும் கேட்டோம்.
''மிகவும் இளவயது தாய்க்குப் பிறக்கும் குழந்தைகள், குறை பிரசவத்தில் பிறப்பவர்கள், அடுத்தடுத்த பிரசவங்களுக்கு இடையே போதுமான இடைவெளி இல்லாது பிறந்தவர்கள், பிறவியிலேயே இதயம், நுரையீரல் என பாதிப்புகளோடு இருப்பவர்கள்...'' என்று சுட்டிக்காட்டினார் சுரேஷ் செல்லையா.
நாக்கில் தேன் தடவாதீர்கள்!
இவற்றுடன், சிசு வளர்ப்பில் இளம் தாய்மார்கள் தரப்பில் கவனத்தில் கொள்ளவேண்டிய இன்னும் சில முக்கியக் கூறுகளைக் குறிப்பிடுகிறார் மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவர் வீணா.
''காதில், மூக்கில் எண்ணெய் விடுவது, சளியை நீக்க வாய் வைத்து உறிஞ்சுவது கூடவே கூடாது. தொப்புள் கொடி புண்ணைக் குணப்படுத்த டாக்டர் பரிந்துரைக்கும் மருந்துகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். குழந்தை முகத்தில் பவுடரை பஃப் மூலம் அடிப்பது, மூச்சைப் பாதிக்கும். சகல தரப்பினரும் பல காரணங் களுக்காக குழந்தையின் நாக்கில் தேன் தடவுகிறார்கள். இது தவறு. ஒன்றரை வயது வரை தேன் தவிர்க்கப்பட்டாக வேண்டும்'’ என்று கண்டிக்கிறார் வீணா.
அப்பா... அம்மா... தப்பா?
'சிட்ஸ்' மரணங்கள் தொடர்பான இந்த எச்சரிக்கைக் குறிப்புகள் சின்னக் குழந்தைகளின் உடல் நலம் தொடர்பானவை. அடுத்து வருவது... சற்றே வளர்ந்த குழந்தைகளுக்கான மனநலம் தொடர்பானது. இரண்டிலும் பெற்றோருடனான படுக்கை மற்றும் உறக்கத்தில் விபரீதங்கள் புதைந்திருந்தாலும், சற்றே வளர்ந்த குழந்தைகளை அணுகுவது... கொஞ்சம்  சிக்கலானதுதான். அப்படி என்ன பிரச்னை இது என்கிறீர்களா? குழந்தை உறங்கிவிட்டான் என்ற அலட்சியத்தில் கணவன் - மனைவியாக நெருக்கத்திலிருக்கும் அப்பா, அம்மாவை எசகுபிசகாகப் பார்க்க நேரிடும் குழந்தைகளின் மனநலம் கேள்விக் குறியாவதுதான் இங்கே பிரச்னை.
''அப்படிப் பார்க்க நேரிடும் குழந்தையின் வயது, வளரும் சூழல், பக்குவம் இவற்றைப் பொறுத்து அதன் மன பாதிப்புகள் நிகழ்காலத்தில் துவங்கி எதிர்கால குடும்ப வாழ்க்கை வரை பாதிப்பை உண்டு பண்ணக்கூடியது'' என்கிறார் ஆம்பூரைச் சேர்ந்த 'ஃபேமிலி தெரபிஸ்ட்’ சிவக்குமார். அப்படியான அசாதாரண சூழ்நிலை நிகழ்ந்து விட்டால், பொறுப்பான பெற்றோர் செய்ய வேண்டியது குறித்தும் விளக்குகிறார்.

