கடன் வாங்காமல் வாழ்க்கையை ஓட்டுவது கடினமாகிவிட்டது. வீடு வாங்க ஹோம் லோன், கார் வாங்க கார் லோன், வீட்டு உபயோக பொருட்கள் வாங்க பெர்சனல் லோன் என அத்தனைக்கும் கடன்தான். இந்தக் கடன்களுக்காக விண்ணப்பிக்கும்போது முதலில் கேட்கப்படுவது சிபில் ஸ்கோர். சிபில் ஸ்கோர் அதிகமாக இருந்தால்தான் ஒருவருக்கு உடனடியாகக் கடன் கிடைக்கும். எனவே, சிபில் ஸ்கோரில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பதைப் பார்ப்போம்.
சிபில் என்றால்..?
சிபில் என்பது Credit Information Bureau (India) Ltd என்பதன் சுருக்கம். சிபில் அமைப்பானது இந்தியாவில் கடன் வாங்குபவர்கள் மற்றும் கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களின் தகவல்களைப் பராமரிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டது. வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களில் கடன் வாங்குபவர்கள் குறித்த தகவல்களை, கடன் வழங்கிய வங்கிகள் சிபில் அமைப்புக்கு தெரிவிக்கும். இந்த தகவல்களை சிபில் அமைப்பு சேமித்து வைக்கும். இதனால் கடன் வாங்கு பவர்கள் சரியாக பணத்தை திரும்ப செலுத்துகிறார்களா என்பதைத் துல்லியமாக கண்டுபிடிக்க முடியும்.
ஏன் சிபில்?
இன்றைய காலகட்டத்தில் பலரும் கடன் வாங்கியே தங்கள் வாழ்க்கையில் முக்கியமான பல தேவைகளை நிறைவேற்றுகிறார்கள். இப்படி வாங்கும் கடனை எப்படித் திரும்பச் செலுத்துகிறார்கள் என்பதன் அடிப்படையில்தான் அடுத்து அவர்களுக்கு கடன் கிடைக்கும். ஏற்கெனவே வாங்கிய கடனை ஒருவர் சரியாகத் திரும்பச் செலுத்தவில்லை எனில், அடுத்து வங்கியிலோ அல்லது வேறு நிதி நிறுவனங்களிலோ கடன் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். இதனால் கடன் வாங்க நினைப்பவர் அதிக வட்டியில் கடன் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். தவிர, கடன் வாங்கியவர்கள் பணத்தை திரும்பச் செலுத்தவில்லை எனில், வங்கியின் வாராக் கடன் அதிகரித்துவிடும். எனவே, வாங்கிய கடனை சரியாக திரும்பக் கட்டுகிறவர்களுக்கு மட்டுமே கடன் தர வங்கிகளுக்கு உதவுவதற்காக இந்த நடைமுறை உருவாக்கப்பட்டுள்ளது.
கிரெடிட் ஸ்கோர்!
கடன் வாங்குபவர்கள் கடனை திரும்பச் செலுத்துவதன் அடிப்படையில் கிரெடிட் ஸ்கோர் வழங்கப்படுகிறது. அதாவது, எந்தவிதமான கடனை வாங்கியிருந்தாலும், கடனுக்கான இஎம்ஐ தொகையை சரியான தேதியில் திரும்பச் செலுத்துகிறார்களா என்பதன் அடிப்படையில் கிரெடிட் ஸ்கோர் வழங்கப்படும். குறிப்பிட்ட தேதியில் கடனுக்கான இஎம்ஐ தொகையை ஒருமுறை சரியாகச் செலுத்தவில்லை என்றால்கூட அதனுடைய பாதிப்பு கிரெடிட் ஸ்கோரில் பிரதிபலிக்கும்.
எந்த வகையான கடன்?
நீங்கள் வாங்கும் கடனின் அடிப்படையிலும் ஸ்கோருக்கான வெயிட்டேஜ் இருக்கும். அதாவது, சொத்து உருவாக்குவதற்காகக் கடன் வாங்கும்போது அதற்கான வெயிட்டேஜ் அதிகமாக இருக்கும். ஏனெனில் கடன் வாங்கியவர் கடனை சரியாகத் திரும்பச் செலுத்தவில்லை எனில், சொத்துகளை முடக்க முடியும். எனவே, வங்கிக்குப் பெரிய பாதிப்பு இருக்காது. வீட்டுக் கடன், வாகனக் கடன், அடமானக் கடன் போன்றவை இதில் அடங்கும். அதே தனிநபர் கடன், கிரெடிட் கார்டு கடன் போன்ற கடன்கள் சொத்து உருவாக்க உதவாது. எனவே, இதற்கான வெயிட்டேஜ் குறைவாக இருக்கும். இதில் கடனை சரியாகத் திரும்பச் செலுத்தவில்லையெனில், வங்கிக்கு அதிக இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
கடனின் கால அளவும், தொகையும்!
