ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலுக்காகத் 'தீயா வேலை செய்யணும் குமாரு’ கணக்காய் இருக்கிறார்கள் கட்சித் தொண்டர்கள்.
கடந்த 5-ம் தேதி இரவு தி.மு.க பொருளாளர் ஸ்டாலின், திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் தேர்தல் பொறுப்பாளர்களை, பகுதி வாரியாகச் சந்தித்து தேர்தல் நிலவரம் குறித்துக் கேட்டார். அப்போது ஒரு நிர்வாகியிடம், 'என்னய்யா... முன்பைவிட ஓர் ஓட்டாவது கூடுதலா வாங்குவோமா?’ என்றாராம் ஸ்டாலின். அதற்கு அந்த நிர்வாகி, இப்போதைய நிலவரப்படி பல இடங்கள் நமக்குத்தான் சாதகமாக இருக்கு, என்று சொல்ல... மெல்லிய சிரிப்போடு கூட்டத்தைத் தொடங்கினார் ஸ்டாலின்.
ஸ்டாலினின் இந்தத் திடீர் ஆய்வுதான் முதல்வர் பன்னீர்செல்வத்தின் திருச்சி விசிட்டுக்குக் காரணம் என்கிற அளவுக்கு செய்தி பரவியிருக்கிறது. வாட்ஸ்அப்பில் ஸ்டாலின் குரலில், 'நான் உங்கள் ஸ்டாலின் பேசுகிறேன். ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடும் ஆனந்த்துக்கு வாக்களியுங்கள்’ எனும் ஆடியோ ஒன்று வலம் வருகிறது. பதிலுக்கு, 'ஜெயலலிதா பேசுகிறேன்’ என செல்போனில் அ.தி.மு.க பிரசாரம் செய்கிறது.
வலுக்கும் மோதல்
கடந்த 8-ம் தேதி காலை ஸ்ரீரங்கம் வீரேஸ்வரத்தில் வாக்கு சேகரிக்க, அந்தப் பகுதியில் உள்ள கட்சிப் பணிமனை வழியாகச் சென்ற பி.ஜே.பியினர், அ.தி.முகவினரைப் பார்த்து 'தாமரைக்கு வாக்களியுங்கள்’ எனச் சொல்ல, பதிலுக்கு அ.தி.மு.கவினர், 'இரண்டு விரலைக் காட்டி, இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்’ என்றனர். பி.ஜே.பியினர், 'காலையிலேயே போயிட்டு வந்துட்டோம்’ என்று மைக்கில் சொல்ல... அது மோதலுக்கு வழிவகுத்தது. கைகலப்பில் 10 பேர் காயமடைந்தனர். அதன்பின் பி.ஜே.பியினரும் தே.மு.தி.கவினரும் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கம்பரசம்பேட்டை பகுதியில் சி.பி.எம் வேட்பாளர் அண்ணாதுரையை ஆதரித்து பிரசாரம் செய்தவர்கள், 'ஜெயலலிதா ஊழல் வழக்கில் சிக்கி தண்டனை பெற்றிருப்பதால், இந்த இடைத்தேர்தல் வந்துள்ளது. எனவே, ஊழல் கட்சியான அ.தி.மு.கவுக்கு வாக்களிக்காதீர்’ என மைக்கில் பேசிக்கொண்டிருக்க, அங்கு திரண்ட அ.தி.மு.கவினர், அந்தக் கட்சியைச் சேர்ந்த சசிக்குமாரைத் தாக்கினர். 'வெளியூர்காரர்கள் பிரச்னையை உண்டாக்கிட்டுப் போயிடுவாங்க. நாளைக்கு நாம முகத்துக்கு முகம் பார்த்துக்க முடியாதுபோல’ என புலம்புகிறார்கள் உள்ளூர் கட்சிக்காரர்கள்.
