சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

17 Feb 2015

இன்னொரு மதுரை பாண்டியம்மாள்: கொல்லப்பட்டதாக சொல்லப்பட்டவர் உயிருடன் வந்தார்!

இந்த செய்தியை படிக்கும் முன்னர் 1991 ஆம் ஆண்டில் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய  மதுரை பாண்டியம்மாள் கொலை வழக்கு குறித்த சுருக்கமான விவரத்தை முதலில் படித்து விடுங்கள்...

கடந்த 1991 ஆம் ஆண்டில், விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள பள்ளப்பட்டியைச் சேர்ந்த பாண்டியம்மாள் என்பவரை, அவரது கணவர் வேலுச்சாமியும் மற்றும் இருவரும் சேர்ந்து கொலை செய்துவிட்டதாக காவல் துறையினர் வழக்குப் பதிவுசெய்தனர். இந்த கொலை தொடர்பாக, மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. அந்த ஊருக்கு அருகே ஒரு பெண்ணின் பிணம் கிடந்ததாகவும் அது பாண்டியம்மாள்தான் என்றும் கூறப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தான்தான் தன் மனைவியைக் கொலை செய்ததாகவும், கொலை செய்த விதம் குறித்து நீதிமன்றத்தில் நடித்தும் காட்டினார் பாண்டியம்மாளின் கணவர் வேலுச்சாமி. ஆனால் சில நாட்களுக்குப் பிறகு ஒரு பெண்மணி, அந்த நீதிமன்றத்தில் நேரில் வருகை தந்து, தனது பெயர் பாண்டியம்மாள் என்றும், தன்னைக் கொலைசெய்து விட்டதாகத்தான் இந்த வழக்கு நடைபெற்று வருகிறது என்றும் சாட்சியமளித்தார்.

இதனையடுத்து இந்த வழக்கு தமிழகத்தில் அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அப்போது விகடன் ஆசிரியர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை தொடர்ந்து, வேலுச்சாமி உள்ளிட்டோர் குற்றவாளிகள் அல்ல என விடுவிக்கப்பட்டனர். போலீஸாரின் ஜோடனை வழக்கு சதியும், வேலுச்சாமி உள்ளிட்டோரிடம் அடித்து உதைத்து வாக்குமூலம் வாங்கியதும் அம்பலமானது. 
தற்போது  விருதுநகரில் அரங்கேறி உள்ள  ஒரு  சம்பவம் இன்னொரு பாண்டியம்மாள் வழக்கோ? என்ற எண்ணத்தை ஏற்படுத்தி உள்ளது.
தற்போதைய நிகழ்வு
விருதுநகர், மேலரதவீதி அண்ணாமலை சந்தையை சேர்ந்தவர் ரெங்கராஜன் (33). இவரது மனைவி கோமதி (23). இவர்களுக்கு தனியா (6) என்ற மகள் உள்ளார்.

இந்நிலையில், இவர்களது வீட்டில் இருந்து கடந்த 2 வாரங்களுக்கு முன்பு துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, விருதுநகர் பஜார் காவல்துறையினர் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது, ரெங்கராஜனிடம் விசாரித்தபோது, ''எனது மனைவி கோமதியின் நடத்தையில் சந்தேகம் எழுந்தது. இதனால், அவளை கட்டையால் அடித்து கொன்று, உடலை சாக்கு மூட்டையில் கட்டி வைத்தேன். மேலும், உடலை அப்புறப்படுத்துவதற்காக எனது நண்பர் ஆறுமுகம் (310 என்பவரின் உதவியை நாடினேன். ஆனால், அவளது உடலை அப்புறப்படுத்த முடியாததால், வீட்டிற்குள்ளேயே வைத்திருந்தேன்'' எனக் கூறியதாக தெரிவித்த காவல்துறையினர், ரெங்கராஜ் மற்றும் ஆறுமுகத்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் முறையான விசாரணை நடைபெறவில்லை என்று கிடைத்த தகவலின்பேரில், மறு விசாரணை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு உத்தரவிட்டார். அதன்பேரில், விருதுநகர் பஜார் இன்ஸ்பெக்டர் ராமநாராயணன் விசாரணை மேற்கொண்டார்.

அந்த விசாரணையில், ''கோமதி ஏற்கனவே திருப்பூரைச் சேர்ந்த தர்மராஜ் என்பவரை திருமணம் செய்ததாகவும், அவர்களுக்கு தனுஷ்கா (9) என்ற மகள் இருப்பதாகவும் தெரியவந்தது. மேலும், கடந்த 2009ஆம் ஆண்டு தர்மராஜை பிரிந்து, ரெங்கராஜனை 2வது திருமணம் செய்து கொண்டதாகவும் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, தர்மராஜிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கோமதி குறித்து தனக்கு ஒன்றும் தெரியாது எனவும், கோமதியின் தாத்தா தங்கராஜ் என்பவரிடம் விசாரித்தால் ஏதேனும் தகவல் கிடைக்கும் எனவும் கூறியிருக்கிறார்.

இதைத்தொடர்ந்து, நிலக்கோட்டை, சித்தாளம்பட்டியில் வசித்து வரும் தங்கராஜிடம் விசாரித்தபோது, கோமதி தன்னுடன் வாழ்ந்து வருவதாக கூறியிருக்கிறார். இதையடுத்து, கோமதியிடம் விசாரணை நடத்தினர். அப்போது, ரெங்கராஜனின் நடவடிக்கை பிடிக்காததால், அவரை பிரிந்து கடந்த 2011ஆம் ஆண்டு முதல் தாத்தா தங்கராஜூடன் வசித்து வருவதாக கூறியிருக்கிறார்.

இதனால் காவல்துறையினர் குழப்பமடைந்தனர். கோமதி உயிருடன் இருப்பதால், கொலை செய்யப்பட்ட பெண் யார்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து, சமீபத்தில் காணாமல் போன பெண்களின் விவரங்களை சேகரித்து விசாரணை நடத்தினர்.

அப்போது, விருதுநகர் பாண்டியன் நகரை சேர்ந்த கணசேன் என்பவர் தனது மனைவி செல்வியை காணவில்லை என புகார் செய்திருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, கொலை செய்யப்பட்ட பெண் அணிந்திருந்த உடை மற்றும் தாலிச்சங்கிலி, கம்மல் ஆகியவற்றை செல்வியின் இரு மகள்களிடம் காட்டினர். அதைப்பார்த்த அவர்கள் இருவரும் அது தங்களுடைய தயாருடையதுதான் எனக் கூறியுள்ளனர்.

இதையடுத்து, கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை மீண்டும் தோண்டி எடுத்து மறுபரிசோதனை செய்ய காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். அதேபோல், சிறையில் இருக்கும் ரெங்கராஜையும் காவலில் எடுத்து விசாரிக்கவும் காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். அதன் பின்னரே, கொலை செய்யப்பட்டது செல்விதானா? அல்லது வேறு யாருமா? என்பது குறித்தும், கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து தெரியவரும்.



No comments:

Post a Comment