கடன் கால அளவின் அடிப்படையிலும் ஸ்கோருக்கான வெயிட்டேஜ் இருக்கும். அதாவது, வீட்டுக் கடன் நீண்ட காலத்தில் இருக்கும். எனவே, இஎம்ஐ தொகை குறைவாக இருக்கும். நீண்ட காலத்தில் வருமானம் உயரும்போது எளிதாகக் கடனை அடைக்க முடியும்.
கடன் தொகையின் அளவானது கடன் வாங்குபவரின் சம்பள தொகையில் அதிகபட்சம் 60% அளவுக்கே இருக்க வேண்டும். அதற்கு மேல் கடன் தொகை அதிகரிக்கும்போது, அதன் தாக்கம் சிபில் ஸ்கோரில் பிரிதிபலிக்கும். மேலும், கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் அதை எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்பது கவனிக்கப்படும். அதாவது, கிரெடிட் கார்டு லிமிட் தொகையில் அதிகபட்ச தொகையை ஒவ்வொரு மாதமும் பயன்படுத்திவிட்டு, பில் தொகையில் குறைந்தபட்ச தொகையை மட்டும் செலுத்துவது முற்றிலும் தவறு. நீங்கள் எப்போதுமே கடன் வாங்கிக் கொண்டே இருக்கிறீர்கள் என்பதை இது குறிக்கும்.
அடுத்தடுத்து கடன் வாங்கக் கூடாது!
கடன் தேவைப்படுவர்கள் ஒரு வங்கியில் கடனுக்காக விண்ணப்பித்து அங்குக் கிடைக்க வில்லை என்றால் உடனே அடுத்த வங்கியில் கடன் கேட்டு விண்ணப்பம் செய்வது தவறு. அதேபோல, ஒரே நேரத்தில் பல வங்கிகளில் கடனுக்காக விண்ணப்பம் செய்வதும் தவறு. ஏனெனில் கடன் கிடைக்காது எனத் தெரிந்தும் விண்ணப்பம் செய்கிறீர்கள் என்றே வங்கிகள் எண்ணும். இதனால் உங்களுக்குக் கடன் கிடைக்காமல் போவதுடன், கிரெடிட் ஸ்கோரும் குறைய வாய்ப்புள்ளது. வங்கிக் கடன் அல்லது கிரெடிட் கார்டு கேட்டு விண்ணப்பித்து ஆறு மாதம் கழித்துத்தான் அடுத்தக் கடன் அல்லது கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
கடனை முடித்தபிறகு!
கடனை முடித்தபிறகு!
வங்கிக் கடனை சரியாகத் திரும்பச் செலுத்துவது எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியமானது சிபில் ரிப்போர்ட் எடுப்பது. கடனை கட்டி முடித்த 3 - 6 மாதங்கள் கழித்து சிபில் ரிப்போர்ட்டுக்கு விண்ணப்பித்து சிபில் ஸ்கோர் சரியாக உள்ளதா என்பதைச் சரிபார்க்க வேண்டும். சில நேரங்களில் கடனை சரியாகத் திரும்பச் செலுத்தாமல் அல்லது முன்கூட்டியே கடனைக் கட்டி முடித்து இருப்போம். எனவே, அந்தச் சமயத்தில் எல்லாம் உங்களின் சிபில் ரிப்போர்ட்டுக்குத் தேவையான தகவல்களை வங்கி சரியாக அளித்துள்ளதா என்பதைப் பார்க்க வேண்டும்.
சிபில் ரிப்போர்ட்டில் உள்ள எந்தத் தகவலையும் தனிநபரால் மாற்ற இயலாது. ஒருவேளை வங்கியின் கவனக்குறைவு அல்லது வேறு காரணங்களினால் சிபில் ரிப்போர்ட்டில் தகவல்கள் தவறாக இருக்க வாய்ப்புள்ளது. எனவே, கடனை முடித்தவுடன் சிபில் ரிப்போர்ட்டை வாங்கிப் பார்த்து, அதில் ஏதாவது பிரச்னை இருந்தால் அதை வங்கியுடன் பேசி திருத்த முயற்சிக்கலாம்.
