சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

19 Feb 2015

'ஆக்டர் வேண்டுமா... டாக்டர் வேண்டுமா?’

பா.ம.கவுக்கு இளம் ரத்தம் பாய்ச்சி இருக்கிறார் டாக்டர் ராமதாஸ்!
2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கான பா.ம.கவின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார் அன்புமணி ராமதாஸ். கடந்த 15-ம் தேதி சேலத்தில் நடந்த அரசியல் மாற்றத்துக்கான மாநாட்டில் இந்த அறிவிப்பை வெளியிட்ட பா.ம.க., அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் தேர்தலுக்கு இப்போதே ஓடத் தொடங்கிவிட்டது.

எம்.ஜி.ஆரைவிட அன்புமணி அழகு!
மாநாட்டுக்கு முன்பாக மதியம் சேலம் நேரு கலையரங்கத்தில் தலைமை சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. அதில் பேசிய எல்லா நிர்வாகிகளும் தமிழகத்தில் மாற்றம் வரவேண்டும், அதற்கு அன்புமணியை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்பதை முன்னிறுத்தியே பேசினார்கள். அதில் கவனம் ஈர்த்தது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செந்திலின் பேச்சுதான். 'மாற்றம் வேண்டும் என்று தமிழக மக்கள் விரும்புகிறார்கள். அந்த மாற்றத்தை நிகழ்த்த நம்மையெல்லாம் ஒருங்கிணைத்துச் செல்லக்கூடிய தலைமை, மிக வலிமையானதாக இருக்க வேண்டும். மருத்துவர் ஐயா தலைமையிலே மாற்றம் வர வேண்டும் என்று இருந்தால்கூட நாம் யாரை முதலமைச்சராகக் காட்டுவது என்பதுதான் இப்போது இருக்கும் கேள்வி. எம்.ஜி.ஆருக்கென்று மிகப் பெரிய வரவேற்பு இருந்தது. எம்.ஜி.ஆரைப் பற்றி என்னென்னவோ சொன்னார்கள். ஆனால், அவருடைய வெற்றிக்குப் பின்னால் இருந்த மிகப் பெரிய ரகசியம் அவருடைய ஆளுமைத்திறனோ அல்லது அரசியலோ அல்ல; அவர் அழகா இருந்ததுதான். அவ்வளவு அழகா இருப்பார். அவரைவிட அழகா நம்ம அன்புமணி இருக்கார். படித்தவர் வேண்டும் என்கிறார்கள். படிப்பும் வேண்டும். சமூக அக்கறையும் வேண்டும். இந்த இரண்டுமே உள்ளவர் டாக்டர் அன்புமணி. ஒரு  தலைவனுக்கு வலிமையும் வேண்டும். வீல் சேர்ல வர்ற தலைவரைவிட வேகமாக ஓடக்கூடிய தலைவர் வந்தால் நல்லதுதான். அப்படிப் பார்த்தால் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் 1983-ம் வருடம் அன்புமணி ஓடின ஓட்டத்தை யாரும் ஓடவில்லை. ஆக எல்லா தகுதியும் உள்ள அன்புமணிதான் முதலமைச்சருக்கு தகுதியானவர்'' என்று சொன்னார். அடுத்தடுத்து வந்தவர்களும் அன்புமணியை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்றுதான் பேசினார்கள். ஆனால், ராமதாஸ், 'பொதுக்குழுவின் தீர்மானம் மாநாட்டில் அறிவிக்கப்படும்’ என்று சொல்லி பொதுக்குழுவை முடித்துவிட்டார்.
அம்மா இட்லி.. சப்பாத்தி.. அப்புறம் ஊழல்!
