ஹிப்ஹாப் இசை போலவே ஆதியின் பேச்சில் அத்தனை பரபரப்பு. 'அரண்மனை-2’ கம்போஸிங்கில் இருந்தார். '' 'ஒரு அம்மன் பாட்டு. கேட்டா ஆடியன்ஸ் எழுந்து சாமி ஆடணும்’னு சவால் கொடுத்திருக்கார் சுந்தர் சார். கேக்குறீங்களா?'' என்றபடி பிளே பண்ணுகிறார். ஒரே இரவில் மில்லியன் லைக்ஸ், ஷேர் குவிப்பதுபோல தடதடவென படங்களுக்கு இசையமைக்கிறார் இந்த ஹிப்ஹாப் தமிழன்!
'' 'ஆம்பள’ படத்துக்கு மியூசிக் பண்ண சுந்தர் சார் ஆள் தேடிட்டு இருந்தார். என்னைக் கூப்பிட்டுவிட்டார். பாட்டுக்கான சிச்சுவேஷன் சொன்னதும், 'பழகிக்கலாம்...’ பாட்டு போட்டுக் காட்டினேன். அவருக்குப் பிடிச்சிருந்தது. 'படத்துல மொத்தம் அஞ்சு பாட்டு. ஒவ்வொரு பாட்டுக்கும் ஒரு மியூசிக் டைரக்டர். அதில் நீங்களும் ஒருத்தர்’னார். 'எல்லாப் பாட்டையும் எனக்குத் தர்றதா இருந்தா பண்ணலாம்’னு சொன்னதும் சிரிச்சுட்டார். 'ஆம்பள’ வாய்ப்பு கிடைச்சதும் 'இன்று நேற்று நாளை’ வாய்ப்பு வந்தது. அப்படியே அடுத்தடுத்து பத்து, பதினைந்து வாய்ப்புகள்... 'இன்னும் ஆரம்பிக்கவே இல்லை, அதுக்குள்ள இவ்வளவு கமிட்மென்ட்டா?’னு பயந்துட்டேன். 'ஆம்பள’ பாடல்கள் ஹிட், 'இன்று நேற்று நாளை’-யில் பின்னணி இசைக்கு நல்ல ரெவ்யூஸ், இப்போ 'தனி ஒருவன்’-க்கும் பாராட்டு மழை. மோகன் ராஜா அண்ணன் என்னைக் கூப்பிட்டப்ப, 'கதை எதுவும் சொல்ல மாட்டேன். பத்து நாள் கழிச்சு படத்தைப் போட்டுக் காமிக்கிறேன்’னார். அதே மாதிரி படத்தைப் போட்டுக் காட்டிட்டு, 'இங்க ஒரு பாட்டு, அங்க ஒரு பாட்டு’னு சொல்லிட்டுப் போயிட்டார். படத்தை நாலைஞ்சு முறை பார்த்துட்டு அர்விந்த் சுவாமி கேரக்டருக்கு ஏத்த மாதிரி 'தீமைதான் வெல்லும்’ பாட்டுப் போட்டேன். 'அர்விந்த் சுவாமி கேரக்டருக்கு நான் பாட்டே வைக்கலை. ஆனா, நீ அவர் கேரக்டரை எட்டே வரியில் சொல்லிட்ட’னு என்னைக் கொண்டாடிட்டார். வாய்ப்பு தேடி சென்னை வந்தப்ப, இங்க எனக்கு யாரையுமே தெரியாது. ஆனா, இன்னைக்கு சுந்தர், மோகன் ராஜானு அண்ணன்கள் அமைஞ்சது அதிர்ஷ்டம்!''
''பாடல்களையும் நீங்களே எழுதிடுறீங்களே, 'நம்ம வேலையையும் இவரே பண்ணிடுறார்’னு பாடலாசிரியர்களிடம் இருந்து எதுவும் கமென்ட் வந்துச்சா?''
