சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

12 Sept 2015

மெக்கா மசூதி மீது கிரேன் விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 107 ஆக உயர்வு! (அதிர்ச்சி வீடியோ, படங்கள்)

சவுதி அரேபியாவின் மெக்கா மசூதி மீது கிரேன் சரிந்து விழுந்து பயங்கர விபத்து ஏற்பட்டு உள்ளது. இந்த விபத்தில் பலி எண்ணிக்கை 107 ஆக உயர்ந்து உள்ளது.
முஸ்லிம்களின் புனித நகரமான சவூதி அரேபியாவின் மெக்காவில் உள்ள பெரிய மசூதி மீது ராட்சத கிரேன் ஒன்று நேற்றிரவு சரிந்து விழுந்ததில் 107 பேர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர். 200க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்தில் 9 பேர் இந்தியாவிலிருந்து ஹஜ் புனித பயணம் மேற்கொண்டவர்கள் என்றும், அவர்களை பாதுகாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் வெளியுறவு துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் தெரிவித்துள்ளார்.
எதிர்பாராத இந்த கொடூர விபத்தால் மசூதியே ரத்த வெள்ளமாகக் காட்சியளித்தது. இந்த விபத்து குறித்து சவுதி அரசு தீவிர விசாரணை நடத்தி வருகிறது. அதே நேரம், விபத்தில் சிக்கியவர்களை மீட்க, சவுதி அரசு போர்க்கால அடிப்படையில் மீட்புப்பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. மேலும், 200க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருவதால், இந்த விபத்தில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இந்த பயங்கர விபத்து குறித்து சவுதி அதிகாரி ஒருவர் கூறும்போது, ''மெக்காவில் உள்ள பெரிய மசூதியை விரிவுபடுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நேற்று வெள்ளிக்கிழமை தொழுகைக்காக அங்கு ஏராளமானோர் கூடி இருந்தனர். அப்போது, பலத்த இடியுடன் கூடிய மழை பெய்து கொண்டிருந்தது. இதனால், அனைவரும் ஒரே இடத்தில் திரண்டிருந்தனர்.
அப்போது மூன்றாவது தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த ராட்சத கிரேன் ஒன்று எதிர்பாராதவிதமாக நேற்றிரவு (இந்திய நேரப்படி நள்ளிரவு 11 மணிக்கு) திடீரென சரிந்து மசூதியின் கூரையை உடைத்துக் கொண்டு அங்கு கூடி இருந்தவர்கள் மீது விழுந்தது. இந்த விபத்தில், இடிபாடுகளில் சிக்கி 107 பேர் பரிதாபமாக உயிர் இழந்துள்ளனர். மேலும், காயமடைந்த சுமார் 200க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டு அருகில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்'' என்றார்.

விபத்துக்கு முன்னதாக கிரேன் இருக்கும் இடத்தில் மின்னல் தாக்கும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவி வரும் நிலையில், இறந்தவர்களுக்காக அவர்களது உறவினர்களும் சமூக வலைதளங்களில் உள்ள மனிதநேயமிக்கவர்களும், ‘இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்’ (நிச்சயமாக நாங்கள் அல்லாவுக்கே உரியவர்கள், மேலும் நிச்சயமாக நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்ல வேண்டியிருக்கிறது) என்று கூறி பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
இந்த மாத இறுதியில் ஹஜ் புனித யாத்திரை தொடங்க உள்ளது. லட்சக்கணக்கானோர் அதில் பங்கேற்க உள்ள நிலையில், மெக்கா பெரிய மசூதியில் இந்த விபத்து நிகழ்ந்திருப்பது பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.



No comments:

Post a Comment