சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

20 Feb 2015

6 மாதத்திற்குள் அவசரப்படலாமா?

குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள்
மழலைச்சொல் கேளாதவர்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மழலைகளின் முக்கியத்துவத்தை திருவள்ளுவர் உணர்த்திச் சென்று விட்டார். ஆனால், அத்தகைய மழலைச் சொல்லை கேட்பதற்குள், இன்றைய புதுமணத் தம்பதிகளின் நிலையை சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை.

சமீபத்தில் பேருந்து நிறுத்தம் ஒன்றில் நண்பர் ஒருவரை சந்திக்க நேர்ந்தது. என்னிலும் வயதில் மூத்தவர். இருபத்தெட்டு வயது இருக்கும். அரசு பள்ளி ஆசிரியர். மனைவி சகிதமாக நின்றிருந்தார். சமீபத்தில்தான் திருமணம் முடிந்திருந்தது. அதிகபட்சம் ஆறு மாதங்கள் இருக்கலாம். எப்போதும் கலகலப்பாக பேசும் அவர் அன்று  முகவாட்டத்துடன் காணப்பட்டார். அவரை அதுபோல் முன்பு எப்போதும் பார்த்ததாக நினைவில்லை. கேட்கலாமா? வேண்டாமா? என்ற தயக்கத்துடன் அவர் சோகத்தின் காரணத்தை தயங்கித் தயங்கிக் கேட்டேன்.

“எங்களுக்கு இன்னும் குழந்தை பாக்கியம் இல்லை. நான் பணிபுரியும் இடத்தில் சக ஆசிரியர்கள் தினந்தோறும் ஏதேனும் 'நல்ல செய்தி'யை சீக்கிரம் சொல்லுங்கள் எனக் கேட்டு கலாய்க்கிறார்கள். போதா  குறைக்கு அவள் பெற்றோரும், என் பெற்றோருமாக ஒவ்வொரு மாதமும் ஒரு சட்டமன்ற விவாதத்தையே வீட்டில் நடத்துகிறார்கள். அவள் வீட்டில் என்னையும், என் வீட்டில் அவளையும் குற்றவாளிகளாக கூண்டில் ஏற்றுகிறார்கள். நண்பர்கள், உறவினர்கள் யாரிடமும் முன்பு போல சகஜமாக பேச முடியவில்லை. எங்கே கேட்டு விடுவார்களோ என பயமாக இருக்கிறது. இவ்வளவு ஏன் இப்போதெல்லாம் மனைவியிடம் கூட சகஜமாக பேச முடியவில்லை. இதோ இப்போதுகூட மருத்துவ பரிசோதனைக்குதான் சென்று வந்தோம். அவளுக்கு மாதவிடாய் ஒழுங்கு முதலிய சில பரிசோதனைகள், எனக்கு செமன் டெஸ்ட் உட்பட சில பரிசோதனைகள். இருவருமே நார்மல். பிரச்னை ஏதும் இல்லை. மருத்துவர் தாம்பத்தியத்திற்கு சில நாட்களை குறித்துக் கொடுத்திருக்கிறார்” என்றார் சோகமாக.

எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஆறு மாதங்களுக்கே இப்படியா? ஒன்று மட்டும் எனக்கு நன்றாக புரிந்தது. அந்த தம்பதிகள் உச்சபட்ச மன அழுத்தத்தில் தவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று.

முன்பெல்லாம் இரண்டு மூன்று வருடத்திற்கு பிறகுதான் குழந்தையின்மை பற்றிய பேச்சை ஆரம்பிப்பார்கள். ஆனால், இப்போது நிலைமை தலை கீழ். பீட்சாவை ஆர்டர் செய்தால் வீட்டுக்கே வந்து டோர் டெலிவரி செய்வது போல் திருமணம் ஆனதும் அடுத்த பதினோராவது மாதத்தில் கையில் குழந்தை தவழ வேண்டும். இதற்கெல்லாம் நமக்கே தெரியாத நாம்தான் காரணம். இங்கு நாம் என்பது நம் சமுதாயம்.
படிக்கும்போது எப்போது வேலைக்கு போவாய் என்போம். வேலை கிடைத்ததும் எப்போது திருமணம் என்போம். திருமணம் முடிந்ததும் குழந்தை எப்போது என்போம். இப்படியே கேள்வி கேட்டு, கேட்டு நம் எதிர்பார்ப்பை அடுத்தவர் மீது திணிப்போம். அதை அவர்கள் நிறைவேற்றாத போது அதையே திரும்பத் திரும்ப கேட்போம்.

இறுதியாக ஒன்றே ஒன்று. குழந்தையின்மை என்பது தீர்க்கவே முடியாத பிரச்னை ஒன்றும் இல்லை. மருத்துவ வசதிகளும் வளர்ந்து டெஸ்ட் டியூப் பேபி முதலான வசதிகள் முதலியவை நிறைந்த தொழில்நுட்ப நூற்றாண்டில் வசிக்கிறோம். மேலும் பத்து பதினைந்து வருடங்களுக்கு பிறகு தங்கள் முதல் குழந்தையை பெற்றெடுத்த தம்பதிகளும் இருந்திருகிறார்கள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
எனவே, நாம் நம் விருப்பங்களை தம்பதிகளின் மேல் சுமத்தாமல் இருந்தாலே போதும். அவர்கள் எந்தவித மன அழுத்தமும் இன்றி இனிய தாம்பத்ய வாழ்கையை வாழ்வர். அவர்களின் வீட்டிலும் மழலைச் சொல்லைக் கேட்கலாம்.



No comments:

Post a Comment