சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

19 Feb 2015

விலையோ மலிவு... நோயோ வரவு!

சாலையோர தள்ளுவண்டி கடைகள் இல்லாத ஊர்கள் இருக்க வாய்ப்பில்லை. நடுத்தர, ஏழை, எளியவர்களுக்கான வரப்பிரசாதமாக இந்த தள்ளுவண்டி உணவு கடைகள் உள்ளன. இங்கு விற்கப்படும் அனைத்து உணவுகள் குறைந்த விலைக்கு கிடைக்கும். இதனால் சாலையோர தள்ளுவண்டி கடைகளில் கூட்டம் அலைமோதும்.
ஆனால் இந்தக்கடைகளில் தயாரிக்கப்படும் உணவுகளின் தரத்தை யாரும் ஆய்வு செய்வதில்லை. இதனால் தரம் குறைந்த உணவு பொருட்கள், உணவு தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய்களை பெரிய ஓட்டல்களிலிருந்து குறைந்த விலைக்கு வாங்குகிறார்கள். இதனால் இங்கு சாப்பிடுபவர்களுக்கு எளிதில் உடல் உபாதைகள் ஏற்படுகிறது. மலிவான விலை என்ற ஒரே காரணத்துக்காக இத்தகைய கடைக்களுக்கு செல்லுபவர்கள், மருத்துவமனைகளில் பணத்தை விரயமாக்க வேண்டியதிருக்கிறது. ஒட்டுமொத்த தள்ளுவண்டி உணவுக்கடைகளையும் குற்றம் சொல்லவில்லை என்றாலும், மிக அதிகமான கடைகளில் இதுபோன்ற செயல்கள் நடக்கின்றன.

அடுத்து பெரிய பிரச்னையாக இந்த கடைகளில் இருப்பது சுகாதாரம். தள்ளுவண்டி கடைகளை சுற்றியுள்ள பகுதிகள் கடும் சுகாதார சீர்கேடாக இருக்கின்றன. மேலும், சுத்திகரிக்கப்படாத தண்ணீர் இந்தக் கடைகளில் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் எளிதில் நோய் தொற்றிக் கொள்ள வாய்ப்புள்ளது. தள்ளுவண்டிக் கடைகளிலும் சுகாதாரத்தையும், தரத்தையும் சுகாதாரத்துறை, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.
சாலையோர கடைகள் மட்டுமல்லாமல் சிறிய, பெரிய ஓட்டல்களிலும் இந்த பிரச்னை உள்ளதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதிலும் மோட்டல்களில் கேட்கவே வேண்டாம். விலை அதிகம். அங்கு சுவை, தரம் குறைவு. இது மோட்டல்களில் சாப்பிட்டவர்களுக்குத் தெரியும். எனவே தரமில்லாத உணவுகளை விற்று கல்லா கட்டும் ஓட்டல் நடத்துபவர்கள், கொஞ்சம் மனசாட்சியுடன் தரமான உணவுகளை வழங்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

பாஸ்ட் புட் கடைகள்: நமது உணவு பழக்க வழக்கங்கள் இன்று ரொம்பவே மாறிவிட்டது. சில நிமிடத்தில் தயாராகும் மேற்கத்திய உணவு வகைகளுக்கு மக்கள் அடிமையாகி இருக்கிறார்கள். பாஸ்ட் புட் என்ற பெயரில் செயல்படும் சில உணவுக்கடைகளில் கிடைக்கும் வேக வைக்காத உணவுகளை சாப்பிட்டு அல்லல்படுவோர்கள் எண்ணிக்கை அதிகம்.
இத்தகைய உணவுப் பழக்கங்களால் சராசரி மனிதனின் ஆயுட்நாட்கள் வெகுவாக குறைந்து விட்டது. மருத்துவமனைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதுவது இதற்கு ஒரு உதாரணம்.
தவறான உணவுப்பழக்கத்தால் நீரழிவு நோய் உள்ளிட்ட நிரந்தர நோய்கள் நம்மில் பலரை பாதித்துள்ளது. இதனால் நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆண்டுந்தோறும் அதிகரித்து வருகிறது.

சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு செய்தி. ஐ.டி. துறையில் பணியாற்றும் ஒரு இன்ஜினீயர் திடீரென வயிற்று வலியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், அந்த இன்ஜினீயரின் வயிற்றில் பிளாஸ்டிக் கழிவுகள் இருப்பதாக தெரிவித்தனர். எப்படி பிளாஸ்டிக் கழிவுகள் வயிற்றில் வந்தது என்று விசாரித்தால் அது அவருக்கே ஆச்சரியமாக இருந்தது. ஐ.டி. அலுவலகம் அருகில் உள்ள டீக்கடையில் தினமும் அவர் பிளாஸ்டிக் கப்பில் டீ, காபி அருந்தியுள்ளார். தரமில்லாத அந்த பிளாஸ்டிக் கப் மூலமே அவருக்கு அந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது போன்று தினமும் உணவு என்ற பெயரில் விஷத்தை மக்கள் சாப்பிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

அம்மா உணவகம்: 
தமிழகத்தில் தள்ளுவண்டிகளின் வருமானத்தை பாதிக்கும் வகையில், மாநகராட்சி சார்பில் அம்மா உணவகங்கள் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இங்கு குறைந்த விலைக்கு காலை, மதியம், மாலை இட்லி, பொங்கல், கலவை சாதம், சப்பாத்தி வழங்கப்படுகின்றன. இதனால் அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டாலும் அம்மா உணவகங்கள் தமிழகம் முழுவதும் செயல்படுகின்றன. சாலையோர கடைகளை விட விலை குறைவு என்பதால் அம்மா உணவகங்களுக்கு பொது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புள்ளது.
சென்னை மாநகராட்சி மூலம் நடத்தப்படும் அம்மா உணவகங்கள் மூலம் ஆண்டுக்கு 70 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்படுவதாக விவரம் தெரிந்தவர்கள் கூறுகின்றனர். அதே சமயம் அம்மா உணவகத்தை இன்னும் சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதுகுறித்து தள்ளுவண்டி கடைக்காரர் ஒருவர் கூறுகையில், "விலை குறைவு, போட்டிக் காரணமாகத்தான் உணவின் தரத்தை கடைப்பிடிப்பது இங்கு இயலாத காரியம். தரமான உணவுப் பொருட்களை பயன்படுத்தினால் மலிவான விலைக்கு கொடுக்க முடியாது. தள்ளுவண்டி கடைகளில் மட்டுமல்ல சில பெரிய, சிறிய ஓட்டல்களின் நிலைமையும் இது தான்" என்றார்.

உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "நிரந்தரமாக ஒரே இடத்திலிருக்கும் கடைகளில் ஆய்வு செய்வது எளிது. ஆனால் தள்ளுவண்டி கடைகளைப் பொறுத்தவரைக்கும் இடங்களை மாறிக் கொண்டே இருக்கும். இதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது சிரமம். இருப்பினும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். அபராதத்தை செலுத்தி விட்டு வயிற்றுப்பிழைப்புக்காக வேறு இடத்தில் இந்த கடைகளை தொடங்கி தரமில்லாத பொருட்களை விற்கின்றனர். தரமில்லாத உணவுகளை சாப்பிடுவதை பொது மக்கள் தவிர்த்தால் இத்தகைய கடைகள் தானாகவே மூடப்பட்டுவிடும்" என்றார்.

சென்னை விலைப் பட்டியல்: சாலையோர கடைகளில் மதிய உணவு ரூ.40 முதல் 50 வரை. இட்லி ஒன்றின் விலை ரூ.5. அம்மா உணவகத்தில் ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி. நடுத்தர (சிறிய) ஓட்டல்களில் மதிய உணவு ரூ.100 முதல் 150 வரை. இட்லி ஒன்றின் விலை ரூ.7 முதல் 10 வரை. நட்சத்திர ஓட்டல்களில் ரூ.200, மற்ற கடைகளிலிருந்து இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகமாக விற்கப்படுகிறது.

உணவே மருந்து என்ற நிலைமாறி மருந்தே உணவாகி விட்டது. No comments:

Post a Comment