''பாட்டு, நம் உணர்வின் வெளிப்பாடு. சூழ்நிலையின் தாக்கத்தை ரசிகர்களிடம் சேர்க்கிறதுதான் ஒரு பாடலின் முக்கிய நோக்கம். அந்தப் பாட்டைக் கடத்தும் ஒரு கருவிதான் இசை. அதனால் டியூனுக்கு ஏத்தமாதிரி நானே அப்பப்ப ரெண்டு ரெண்டு லைனா பாடி ரெக்கார்டு பண்ணிருவேன். 'பழகிக்கலாம்’ பாட்டுல 'நீ லண்டன் லட்டு... நான் மதுர புட்டு’னு பாட, சுந்தர் சார், 'என்னடா அப்பிடியே அடிச்சுவிடுற’னு சிரிச்சார். ஆனா, இப்போ வரை அப்படித்தான் போயிட்டு இருக்கு. 'தனி ஒருவன்’ல பாடல்கள்ல பல்லவி, சரணம்னு எதுவும் கிடையாது. டம்மி லிரிக்ஸ் கூட இல்லாம 'கண்ணால கண்ணால...’ பாட்டை நான் அப்படியே பாடி கம்போஸ் பண்ணிட்டேன். ராஜா அண்ணன் கேட்டப்ப, 'வேணும்னா வரிகளை மாத்திக்கலாம்’னு நான் சொல்ல, 'இல்லல்ல... இதான் எனக்கு வேணும்’னு சொல்லிட்டார். 'தீமைதான் வெல்லும்’ ட்ராக் நான்தான் எழுதினேன்னு சொன்னா, அவர் நம்பவே இல்ல. 'நீ எங்கே இருந்தோ பிட் அடிக்கிற’ன்னார். இப்படி நம்ம பண்ற விஷயம் எல்லாருக்கும் பிடிக்கிறப்போ, அதைப் பண்றதுல என்ன தப்பு?''
''ஆரம்பத்துல அனிருத்கூட செம நட்பா இருந்தீங்க. இப்பவும் அது தொடருதா?''
''ஏன் இந்தக் கேள்வினு எனக்குப் புரியுது. 'க்ளப்புல மப்புல...’ ஆல்பம் சமயத்திலேயே அவர் எனக்குப் பழக்கம். 'எதிர் நீச்சல்’ல எட்டே எட்டுவரி ராப் பாடக் கூப்பிட்டார். 'சினிமாவுல பாடுற ஐடியா இல்லை’ன்னேன். 'சினிமாவுலயும் பண்ணுங்க. அதுவும் முன்னேற்றம்தானே’னு உற்சாகப்படுத்தினார். ஓ.கேனு 'எதிர்நீச்சல்’ பண்ணேன். அது பயங்கர ரீச். அடுத்து 'வணக்கம் சென்னை’, 'கத்தி’னு அடுத்தடுத்துப் பாடினேன். எல்லாமே ஹிட். உடனே, 'சிங்கர்’னு முத்திரை விழுந்தது. பாடகர்னு சொல்றதுல எந்தத் தயக்கமும் இல்லை. ஆனா, நான் சிங்கர் மட்டும் இல்லையே... ஒரு டியூன் பிடிச்சு, அதுக்கு பாட்டும் எழுதிப் பாடுறேன். அந்த உழைப்பு யாருக்குமே தெரியாமப் போயிடக் கூடாது. அதனால பாடுறதை நிறுத்திட்டு மியூசிக்ல ஃபோகஸ் பண்ண ஆரம்பிச்சுட்டேன். உடனே, 'ஆதி அனிருத் இடையே சண்டை’னு எழுத ஆரம்பிச்சுட்டாங்க. இப்பவும் அனிருத் எனக்கு பெஸ்ட் ஃப்ரெண்ட். 'தனி ஒருவன்’ பாடல்களுக்கு முதல் வாழ்த்தே அவரோடதுதான்!''
'' 'க்ளப்புல... மப்புல...’ ஆரம்பிச்சு சினிமா பாடல்கள் வரை பெண்களை கிண்டலடிச்சு பாட்டு எழுதுறீங்கனு ஒரு கமென்ட் இருக்கே!''
