சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

1 Sept 2015

காலத்தால் அழியாத கனவு நாயகி 'டயானா'

உலக பிரபலம் ஆன கொஞ்ச காலத்தில் இறந்த இளவரசி டயானாவின் நினைவு நாள் இன்று.

உலகின் தவிர்க்க முடியாத கனவு நாயகி டயானாவின் இயற்பெயர் பிரான்செஸ் ஸ்பென்சர். இவர் ஜூலை 1, 1961ஆம் ஆண்டு பிறந்தார். வேல்ஸ் இளவரசர் சார்லஸின் முதலாவது மனைவி. இவர்களது பிள்ளைகள் இளவரசர்கள் வில்லியம், ஹென்றி (ஹேரி).  இளவரசர் சார்லசுடன் டயானா திருமண ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட நாளில் இருந்து, டயானா பொது வாழ்வில் ஒரு முக்கிய புள்ளியாகக் கருதப்பட்டார்.
ஐக்கிய நாடுகள் மட்டுமல்லாமல் உலகளாவிய அளவில் இவர்களது திருமண வாழ்வு தொடக்கம் முதல் மணமுறிவு ஏற்படும் வரையில் ஊடகத் துறையில் அதிகம் பேசப்பட்டார். அதுவரை இங்கிலாந்து மக்கள் பார்த்து வந்த அரச குடும்பத்து மனிதர்கள் வேறு. இறுக்கமான முகம். 'நீ சாமான்யன், நாங்கள் ராஜவம்சத்தினர்..!' என்கிற தோரணை. நிலப்பிரபுத்துவ மனோபாவம். தங்க வட்டத்துக்குள் ராஜ வாழ்க்கை. அந்தக் குடும்பத்துக்கு உள்ளே நுழையும்போதே, நான் வேறு ஜாதி என்று நிரூபித்துவிட்டவர் டயானா. பத்தொன்பது வயதில் சார்லஸைக் கைப்பிடித்து பக்கிங்ஹாம் அரண்மனைக்குள் நுழைந்தார். வெகு சீக்கிரம், அடித்தட்டு மக்களின் இதயத்தில் இடம்பிடித்துவிட்டார்.
 

உலகத் தொழு நோயாளிகள், புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள், எய்ட்ஸ் நோயாளிகள் அனைவருமே டயானாவுக்கு சிநேகிதமானார்கள். எய்ட்ஸ் நோயாளிகளைத் தொட்டுப் பேசுவதால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதை உலகுக்கு முதன் முதலில் எடுத்துரைத்தவர் டயானாதான். கணவரின் மேல் டயானா, அளவுக்கு அதிகமான காதல் கொண்டிருந்ததாலோ என்னவோ, கமீலா என்ற திருமணமான
பெண்ணுடன் சார்லசுக்கு முன்பிருந்தே ஒரு உறவு இருந்து வருகிறது. அது இப்போதும் தொடர்கிறது என்று தெரிந்த போது, அவரால் அதைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. 

திருமணமான முதல் வருடத்திலேயே இதனால் இருவருக்கும் சிநேகம் குறைய தொடங்கியது. மனம் வெறுத்த டயானா, சிலமுறை தற்கொலை முயற்சியில்கூட ஈடுபட்டிருக்கிறார். எதை சாப்பிட்டாலும்
உடனே வாந்தி எடுத்துவிடுகிற (புலீமியா) நோய் கூட அவருக்கு வந்துவிட்டது. தன் சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்னைகளை மறக்க, பல சமூக நலத் திட்டங்களில் இன்னும் அதிகமாக ஈடுபட ஆரம்பித்திருந்தார் டயானா. அவரது தனி வாழ்க்கையில் கிடைத்த ஏமாற்றங்களால் ராணியையும், இளவரசரையும் வெறுப்பேற்றுவதற்காகவே பல ஆண்களைத் துரத்த ஆரம்பித்தார். 

டயானா வாழ்ந்த காலத்தில் இங்கிலாந்து பத்திரிகைகளுக்கு அவர்தான் எப்போதும் முதல் பக்க கதாநாயகி. துரத்தித் துரத்திப் படமெடுத்தார்கள். துருவித் துருவிச் செய்தி சேகரித்தார்கள். டயானாவை இறுதிவரை தொடர்ந்தன, காதல்களும் கேமராக்களும் அவர் உயிரைக் குடித்தது. மக்களின் இளவரசியாக வாழ்ந்தவர் டயானா. சார்லஸ்- டயானா விரிசல் இவ்வளவு பகிரங்கமான பிறகு விவகாரத்துதான் ஒரே வழி என்று மகாராணியே வற்புறுத்த, விவாகரத்து நடந்தது.
டயானா இந்தியாவுக்குகூட வந்திருக்கிறார். உடல்நலம் குறைந்திருந்த அன்னை தெரசாவை சந்தித்தார் டயானா. தன் 79 விலை உயர்ந்த உடைகளை ஏலத்தில் விட்டு அதன் மூலம் கிடைத்த பெருந்தொகையை தர்மகாரியங்களுக்கு செலவிட்டார். அரபு நாட்டைச் சேர்ந்த கோடீஸ்வரரான முகமது ஹல் என்பவரின் மகன் டோடியுடன், டயானாவுக்கு ஏற்பட்ட தனிப்பட்ட நெருக்கம் புதிய சர்ச்சைகளுக்கு இடம் கொடுத்தது. டோடியின் பழக்கம் ஏற்பட்ட பின்னர் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு சேவைகள், தர்ம அறக்கட்டளைகள் நிறுவுதல் என்று சற்று மாறத் துவங்கிய டயானா மக்கள் சேவை புரிதலேதான் தன் தலையாயக் கடமை என்றார்.