முதலில் பேசிய வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு வழக்கம்போல ஜெயல​லிதாவை விட்டுவைக்கவில்லை. ''இன்றைக்கு பா.ம.க தமிழகத்தை ஆண்டே தீர வேண்டும் என்ற ஒரு நிலை ஏற்பட்டிருக்கிறது. ஏனென்றால், இதற்கு முன்பு ஆண்டவர்கள் தமிழ்நாட்டையும் தமிழகத்தையும் சீரழித்துவிட்டனர். தமிழகம் முழுவதும் சாராயக் கடைகளை திறந்து குடிமக்களுக்குக் குடியைக் கொடுத்து குடியைக் கெடுத்தவர் கலைஞர்தான். எம்.ஜி.ஆர் ஆட்சியிலும் சாராயம்தான் கிடைத்தது. அடுத்து, புரட்சித் தலைவி ஆட்சியிலே என்ன புரட்சி நடந்தது? இந்தியாவில் முதலமைச்சர் பதவியில் இருக்கும்போதே கோடிக்கணக்கில் ஊழல் செய்து முதலமைச்சர் பதவியை இழந்ததுதான் அவர் செய்த புரட்சி. அவர் ஆட்சியில் கிடைத்தது என்ன? தமிழகம் முழுக்கக் கடைகளைத் திறந்து அம்மா இட்லி, அம்மா சப்பாத்தி, அம்மா தண்ணி என்று கொடுத்தால் இந்த நாட்டு மக்கள் பசிபஞ்சம் தீர்ந்து விடுமா? ஆடு மாடு கொடுத்தால் தீர்ந்துவிடுமா? எல்லோருக்கும் கல்வி கிடைக்க வேண்டும், ஏழை வீட்டுப் பிள்ளைகளும் டாக்டராக வேண்டும் என்று எங்கள் ஐயா சொல்கிறார். தமிழ்நாடு வளம்பெற வேண்டும், வளர்ச்சியடைய வேண்டுமென்று சொன்னால் பா.ம.க ஆட்சிக்கு வரவேண்டும். நம்முடைய சின்ன ஐயா முதலமைச்சராக வேண்டும். பா.ம.க ஆட்சியில் பட்டிதொட்டியெங்கும் இன்பம் கொட்டிக்கிடக்கும்'' என்று முடித்தார்.
தமிழ்நாட்டை ஆளப்போகும் தகுதியான முதலமைச்சர்!
அடுத்ததாகப் பேசிய பா.ம.க தலைவர் ஜி.கே.மணி, 'தமிழகத்தில் எத்தனை அரசியல் கட்சித் தலைவர்கள் இருந்தாலும் மக்களைப் பற்றி கவலைப்படுகிற தலைவர், மக்களுக்காகவே போராடுகிற தலைவர் தன்னை அர்ப்பணித்து அரசியல் துறவியாக இருக்கக் கூடிய தலைவர் மருத்துவர் ஐயா என்பதை இந்த நாடு மறந்துவிடாது. நம் எல்லோராலும் தகுதியான முதலமைச்சர் என்று பாராட்டப்படுகிற சின்ன ஐயா  108 ஆம்புலன்ஸ் திட்டத்தைத் தந்தவர், தேசிய கிராமப்புற சுகாதாரத் திட்டத்தைத் தந்தவர். உலக நாடுகள் எல்லோராலும் பாராட்டப்பட்டவர் தமிழகத்தின் கெஜ்ரிவால் எங்கள் சின்ன ஐயாதான்!'' என்று சொல்லி,  ''அன்புமணி ராமதாஸ் அவர்களை முதல்வர் வேட்பாளராக இந்தப் பொதுக்குழு தீர்மானிக்கிறது' என்று  ஜி.கே.மணி அறிவித்தபோது ஒரே ஆரவாரம். ஜி.கே.மணி வாசித்த அதே தீர்மானத்தை ராமதாஸ் ஒருமுறை வாசித்தார்.
மாற்றம் வேண்டுமா... ஏமாற்றம் வேண்டுமா?
முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன் எழுந்து வந்த அன்புமணி,  ராமதாஸ் காலில் விழுந்தார். பதிலுக்கு ராமதாஸும் எழுந்து அன்புமணியை கட்டித்தழுவ... உற்சாகத்துடன் மைக் பிடித்தார் அன்புமணி. '2016  சட்டமன்றத் தேர்தலுக்கான பா.ம.க முதல்வர் வேட்பாளராக ஐயா என்னை அறிவித்திருக்கிறார்கள். இந்த வாய்ப்பை மிகுந்த பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன். எனக்குப் பதவி ஆசை கிடையாது. உயர்ந்த பதவி வகிக்க வேண்டும் என்ற ஆசை நிச்சயம் கிடையாது. எனக்கு மிகவும் பிடித்த பதவி, தோளோடு தோளாக நிற்கும் அடிமட்டத் தொண்டனாக இருப்பதுதான்! உங்களுக்கு அண்ணனாக, பிள்ளையாக இருப்பதில்தான் எனக்குப் பெருமை. உங்கள் அத்தனை பேரின் உழைப்புக்கான பலன் அடுத்த ஆண்டு வரப்போகிறது. இந்த ஓர் ஆண்டு நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும்.