ஆட்களைத் திரட்ட குத்தாட்டம்
அமைச்சர் கோகுல இந்திரா, பிரசாரம் செய்யும் கிராமங்களில் கூட்டம் களைகட்டுகிறது. கூட்டத்தைக்கூட்ட அதிரடித் திட்டம் தீட்டி சென்னையில் இருந்து, குத்தாட்டம் போடும் இளம்பெண்கள் களமிறக்கப்பட்டார்கள். கடந்த 8-ம் தேதி அமைச்சர் கோகுல இந்திரா பிரசாரம் மேற்கொண்ட ஓலையூர், முடிகண்டம், மேக்குடி, திருமலைசமுத்திரம், முள்ளிப்பாடி உள்ளிட்ட கிராமங்களில் அமைச்சர்கள் வாகனம் முன் டான்ஸ் கேர்ள்ஸ் குத்தாட்டம் போட்டுக் கூட்டத்தைக் கூட்டினர். டான்ஸ் பார்க்கக் கூட்டம் கூடியதும் அமைச்சர்கள் வந்து வாக்கு சேகரித்துவிட்டுச் சென்றனர். நடிகர் ராமராஜன், மணப்பாறை பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். பொத்தமேட்டுப்பட்டி எனும் இடத்தில் ராமராஜன் வருகை கொஞ்சம் காலதாமதமாக, கூட்டம் கலைந்து செல்வதைத் தடுக்க, கோயம்புத்தூர் மாவட்டம் கவுண்டம் பாளையம் தொகுதி எம்.எல்.ஏ ஆறுக்குட்டியும் அவரது ஆதரவாளர்களும் குத்தாட்டம் போட ஆரம்பித்தனர்.
காட்டம் காட்டிய கனிமொழி
கடந்த 7-ம் தேதி மாலை, ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட மணிகண்டம், நாகமங்கலம், கம்பரசம் பேட்டை, திருவானைக்காவல், ஸ்ரீரங்கம் உள்ளிட்ட 16 பாயின்ட்களில் பிரசாரத்தை மேற்கொண்ட கனிமொழி, ''அ.தி.மு.க ஆட்சியில் பால், பஸ், மின்சார கட்டணம் உயர்ந்துள்ளது. பெட்ரோல் விலையைக் காரணம் காட்டிய அரசு, பெட்ரோல் விலை குறைந்துள்ள நிலையில் ஏன் இன்னும் பஸ் கட்டணத்தைக் குறைக்கவில்லை. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்குவதற்காகக் கட்டப்பட்ட விடுதிக்கு, தமிழ் மொழியை இழிவுபடுத்தும் வகையில், 'யாத்ரி நிவாஸ்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஒருவர் இருக்கும்போது, மக்களின் முதல்வர் ஜெயலலிதா என மக்களைக் குழப்புகின்றனர். முதல்வர் எங்கு இருக்கிறார் என்று யாருக்குமே தெரியாது. அவ்வளவு மென்மையான முதல்வர் பன்னீர்செல்வம். ஆனால், தற்போது தமிழகத்தில் மக்களைப் பற்றி சிந்திக்கின்ற ஆட்சி நடக்கவில்லை'' எனப் பேசிவிட்டு சென்றார்.
அசைவம் தவிர்க்கும் அமைச்சர்கள்...
