சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

26 Feb 2015

சாதனை மனுஷி..... கலங்கவைத்த விதி... கைகொடுத்த கத்தரி!

''ஒரு விபத்துல அடிபட்டு ரெண்டு வருசமா ஒடம்பு முடியாம இருந்த வீட்டுக்காரர், நாலு மாசத்துக்கு முன்ன, எங்க கல்யாண நாள் அன்னிக்கு இறந்துட்டார். 34 வயசுல புருஷனை இழந்து... ஒரு பையன், ஒரு பொண்ணுனு ரெண்டு குழந்தைகளோட தனி மரமா நின்னேன்''

கண்கலங்கியபடியேதான் ஆரம்பித்தார், திருச்சியைச் சேர்ந்த பெட்ரிசியா.
ஆண்கள் செய்யக்கூடிய வேலைகளைப் பெண்களும் கையில் எடுத்து பிரமாதப்படுத்தும் காலம் இது. அதிலும், ஆண்களுக்கென மட்டுமே இருக்கும் முடிதிருத்தும் நிலையத்தில், பெண் முடிதிருத்தும் தொழிலாளியாக, கடையின் முதலாளியாக தன் வாழ்வுக்காகவும் தன் குழந்தைகளின் எதிர்காலத்துக்காகவும் உழைத்து வருகிறார் பெட்ரிசியா.
''எனக்குக் கல்யாணமாகி 14 வருசம் ஆச்சு. என் வீட்டுக்காரர் ஒரு பார்பர் ஷாப் வெச்சு நடத்திட்டு வந்தாரு. அதே கடையில ஒரு ஓரமா தையல் மெஷின் போட்டு, துணி தைச்சுட்டு இருந்தேன். அப்ப அங்க செய்யுற கட்டிங், ஷேவிங் பாத்து தானாவே அதைக் கத்துக்க ஆரம்பிச்சேன். என் வீட்டுக்காரர்தான் எனக்கு குரு, கஸ்டமர் ரெண்டுமே. அவருக்கு முடி வெட்டிவிடச் சொல்வார். ஷேவிங் பண்ணவும் அவர் முகத்துலதான் பழகிக்கிட்டேன்.
திடீர்னு ஒரு விபத்துல சிக்கின அவரால அதுக்கு அப்புறம் வேலை செய்ய முடியாம போக, அவரையும், குடும்பத்தையும் பாத்துக்க வேண்டிய பொறுப்பு எனக்கு வந்துச்சு. தைரியமா கடையை எடுத்து நடத்த ஆரம்பிச்சேன். ஏற்கெனவே இருந்த கடன் பிரச்னை காரணமா, கடையில இருந்த சாமான்கள், வேலையாட்கள்னு எல்லாமே போயிடுச்சு. கணவரும் இறந்து போக, மனசு ஒடிஞ்சு போயிட்டேன். ஆனாலும், இதைத் தவிர வேற தொழில் எனக்குத் தெரியல. அங்க இங்கனு கடனை வாங்கி, வாடகைக்கு ஒரு கடை எடுத்து நான் மட்டுமே தனி ஆளா நடத்த ஆரம்பிச்சேன்'' என்று பெட்ரிசியா சொன்னபோது, அந்தச் சூழலை கற்பனை செய்து பார்க்கவே ஆச்சர்யமாக இருந்தது நமக்கு. அதை எதிர்கொண்ட விதத்தைச் சொன்னார் பெட்ரிசியா.
''சலூன்ங்கிறதே நூத்துக்கு நூறு ஆண்களுக்கு தான். ஆனா, என் கடைக்கு ஆரம்பத்துல ஆண்கள் வரத் தயங்கினாங்க. கடையில வெறிச்சோடி உட்கார்ந்துட்டு இருந்தேன். கொஞ்ச நாள்ல கஸ்டமர்கள் வர ஆரம்பிச்சாங்க. காலையில 6 மணிக்கு கடைக்கு வந்தா, ராத்திரி 9 வரைக்கும் வேலை இருக்கும். இதுக்காக குழந்தைகளைக் காலையிலே எழுப்பி குளிக்க வெச்சு, அவங்களையும் கடைக்கு கூட்டிட்டு வந்து, இங்கயே சாப்பாடு கொடுத்து, ஸ்கூலுக்கு அனுப்புவேன். வீட்ல வயசான மாமியார் இருக்காங்க. அவங்களையும் அப்பப்ப போயி கவனிக்கணும்.