டெல்லியிலே கட்சி தொடங்கிய ஆம் ஆத்மி, ஒரே வருடத்தில் ஆட்சியைப் பிடித்திருக்கிறது. அப்போது 'இன்று டெல்லியில் கெஜ்ரிவால் சுனாமி. அடுத்த ஆண்டு தமிழகத்தில் பா.ம.க சுனாமி என்று சொல்லியிருந்தேன்!’ ஆம், அடுத்த ஆண்டு பா.ம.க ஆட்சி நடக்கும். டெல்லியில் கெஜ்ரிவால் எப்படி வெற்றிபெற்றார் என்றால், அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் வீடு வீடாக சென்று அத்தனை வாக்காளர்களையும் நேரில் சந்தித்தார்கள். அதேபோல நீங்களும் வீடு வீடாகச் சென்று உழைக்க வேண்டும். மாறி மாறி கூட்டணி வைத்து மிகப் பெரிய தவறை செய்துவிட்டோம். அந்தத் தவறுக்காக வருத்தம் இல்லை மன்னிப்பு கேட்கிறோம். இனி அந்தத் தவறு நடக்காது. எங்களுக்கு ஒரே ஒரு வாய்ப்பு மட்டும் கொடுங்கள். நாங்கள் வித்தியாசமாகச் செய்வோம். இதுவரை படிக்காதவர், அறிஞர், கவிஞர், நடிகன், நடிகை என்று வாய்ப்பு கொடுத்தீர்கள். முதல் முறையாக ஒரு மருத்துவருக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்கிறேன். உங்களுக்கு ஆக்டர் வேண்டுமா... டாக்டர் வேண்டுமா? மாற்றம் வேண்டுமா... ஏமாற்றம் வேண்டுமா? என்று முடிவெடுங்கள்' என்று முடித்தார் 'முதல்வர் வேட்பாளர்’ அன்புமணி.
'எந்தப் பதவிக்கும் போகாதவன்’
மாநாட்டில் இறுதியாக ராமதாஸ் பேசினார். 'ஒரு முதலமைச்சராக எப்படியெல்லாம் செயல்படுவேன் என்று உங்களுக்கும் ஊடகங்கள் மூலமாக தமிழக மக்களுக்கும் சொல்லி அமர்ந்திருக்கிறார் அன்புமணி. பா.ம.கவின் முதலமைச்சர் போடுகிற முதல் கையெழுத்து மதுவை ஒழிப்பதுதான் என்று நாம் தொடர்ந்து சொல்லி வருகிறோம்.
உரக்கச் சொல்லி வருகிறோம். அதனுடைய அடையாளமாக நான் ஒரு பரிசை உங்களுடைய... பாட்டாளி மக்கள் கட்சியினு​டைய முதலமைச்சர் வேட்பாளருக்கு அளிக்கப் போகிறேன். அந்தப் பரிசு என்ன என்று யூகித்துச் சொல்லுங்க பார்ப்போம்!'' என்று கேட்கக் கூட்டத்தில் இருந்து பேனா என்று பதில் வந்தது. ''ஆமாம்! பேனாதான். நாம் ஆட்சிக்கு வருவது உறுதி. இந்தப் பேனாவை அவர் பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டு, இந்தப் பேனாவால் முதல் கையெழுத்தைப் போடவேண்டும்' என்று சொல்லி அன்புமணிக்கு ஒரு பேனாவைப் பரிசளித்தார். பேனாவை வாங்கிக்கொண்ட அன்புமணி மறுபடியும் ராமதாஸ் காலில் விழுந்தார்.
தொடர்ந்து பேசிய ராமதாஸ், ''26 ஆண்டுகளாக தமிழ் மண்ணுக்காக, தமிழ் மொழிக்காக, தமிழ் மக்களுக்காக ஒட்டுமொத்த உலகத்தில் இருக்கிற தமிழ் இனத்துக்காக நாங்கள் போராடி வருகிறோம். நான் இன்றைக்குச் சவால்விட்டுச் சொல்கிறேன்.  என்னைப்போல தமிழ்நாட்டு மக்களுக்காக போராடியவர்கள் வேறு யாராவது உண்டா..? நான் எந்தப் பொறுப்புக்கும் போகமாட்டேன். எந்தப் பதவியையும் ஏற்கமாட்டேன். ஆனால் என்னுடைய அரசியல் வாழ்க்கையிலே நான் பார்க்காத அரசியல் தலைவர்கள் இல்லை. டெல்லியில் நான் பழகாத இந்தியத் தலைவர்கள் இல்லை. ஜெயப்பிரகாஷ் நாராயணனுக்குப் பிறகு  இந்தியாவிலேயே எந்தப் பதவிக்கும் போகாத ஒருவன் இந்த ராமதாஸ் மட்டும்தான். இன்றைக்கு நாம் ஒரு நல்ல முதலமைச்சர் வேட்பாளரை அறிவித்திருக்கிறோம்.அன்புமணியை முதல்வராக்கிக் காட்டுங்கள்' என்று முடித்தார்.

