சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

21 Feb 2015

போதையில் மயங்கி கிடந்த பெண்: பாதை மாறும் தமிழகம்!

டந்த ஜனவரி 27 ஆம் தேதி கரூர் பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவர் ஒருவர், மது போதையில் பள்ளி உடையோடு போதையில் மயங்கி கிடந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த பரபரப்பு அடங்குவதற்குள், திருச்சி ஜங்ஷன் பகுதியில் நேற்று மாலை போதையில் ஒரு பெண் ரோட்டில் மயங்கி கிடந்த சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திய கரூர் மாணவர், கரூர் பேருந்து நிலையத்துக்குள் செல்ல முயன்றபோது போதையின் உச்சத்தால் பேருந்து நிலைய நுழைவாயில் பகுதியில் மயங்கி கீழே விழுந்து கிடந்தார். பள்ளி சீருடையில் மாணவர் ஒருவர் போதையில் மயங்கி விழுந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், அந்த மாணவனை தண்ணீர் தெளித்து எழுப்ப முயன்றும் அவரால் எழ முடியவில்லை. இதையடுத்து அவனது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் வந்து அந்த மாணவனை அழைத்துச் சென்றனர்.

இந்த செய்தி ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதும், உடனே அரசு உதவி பெறும் பள்ளியில் படித்த அந்த மாணவரிடமும், அவரது பெற்றோரிடமும், பள்ளி தலைமை ஆசிரியர் முன்னிலையில் மாவட்டக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் விசாரணை நடத்தினார். அத்தோடு, பள்ளிக்கு ஒழுங்காக வராமை, பள்ளிச் சீருடையில் மது அருந்தி போதையில் மயங்கி கிடந்தது உள்ளிட்ட ஒழுங்கீன செயல்களுக்காக பள்ளியில் இருந்து அந்த மாணவரை நீக்கி உத்தரவிட்டார்.

இந்நிலையில் திருச்சி ஜங்சன் பகுதிகளில் நேற்று மாலை சிவகாமி என்ற பெண் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) போதையில் நிலை தடுமாறி ரோட்டில் கீழே விழுந்து கிடந்தார். போலீஸாரும், பொதுமக்களும் வேடிக்கை பார்த்தனர். நீண்ட நேரத்திற்கு பின் அவரிடம் நடத்திய விசாரணையில், அந்த பெண், கையில் காசு கிடைக்கும்போதெல்லாம் சரக்கு வாங்கி குடிப்பது வழக்கமாம். நேற்று காசு அதிகமாக கிடைத்ததால் கொஞ்சம் ஓவராக போயிடுச்சு என்று போதை தெளியாமல் உளறி இருக்கிறார். சமூகத்தின் அடித்தளமாக விளங்கும் பெண்களும் இந்த குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டார்களே என்று அங்கிருந்தவர்கள் கூறிச் சென்றனர்.

புள்ளி விவரங்கள் என்ன சொல்கிறது...

இந்தியாவில் 1950-60களுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களில் இளமைப் பருவத்தில் குடிப்பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டவர்கள் 19.5 சதவீதம். இதுவே, 1981-86-க்கு இடையே பிறந்தவர்கள் தங்கள் இளமைப் பருவத்தில் குடிப்பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டோர் 74.3 சதவீதம் என ஒரு ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. மேலும் மது மட்டுமல்லாமல், எந்தவொரு கெட்டப் பழக்கமும் வீட்டிலிருந்தே துவங்குகிறது என்கிறார்கள் ஆய்வர்கள்.

தற்போதெல்லாம் பிறந்த நாள், திருமணம், பதவி உயர்வு, ஊதிய உயர்வு என எதற்கெடுத்தாலும் நண்பர்களுக்கு 'பார்ட்டி' கொடுப்பது என்பது ஒரு கட்டாய நிகழ்வாகவே உள்ளது. அதிலும் அந்த பார்ட்டிகளில் முக்கிய இடம் பிடித்திருப்பது மதுபானம்தான்.


மேலும் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் மதுக்கடைகளின் விற்பனை மற்ற நாட்களைவிட நான்கு மடங்கு அதிகரிக்கிறது. போதைப் பழக்கத்துக்கு அடிமையாவோர் பணிபுரியும் இடம், வீடு, பள்ளி, கல்லூரி உள்ளிட்ட இடங்களில் பல்வேறு பிரச்னைகளைச் சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. மேலும், சுற்றத்தாரிடமிருந்து ஒதுக்கி வைக்கப்படும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர்.

உலக அளவில் போதைப் பொருட்களைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், இந்தியாவில் சுமார் 10 கோடி பேர் போதைப் பழக்கத்திற்கு ஆளாகி உள்ளனர் என்றும், இவர்களில் 12-25 வயதில் உள்ளோர் அதிகம் உள்ளனர் என்றும், நகர்ப்புறங்களிலேயே இவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்றும் சில ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதில், இளைஞர்களுக்கு அடுத்தபடியாக, போக்குவரத்து பணியில் ஈடுபடுவோர், தெருவோரங்களில் வசிக்கும் சிறுவர்கள் இப்பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளனர் என்பதும் தெரிய வந்திருக்கிறது.

உலக அளவில் போதை பொருட்களை உட்கொள்பவர்களின் எண்ணிக்கை 5 கோடியே 90 லட்சமாம் (15 முதல் 64 வயது). இதுமட்டுமல்லாமல், 25 கோடியே 10 லட்சம் பேர் வாழ்க்கையில் ஒருமுறையாவது போதை மருந்து பயன்படுத்தி இருக்கிறார்களாம். கடந்த 2008 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ஒரு ஆய்வில், 439 கோடியே 60 லட்சம் பேர் போதைப்பொருள் பயன்படுத்துவதாக ஐ.நா.  அறிவித்துள்ளது.

மத்திய அமைச்சகத்தின் நேஷ்னல் சர்வே நிறுவனம் 4,648 பெண்களிடம் நடத்திய ஆய்வில் 8 சதவிகித பெண்கள் போதையால் சீரழிந்திருப்பது தெரிய வந்துள்ளது. இது தோராயமாக, 6.25 கோடி பெண்களில் 10 லட்சம் பெண்கள் நாடுமுழுக்க குடி பழக்கத்திற்கு அடிமையாக ஆரமித்துள்ளார்கள் என எச்சரித்துள்ளது. உலக அளவில் நடைபெறும் தற்கொலைகளில் 50 விழுக்காடு மது குடிப்பதனாலோ அல்லது போதைப்பொருட்களாலோ ஏற்படுவதாக ஆராய்ச்சியில் கண்டறிந்திருக்கிறார்கள். இதில், இளம் வயது தற்கொலைகளே அதிகமாக காணப்படுகிறது.

மது பழக்கம் நமது சமூகத்தையே சீரழித்து வருகிறது. மதுவினால் தங்களது தாலிக்கு ஆபத்து வருகிறது என்று மதுக்கடைகளை மூட போராட்டம் நடத்தும் பெண்களில் ஒரு பிரிவினரே, தற்போது தாராளமாக மது அருந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆண்களுக்கு எந்தவிதத்திலும் நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்று போதையில் தள்ளாடும் பெண்கள் தற்போது அதிகரித்து வருகின்றனர்.

அரசாங்கம் தனது வருமானத்திற்காக மதுக்கடைகளை தாராளமாக திறந்து வைத்துள்ளதால் முதலில் ஆண்கள் மதுவிற்கு அடிமையானார்கள். அது வேகமாக வளர்ந்து தற்போது மாணவர்கள் மற்றும் பெண்களிடமும் பரவி அவர்களையும் சீரழிக்க ஆரம்பித்துள்ளது. விரைவில் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை கொண்டுவருவதே இதற்கான தீர்வாக அமையும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.No comments:

Post a Comment