இடைத்தேர்தலுக்காக திருச்சி வந்துள்ள அமைச்சர்களும் அ.தி.மு.கவினரும் தமிழகம் முழுவதிலும் இருந்து மிகப் பிரபலமான சமையல்காரர்களைக் கையோடு அழைத்து வந்துவிட்டனர். திருச்சி ஸ்ரீரங்கம் சுற்றியுள்ள இடங்களில் தடபுடலாக சமைத்து மூன்று வேளையும் உணவு வழங்கப்படுகின்றதாம். அமைச்சர் செல்லூர் ராஜு, தனது ஆதரவாளர்களுக்கு லிஸ்ட் போட்டு இன்றைய ஸ்பெஷல் என மூன்று வேளையும் சமைத்துப் போடுகிறார். இப்படி அமைச்சர்கள் ஒவ்வொருவரும் இ்ஷ்டம்போல் வெளுத்துக் கட்டுகிறார்கள். இதில் கடந்த வாரம் அமைச்சர்கள் கூட்டாக சேர்ந்து வஞ்சிர மீன் வறுவல் ருசித்து சாப்பிட்டதாக ரிப்போர்ட் போனதாம். தைப்பூசத்திலிருந்து இரவு உணவை மட்டும் அமைச்சர்கள் ஒன்றாகத்தான் சாப்பிடுகிறார்கள். அன்றிலிருந்து சைவ உணவு மட்டும்தான் எடுத்துக்கொள்கிறார்களாம். 'தினம்தினம் இரவு நேரங்களில் அமைச்சர்கள் குஷியா இருக்காங்கன்னு கட்சித் தலைமைக்கு போட்டுக்கொடுத்துட்டா என்ன பண்ணுறது. அதனாலத்தான் இப்படி ஒண்ணா சாப்பிடுறோம்’ என்கிறார்கள் அமைச்சர்கள்.
11-ம் தேதி மாலை 6 மணிக்குமேல் வெளியூர்க்காரர்கள் தொகுதிக்குள் இருக்கக் கூடாது என்பதால் மந்திரித்துவிட்டதுபோல் இருக்கிறார்கள் மந்திரிகள்.
காத்திருக்கும் ஆபத்து!
ஸ்ரீரங்கம் தொகுதியின் மொத்த வாக்குச்சாவடிகள் 322. இதில் 34 வாக்குச்சாவடிகள் மீதுதான் அ.தி.மு.கவின் மொத்த கவனமும் குவிந்திருக்கிறது. திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்குள்தான் ஸ்ரீரங்கம் சட்டசபைத் தொகுதி அடங்கியிருக்கிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் பூத் வாரியாக கட்சிகளுக்குக் கிடைத்த வாக்குகள் பற்றிய லிஸ்ட்தான் அ.தி.மு.கவில் பல்ஸை எகிற வைத்திருக்கிறது. 2014 எம்.பி தேர்தல் முடிவுப்படி 17 வாக்குச்சாவடிகளில் அ.தி.மு.கவைவிட தி.மு.க அதிக வாக்குகளை வாங்கியிருக்கிறது. இந்த 17 பூத்துகள் ஒவ்வொன்றுக்கும் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பிக்களை நியமித்திருக்கிறார்கள். (பார்க்க பெட்டிச் செய்தி) மணிகண்டம், மணப்பாறை அந்தநல்லூர் ஊராட்சிகள் மற்றும் ரங்கம் பகுதி என நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு வேலை பார்க்கிறார்கள். இந்த நான்கு பகுதிகளிலும் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிசாமி, பழனியப்பன் ஆகியோர் பொறுப்பாளர்கள். இந்த பூத்களில் மீண்டும் தி.மு.க அதிக ஓட்டுகளை வாங்கிவிடக் கூடாது என கடுமையாக வேலை பார்க்கிறார்கள். மீறி தி.மு.க அதிக ஓட்டுகளைக் குவித்தால், அது இவர்களின் தலைக்கு உலை வைத்துவிடுமாம். இதுதவிர 17 பூத்களில் மிகக் குறைந்த அளவுக்கு எம்.பி தேர்தலில் அ.தி.மு.க முன்னிலை பெற்றிருந்தது. அந்த பூத்களிலும் அதிக கவனம் செலுத்துகிறது அ.தி.மு.க. 322 பூத்களில் 34 பூத்களில் மட்டும் அதிக 'கவனிப்பு’ உண்டு. இந்த பூத்களுக்கு பொறுப்பாளர்களாக இருப்பவர்கள் தங்கள் சொந்தப் பணத்தை வாரி இறைத்து எப்படியாவது வெற்றியைப் பெற்றுவிடத் துடிக்கிறார்கள்.
No comments:
Post a Comment