சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

16 Feb 2015

சகாயத்தின் பார்வை இங்கே திரும்புமா?: பதற வைக்கும் வீடியோ!

நெல்லை மாவட்டம், வள்ளியூரை அடுத்த சிதம்பராபுரம்-யாக்கோபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பி.சுயம்பு, கடந்த சில தினங்களுக்கு முன்பு நெல்லை மாவட்ட கலெக்டர், காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் அரசு துறை அதிகாரிகளிடம் பரபரப்பான புகார் ஒன்றை கொடுத்தார்.
இதுகுறித்து பி.சுயம்பு கூறுகையில், "வள்ளியூர் யூனியனில் சிதம்பராபுரம், யாக்கோபுரம், மாரன்குளம், கீழ்குளம், பெரியகுளம், லெவஞ்சிபுரம், கருங்குளம், சங்கனாபுரம், செட்டிகுளம் உள்ளிட்ட 15 கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களுக்கு தெற்கு கருங்குளம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி ஆழ்குழாய் கிணறுகள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இந்த சூழ்நிலையில் மலைப்பகுதிகளில் அனுமதியின்றி வள்ளியூர் யூனியன் சேர்மன் அழகானந்தம் உள்ளிட்ட அ.தி.மு.க, தி.மு.கவை சேர்ந்த சில முக்கிய பிரமுகர்கள் மணல் மற்றும் கனிமவளங்களை கொள்ளையடித்து வருகின்றனர். மொத்தம் 200 ஏக்கர் நிலப்பரப்புள்ள அரசு இடத்தில் உள்ள செம்மணல், சவ்வூடு மணல் போன்றவை அள்ளப்பட்டு வருகிறது. அரசு இடத்தையொட்டி சில தனியார் இடங்களும் உள்ளன. அந்த இடங்களில் சில பகுதிக்கு அனுமதி பெற்று விட்டு அரசு இடத்தையும், தனியார் இடத்தையும் இந்த மணல் மாஃபியாக்கள் சூறையாடுகின்றனர். தினமும் 200 லோடு மணல் அள்ளப்படுகிறது.

அந்தப்பகுதியில் 15 மீட்டர் ஆழத்துக்கு மேல் மணல் அள்ளப்பட்டுள்ளதால் ஆழ்குழாய் கிணறுகள் சேதமடைந்தும், நிலத்தடி நீர்மட்டம் குறைந்தும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க பலமுறை முயற்சித்தும் எந்தவித பலனும் இல்லை. மணல் அள்ளுபவர்கள் குறித்து புகார் கொடுத்தால் எனக்கு கொலை மிரட்டல் வருகிறது. ஆளுங்கட்சியினர் என்பதால் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. எனவே மக்களின் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண்பதோடு, மணல் கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்போது அதிக ஆழம் உள்ள இடத்தை மணல் மூலம் மாஃபியாக்கள் நிரப்பி வருகின்றனர்" என்றார்.

மணல் கொள்ளை நடப்பதற்கு ஆதாரமாக ஒரு சி.டி.யும் நமக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. அந்த சி.டி.யில் உள்ள தகவல்கள் அனைவரையும் பதை பதைக்க வைக்கிறது. ஆள் அரவமற்ற மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில், வண்டிப்பாதையில் வரிசைக்கட்டி லாரிகள் அணிவகுத்து நிற்கின்றன. அடுத்து ஒவ்வொரு லாரிகளுக்கும் ஜே.சி.பி. இயந்திரம் மூலம் மணல் அள்ளப்பட்டு லாரிகள் நிரப்பப்படுகின்றன. புழுதிகளை பறக்கவிட்டப்படி மணல் லாரிகள் அந்த இடத்தை விட்டு செல்கின்றன.
10 மீட்டர் முதல் 15 மீட்டர் வரை மணல் அள்ளப்பட்ட பகுதிகள் மேடு பள்ளமாக காட்சியளிக்கின்றன. கொள்ளைப்போகும் அரசின் கனிமவளங்களும், மணலால் அந்தப்பகுதி பாலைவனமாக மாறி விட்டது.
இந்த வீடியோவும் யாருக்குத் தெரியாமல் ரகசியமாக மணல் அள்ள சென்ற லாரிக்குள்ளேயே வைத்து படம் பிடிக்கப்பட்டுள்ளது. அந்தளவுக்கு அந்த இடம் முழுவதும் மணல் மாஃபியாக்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.



மணல் கொள்ளை வீடியோ
கடந்த 2008 ஆம் ஆண்டு ராதாபுரம் தாசில்தார், அந்தப்பகுதியில் உள்ள தனியார் இடங்களை ஆய்வு செய்து, அறிக்கை ஒன்றை தயாரித்து நிலத்தின் உரிமையாளர்களுக்கு தகவல் அனுப்பி உள்ளார். அப்படியென்றால் அரசு அதிகாரிகளே கனிம வளங்கள் கொள்ளை போவதை ஒப்புக் கொள்கின்றனர்.
ஆனால் தனியார் இடத்தில் ஆய்வு செய்து அறிக்கை அனுப்பும் அதிகாரிகள், ஏன் அரசின் இடத்தில் அக்கறை செலுத்தவில்லை என்பது மக்களின் கேள்வியாக உள்ளது. அ.தி.மு.க.வினர் மட்டுமல்ல தி.மு.க.வினருக்கும் இந்த கனிமவள கொள்ளையில் பங்கு இருப்பதாக மக்கள் கூறுகின்றனர். இரண்டு கட்சிகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கூட்டணி வைத்து கொள்ளையில் ஈடுபடுகின்றனர். இதனால் காவல்துறையினரால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. பொது மக்களை திருப்திப்படுத்த பெயரளவுக்கு சில லாரிகளை பிடிக்கும் அதிகாரிகள், அடுத்த சில தினங்களில் அதை விட்டுவிடுகின்றனர்.

அரசு இடத்தில் மணல் கொள்ளை நடப்பதை அரசு துறை அதிகாரிகள், காவல்துறையினர் கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு குறிப்பிட்ட சிலரை மணல் மாஃபியாக்கள் நன்கு கவனிக்கின்றனர். இதனால் மணல் கொள்ளை குறித்து புகார் வந்தாலும் அவற்றை கிடப்பில் போட்டு விடுவது வாடிக்கையாக உள்ளது. உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் குடிநீருக்காக அந்தப்பகுதி மக்கள் தவியாய் தவிக்க வேண்டியதிருக்கும்.
இதற்கிடையில் அந்தப்பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பவர், மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இதுகுறித்து அரசு பதிலளிக்க விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

நோட்டீஸ் வந்ததும் நெல்லை மாவட்ட நிர்வாகம் அந்த இடம் குமரி மாவட்டத்துக்குரியது என்று கை காட்டி இருக்கிறது. குமரி மாவட்ட அதிகாரிகளோ அதற்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்கிறது. என்ன கொடுமை சார் இது? என்று மக்கள் புலம்புகின்றனர்.

இதுகுறித்து அழகானந்தம் தரப்பில் கருத்து கேட்க,  அவரது செல்போன் நம்பருக்கு தொடர்பு கொண்டபோதும் அவர் பதிலளிக்கவில்லை.

கனிமவள கொள்ளை குறித்து மதுரையை மட்டும் ஆய்வு செய்யும் சகாயம், தமிழகம் முழுவதும் ஆய்வு மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.


No comments:

Post a Comment