சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

19 Feb 2015

ஆஹா....அமெரிக்க வாழ்க்கை!

ய்... அவங்க பையன் அமெரிக்காவுல வேலை பார்க்குறானாம்..!’, ‘அவரோட பொண்ணை அமெரிக்கா மாப்பிள்ளைக்கு கல்யாணம் பண்ணிக் கொடுத்திருக்கார்!’ என்றெல்லாம் அமெரிக்கா பற்றிய ஆச்சர்யம் நம் மக்களுக்கு அதிகம்! அந்த அமெரிக்க வாழ்க்கையின் சாரத்தை இங்கு சொல்கிறார், சுதா பாபுலால் பிரசாத்.

அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த இவர், திருமணத்துக்குப் பின் கடந்த மூன்று ஆண்டுகளாக அமெரிக்காவின், செயின்ட் லூயிஸ் நகரில் வசித்து வருகிறார்.

‘‘முதல்ல, பிரசவத்துல இருந்து ஆரம்பிக்கலாம். நம்ம ஊர்ல பேறுகாலம்னா அம்மா, பாட்டி, அத்தை, பெரியம்மா, சித்தினு ஒரு பட்டாளமே ஆஸ்பிட்டலுக்கு படை எடுத்து வந்துடுவாங்க. இங்க கணவர்தான் மனைவியையும் குழந்தையும் கவனிச்சாகணும். பிரசவப் பொழுதில் கணவர் அருகில் இருக்கலாம். அப்போ மயக்கம் போட்டு விழுற அப்பாக்கள் நிறைய பேர் (அவங்களுக்கும் ஒரு பெட் ரெடி பண்ணிடுவாங்க தானே!). பிரசவத்தப்போ மனைவி அருகில் கணவன் இருக்கிற வழக்கம் இங்க உண்டு. இதுல நல்லது, கெட்டது ரெண்டுமே இருக்கு. சிலருக்கு, தன் மனைவி மீதான பாசம் அதிகமாகும். சிலர், ரெண்டாவது குழந்தை வேண்டவே வேண்டாம்னு முடிவுக்கு வந்துடுவாங்க.

குழந்தைகளை வளர்க்க செல்லப் பிராணிகள்

அமெரிக்காவுல குழந்தை வளர்ப்பு என்பது, சுலபம்னுதான் சொல்லணும். நம்மூர்ல ரெண்டு குழந்தைகளை வளர்க்குறதுக்குள்ள நாக்குத் தள்ளிவிடும். இங்க ஐந்து குழந்தைகளைக் கூட சிரமமில்லாம வளர்த்துடலாம். அந்த ஐந்து குழந்தைகளுக்கும் துணைக்கு ஒவ்வொருத்தருக்கும் ஒரு செல்லப் பிராணி வாங்கிக் கொடுத்துடறாங்க (நமக்கு அதுக்கெல்லாம் கட்டுப்படி ஆகாது சாமி!). பிறந்த குழந்தையைக் கூட ‘பேபி மானிட்டர்’ பொருத்தின தனி ரூம்ல தூங்க வெச்சுடுவாங்க. அந்த ரூம் முழுக்க பொம்மைகள், கார்ட்டூன், சுவரொட்டினு அழகா இருக்கும். மானிட்டர்ல ‘குவா குவா’னு சத்தம் கேட்கும்போது மட்டும் குழந்தையை கவனிக்குறாங்க. நம்ம ஊர்க் குழந்தைங்க எவ்வளவு கொடுத்து வெச்சவங்கனு தோணும்.
குழந்தைகள் வளரும்போதே ‘ப்ளீஸ்’, ‘தாங்க் யூ’, ‘ஸாரி’ போன்ற வார்த்தைகளைச் சொல்லிக் கொடுக்குறது, குப்பையை குப்பைத்தொட்டியில மட்டும்தான் போடணும்னு நல்ல பழக்கங்கள் சொல்லிக் கொடுக்குறாங்க. குழந்தைங்க கீழ விழுந்தாக்கூட, தானா எழட்டும்...அப்போதான் சுயமா செயல்படுவாங்கங்கிறது இவங்களோட எண்ணம்.