வர்ற வருமானம் கடை வாடகைக்கும் கரன்ட்டு பில்லுக்குமே சரியா போகும். ஆனாலும், விடாம உழைச்சேன். முடி வெட்டுறது, துணி வெட்டுறதுனு கத்தரிக்கோல்தான் என் வாழ்க்கையை மாத்திச்சு!'' என்ற பெட்ரிசியாவின் கண்களில் உழைப்பின் வலி தெரிந்தது.
''கணவர் உயிரோட இருந்தப்ப அவருக் குன்னு நிறைய கஸ்டமர்கள் இருந்தாங்க. அவங்கள்ல நிறைய பேர், ’பழகுன எடத்துல முடி வெட்டிக்க மனசு வரலை'னு சொன் னாங்க. 'நீங்க உங்க சகோதரிக்கு பணமோ பொருளோ தர வேணாம்... அவ உழைப்புக்கு ஊதியம் கொடுத்தா போதும்!’னு சொன்னேன். புரிஞ்சிக்கிட்டவங்க தொடர்ந்து வர ஆரம்பிச்சாங்க. ஒரு லேடி நர்ஸ், இல்ல லேடி டாக்டர் இவங்க தொடும்போது எப்படித் தப்பா தெரியாதோ, அப்படித்தான் எங்களுக்கும் இது ஒரு வேலை. இந்த ஸீட்ல உட்கார்ற எல்லாரையுமே சகோதரர்களாத்தான் நெனைக்குறேன். அவங்களும் சகோதரியா நெனச்சு, 'என்ன சூழ்நிலையில இந்தப் பொண்ணு இந்த வேலைக்கு வந்திருக்கு... அதுக்கு நாம உதவியா இருக்கணும்’னு கொடுக்குற ஊக்கத்தாலதான் கடையைத் தொடர்ந்து நடத்த முடியுது!'' என்றவர்,
''ஒரு தரம் கடைக்கு வந்த ஒரு தம்பி வேணும்னே இடிச்சுட்டு நின்னுச்சு. 'புருஷனை இழந்துட்டு, எம்புள்ளைகளுக்காக உங்க முன்ன இப்படி கத்தரியும் கையுமா நிக்குறேன். உங்க அக்காவா இருந்தா அவளையும் இப்படித்தான் இடிச்சுட்டு நிப்பீங்களா தம்பி?’னு அது கண்ணைப் பாத்துக் கேட்டேன். அதுக்குக் கண்ணே கலங்கிருச்சு. திரும்பிப் பாக்காமலே போயிருச்சு.
’ஒரு பொண்ணு தனியா இருந்தா தப்பா நடந்துக்குவா, நாமளும் தப்பா நடந்துக்கலாம்’னு இங்க வளர்ந்து கெடக்குற மனோபாவம்தான், பொம்பளைங்கள முன்னுக்கு வர விடாம செய்ற இன்னொரு முட்டுக்கட்டை. அதையெல்லாம் தூக்கி எறிஞ்சிட்டு நம்ம பாதையில போயிகிட்டே இருக்கணும்!''

பெட்ரிசியா பேச்சில் அத்தனை உறுதி!
''பெண்கள் என் கடைக்கு வர்றது இல்ல. யாராச்சும் வீட்டுக்கு வந்து ஹேர் கட்டிங் பண்ணிக்குவாங்க. என் புள்ளைங்க ரெண்டும் ஸ்கூல் ஃபர்ஸ்ட் மார்க் வாங்கணும்ங்கிற ஆசையை எல்லாம்விட, அவங்க நேர்மையா உழைச்சு முன்னுக்கு வரணும்ங்கிறதுதான் நான் அவங்களுக்கு அடிக்கடி சொல்றது. வேற பெரிய ஆசை எதுவும் சொல்லத் தெரியல எனக்கு!''

No comments:

Post a Comment