சென்னை தியாகராயர் நகர், வெங்கட் நாராயணா சாலை...
கடந்த வாரத்தில் ஒரு நாள் நள்ளிரவு..!
சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு போன் வந்தது. அதில் பதற்றத்துடன் பேசியது ஓர் ஆண் குரல், ''சார்... எங்களைக் காப்பாத்துங்க..... எங்ககூட வந்த ஒரு பொண்ணை இரண்டு பேர் பலவந்தமாய் 'ரேப்’ பண்ண முயற்சிக்கிறாங்க. அதைத் தடுக்கப் போன எங்களையும் அடிச்சுப் போட்டுட்டாங்க'' என்றது.
இதைக் கேட்ட போலீஸார் அடுத்த நொடியே மாம்பலம் போலீஸ் நிலையத்துக்குத் தகவல் கொடுக்க... உடனடியாக போலீஸ் டீம் அங்கு ஆஜராகியது. போலீஸைப் பார்த்ததும் அங்கிருந்து மின்னல் வேகத்தில் அந்த சொகுசு கார் பறந்தது. 'அதோ அந்த கார்தான்...’ என்று பதற்றமான குரலில் அந்த இளைஞன் சொல்ல... போலீஸாரும் அந்த காரை பின்தொடர்ந்து மடக்கிப் பிடித்தனர். கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் சொன்னவர், பாதிக்கப்பட்ட பெண், காரில் எஸ்கேப் ஆக நினைத்த இரண்டு பேர் என அனைவரையும் போலீஸ் நிலையத்துக்கு அள்ளிக்கொண்டு போய் விசாரித்தது போலீஸ் டீம்.
அப்போது கிடைத்த செய்தி அதிர்ச்சி ரகம்!
போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் சொன்னவர், பாதிக்கப்பட்ட பெண், அவர்களுடன் வந்தவர்கள் எல்லோரும் சென்னையில் உள்ள பிரபல கல்லூரியில் படிப்பவர்கள். இவர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து தி.நகரில் உள்ள கிளப்புக்கு வந்துள்ளார்கள். வந்த இடத்தில்தான் இந்த விபரீதம். கிளப்பில் 'அனைவரும்’ மது அருந்தி இருக்கிறார்கள். மயக்கத்தில் என்ன செய்கிறோம் என்று தெரியாத அளவுக்கு வரம்பு மீறியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதை அந்த கிளப்புக்கு வந்த இரண்டு வாலிபர்கள் பார்த்துள்ளனர். அவர்களுக்கும் சபலம் ஏற்பட... அந்த மாணவியைத் தொட்டுள்ளார்கள். மது மயக்கத்தில் இருந்த அந்த மாணவி, அதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. ஆனால், உடன் வந்த மாணவருக்குத்தான் சுள்ளென்று உரைத்துள்ளது. அவர், அந்த வாலிபர்களைத் தடுத்துள்ளார். அது அந்த வாலிபர்களுக்குக் கோபத்தை ஏற்படுத்த, மாணவரை அடித்துள்ளார்கள். வாலிபர்களுடன் போராட முடியாமல் தவித்த பாய் ஃப்ரெண்ட்தான் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் சொல்லியிருக்கிறார்.
மாணவியிடம் அத்துமீறிய அந்த இரண்டு வாலிபர்களில் ஒருவர், விருகம்பாக்கத்தில் உள்ள ஒரு தியேட்டரில் மேலாளராகவும் மற்றொருவர் ஊழியராகவும் பணியாற்றுகிறார்கள். அவர்கள் இருவரையும் போலீஸார் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து புழல் சிறையில் அடைத்திருக்கிறார்கள். இந்தச் சம்பவத்தை மூடிமறைக்க கிளப், கல்லூரி நிர்வாகம் தரப்பிலிருந்து போலீஸாருக்கு பிரஷர் வந்துள்ளது. இதனால், சாதாரண சம்பவங்களில் கைது செய்யப்படும் குற்றவாளிகளைக்கூட பத்திரிகைகளுக்குத் தகவல் கொடுத்து பிரபலப்படுத்தும் போலீஸார், இந்தச் சம்பவத்தை ஏனோ யாருக்கும் தெரிவிக்கவில்லை.
இந்த வழக்கை விசாரித்த போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் சொன்ன தகவல் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. ''இந்தச் சம்பவத்தில் பலாத்காரம் செய்யப்பட்ட கல்லூரி மாணவி, கிளப்புக்கு வருவதற்கு முன்பு புதுச்சேரிக்கு நான்கு பாய் ஃப்ரெண்டுகளுடன் காரில் சென்று இருக்கிறார். அங்கு அனைவருடனும் உல்லாசமாக இருந்து இருக்கிறார். புதுச்சேரியில் மது அருந்தியதில் இரண்டு பேர் எழ முடியாத அளவுக்குப் போய் விட்டனர். மீதமுள்ள இரண்டு பேருடன்தான் மாணவி இந்த கிளப்புக்கு வந்துள்ளார். இவர்கள் ஐந்து பேருமே கல்லூரியில் படிப்பவர்கள். அந்த மாணவி பெங்களூரைச் சேர்ந்தவர். தன்னுடைய பாய் ஃப்ரெண்டுடன் சகஜகமாக கிளப்பில் வந்து மது அருந்தும் அளவுக்கு
இன்றைய பெண்கள், கல்லூரி மாணவிகள் மாறிவிட்டனர். அதுவும் இன்னொரு ஆடவர், தன்னை வலுக்கட்டாயப் படுத்தும்போது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க முடியாத அளவுக்கு, மாணவிக்கு சுயநினைவு இல்லாதது வேதனைக்குரியது. பெண் குழந்தைகளைப் படிக்க அனுப்பும் பெற்றோர்கள் அவர்களைக் கண்காணிக்க வேண்டும். பீஸ் கட்டினால் கடமை முடிந்துவிட்டது என்று பெற்றோர்கள் இருப்பதே குழந்தைகள் தவறு செய்வதற்கு முதல்படியாக அமைகிறது' என்று சொன்னார்.
எங்கே போகிறது சமூகம்?
No comments:
Post a Comment