சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

20 Feb 2015

வெள்ளிவிழா காணும் போட்டோஷாப்...ஒரு ப்ளாஷ்பேக்!

போட்டோஷாப் வெள்ளிவிழா காண்கிறது தெரியுமா? அப்படியா, இந்த சாப்ட்வேர் அறிமுகமாகி 25 ஆண்டுகள் ஆகிவிட்டதா? என்று வியக்கத்தோன்றுமே தவிர, போட்டோஷாப்பா? அது என்ன? என்று ஒருவரும் கேட்க வாய்ப்பில்லை.
இணையத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் சாப்ட்வேர்களில் ஒன்றாக இருக்கும் போட்டோஷாப், அதிகம் அறியப்பட்ட சாப்ட்வேராகவும் இருக்கிறது. விண்டோஸ், மேக், நெட்ஸ்கேப் போல மென்பொருள் உலகில் புதிய யுகத்தை கொண்டு வந்த மகத்தான மென்பொருள்களில் ஒன்றாக போட்டோஷாப் போற்றப்படுகிறது.

புகைப்படத்தை திருத்த பயன்படுத்தப்படும் இந்த மென்பொருள் எத்தனை ஆயிரம் புகைப்படங்களை நேர்த்தியாக ஆக்க பயன்பட்டிருக்கிறது என தெரியாது. ஆயிரமா? லட்சமா? கோடியா? எத்தனை கோடி ? தெரியாது. புகைப்படத்தில் கைவைக்க வேண்டும் என்றால் சராசரி இணையவாசிகள் முதல் கிராபிக்ஸ் வல்லுனர்கள் வரை அனைவரும் நாடுவது போட்டோஷாப் தான். இவ்வளவு ஏன்...? டிஜிட்டல் கலைஞர்கள் போட்டோஷாப்பை நவீன் தூரிகையாக கொண்டு மெய்மறக்க வைக்கும் டிஜிட்டல் ஓவியங்களை உருவாக்கி வருகின்றனர். வடிவமைப்பாளர்களை பொருத்தவரை இதை ஆறாவது விரல் என்றும் சொல்லலாம்.

அதிகம் பயன்படுத்தப்படும் மென்பொருளாக இருப்பதுடன் மட்டும் அல்லாமல், அதிகம் சர்ச்சைக்குள்ளாகும் ஒன்றாகவும் போடோஷாப் இருக்கிறது. மிக அழகாக தோன்றும் பல புகைப்படங்கள் இயற்கையை மீறிய அழகோ என சந்தேகிக்க காரணமாவதும் போட்டோஷாப் தான். புகைப்படங்கள், அவற்றில் மறைந்திருக்கும் போட்டோஷாப் லீலைகளுக்காக விவாதத்திற்கு உள்ளாகி, சர்ச்சைக்கும் இலக்கானது உண்டு.

இப்படி மென்பொருள் உலகம் முழுவதும் வியாபித்திருக்கும் போட்டோஷாப், இந்த வாரம் தனது 25வது பிறந்தநாளை கொண்டாடுகிறது.
எப்படி கூகுள் என்றால் தேடல் என்றாகி விட்டதோ, எப்படி நகலெடுப்பது என்றால் ஜெராக்ஸ் என சொல்லப்படுகிறதோ, அதே போலவே புகைப்படத்தில் திருத்தங்களை செய்வது என்றால் போட்டோஷாப் என்று பொருள் கொள்ளப்படும் அளவுக்கு அந்த பெயர் ஒரு வினைச்சொல்லாகவே உருவெடுத்திருக்கிறது.