எதற்கு, எவ்வளவு வெயிட்டேஜ்?
கடனை திரும்பச் செலுத்தும் முறையில், உங்களின் நடவடிக்கைக்கு 30 சதவிகிதமும், எந்த வகையான கடன், கடனின் கால அளவு ஆகியவைக்கு 25 சதவிகிதமும், சம்பளத்துக்கும், கடன் தொகைக்கும் இடையே உள்ள வித்தியாசத்துக்கு 25 சதவிகிதமும், கடன் வாங்க முயற்சி செய்யும் முறை, கிரெடிட் கார்டு லிமிட்டில் எத்தனை சதவிகித தொகையை ஒவ்வொரு மாதமும் பயன்படுத்துகிறீர்கள் என்பதற்கு 20 சதவிகிதமும் வெயிட்டேஜ் இருக்கும்.
ஸ்கோர் மற்றும் இண்டெக்ஸ்!
சிபில் அமைப்பு தற்போது CIBIL TransUnion Score 2.0 என முறையில் ஸ்கோர் வழங்குகிறது. இந்த முறையில் இதுவரை கடன் வாங்காதவர்கள், கடன் கேட்டு விண்ணப்பிக்கும்போது அவர்கள் குறித்த விவரம் சிபில் அமைப்பில் இல்லாமல் இருந்தால், அவர்களுக்கு NA அல்லது NH எனக் குறிப்பிடப்பட்டு இருக்கும்.
1-5 வரை இண்டெக்ஸ் உள்ளது. இது கடன் வாங்கியவரின் கடந்த 6 மாதக் கடன் வரலாறு அடிப்படையில் இருக்கும். இண்டெக்ஸில் அதிக மதிப்பெண் பெற்று இருப்பவர்கள் குறைந்த ரிஸ்க் உடையவர்கள் என்றும், குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் அதிக ரிஸ்க் உடையவர்கள் என்றும் குறிப்பதாகும்.
சிபில் ஸ்கோர் 300 - 900 வரை இருக்கும். இதில் அதிக மதிப்பெண் வைத்திருந்தால், குறைவான ரிஸ்க் உடையவர்கள் என்பதைக் குறிக்கும். ஆனால், வங்கிகள் 750 மதிப்பெண்களுக்கு மேல் இருப்பவர்களுக்குக் கடன் வழங்குவதில் முன்னுரிமை அளிக்கின்றன.
சிபில் ஸ்கோர்
சிபில் ஸ்கோர் ரிப்போர்ட்டை ஆன்லைன் அல்லது ஆஃப்லைனில் வாங்க முடியும். இதற்கு ரூ.500 கட்டணம் செலுத்த வேண்டும். மேலும், கேஒய்சி ஆவணங்களையும் சமர்பித்தால், 7 வேலை நாட்களில் உங்களின் மெயில் ஐடிக்கு சிபில் ரிப்போர்ட் வரும்.
சிபில் ஸ்கோர் படிவத்தைhttps://www.cibil.com/online/credit-score-check.doஇணையதளத்தில் டவுன்லோடு செய்துகொள்ளலாம். சிபில் ஸ்கோர் வந்தபிறகு அதை எப்படிப் புரிந்துகொள்வது என்பது குறித்த வீடியோவைhttps://www.cibil.com/video-credit-report-meaningஇணையதளத்தில் பார்க்க முடியும்.
தகவல் உதவி: பிபிஎம்.முருகேசன், உதவி பொது மேலாளர் (ஓய்வு) பேங்க் ஆஃப் பரோடா.
யூடிஐயின் புதிய இ.டி.எஃப். திட்டங்கள்!
யூடிஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் யூடிஐ சென்செக்ஸ் எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்ட் மற்றும் யூடிஐ நிஃப்டி எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்ட் என்ற இரண்டு புதிய ஃபண்ட் திட்டங்களை தொடங்கி உள்ளன. இந்த இரண்டு திட்டங்களும் கடந்த 3-ம் தேதி செயல்படத் தொடங்கியுள்ளது. இந்த ஃபண்டுகள் மூலம் திரட்டப்படும் நிதியானது சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்டெக்ஸில் உள்ள பங்குகளில் முதலீடு செய்யப்படும். ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் பரோடா, பஞ்சாப் நேஷனல் பேங்க், லைஃப் இன்ஷூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா ஆகியவை யூடிஐ மியூச்சுவல் ஃபண்டின் ஸ்பான்சர்களாக உள்ளன.
No comments:
Post a Comment