சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

14 Feb 2015

அக்னிச் சிறை தாண்டியவள்!

சமீபத்தில் லாஸ் ஏஞ்சல் நகரில் நடந்த, இசையின் உச்சகட்ட அங்கீகாரமான ‘கிராமி விருதுகள்’ வழங்கும் விழாவின் ஹைலைட், நெகிழ்ச்சியூட்டும் ப்ரூக் அக்ஸ்டெல்லின்(Brooke Axtell) பேச்சு.
யார் இந்த ப்ரூக்?! ஒரு வரியில் சொன்னால், குடும்ப வன்முறையிலிருந்து மீண்டு, பாதிக்கப்பட்ட பெண்களுக்காக முழுநேரம் உழைத்துக் கொண்டிருக்கும் அமெரிக்கப் பெண். அதுக்கும் மேலே... அழகான அரங்கக் கலைஞர்; அமெரிக்காவின் இளங்கவிஞரும் கூட! முழு நீளமாய் தெரிந்து கொள்ள, நீங்களும் அவரின் பேச்சைக் கேளுங்கள்!

‘‘எல்லாப் பெண்களையும் போல மனதுக்குப் பிடித்த பையனை உருகி உருகிக் காதலித்தேன். ஆனால், ஒரு கட்டத்தில் அவனே என்னை அடித்துத் துன்புறுத்தினான். அன்பின் மிகுதியால், உளவியல் ரீதியாக அவனுக்கு ஏதோ பிரச்னை இருக்குமோ என்று, உதவ நினைத்தேன். அவன் மேல் நான் பொழிந்த அன்பை, அப்போதும் எனக்கு எதிராகவே செயல்படுத்தினான். என்னைத் தொடர்ந்து கொடுமைப்படுத்தினான். பொறுக்க முடியாத ஒரு தருணத்தில், அவனை விட்டு துணிச்சலாக விலகி வந்துவிட்டேன். உண்மையான நேசம் என்பது, இணையை எந்த வகையிலும் அச்சுறுத்தாமல் அன்பால் வழி நடத்துவதுதான். அதனால் நீங்கள் யாராவது அன்பென்ற சிறையில் சிக்கி வன்முறைக்கு உள்ளாகியிருந்தால், அதிலிருந்து தைரியமாய் மீண்டு வாருங்கள்!’’ என பெண்களுக்கு வழி காட்டுகிறார், ப்ரூக்.

ப்ரூக்கின் இளமைக் காலம், மிகுந்த வலிகள் நிறைந்தது. இவருடைய  தாயார் ஒரு நோயாளி. ஆதரவில்லாத 7 வயதுச் சிறுமியாக இருக்கும் போது, பக்கத்து வீட்டுக்காரனுக்கு விற்கப்பட்டார் ப்ரூக். அவன், இவரைக் கட்டி வைத்து அடி, உதை கொடுத்து ஆபாசப் படமெடுப்பதையே வேலையாக வைத்திருந்தான். அவனிடம் இருந்து தப்பித்து மீண்டு வந்த ப்ரூக், தனக்கு ஆதரவு காட்டிய ஒருவனைக் காதலிக்க, கடைசியில் அந்தக் காதலனே இன்னும் கூடுதலான டார்ச்சரைக் கொடுத்திருக்கிறான்.

இப்போது எல்லா கொடுமைகளில் இருந்தும் விடுபட்டு சமூக சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார் ப்ரூக். பாலியல் தொழிலுக்காக குழந்தைகளைக் கடத்துவதைத் தடுப்பதற்கான அமைப்பை உருவாக்கி, போராடி வருகிறார். பாலியல் பலாத்காரத்தாலும், குடும்ப வன்முறையாலும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் உதவி வருகிறார்.
‘கிராமி’ விருது வழங்கும் விழாவில் பாடகி கேட்டி பெர்ரியை அறிமுகப்படுத்தி பேசுவதற்காக , ப்ரூக்கியை அழைத்திருந்தது விழா அமைப்பு. அங்குதான், வலிகள் எழுதிய தன் கடந்த காலத்தைப் பேசி எல்லோரையும் நெகிழ்த்திவிட்டார் ப்ரூக்.
அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிலும் பெண்கள் வன்கொடுமைக்கு உட்படுத்தப்படுவது அதிர்ச்சியைத் தரும் அதே நேரத்தில், இவரது பேச்சு வீடியோ பலருக்கும் புத்துணர்வைக் கொடுக்கும் வகையில் ஷேர் ஆவது வரவேற்கத்தக்கது!



No comments:

Post a Comment