அடோப் நிறுவனத்தின் அங்கமாக அதன் வளர்ச்சிக்கு அடித்தளமாக இருக்கும் போட்டோஷாப் பிறந்த விதத்திற்கு பின் சுவாரஸ்யமான கதை இருக்கிறது.
மென்பொருள் உலகின் மைல் கல்லாக அமைந்திருக்கும் போட்டோஷாப், ஒரு இளைஞரின் பொழுதுபோக்காகதான் உருவானது. அமெரிக்காவைச் சேர்ந்த வாலிபரான தாமஸ் நால் என்பவர் அப்போது (1980) மிக்சிகன் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவராக இருந்தார். கம்ப்யூட்டர் விஷன் பற்றி ஆய்வு செய்து கொண்டிருந்தவர், தனது சகோதரர் ஜானுக்காக புகைப்படங்களை டிஜிட்டல் முறையில் மேம்படுத்தக்கூடிய புரோகிராமை, தனது ஓய்வு நேரத்தில் உருவாக்கி கொடுத்தார். இதற்கு முதலில் டிஸ்பிளே என அவர் பெயர் சூட்டியிருந்தார். ஜான், ஹாலிவுட் இயக்குனர் ஜார்ஜ் லூகாசின் விஷுவல் எபெக்ட் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அந்த நிறுவனத்தில் இருந்தவர்கள் புகைப்படத்தில் திருத்தங்களை செய்யக்கூடிய இந்த புரோகிராமால் சொக்கிப்போய் பயன்படுத்த துவங்கினர்.

1988ல் சிலிக்கான் வேலியில் செயல்பட்டு வந்த மென்பொருள் நிறுவனமான அடோப், இந்த புரோகிராமை வாங்கி கொள்ள முன்வந்தது. இதனையடுத்து தாமஸ் நால் அந்த புரோகிராமை மேலும் மெருகேற்றி முழுமையாக்கினார்.

இதன் விளைவாக நால், தனது ஆய்வு படிப்பை முடிக்காமால் போனாலும், அந்த மென்பொருளை முழுமையாக உருவாக்கி கொடுத்தார். அதுதான் அடோப் நிறுவனத்தால் 1990ம் ஆண்டு பிப்ரவரி 19ம் தேதி போட்டோஷாப் எனும் பெயரில் வெளியிட்டது.

வெளியாகும் போதே சூப்பர் ஹிட்டாகும் திரைப்படம் போல, போட்டோஷாப் அறிமுகமானவுடனே அதன் பயனாளிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அது மட்டுமா... கம்ப்யூட்டர் உலகில் ஏற்பட்டு வரும் கால மாற்றத்திற்கு ஈடுகொடுத்து வடிவமைப்பாளர்கள் மற்றும் புகைப்படக்கலை சார்ந்தவர்கள் நாடும் மென்பொருளாக இருந்து வருகிறது.

புகைப்படங்களை திருத்தும் கலையோ, அதற்கான உத்தியோ புதிதும் அல்ல, போட்டோஷாப்பால் பிறந்ததும் அல்ல. புகைப்படக்கலை கண்டுபிடித்தவுடனேயே அதனை மேம்படுத்தும் உத்திகளும் புழக்கத்திற்கு வந்துவிட்டன. ஆனால் அவை ஸ்டூடியோக்களின் இருண்ட அறையில் மேற்கொள்ளப்பட்ட சிக்கலான உத்திகளாக இருந்தன. போட்டோஷாப் அதை கம்ப்யூட்டருக்குள் கொண்டு வந்து இந்த நுட்பத்தை வெகுஜனமாயமாக்கியதுதான் அதன் சாதனை. மேலும் ஆரம்ப கட்டத்தில் புகைப்பட திருத்த சேவைகள் கைக்கெட்டாத விலையில் இருந்தபோது, போட்டோஷாப்பின் கட்டணம் அவற்றோடு ஒப்பிடும் போது குறைவாகவே இருந்தது.

விளைவு பிரபல பத்திரிகையின் அட்டை படத்தை அலங்கரிக்கும் செய்தி புகைப்படத்தில் துவங்கி, ஃபேஸ்புக்கில் பகிரப்படும் புகைப்படம் வரை எண்ணற்ற புகைப்படங்கள் போட்டோஷாப்பின் டிஜிட்டல் தூரிகையால் மெருக்கேற்றப்படுகின்றன.

எல்லாம் சரி, போட்டோஷ் செய்யப்பட்ட முதல் புகைப்படம் எது தெரியுமா? அது 1988; போரா போராவில் எடுக்கப்பட்ட ஜெனிபர் இன் பார்டைஸ் எனும் பெண்ணின் புகைப்படம்தான். அழகான கடற்கரையில் ஒரு பெண் முதுகை காட்டியபடி இருக்கும் படம் அது. படத்தில் இருப்பவர் வேறு யாருமல்ல, இப்போதைய திருமதி. ஜெனிபர் நால்.


No comments:

Post a Comment