அந்தரத்தில் தொங்கிய மாம்பழம்!
மாநாடு நடந்த எருமபாளையம் பகுதி முழுக்க களைகட்டியது. வழிநெடுக, வைக்கப்பட்டிருந்த ப்ளெக்ஸ்கள் எல்லாம் அன்புமணியை முதல்வர் வேட்பாளராகவே முன்மொழிந்திருந்தன. வரவேற்பு நுழைவாயிலில்கூட வருங்கால தமிழகமே என்று அன்புமணியின் பெயர்தான் காட்சியளித்தது. எல்லாவற்றுக்கும் மேலாக மேடைக்கு நேராக மிகப் பெரிய அளவிலான மாம்பழச் சின்னம் அந்தரத்தில் தொங்கியபடி இருந்தது. அதை, ஒரு கிரேன் தாங்கிப் பிடித்திருந்தது. அதில் ஒருபுறம் அன்புமணியின் படமும் மறுபுறம் ராமதாஸின் படமும் இடம்பெற்றிருந்தன. ஒவ்வொரு மாவட்டத்திலிருந்து வந்தவர்களும் தாரை தப்பட்டையோடு மாநாட்டுக்குள் ஆஜரானார்கள்.


'எம்.ஜி.ஆருக்கு தொண்டையில கிச்சு... கிச்சு!’
மாநாட்டில் மேடையில் இருந்த செட்டிங்குகளை​யெல்லாம் தாண்டி பளிச்சிட்டவர் பா.ம.கவின் மாநில பொருளாளர் அக்பர் அலி சையதுதான். வெள்ளை தொப்பி.. கறுப்புக் கண்ணாடி.. டாலடிக்கும் பவுடர் என அச்சு அசலாக எம்.ஜி.ஆர் மாதிரியே இருந்தார். தோற்றத்தில் எம்.ஜி.ஆர் மாதிரி இருக்கிறார், வாய்ஸ் எப்படியிருக்கும் என்று  ஏக்கத்தோடு காத்திருந்த எல்லோரையும் கடைசியில் ஏமாற்றிவிட்டார்.  
எம்.ஜி.ஆருக்கு தொண்டையில கிச்சு கிச்சாம்..  மதியம் நடந்த பொதுக்குழுவிலும் பேசவில்லை.. மாலையில் நடந்த மாநாட்டிலும் பேசவில்லை. பொருளாளருக்கு தொண்டை சரியில்லாததால் பேச முடியவில்லை என்று ஜி.கே.மணி மேடையிலேயே அறிவித்து விட்டார். சென்னைக்காரரான அக்பர்அலி சையதுக்கு ஆரம்பத்திலிருந்தே இதே கெட்அப்தானாம். கடந்த இரண்டு வருட காலமாக பா.ம.க பொருளாளராக இருக்கிறார்.    



No comments:

Post a Comment