சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

19 Feb 2015

ஏமாறும் வாடகைத் தாய்கள்... பெண்களின் கண்ணீர் கதை!

லகில் தாய்மைக்கு நிகர் எதுவுமில்லை என்பதால் பெண்களை கடவுளாக நாம் போற்றி வருகிறோம்.தாய்மை அடையாத பெண்களை 'மலடி' என்று பட்டம் கொடுத்து இந்த சமுதாயம் சபிக்கும் போது பாதிக்கப்படும் அவர்கள், வாழ்க்கையில் விரக்தியின் உச்சிக்கே தள்ளப்படுகின்றனர்.

பெண்களில் சிலருக்கு இயற்கையாக தாய்மை அடைய வாய்ப்பில்லை என்றாலும் குழந்தைகளை தத்தெடுத்து மழலைச் சொல் கேட்க அவர்கள் ஆசைப்படுகின்றனர். இதற்கு வசதியாக மருத்துவத்துறையின் அசுர வளர்ச்சியால் 'டெஸ்ட் டியூப் பேபி' என்ற முறை குழந்தையில்லாத தம்பதியின் ஏக்கங்களை நிவர்த்தி செய்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் செயற்கை கருவூற்றல் மையங்கள் புற்றீசல் போல முளைத்துள்ளன. சென்னையில் மட்டும் 20க்கும் மேற்பட்ட மையங்கள் உள்ளன.

இந்த முறையில் குழந்தையை பெற்றெடுக்க பணம் அதிகம் செலவு என்றாலும், குழந்தையில்லாத பல தம்பதியினர் அதை பொருட்படுத்துவதில்லை. குழந்தையில்லாத தம்பதியின் விந்து அல்லது கருமுட்டையை பெற்று டெஸ்ட் டியூப் மூலம் கரு உருவாக்கப்படுகிறது. பின்னர் வாடகைத் தாய் மூலம் குழந்தையை பெற்றெடுக்க ஏற்பாடு செய்யப்படுகிறது. இதற்கு வாடகையாக 50 ஆயிரம் ரூபாயிலிருந்து சில லட்சங்கள் வரை பேரமாக பேசப்படுகிறது. பணத்தை வாங்கிக் கொண்டு வறுமையில் வாடும் வாடகைத் தாய்கள், சம்பந்தப்பட்டவர்களுக்கு குழந்தையை பெற்றுக் கொடுக்கின்றனர்.

வாடகைத் தாயாக செல்லும் பெண்களை, மருத்துவமனை நிர்வாகம், குழந்தையில்லாத தம்பதி மற்றும் புரோக்கர்கள் சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறார்கள். ஆனால் குழந்தையை பெற்ற பிறகு வாடகை தாய்களை யாரும் கண்டுகொள்வதில்லை. மேலும் புரோக்கர்கள் பிடியில் சிக்கி வாடகைத் தாய்கள் ஏமாற்றப்பட்டு வருகின்றனர்.

இவர்களது கண்ணீர் கதை குறித்து சென்னை வியாசர்பாடியை சேர்ந்த சுமதி கூறுகையில், "எனது கணவர் சங்கர். ஆட்டோ டிரைவர். எனக்கு நான்கு குழந்தைகள் உள்ளன. குடும்பத்தில் ரொம்ப கஷ்டம். கடன் தொல்லை வேற அதிகமாகிடுச்சு. அப்போதுதான் எங்கள் பகுதியில் குடியிருந்த புரோக்கர் மூலம் வாடகை தாய் பற்றி கேள்விப்பட்டேன். இரண்டு லட்சம் ரூபாய் தருவதாக கூறினார்கள். கணவரிடம் கூறினேன். 'வேறு ஒருத்தனுக்கு பிள்ளை பெற்று கொடுப்பதாக  சொல்வது உனக்கு அசிங்கமா இல்லையா' என்று திட்டினாரு. இதனால் சம்மதம் தெரிவிக்க ரொம்பவே யோசிச்சேன். ஆனால் கடன்காரர்கள் தொல்லை அதிகமானதால் வேறுவழியின்றி வாடகை தாயாக மாற சம்மதித்தேன்.

மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தார்கள். டெஸ்ட் டியூப் மூலம் கர்ப்பபைக்குள் கரு சென்றதும் எனக்குள் புகுந்த தாய்மை உணர்வால், எல்லா சோகமும் மறந்து போயிச்சு. மாசமா இருக்கும் போது மருத்துவமனையில் நல்ல கவனிச்சாங்க. ஆபரேசன் மூலம் குழந்தை பிறந்த பிறகு என்னை யாரும் கண்டுகொள்ளவில்லை. பத்துமாதமாக சுமந்து பெற்றெடுத்த குழந்தையின் முகத்தை கூட பார்க்க அனுமதிக்கவில்லை. மேலும், பேசியபடி பணத்தை கொடுக்காம என்னை புரோக்கர் ஏமாத்திட்டார். வறுமையால்தான் வாடகை தாயாக இருக்க சம்மதித்தேன். இதுகுறித்து யாரிடம் சொல்ல முடியும். கிடைச்ச பணத்தை வைத்து கொஞ்சம் கடனை அடைச்சிட்டேன்' என்றார்.

வியாசர்பாடி, காந்திபுரத்தை சேர்ந்த ஆனந்தி, "என் குடும்பத்தின் பணம் கஷ்டத்தை தெரிந்துகொண்டு புரோக்கர், 'வாடகை தாய்க்கு சம்மதமா?' என்று கேட்ட போது குடும்பத்தில் ஏகப்பட்ட பிரச்னை கிளம்பியது. ஒரு பெண்ணுக்கு டெலிவரி என்பது மறுபிறப்பு என்பார்கள். அப்படி இருக்கும் போது பணத்துக்காக குழந்தையை பெற்றுக் கொடுக்க யாரும் சம்மதிக்கமாட்டார்கள். நானும் அப்படித்தான் இருந்தேன். கடைசியில் பணத்துக்காக சம்மதம் தெரிவிச்சேன். மருத்துவமனையில் குழந்தையில்லாத தம்பதியினரின் ஏக்கத்தை பார்த்த போது என்னுடைய எண்ணத்தை மாற்றிக் கொண்டேன். பணம் மட்டும் இருந்தால் சும்மா கூட குழந்தையை பெற்றுக் கொடுத்து இருப்பேன். கடையில் போய் வாங்க கூடிய பொருள் அல்ல குழந்தை. அதை பெற்றுக் கொடுக்க கடவுள் எனக்கு வாய்ப்பு கொடுத்திருக்கும் போது அதை செய்யாமல் இருப்பது தவறு. இதை தியாகம் என்றே நான் கருதுகிறேன். எனக்கு பேசியபடி 2 லட்சத்தை கொடுத்திட்டாங்க. குழந்தை பிறந்து 20 நாட்களுக்கு பிறகு ஏற்பட்ட வயிற்று வலிக்கு மருத்துவமனைக்கு சென்றேன். ஆனால் அவர்கள் எனக்கு வேண்டா வெறுப்பாக சிகிச்சை அளித்தனர். இதனால் வாடகைத் தாய் உடல் நலத்தில் கடைசி வரை சம்பந்தப்பட்டவர்கள் அக்கறை செலுத்த வேண்டும். மேலும் பேசியபடி தொகை கொடுக்காமல் ஏமாற்றப்படுவதையும் தடுக்க வேண்டும்" என்றார்.

சென்னையை சேர்ந்த ஜோதி கூறுகையில், "மலடி என்ற பட்டத்தை சமுதாயம் கொடுக்கும் போது அதை எந்த பெண்ணும் தாங்கிக் கொள்ள முடியாது. குழந்தையில்லாத தம்பதியினரின் குறையை என்னால் போக்க முடிந்ததை இப்போது நினைக்கும் போது கூட மனசு சந்தோஷமாக இருக்கிறது. வாடகை தாய்க்கும், குழந்தையில்லாத தம்பதியினருக்கும் இடையே எந்த தொடர்பும் இருப்பதில்லை. இதனால் புரோக்கர்களாக சில மருத்துவமனை நிர்வாகம் செயல்படுகிறது. இதுதான் வாடகை தாயாக செல்லும் பெண்கள் அதிகளவில் ஏமாற்றப்படுவதற்கு காரணம். அடுத்து வாடகை தாய்க்கு சம்மதம் தெரிவிக்கும் பெண்களை சமுதாயமும், குடும்பத்தில் உள்ளவர்களும் கடுமையாக விமர்சிக்கின்றனர். இது மாற வேண்டும்' என்றார்.