பதிலில் எச்சரிக்கை தேவை!
''பெரும்பாலான விவரமறியாக் குழந்தைகள் நேரடியாகப் பெற்றோரிடமே கேள்வி கேட்பார்கள். மாறாக... திடீரென விலகுவது, வெறுப்பது, சரியாகப் பேசாதது என குழந்தைகள் இருப்பின், பரிவாகப் பேச்சுக் கொடுப்பதன் மூலமாக அவர்களின் மன பாதிப்பை அறிய முடியும். இரண்டு வகையான உரையாடலின்போதும் குழந்தைகள் தரப்பிலிருந்து எழுப்பப்படும் விபரீதமான கேள்விகளுக்கு பெற்றோர் எச்சரிக்கையாக பதில் சொல்ல வேண்டும். அப்படியான பதிலில் முழு உண்மையும் கூடாது; முழு பொய்யும் கூடாது. குழந்தையின் வயது, பக்குவம் இவற்றைப் பொறுத்து பதிலைத் தீர்மானிக்கவேண்டும்.
அரசல்புரசலாக புரிய வையுங்கள்!
கணவன், மனைவி உறவில் பொதிந்திருக்கும் அந்யோன்யத்தை குழந்தை வளர்ப்பின் ஆரம்பத்திலேயே உணர்த்திவிடுவது நல்லது. அதாவது, 'உன் மீது நாங்கள் கொண்டிருக்கும் பிரியம் போலவே எங்களுக்குள்ளும் பிரியம் உண்டு’ என்று உணர்த்துவது. குழந்தை அருகிலிருக்க, பெற்றோர் தமக்குள் அன்பைப் பரிமாறிக்கொள்வது, லேசாக அணைப்பது போன்ற நெருக்கத்தை உணர்த்தும் சந்தர்ப்பங்களாலும் உணர்த்தலாம். இப்படியாக அம்மா - அப்பா இடையே உணரப்படும் புரிதலும் புனிதமும், குழந்தை அவர்களை மேலும் நேசிக்கத் தூண்டும். ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் அவர்களை எசகுபிசகாக பார்க்க நேரிட்டாலும், அவர்களுக்குள் வளர்ந்திருக்கும் புரிதல், குழந்தைகளின் ஆழ்மனதில் பாதிப்பாகத் தங்காது விலகிவிடும்.
வேறு ஜோடிகள் எவர் அருகிலாவது தூக்கத்தைக் கழிக்கும் சந்தர்ப்பம் நேரிட்டாலும் அதே பக்குவம் குழந்தையிடம் இருக்கும். ஏனெனில் படுக்கையறை அந்தரங்கங்களை குழந்தைகள் கண்ணுறும் வாய்ப்பு பொறுப்பான தாய், தந்தையரைவிட... அக்கறையற்ற உறவினர், விருந்தினர் ஜோடிகளாலேயே பெருமளவில் நிகழ்கிறது. எனவே, இந்த வாய்ப்புகளை வளரும் குழந்தைகளிடம் இருந்து எப்படித் தவிர்க்கச் செய்வது, ஒருவேளை பார்க்க நேரிடும் குழந்தையின் பாதிப்புகளை எப்படி சரி செய்வது என்பதான பரிதவிப்புகளைவிட... அதற்கான பக்குவத்தை உணர்த்துவதே நடைமுறையில் செல்லுபடியாகும்.
பிற ஜோடிகளுடன் உறங்க வைக்காதீர்கள்!
குழந்தையின் வயதைப் பொறுத்தவரை டீன் ஏஜுக்கு முந்தையவர்கள் எனில், இரவில் எதேச்சையாக கண்ணில் கடந்தவை காலையில் அவர்களுக்கு மறந்து போயிருக்கும். அதேபோல டீன் ஏஜ் வயது குழந்தைகளுக்கு அரசல் புரசலாக விஷயங்கள் தெரியும் என்பதால் அவர்கள் எதையும் வெளிக்காட்டி கொள்ளாமல் கடந்து போவார்கள். ஆனால், இரண்டும் கெட்டானாக அப்போதுதான் டீன் ஏஜில் கால் வைத்திருப்பவர்கள் ஆர்வக்கோளாறில் அலைக்கழிவார்கள். இவர்களுக்கு மட்டுமே மேலதிக கவனிப்பு தேவைப்படும்.
இவற்றோடு படுக்கை அறையின் வெளிச்சம், சப்தங்கள், உடைகள் என அனைத்திலும் கவனம் அவசியம். இந்தக் கவனம் பெற்றோர் தவிர்த்த மற்றோரிடம் எதிர்பார்க்க முடியாது என்பதால், பிற ஜோடிகளுடன் குழந்தையை உறங்க அனுமதிப்பது நல்லதல்ல. ஆக, குழந்தையின் பார்வையில் சம்பவம், அது ஏற்படுத்திய தாக்கம், குழந்தையின் வயது மற்றும் பக்குவம் இவற்றைப் பொறுத்து தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். தங்கள் கை விட்டு சூழல் நழுவுவதாகத் தெரிந்தால்... மனநல ஆலோசகர் கவுன்சிலிங் அவசியம்''



No comments:

Post a Comment