''சனங்க பார்த்துப் பயப்படுற லிஸ்ட்ல ஆட்டோக்காரங்களையும் சேர்த்து ரொம்ப நாளாச்சு!
அந்தப் பயத்தைப் போக்க சின்னதா ஒரு முயற்சி எடுத்திருக்கேங்ணா. எனக்கு எதுக்குங்ணா விளம்பரம்? பாராட்டுக்காக இதைப் பண்ணலைங்ணா. நமக்கு பப்ளிசிட்டிலாம் வேணாம்ணா!'' - நிமிடத்துக்கு நான்கைந்து அண்ணாக்கள் போட்டுப் பேசும் இந்த 28 வயது இளைஞரின் பெயரே அண்ணாத்துரைதான்!
ஓ.எம்.ஆர் என அழைக்கப்படும் ராஜீவ் காந்தி சாலையில், ஷேர் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்துகிறார் இந்த அண்ணா. நார்மல் ஷேர் ஆட்டோவாக நினைத்து ஏறுபவர்களுக்கு ஆச்சரியங்களை ஆட்டோக்குள் வைத்திருக்கிறார். தமிழ், ஆங்கில வார, மாத இதழ்கள் மட்டுமே நாற்பதுக்கும் மேல் அடுக்கி வைக்கப்பட்டு இருக்கின்றன. அத்தனையும் அந்தந்த வார மாத இதழ்களாக சுடச் சுடப் படபடக்கிறது. ஆறு செய்தித் தாள்கள், நான்கு மாலை நாளிதழ்கள் என அனைத்தும் கொண்ட நடமாடும் மினி லைப்ரரி அண்ணாவின் ஷேர் ஆட்டோ. லைப்ரரி மட்டும் என்று சுருக்கியும் சொல்ல முடியாத வண்ணம், அடுத்து அவர் வாடிக்கையாளர்களுக்காகக் கொடுக்கும் வசதிகளைக் கேட்டால் நமக்கு ஆச்சரியத்தில் தலை கிறுகிறுக்கும். வை-ஃபை இன்டெர்நெட் கனெக்ஷன், எல்லா செல்போன் சேவைகளுக்கான ஈஸி ரீ-சார்ஜ் வசதி, அனைத்து வகை செல்போன்களையும் சார்ஜ் போடும் 'பின்’ வசதி, ஐந்து இந்திய மொழிகளில் ஒளிபரப்பாகும் மினி டி.வி, சிடி பிளேயர் என ஹைடெக் இன்டெர்நெட் கஃபேவாகவும் இருக்கிறது இந்த ஷேர் ஆட்டோ. அத்தனையும் ஃப்ரீ என்பதுதான் இதில் அசர வைக்கும் ஆச்சரியம்!
ஓம்எம்ஆர் ஆரம்பிக்கும் மத்திய கைலாஷில் இருந்து, சோழிங்கநல்லூர் வரை இருக்கும் ஐடி ஆத்மாக்களுக்கு இவர் 'ஆட்டோ அண்ணா!’ வயது வித்தியாசம் பார்க்காமல் அப்படித்தான் அழைக்கிறார்கள். இவரது ஷேர் ஆட்டோவில் இத்தனை வசதிகள் இருந்தும் மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் வாங்கும் அதே மினிமம் ஐந்து ரூபாயில் இருந்து பதினைந்து ரூபாய் வரைதான் வாங்குகிறார். சேவைகள் அனைத்தும் இலவசம் என்பதால் கட்டுப்படி ஆகுமா? 'எப்படி பாஸ் சமாளிக்குறீங்க?’ என்று கேட்டால்,
''ஆட்டோ எனக்கு கோவில் மாதிரி. என்னோட கஸ்டமர்கள் கடவுள் மாதிரி. எனக்கு வர்ற லாபத்துல அவங்களோட ஷேர் பண்ணிக்கணும்னு ஆசைங்ணா. உண்மையைச் சொல்லணும்ணா ஆட்டோ ஓட்டுறதுல நல்ல வருமானம் வருது. ஆனா, 'இது தப்பு... பொழைக்கத் தெரியாதவன்’ இப்படியெல்லாம் பேசத்தான் செய்றாங்க. அவ்வளவு ஏன்? வீட்டுலகூட உனக்குக் கிறுக்குப் பிடிச்சிருச்சாடான்னு அம்மா சத்தம் போடும். ஆனா, என் கஸ்டமர்களைச் சந்தோஷப்படுத்துறதுல கிடைக்குற சந்தோஷம் வேற எதுலயும் கிடைக்காதுங்ணா! மாசம் புஸ்தகங்கள் வாங்க மட்டுமே நாலாயிரம் ரூபாய்க்கு மேல செலவாகுது. ஆனா, அதுக்காக வாங்குறதை நான் எப்போதும் நிறுத்தினது இல்லைங்ணா. ரெண்டு வருஷமா இப்படித்தான் ஆட்டோ ஓட்டிட்டு இருக்கேன். எனக்கு ஆண்டவன் எந்தக் குறையும் வைக்கலை. நல்லாத்தான் சம்பாதிக்குறேன். என்னோட ஆட்டோல எவ்வளவு கோபத்தோட ஏறுனாலும் இறங்குறப்போ சந்தோஷமா இறங்குவாங்க. ஐ.டி ஆளுங்ககிறதால என்னையும் என் ஆட்டோவையும் வீடியோ, போட்டோ எல்லாம் எடுத்து ஃபேஸ்புக், யூ-டியூப், ப்ளாக்னு எழுதி பரப்பி விட்டுட்டாங்க. இப்பல்லாம் எனக்காக வெயிட் பண்ணி சவாரி ஏறுற கஸ்டமர்ஸ் நிறைய பேரைச் சம்பாதிச்சுருக்கேங்ணா!'' என்று பேசும் அண்ணாத்துரை தன் கஸ்டமர்களில் பலருக்கு அறிவிக்கப்படாத குடும்ப உறுப்பினர்.