''அது கிண்டல் இல்லை. நான் பார்த்த, என்னைப் பாதிச்ச விஷயங்கள்தான் அப்படி பாட்டா வருது. கோவையில் இருந்து சென்னை வந்த புதுசுல, இங்கே பார்த்த எல்லாமே புதுசா இருந்தது. எங்க ஊர்ல பப் கிடையாது. அதனால அந்தக் கலாசாரத்தைக் கேள்வி கேக்கிற மாதிரி எழுதியிருந்தேன். 'வாடி புள்ள வாடி’ ஆல்பத்துல சாதிப் பிரச்னை பத்தி எழுதியிருப்பேன். இன்னைக்கு வரை காதல் பிரச்சனையில் பையனைத்தானே கொன்னுட்டு இருக்காங்க. நான் பையன்கிறதால பெண்களைப் பத்திப் பாடுறது இயல்பு. இண்டிபெண்டன்ட் ஆர்ட்டிஸ்ட்கள்ல பெண்கள் நிறைய இல்லைங்கிறதாலயோ என்னவோ, பசங்க வெர்ஷன் பாடல்கள் நிறைய இருக்கிற மாதிரி இருக்கு... அவ்வளவுதான்!''
''காதல், கல்யாணம்..!''
''25 வயசுல 24 மணி நேரமும் மியூசிக் நினைப்பாவே இருக்கேன். இந்த வருஷத்துக்குள்ள அஞ்சு படம் கமிட் பண்ணிக்கணும். நிறைய புரப்போசல் வந்துட்டே இருக்கு. 'என்னை நேர்ல பாத்தா இப்பிடி எல்லாம் சொல்ல மாட்டீங்க’னு ஸ்மைலி ரிப்ளை அனுப்பிட்டு என் வேலையைப் பார்க்க ஆரம்பிச்சிடுவேன்!''
''உங்க வளர்ச்சியில் சமூக வலைதளங்களுக்கு ஒரு முக்கியப் பங்கு இருக்குதானே!''
''நிச்சயமா! எங்கேயோ கோயம்புத்தூர்ல இருந்த ஒருத்தன் இன்னைக்கு இந்த அளவுக்கு வளர்ந்திருக்கேன்னா, அதுக்கு ஒரு காரணம் சோஷியல் மீடியா. 'க்ளப்புல மப்புல...’ பாட்டை ஃபேஸ்புக்ல ஷேர் பண்ணின ஒரே ராத்திரியில் 30 ஆயிரம் லைக்ஸ். ஏகப்பட்ட ரசிகர்கள் சேர்ந்தாங்க. 'தமிழன்டா’ சிம்பலை பச்சை குத்தி எல்லாம் காட்டி மிரட்டுவாங்க. சினிமாவுல ஓர் அறிமுகம் கிடைக்க நிறையப் பேரோட அறிமுகம், பழக்கம் வேணும்னு அவசியம் இல்லை. திறமை இருந்தா வெளிச்சம் போட சமூக வலைதளங்கள் காத்திருக்கு. அதுக்கு என் வாழ்க்கையே உதாரணம்!''
''வீட்ல இப்ப என்ன சொல்றாங்க?''
''வீட்டைப் பொறுத்தவரை பையன் ஒரு நல்ல வேலையில் செட்டில் ஆகணும்னு பயந்துட்டே இருந்தாங்க. 'நான் இண்டிபெண்டன்ட் மியூசிக் பண்ணப் போறேன்’னு சென்னைக்கு கிளம்பினப்ப வீட்ல யாருமே ஏத்துக்கலை. ஆனா இப்போ, 'ஓ.கே பையன் சரியான ரூட்லதான் போயிட்டு இருக்கான்’னு நிம்மதியா இருக்காங்க. மத்தபடி அவங்களுக்கு நான் எப்பவும் அதே ஆதிதான். சமீபத்தில் கோயம்புத்தூர்ல ஒரு கல்லூரி நிகழ்ச்சிக்கு சீஃப் கெஸ்ட்டா போயிருந்தேன். அதை முடிச்சிட்டு வீட்டுக்குப் போனேன். சீஃப் கெஸ்ட் பந்தாவோட வீட்டுக்குள்ள போன அஞ்சாவது நிமிஷம், 'போய் சிக்கன் வாங்கிட்டு வாடா’னு என் கையில பையைக் கொடுத்து கடைக்கு அனுப்பிட்டா£ங்க. அதான் பிரதர் சந்தோஷம்!''
No comments:
Post a Comment