அன்பு, மக்களிடையே நிலவும் சகிப்புத் தன்மையில்லா போக்குகள் பற்றி பொதுப்படையாக பேசத் துவங்கினார். இருவரும் பாய்மரக்கப்பலில் உற்சாகம் பொங்க பயணம் சென்றது செய்தியாளர்களுக்கு  பெரும் சுவாரஸ்யத்தை கொடுத்தது. இருவரும் செல்லுமிடமெல்லாம் கேமராவும், கையுமாய் பத்திரிகைகாரர்கள் அவர்களைத் துரத்தினார்கள். இந்தோனேஷியாவுக்கு சென்றிருந்தபோது அங்கிருந்த தொழுநோயாளிகளிடம் டயானா கைகுலுக்கியதும் பலரையும் வியக்க வைத்தது. டோடியும், டயானாவும் பிரான்ஸில் தனிமையில் இருக்க ஆசைப்பட, பத்திரிகைகாரர்களால் அதுமுடியாமல் போனது. பாரிஸில் 1997 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ல் ரிட்ஸ் உணவகத்தில் மாலை உணவுக்குப் பின் காரில் டயானா, டோடி, ஒரு பாதுகாப்பாளர் மற்றும் ஓட்டுனர் போய்க் கொண்டிருந்தார்கள். விடாமல் அவர்கள்
காரைத் துரத்தியது வேறு ஒரு வாகனம். அதில் பத்திரிகைப் புகைப்படக்காரர்கள். அவர்களிடமிருந்து தப்பியே ஆக வேண்டும் என்ற வேகத்தில் மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில், பறந்தது
டயானாவின் கார் விபத்துக்குள்ளானது. 

டோடியும், கார் ஓட்டுனரும் அந்த இடத்திலேயே மரணமடைய, உயிருடன் இருந்த டயானாவை மட்டும் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அழகான தேவதை போன்றே பார்த்துப் பழகிய டயானாவை, முகமும் எலும்புகளும் சிதைந்த நிலையில் பார்த்த மருத்துவர்கள் கூட அடக்க முடியாமல் கதறி அழுதனர். எவ்வளவு முயன்றும் அந்த புன்னகை இளவரசியை காப்பாற்ற முடியவில்லை. அவர் இறந்த செய்தி கேள்விப்பட்ட உலகமே வேதனையில் உருகி கண்ணீர் விட்டது.
2.5 பில்லியன் மக்கள் தொலைக்காட்சி மூலம் இந்நிகழ்வைப் பார்த்தனர். வேல்ஸ் இளவரசி டயானாவின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. உலகின் கண்ணி வெடிகளை அகற்ற தன் ராஜ அந்தஸ்தை ஆயுதமாகப் பயன்படுத்திய ராஜகுமாரியின் மறைவு, மனதில் நீங்கா சுவடானது. டயானா ரசிகர்களின் கோபக்குமுறல்கள் அந்த புகைப்படக் குழுவினரை நோக்கி பாய்ந்தன.

ஃபிரான்ஸின் தடவியல்துறையினருடன், உளவுத்துறையினரும் களத்தில் இறங்கி விபத்து குறித்து நடத்திய புலன் விசாரணையில், ஓட்டுனர் அதிகம் மது அருந்தியிருந்ததாகவும் அதனாலேயே கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டிலிருந்து விலகி விபத்துக்குள்ளானதாகவும் கூறி விஷயத்தை முடிவுக்குக் கொண்டு வந்தனர். 

டயானாவின் மரணத்திற்குப் பின்னர் வில்லியமுக்கு அவசர அவசரமாக முடிசூட்டும் வேலையும் படுஜோராக நடந்தது. அதன் பின் பல்லாயிரக்கணக்கான மலர்கள் அந்த இனிமையான இளவரசி டயானாவின் கல்லறைக்கு இன்னமும் வந்து குவிந்து கொண்டிருப்பது அவர் மீது மக்கள் வைத்திருக்கும் அன்புக்கு எடுத்துக் காட்டாக இருக்கிறது.
நீண்ட காலமாக இழுத்தடிக்கப்பட்ட இவரது மரண விசாரணைகளின் இறுதி முடிவுகள் பதினொரு ஆண்டுகளுக்குப் பின்னர் ஏப்ரல் 2008 ல் வெளியிடப்பட்டது.
காலங்கள் கடந்தாலும் நம் ஊரிலும் "இவ பெரிய இளவரசி டயானா...!" என்கிற வார்த்தை மட்டும் இப்போதும் காதுகளில் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது. 
இன்னும் பலர் அந்த மரணத்தை மறக்கவோ, நம்பவோ முடியாமல் ‘பெண்ணே.. எழுந்து வரமாட்டாயா?’ என்று கண்ணீர் விடும் பூங்கொத்துகளோடு உலகம் முழுக்க அவர் நினைவுநாளில் உருக்கமாகக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.



No comments:

Post a Comment