சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

8 Sep 2015

சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் புதிய மருத்துவக் கல்லூரியை திறந்து வைத்தார் ஜெயலலிதா!

சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக நிறுவப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரியை காணொலிக் காட்சி மூலமாக முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
 
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் 9 உயர் சிறப்பு பிரிவுகள் மற்றும் 400 படுக்கை வசதிகளுடன் நிறுவப்பட்ட "தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை" 21.2.2014 அன்று முதலமைச்சர் ஜெயலலிதாவால் திறந்து வைக்கப்பட்டு, சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் இந்திய மருத்துவ குழும விதிகளின்படி, முதலாம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கைக்கு தேவையான நிருவாகக் கட்டடம், தொழில்முறை பணியாளர்கள் கூடம், மாணவர்களுக்கான விடுதிக் கட்டடம், நூலகம் உள்ளிட்ட வசதிகளுடன் 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரியை முதலமைச்சர் ஜெயலலிதா இன்று காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார். ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில்  திறந்து வைக்கப்பட்ட புதிய மருத்துவக் கல்லூரி தமிழ்நாட்டின் 20வது மருத்துவக் கல்லூரி ஆகும்.


இப்புதிய மருத்துவக் கல்லூரி சென்னையில் 55 ஆண்டுகளுக்கு பிறகு, அதாவது 1960-க்கு பிறகு திறந்து வைக்கப்பட்ட  மருத்துவக் கல்லூரி ஆகும். இந்தப் புதிய மருத்துவக் கல்லூரிக்கு இந்திய மருத்துவ குழும விதிகளின்படி தேவையான மருத்துவ பேராசிரியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் மற்றும் இதர பணியாளர்கள் என 410 பணியிடங்கள் உருவாக்கப்பட்டு நிரப்பப்பட்டுள்ளன. இப்புதிய மருத்துவக் கல்லூரிக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்வதற்காக 12 கோடியே 24 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தால் உபகரணங்கள் கொள்முதல் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கட்டப்பட்டுள்ள இப்புதிய அரசு மருத்துவக் கல்லூரியில் நடப்புக் கல்வியாண்டில் 100 மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்கு இந்திய மருத்துவக் குழுமத்தின் அனுமதி கிடைக்கப் பெற்று, மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுள்ளது.  இந்த மருத்துவக் கல்லூரி தமிழ்நாட்டில் தொடங்கப்படும் இருபதாவது அரசு மருத்துவக் கல்லூரியாகும். 

தமிழகத்தில் 2011ஆம் ஆண்டு அரசு மருத்துவக் கல்லூரிகளில் 1945 மருத்துவ பட்டப்படிப்பு இடங்கள் இருந்தன. தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கையின் காரணமாக கடந்த நான்காண்டுகளில்  அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக 710 மருத்துவ பட்டப்படிப்பு இடங்களுக்கு அனுமதி பெறப்பட்டு தற்போது மொத்த மருத்துவ பட்டப்படிப்பு இடங்கள் 2655 ஆக உயர்ந்துள்ளது.  

மேலும், 307 கோடியே 48 லட்சத்து 73 ஆயிரம்  ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மருத்துவத் துறை  கட்டடங்களையும் முதலமைச்சர் இன்று திறந்து வைத்தார்.

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனை, சென்னை அரசு பொது மருத்துவமனை, சென்னை மருத்துவக் கல்லூரியில் கட்டப்படவுள்ள கட்டடம் என மொத்தம் 159 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான கட்டடங்களுக்கும் முதலமைச்சர் ஜெயலலிதா இன்று அடிக்கல் நாட்டினார்.

சென்னை, இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் 9 கோடியே 59 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள சி.டி. ஸ்டிமுலேடர் (C.T. Stimulator), டிஜிட்டல் எக்ஸ்ரே, மேம்படுத்தப்பட்ட புற நாடித்துடிப்புக் கருவி (Enhanced External Counter Pulsation), மிகையளவு அண்மைக் கதிர்வீச்சு பிரிவு (High dose Brachytherapy Unit)  ஆகிய  மருத்துவ உபகரணங்களின் சேவையை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை சார்பில் அடிக்கல் நாட்டியும், திறந்தும், துவக்கியும் வைத்த திட்டங்களின் மொத்த மதிப்பு 476 கோடியே 38 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் ஆகும்" என்று கூறப்பட்டுள்ளது.No comments:

Post a Comment