சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

12 Sep 2015

கழிவறை, டிவி, வைஃபை வசதிகளுடன் கலக்கும் கர்நாடக அரசு பஸ்கள்! பெருமை இழக்கும் தமிழகம்

நாட்டிலேயே முதல் முறையாக பெங்களூருவில் இருந்து சென்னைக்கு கர்நாடக அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் புதியதாக அதி நவீன சொகுசு பேருந்துகளின் சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ள நிலையில், மங்களூர்- பெங்களூரு இடையே இன்று இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த பேருந்துகளில் வைஃபை, தொலைக்காட்சி, கழிவறை உள்பட பல்வேறு வசதிகள் உள்ளன.
 
கர்நாடக மாநில அரசு போக்குவரத்து கழகம் (கே.எஸ்.ஆர்.டி.சி.) சார்பில் 'அய்ராவத் பிளிஸ்' மற்றும் 'அய்ராவத் சுப்பிரியா' ஆகிய புதிய சொகுசு பேருந்துகளின் போக்குவரத்து சேவை கடந்த ஜூலை மாதம் தொடங்கப்பட்டது.

அய்ராவத் பிளிஸ் பேருந்துகள் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகளில் ரசாயன கழிவறை, சமையல் அறை, பிரிட்ஜ், மைக்ரோ ஓவன் ஸ்டவ், ஒவ்வொரு சீட்டுக்கும் தொலைக்காட்சி, இணையதள வசதி போன்றவை இருக்கின்றன. இந்த பேருந்துகள் பன்முக 'ஆக்சில்' வசதி உடையவை. இந்த வசதியை உடைய 2 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.


இதேபோன்று அய்ராவத் சுப்பிரியா பேருந்துகளில் ரசாயன கழிவறை, ஒவ்வொரு இருக்கைக்கு பின்னாலும் தொலைக்காட்சி, இணையதள வசதி உள்ளது. தொலைக்காட்சிகளை தனித்தனியாக இயக்க `ரிமோட்' வழங்கப்பட்டுள்ளது. அதில் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்பட பல்வேறு மொழிகளை சேர்ந்த 60 அலைவரிசைகள் இருக்கின்றன.

நாட்டிலேயே முதல் முறையாக அரசு போக்குவரத்து கழகங்களில் கர்நாடகத்தில் தான் இத்தகைய வசதிகள் கொண்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பயணிகள் கழிவறைக்கு சென்று வந்த பிறகு தானாகவே தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்யும் வசதி உள்ளது. தானியங்கி இயந்திரம் கை கழுவ 10 நொடிகள் வரை மட்டுமே தண்ணீர் ஊற்றும். சுத்தம் செய்யும் கருவிகளை எளிதான முறையில் கையாள வசதி செய்யப்பட்டுள்ளது. பயணிகளுக்கு உணவு வகைகளை வழங்கவும், கழிவறையை சுத்தம் செய்யவும் கூடுதலாக தூய்மைப் பணியாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அய்ராவத் பிளிஸ் பேருந்து பெங்களூருவில் இருந்து தினமும் மாலை 5 மணிக்கு புறப்பட்டு இரவு 12 மணிக்கு சென்னை வந்தடையும். அதே போல சென்னையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு பகல் 12.55 மணிக்கு பெங்களூரு சென்றடையும்.

மற்றொரு அய்ராவத் பிளிஸ் பேருந்து, பெங்களூருவில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்பட்டு பகல் 1.45 மணிக்கு சென்னை வந்தடையும். அதே பேருந்து சென்னையில் இருந்து பகல் 2.45 மணிக்கு இரவு 9.45 மணிக்கு பெங்களூரு வந்தடையும். பயண கட்டணம் ரூ.650.

கழிவறை வசதி கொண்ட அய்ரா வத் சுப்பிரியா பேருந்து, பெங்களூருவில் காலை 10 மணிக்கு புறப்பட்டு மாலை 5 மணிக்கு சென்னைக்கு சென்றடையும். சென்னையில் இருந்து இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5.45 மணிக்கு பெங்களூரு வந்தடையும்.

இதே வகையைச் சேர்ந்த மற்றொரு பேருந்து, பெங்களூருவில் இருந்து இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5.45 மணிக்கு சென்னை வந்தடையும். அதே பேருந்து சென்னையில் இருந்து காலை 8 மணிக்கு புறப்பட்டு பகல் 3 மணிக்கு பெங்களூரு வந்தடையும். பயண கட்டணம் பகலில் ரூ.650, இரவில் ரூ.750. இந்த பேருந்துகளில் உணவு வசதி கிடையாது.

இந்நிலையில், கழிவறை வசதி கொண்ட அய்ரா வத் சுப்பிரியா பேருந்து சேவை மங்களூர்- பெங்களூரு இடையே இன்று தொடங்கப்பட்டது. இந்த பேருந்து சேவை அமைச்சர் அசோக் தொடங்கி வைத்தார்.


அண்டை மாநிலமான கர்நாடகாவில் மக்களின் வசதிக்காக அம்மாநில அரசு நவீன சொகுசு பேருந்து சேவைகளை தொடங்கியுள்ளது. ஆனால், தமிழகத்தில் இப்படிப்பட்ட பேருந்துகளை அரசு இதுவரை இயக்கவில்லை. ஒரு காலத்தில் தமிழகத்தில்தான் சொகுசு பேருந்துகள் விதவிதமாக அறிமுகப்படுத்தப்பட்டு வந்தன. ஆனால் தமிழகத்தின் தற்போதைய நிலைமையோ தலைகீழாக இருக்கிறது. மழை பெய்தால் பேருந்தில் குடை பிடிக்கும் நிலை. நடுவழியில் பிரேக் டவுன் ஆகும் பேருந்து. இப்படிப்பட்ட நிலைதான் இங்கு. புதிய பேருந்து விடுகிறோம் என்ற பெயரில் பழைய பேருந்துகளை பெயிண்ட் அடித்து அதனை மக்கள் சேவைக்காக தமிழக அரசு விடுகிறது.

கேரளா, கர்நாடகாவில் நீண்ட தூர பயணத்துக்கு சகல வசதிகளுடன் கூடிய சொகுசு பேருந்துகள் குறைந்த கட்டணத்தில் இயக்கி வருகின்றன. இப்படிப்பட்ட சொகுசு பேருந்துகளை தமிழக அரசும் இயக்க வேண்டும் என்பதே தமிழக மக்களின் எதிர்ப்பார்ப்பாக இருக்கிறது.

No comments:

Post a Comment