''ஐடி கம்பெனில வேலை பார்க்குற வட மாநிலத்தைச் சேர்ந்தவங்க, ஊருல இருந்து அவங்க அம்மா - அப்பா குடும்பம் வர்றப்போ, நண்பர்களை இன்ட்ரோ கொடுக்குறாங்களோ இல்லையோ, என்னை அறிமுகப்படுத்தி வெச்சு நெகிழ வெச்சிடுறாங்கண்ணா. இந்தக் குடுப்பினை யாருக்குங்ணா கிடைக்கும். இந்த ஒரு விஷயத்துக்காகவே நான் காலம் பூரா புதுசு புதுசா யோசிச்சு என் கஸ்டமர்களுக்குப் பல வசதிகளை செஞ்சு கொடுப்பேன்!'' என்று பேசும் அண்ணாத்துரைக்கு பிடிக்காத விஷயம் டிப்ஸ் வாங்குவது.
''ஐநூறு ரூபாயை நீட்டிட்டு 'மீதியை நீயே எடுத்துக்கப்பா’னு சொல்வாங்க. 'உங்க பணம் எனக்கெதுக்கு? அதுக்கு நீங்களே எதுனாச்சும் நல்லது பண்ணுங்க’ன்னு சொல்லிடுவேன்! அவங்களும் என்னைத் தொந்தரவு பண்ண மாட்டாங்க!'' என்று சொல்லும் அண்ணாத்துரையின் ஆட்டோவில் ஏறுபவர்களுக்கு ஆச்சரியமான சலுகைகளை அள்ளி வழங்குவார். 1947-ல் அல்லது அதற்கு முன்னரோ பிறந்த சீனியர் சிட்டிசன்களுக்கும் ஆசிரியர்களுக்கும் எப்போதும் இலவச சேவைதானாம். அன்னையர் தினத்துக்கு எல்லா தாய்மார்களுக்கும், காதலர் தினத்தன்று காதலர்களுக்கும் இலவச சவாரிதானாம். இப்போது தந்தையர் தினத்தன்றும் 45 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்குப் பாதிக் கட்டணம் எனச் சலுகை அளிக்கிறார். அதோடு இரண்டு மாதத்துக்கு ஒருமுறையாவது மினி குவிஸ் நடத்தி பரிசும் கொடுக்கிறார்.
''அதுக்காக பயமுறுத்தல்லாம் மாட்டேங்ணா. சிம்பிளா அஞ்சு கேள்விகள். நெட்ல ஸர்ச் பண்ணி, நானே அந்தக் கேள்விகளை பிரின்ட் அவுட் எடுத்து, சவாரி வர்றவங்ககிட்டே கொடுப்பேன். சரியான பதிலை டிக் பண்றவங்களுக்கு ஆயிரம் ரூபாய்க்கு கிஃப்ட். இப்பெல்லாம் எப்போ அடுத்த போட்டினு அவங்களே கேட்க ஆரம்பிச்சிட்டாங்க. சுற்றுச் சூழலுக்காக காகிதங்களை பயன்படுத்துறதைக் குறைச்சுக்கணும். அதனால, அடுத்த தடவை ஆன் லைன்ல டெஸ்ட் வைக்கப் போறேன். பரிசும் ஆன் லைன்ல அவங்களுக்கு போய் சேர்ந்துடும்! கடவுள் கொடுத்த அறிவை நாலு பேருக்கு பிரயோஜனமா பயன்படுத்தணுங்ணா!'' என சீரியஸாகப் பேசும் அண்ணாத்துரை படித்திருப்பது ப்ளஸ் டூ!
No comments:
Post a Comment