இந்த நாட்டைப் பொருத்தவரைக்கும் குழந்தைகளை அடிப்பது சட்டப்படி குற்றம். அதனால குட்டீஸ் ஏதாச்சும் தப்புப் பண்ணினா, டிவி நேரம், இன்டர்நெட், பாக்கெட் மணினு அவங்களோட சலுகைகளை திருப்பி எடுத்துக்குறதுதான் தண்டனை. பதினாறு, பதினேழு வயது ஆன பிறகு, பிள்ளைங்க வீட்டைவிட்டு வெளியேறிடுவாங்க. பார்ட் டைம் ஜாப் பார்த்து, கல்லூரிக்கு ஃபீஸும் கட்டிக்கிறாங்க. கிறிஸ்துமஸ், தேங்கஸ் கிவ்விங் போன்ற பண்டிகைகளுக்கு மட்டும் வீட்டுக்கு ‘டின்னர்’க்கு வர்றாங்க.

எளிய, இனிய திருமணம்

கல்யாணம்னா, விரும்பியவங்களோடு நிச்சயம் ஆன பின்தான் அம்மா, அப்பாகிட்டயே சொல்லுவாங்க. நம்ம ஊரு கல்யாணத்துல சும்மா திருவிழா மாதிரி ஸ்பீக்கர் செட்டு, சீரியல் லைட்டுனு களைகட்டும். ஆனா, அமெரிக்கத் திருமணங்களில் மணமக்கள் இரண்டு பேர், அவங்களோட நண்பர்கள் ஆறு பேர், பெற்றோர் மற்றும் உறவினர்கள் பத்து பேர், ஃபோட்டோகிராஃபர்கள் இரண்டு பேர்... ஆக மொத்தம் 20 பேர்னு திருமணம் நடக்கும். (அட, நம்ம ஊரு ரெஜிஸ்டர் ஆஃபீஸ் கல்யாணம்கூட இதைவிட கலகலப்பா இருக்கும்ங்க!)

உணவும் மருத்துவமனையும்


செட்டிநாட்டு சமையல், நாஞ்சில்நாட்டு சமையல், கொங்குநாட்டு சமையல்னு மாவட்டத்துக்கு மாவட்டம் அடுப்படி விதவிதமா மணக்குறது நம்ம ஊர்ல மட்டும்தான். அமெரிக்கா முழுக்க உணவுனா பர்கர், ஃப்ரைடு சிக்கன் மற்றும் ஃபெரன்ச் ஃப்ரைஸ் மட்டுமே. மத்தபடி நூடுல்ஸ், பாஸ்தா, பீட்சானு மற்ற நாடுகளிலிருந்து கடன் வாங்கிய உணவுகள் கொஞ்சம். இங்க ஃப்ரைடு ஃபுட் மற்றும் கூல் டிரிங்ஸ் சாப்பிட்டு கிட்டத்தட்ட 34% மக்கள் அதிக எடையோட இருக்காங்க. அதுக்கு டெக்னாலஜியும் ஒரு காரணம்னு சொல்லலாம். சுவிட்ச் போட்டா துணி துவைச்சிடலாம், பாத்திரம் கழுவிடலாம், உட்காந்துட்டே ரிமோட் வச்சு வேக்யூம் கிளீனரால வீட்டை சுத்தம் செய்யலாம்.

அப்புறம், இங்க விலைவாசியும் அதிகம்தாங்க. குறிப்பா இந்த ஊர்ல நான் போகப் பயப்படுற இடம், மருத்துவமனை. சிகிச்சை எல்லாம் நல்லா இருக்கும், ஆனா ஃபீஸ்னு சொல்லி நம்ம சொத்தை எழுதிக் கேட்பாங்க. இங்க ஒரு சொத்தைப் பல்லை பிடுங்குற காசுல, நம்ம ஊர்ல ஒரு கல்யாணத்தையே நடத்திடலாம். அதனால இங்க ஹெல்த் இன்சூரன்ஸ் ரொம்ப ரொம்ப அவசியம்.
உல்டா பழக்க வழக்கங்கள்

அமெரிக்கர்கள் நிறைய விஷயங்கள்ல நம்ம பழக்க வழக்கத்தில் இருந்து உல்டாவா இருப்பாங்க. சாலையில் வலது பக்கமாதான் போகணும். நம்ம ஊர்ல எலக்ட்ரிக் பிளக் பாயின்ட், சுவத்தோட பாதி உயரத்துல இருக்கும். இங்க, தரையிலிருந்து ஓரடி உயரத்தில் இருக்கும். கதவில் சாவி போடுறதுகூட தலைகீழாகத்தான் போடுவங்க (நல்லவேளை, இந்த ஊர்ல, மத்தவங்கள மாதிரி நடக்கக்கூடதுனு, தலைகீழா நடக்கலப்பா சாமி)!

