சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

23 Feb 2015

'தமிழன் போட்ட பிள்ளையார் சுழி..!'

கோபுடோ’ கிருஷ்ணமூர்த்தி... கோபுடோ என்னும் தற்காப்புக் கலைப் பிரிவில் உலகளவில் பல பதக்கங்களையும், பெருமைகளையும் பெற்று இந்தியாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்தவர்.  உலகிலேயே முதல் முதலில் தற்காப்புக் கலையில் ‘சமூகவியலும் தற்காப்புக் கலையும்’ என்ற தலைப்பில் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் வாங்கியவர் என்ற பெருமையையும் தனதாக்கியுள்ளார்!

சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில், கிருஷ்ணமூர்த்தியை சந்தித்தோம்.
‘‘1972-ம் ஆண்டு, என் எட்டு வயதில் மாஸ்டர் விஷ்வாவிடம் கோபுடோ கலையைக் கற்கத் தொடங்கி, 16 வயதாகும்போது மற்றவர்களுக்கு நான் கற்பிக்கத் தொடங்கினேன். அன்று முதல் இன்று வரை, கற்றது கையளவுதான் என்பதை மனதில் நிறுத்தி, உலகின் பல நாடுகளுக்குச் சென்று, இக்கலை சார்ந்த விஷயங்களை கற்றுக்கொண்டே இருக்கிறேன். கோபுடோ கலை உருவான இடமான ஜப்பானில் உள்ள ஒக்கினவாவிற்குச் சென்று பயிற்சி வகுப்பில் சேர்ந்தபோது, என் திறமையைப் பார்த்து, ‘தமிழர்கள் அதீத துடிப்புடன், ஆர்வத்துடன் இருக்கிறார்கள்!’ என்று ஆர்ச்சர்யப்பட்டார்கள்.

கோபுடோவுக்கு என் வாழ்க்கையை அர்பணித்துக்கொண்டாலும், படிப்பிலும் என் ஆர்வம் குறையவில்லை. சென்னை பல்கலைகழகத்தில் எம்.ஏ., சமூகவியல் படித்தபோது, சமூகவியலும் நகரமும், சமூகவியலும் கிராமமும், சமூகவியலும் மருத்துவமும் என்று பல தலைப்புகளில் பலரும் புராஜெக்ட் செய்தார்கள். நான் ‘சமூகவியலும் தற்காப்புக் கலையும்’ என்ற பெயரில் என் புராஜெக்ட்-ஐ சமர்ப்பித்தேன். அதேபோல, எம்.ஃபில்., படிப்பிலும் தற்காப்புக் கலையில் ஆய்வு மேற்கொண்டேன். தற்காப்புக் கலையில் பி.ஹெச்டி., செய்யும் ஆர்வத்துடன், பல பல்கலைகழகங்களுக்கு ஏறி இறங்கினேன். இந்தத் துறையில் அனுபவமும், ஆர்வமும் இருக்கும் குருவைக் கண்டுபிடிக்கும் முயற்சியில், காலம் கடந்தது. இருந்தும் என் தேடலைத் தொடர்ந்தேன். பின் ஒருவழியாக, 'தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப்பல்கலைகழகம்' மூலமாக, முனைவர் மங்கையர்கரசியின் வழிகாட்டலில் முனைவர் பட்டம் முடித்துள்ளேன்’’ என்றவர்,

‘‘என் இந்த ஆய்வுக்காக கடந்த 15 ஆண்டுகாலத்தை செலவிட்டிருக்கிறேன். ஆனால் இனி வருபவர்களுக்கு இந்தச் சிரமம் இல்லாத வகையில், நான் வழிகாட்டியாக இருப்பேன். நான் என் ஆய்வுக்காக பல நாடுகளுக்குச் சென்று தகவல்கள் சேகரித்துள்ளேன். குறிப்பாக, ஜப்பானில் உள்ள கோபுடோ கலை நிபுணர்களிடம் பேசியபோது, அவர்களுக்கே நான் சொன்ன தகவல்கள் பல புதிதாக இருந்ததாக வியந்தனர். 10 வயதில் அப்பாவை இழந்தபோது, தகப்பனாக இருந்து என்னை வழிநடத்திய என் அண்ணன் ராமமூர்த்திக்கு இந்த வெற்றித் தருணத்தில் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்!’’ என்று கண்கள் பணிக்க சொல்லும் கிருஷ்ணமூர்த்தியின் கனவு, கோபுடோ கலையை முழுமையாக அதாவது பாடம் மற்றும் செய்முறை பயிற்சியுடன் அளிக்கக் கூடிய ஒரு கல்விக்கூடத்தை சொந்தமாக ஆரம்பிக்க வேண்டும் என்பதுதான்.

இவருடைய ஆயிரக்கணக்கான மாணவர்கள், இந்தியா மட்டுமல்லாமல் சர்வதேசப் போட்டிகளிலும் வெற்றி பெற்று வருகிறார்கள். 2005-ம் ஆண்டு முதல் இன்று வரை 8 தங்கம், 6 வெள்ளி, 5 வெண்கலம் என பதக்க வேட்டை நடத்தி வருகிறார்கள்.
இப்படி உலக மேடைகளில் தமிழர்களை ஏற்றிக்கொண்டிருக்கும் இவருக்கு, இதுவரை நம் தமிழக அரசிடமிருந்தோ, இந்திய அரசிடமிருந்தோ எந்த உதவியும் கிடைக்கவில்லை என்பதை வேதனையுடன் குறிப்பிடுகிறார்.

அதேசமயத்தில், தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில், இனி வரும் காலங்களில், தற்காப்புக் கலையில் இவர் அமைத்துள்ள பாடத்திட்டத்தையே மாணவர்கள் படிக்கவிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment