சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

8 Sept 2015

அல்வா, பால்கோவா கடைகளில் ஸ்டாலினை இனி பார்க்கலாம்!

பிரதமர் நரேந்திர மோடியின் கடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம் டிஜிட்டல் மயமாக இருந்தது. இதுவே அவருக்கு பிரதமர் பதவியை தேடி தந்ததாக கூறப்படுகிறது.
இந்த தேர்தல் யுக்தி யாரை கவர்ந்ததோ இல்லையோ திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை வெகுவாக கவர்ந்துள்ளது. ஏற்கனவே ஃபேஸ்புக், டுவிட்டர் என்று தனது பெயரில் அக்கவுண்ட் ஆரம்பித்து கலக்கி வருகிறார். இதற்கான வேலைகளை மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசனின் தலைமையில் அவரது நண்பர்கள் குழு செய்து வருகிறது.

வருகிற சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் ஏற்கனவே மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் பல மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். தற்போது புதிதாக "நமக்கு நாமே" என்ற மக்களை சந்திக்கிற சுற்றுப்பயண திட்டத்தை மு.க.ஸ்டாலின் மேற்கொள்கிறார். வரும் செப்டம்பர் 20ஆம் தேதி கன்னியாகுமரியில் துவக்கி காஞ்சிபுரத்தில் முடிக்கிறார்.

ஒவ்வொரு ஊரிலும் குடியிருப்பு பகுதிகளில் நடந்து சென்று மக்களிடம் குறைகளை கேட்பது, டீக்கடைகளில் டீ சாப்பிடுவது, வாங்க பேசலாம் என்ற தலைப்பில் மக்களுடன் உரையாடுவது என்று இந்த சுற்றுப்பயணத் திட்டத்தில் பல்வேறு அம்சங்கள் இடம் பெறுகின்றன.

கன்னியாகுமரியில் இந்த சுற்றுப்பயணத்தை தொடங்கும் அவர், திருநெல்வேலியில் முக்கிய வீதிகளில் திறந்த ஜீப்பில் வலம் வருவது, மக்களை சந்திப்பது, 'அல்வா'க்கு பெயர்போன கடையான இருட்டுக்கடை அல்வா கடையில் அல்வா சாப்பிடுவது, அல்வா தயாரிக்கும் முறையை பார்வையிடுவது வரை பல அம்சங்கள் இடம் பெறுகின்றன.

நெல்லை மாவட்ட சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு, செப்டம்பர் 23ஆம் தேதி விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் வரும் அவர், அன்றைய இரவு ராம்கோ நிறுவனத்திற்கு சொந்தமான விருந்தினர் மாளிகையில் தங்குகிறார். 24ஆம் தேதி ராஜபாளையத்தில் ஒரு திருமண மண்டபத்தில் அனைத்து சமுதாயத்தினர் பங்கு பெறும் நிகழ்ச்சியில் மக்களுடன் கலந்துரையாடுகிறார். அன்றைய தினம் பக்ரீத் பண்டிகை என்பதால், அந்த திருமண மண்டபத்தில் திமுக சார்பில் பக்ரீத் விழா கொண்டாடப்படுவதுடன் அனைவருக்கும் பிரியாணி வழங்கப்படுகிறது. பிறகு திறந்த ஜீப்பில் ராஜபாளையம் முக்கிய வீதிகளில் வலம் வந்து, மார்க்கெட் வீதியில் தொடங்கி உழவர் சந்தை வரை நடந்து சென்று மக்களை சந்தித்து குறைகளை கேட்கிறார்.

ராஜபாளையத்தில் இருந்து புறப்படும் அவர், காலை 11.30 மணியளவில் ஸ்ரீவில்லிப்புத்தூர் வந்து, அங்கு பிரபலமாக விளங்கும் சைவ ஓட்டலான கதிரவன் ஓட்டலுக்கு சென்று பொது மக்களுடன் உட்கார்ந்து டீ சாப்பிடுகிறார். பால்கோவா என்றாலே அனைவருக்கும் ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவாதான் நினைவுக்கு வரும். ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் அருகே வெங்கடேஸ்வரா பால்கோவா கடை உள்ளது. அந்த கடைக்கு சொந்தமான பால்கோவா தயாரிப்பு நிலையம், கதிரவன் ஓட்டல் அருகே உள்ளது. எனவே கதிரவன் ஓட்டலில் பொது மக்களுடன் உட்கார்ந்து டீ மற்றும் 'சுசியம்' என்ற பலகாரத்தை சாப்பிட்டு விட்டு, பால்கோவா தயாரிப்பு இடத்துக்கு சென்று பால்கோவா தயாரிப்பு பற்றி கேட்டு அறிந்து, அதை கொஞ்சம் ருசி பார்க்கிறார். பின்னர் திறந்த ஜீப்பில் ஏறி, ஸ்ரீவில்லிப்புத்தூரில் முக்கிய வீதிகளில் வலம் வந்து விட்டு நகைக்கடை பஜார், நெசவாளர் பகுதிகளில் நடந்து சென்று பொது மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிகிறார்.

ஸ்ரீவில்லிப்புத்தூர் விசிட் முடிந்ததும் சிவகாசி செல்கிறார். அங்கும் இதே மாதிரி பயண திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மதிய சாப்பாட்டிற்கு விருதுநகர் துலுக்கப்பட்டியில் உள்ள ராம்கோ விருந்தினர் மாளிகை செல்லும் அவர், சாப்பிட்டு ஓய்வெடுத்த பிறகு விருதுநகர், சாத்தூர் அருப்புக்கோட்டை, காரியாபட்டி ஆகிய பகுதிகளிலும் திறந்த ஜீப் வலம் வருவது, முக்கிய வீதிகளில் நடப்பது, மக்களின் குறைகளை கேட்பது போன்றவற்றை அரங்கேற்றி விட்டு இரவு மதுரை செல்கிறார்.

மதுரையில் 25 மற்றும் 26 ஆகிய இரு நாட்களுக்கு 'நமக்கு நாமே' சுற்றுப்பயண திட்டத்தை திமுகவினர் ஏற்பாடு செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் ஸ்டாலின் சுற்றுப்பயண ஏற்பாடுகளை முன்னாள் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்., தங்கம்தென்னரசு ஆகியோர் செய்து வருகின்றனர். இதனையொட்டி, ஸ்ரீவில்லிப்புத்தூர் கதிரவன் ஓட்டல், பால்கோவா தயாரிப்பு இடம் ஆகியவற்றை அவர்கள் சமீபத்தில் பார்வையிட்டுள்ளனர்.



No comments:

Post a Comment