வருங்காலத்துக்கு மட்டுமே சேர்த்து வைக்காம, வாழ்க்கையை அனுபவிக்கணும்னு நினைப்பாங்க. வார விடுமுறைனா, சோத்து மூட்டையக் கட்டிகிட்டு பீச்சு, பார்க்குனு குடும்பத்தோட எங்கயாச்சும் கிளம்பிடுவாங்க. கூட ரெண்டு, மூணு நாள் விடுமுறைனா, வண்டி கட்டிகிட்டு வெளியூர்களுக்கு சுற்றுப் பயணம் போயிடுவாங்க. நாம ஒரு பஸ்ல இடம் போடுறத்துக்கு, ஜன்னல் வழியா கர்ச்சீஃப் போடுறது, செருப்பு, அட சிலர் குழந்தையக் கூட போடுவாங்க தானே? ஆனா, இந்த ஊர்ல வரிசையில நின்னுதான் பஸ்ல ஏறணும். குழந்தைகள் முன்னாடி ஓடினாகூட அவங்களை கண்டிச்சு வரிசையில நிக்கவைப்பாங்க.

சாலை விதிமுறைகள்


ஆம்புலன்ஸ் , தீயணைப்பு வண்டி வந்தா, சாலையில் செல்லும் வாகனங்கள் வழிவிட்டு சாலையோரமா நின்னுடுவாங்க. அவை கடந்தபிறகுதான் மத்தவங்க கிளம்புவாங்க. இங்க எனக்கு பிடிச்ச இன்னொரு முக்கியமான அம்சம், மாற்றுத்திறனாளிகளுக்கு எங்க போனாலும் முன்னுரிமை இருக்கும். அதேபோல் அவங்க மத்தவங்கள எதிர்பார்க்காம எல்லா இடங்களுக்கும் போறதுக்கு ஏற்ற சௌகரியங்களும் இருக்கும்.
இந்தியாவைப் பற்றி அமெரிக்கர்களின் எண்ணம்

இந்தியா என்றாலே, காரமான சாப்பாடு, வெப்பமான ஊர், நல்ல மக்கள் மற்றும் பிரம்மாண்டமான திருமணங்கள்... இந்த நாலும்தான் பிரதானமா அவங்க நினைவில் வரும் விஷயங்கள். அதேபோல, இந்தியர்கள் என்றாலே சாஃப்டுவேர் மேதைகள் என்ற எண்ணமும் அவங்களுக்கு இருக்கு. இந்தியர்களின் கல்யாணங்களிலும், உடை, அணிகலன்களிலும் அமெரிக்கர்களுக்கு அதிக ஆர்வம் உண்டு.

நான் பியூட்டி பார்லரோ... ஹாஸ்பிட்டலோ போகும்போது, என்கிட்ட அவங்க அதிகமா விசாரிப்பது இந்தியத் திருமணங்களைப் பற்றிதான். என் அம்மா இங்க வந்து சில மாதங்கள் எங்களுடன் தங்கியிருந்தாங்க. அவங்க வெளியே சொல்லும்போதெல்லாம் அம்மாவோட புடவையைப் பார்த்து, ஆர்வமா விசாரிப்பாங்க. அதேபோல, என் மகள்  அணிந்திருக்கும் வெள்ளிக் கொலுசுகளைப் பற்றியும் விசாரிப்பாங்க.

அமெரிக்காவின் வரலாறு சில நூற்றாண்டுகள்தான். ஆனா, தமிழ்நாட்டின் வரலாறு பல்லாயிரம் ஆண்டுகள். கரிகால சோழன் திருச்சி கல்லணையை கட்டி கிட்டத்தட்ட 13 நூற்றாண்டுக்கு அப்புறம்தான் கொலம்பஸ் அமெரிக்காவையே கண்டுபிடிச்சாரு. ஆனாலும், அமெரிக்கர்கள் தங்களின் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இடங்களை பொக்கிஷம்போல பாதுகாக்குறது, பாராட்டத்தக்க விஷயம்!’’

அமெரிக்க வாழ்வைப் பற்றிய பிம்பம் கிடைத்தது, சுதாவின் வார்த்தைகளில்.

என்ன விசாவுக்கு அப்ளை பண்ணீட்டிங்களா?



No comments:

Post a Comment