பெயர், ஊர் வெளியிட விரும்பாத சென்னையை சேர்ந்த வாடகைத் தாய் ஒருவர் நம்மிடம் அவரது அனுபவங்களை பகிர்ந்தார். "எனக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. என்னை விட்டு பிரிந்து சென்ற எனது கணவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவர் தற்கொலை செய்து கொண்டார். விதவையான நான், வீட்டு வேலைகளை செய்து என் குழந்தையை வளர்த்தேன். எனது தம்பிக்கு ஆடம்பரமாக நடத்திய திருமணத்தால் குடும்பத்தில் அதிகளவில் கடன் சுமை ஏற்பட்டது. வறுமையில் வாடிய என்னை புரோக்கர் ஒருவர் வாடகைத் தாய்க்கு ஏற்பாடு செய்தார். சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையில் குழந்தையை பெற்றுக் கொடுத்தேன். விதவை, கர்ப்பம் அடைந்தால் ஏற்படும் சிக்கலை தவிர்க்க பத்து மாத காலம் தலைமறைவு வாழ்க்கை நடத்தினேன். என் குழந்தையை கூட 6 மாதம் பார்க்கவில்லை. இவ்வளவு கஷ்டப்பட்டும் பேசியபடி எனக்கு பணம் கொடுக்கவில்லை. நான், ஏமாற்றப்பட்டதால் தற்கொலைக்கு முயற்சி செய்தேன். வீட்டில் உள்ளவர்கள் தடுத்துவிட்டனர்' என்றார்.

வாடகைத் தாய் உரிமைகளுக்காக 'ஸ்டார்ட் இந்தியா' என்ற அமைப்பை உருவாக்கியுள்ள கதிரவனிடம் கேட்டோம். 'வாடகை தாயின் மூலம் குழந்தையை பெற்றுக் கொள்ளும் முறை கடந்த 1993ம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்து வருகிறது. 2002ம் ஆண்டு ஜப்பான் நாட்டை சேர்ந்த குழந்தையில்லாத தம்பதியினர், குஜராத்தை சேர்ந்த வாடகை தாய் மூலம் குழந்தை பெற ஏற்பாடு செய்தனர். குழந்தை பிறப்பதற்குள் ஜப்பான் தம்பதிக்கு இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர். இதனால் யாரிடம் குழந்தை ஒப்படைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. மஞ்சு என்ற பெயரில் குழந்தை வாடகைத்தாயிடம் வளர்ந்தது. இப்பிரச்னை குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றம் சில வழிகாட்டுதல்களை தெரிவித்துள்ளது. மேலும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகமும் (ஐ.சி.எம்.ஆர்) சில வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது.

அதில், வாடகைத் தாய்க்கு சம்மதிக்கும் பெண்கள், ஏற்கனவே இரண்டு குழந்தைகளை பெற்று இருக்க வேண்டும். அப்பெண் வாடகைத் தாயாக 3 முறை மட்டுமே குழந்தைகளை பெற முடியும். வயது 30க்குள் இருக்க வேண்டும். குழந்தையில்லாத தம்பதியினரிடமிருந்து பெறப்படும் தொகை வாடகைத் தாய்க்கு வழங்கப்பட வேண்டும். மேலும் எக்காரணத்தைக் கொண்டு வாடகைத் தாய் சம்பந்தப்பட்ட குழந்தை மீது உரிமை கொள்ளக் கூடாது போன்ற விதிமுறைகள் உள்ளன. இதுவரை வாடகைத் தாய் உரிமைக்காக போராட தமிழகத்தில் எந்த அமைப்பும் இல்லை. வாடகைத் தாய்களுக்கான உரிமைகளை நிலைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த 2012ல் நாடாளுமன்றத்தில் வாடகைத்தாய் சம்பந்தமான மசோதா (செயற்கை முறையில் குழந்தை பிறப்பு சம்பந்தமாக) கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. ஆனால் அந்த மசோதா கிடப்பில் போடப்பட்டுள்ளது. இப்போது மீண்டும் அந்த மசோதாவுக்கு உயிர் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.

முதல் டெஸ்ட் டியூப் பேபி: 
உலகத்தில் முதன்முறையாக 1978, ஜூலை 25ம் தேதி டெஸ்ட் டியூப் மூலம் லெஸ்லி, ஜான்பிரவுன் என்ற பிரிட்டன் தம்பதிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு லூயி ஜாஸ் என்று பெயர் சூட்டப்பட்டது. இப்போது லூயி ஜாய் பிரவுனுக்கும் டெஸ்ட் டியூப் மூலம் குழந்தை பிறந்திருக்கிறது. செயற்கை மூலம் கருவூட்டலுக்கு உலகில் சில நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்தியாவில் செயற்கை முறை கருவூட்டலுக்கான செலவு குறைவு என்பதால் வெளிநாட்டு தம்பதியினர் அதிகம் இங்கு வருகின்றனர்.
உயிரையும், உதிரத்தையும் கொடுத்து தாயின் கருவறையில் உருவாக்கப்படும் குழந்தை பிறப்பில் கூட மோசடி நடைபெறுவது தடுக்கப்பட வேண்டும்.



No comments:

Post a Comment