சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

21 Feb 2015

ஸ்கூல் அட்மிஷன்: அல்லாடும் பெற்றோர்...அள்ளிக் குவிக்கும் பள்ளிகள்!

டுத்த கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கையை ஏப்ரல் அல்லது மே மாதங்களில்தான் நடத்த வேண்டும் என தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ள போதிலும், அதனை துளியும் கண்டுகொள்ளாமல் மாணவர் சேர்க்கையை வழக்கம்போல் தனியார் பள்ளிகள் கன ஜோராக நடத்திக்கொண்டிருக்கும் நிலையில், பெற்றோர்களும் ஈக்களாய் மொய்க்க தொடங்கிவிட்டனர்.
தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஏப்ரல் மாதத்தில்தான் நடைபெற வேண்டும் என்று  தமிழக அரசு விதித்த கட்டுப்பாடுகள் எல்லாம் வெறும் ஏட்டளவில்தான் என்பது கண்கூடாகத் தெரியும் உண்மையாய் மாறியுள்ளது.  கனக் கச்சிதமாக திட்டமிட்டு அட்மிஷன் வேலையை முடிப்பதில் மும்முரமாய் உள்ளன தனியார் பள்ளிகள்.

அதில் பல பெரிய தனியார்  பள்ளிகள் 2015-2016 ஆம் கல்வி ஆண்டுக்கான அட்மிஷனை அற்புதமாய் அரங்கேற்றி வசூலையும் சிறப்பாக முடித்துவிட்டன என்பதுதான் கூடுதல் ஹாட் தகவல். இப்படி அரசின் உத்தரவையும் மீறி தனியார் பள்ளிகள் நடப்பது வருடம் தோறும் நடக்கும் வைபவம்தான் என்றாலும் ஆண்டுக்காண்டு பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளுக்காக நடத்தும் `கல்விப் போராட்டம்`  முடியாத தொடர்கதையாகி இருப்பது தமிழகத்தில் கல்வி உரிமை விற்கப்பட்டுக்கொண்டிருப்பதையே காட்டுகிறது.

சென்னையின் பிரதான பகுதியான அடையாறில் தனியார் பள்ளிகள் நிறைய உள்ளன.  காந்தி நகர், இந்திரா நகர் ஆகிய பகுதிகளில் உள்ள `செயின்ட்` பள்ளிகள் கடந்த டிசம்பர் மாதமே விண்ணப்பங்கள் வழங்கி இண்டர்வியூ நடத்தி அடுத்த ஆண்டுக்கான அட்வான்ஸ் சேர்க்கையை முடித்தும் விட்டன. இதற்கான நடைமுறைகளை பெயர் சொல்ல விரும்பாத பெற்றோர் கூறியது நம்மை அதிர்ச்சி படுத்தும் ரகம்.

" எல்கேஜி விண்ணப்பம் 50 ரூபாய் என்று தொடங்கி முதல் வகுப்பு மற்றும் மேல்நிலை வகுப்புகளுக்கு கூடுதல் விண்ணப்ப தொகை நிர்ணயித்து விற்கப்பட்டன. அதுவும் 100 இடங்கள் கொண்ட  வகுப்பிற்கு,  150 முதல் 160 வரை மட்டுமே அச்சடிக்கப்பட்ட விண்ணப்பங்கள், விண்ணப்ப எண் இல்லாமல் விநியோகிக்கப் பட்டன.   அதனைத் தொடர்ந்து, விண்ணப்பிக்க ஓரிரு நாட்கள் மட்டுமே டைம் கொடுத்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை குறிப்பிட்ட நாளில் காலை 8 மணியிலிருந்து 10 மணிக்குள்  பெற்றோர்கள் தரவேண்டும் என்பது பள்ளி நிர்வாகம் விதிக்கும் கட்டுப்பாடு.
அதன்படி விண்ணப்பங்களை பெற்றோர்கள் காலையிலே நிர்வாகம் விதித்த நேரத்தில், நேரில் வந்து வரிசையில் நின்று பள்ளி அலுவலகத்தில் இந்தப் பணிக்கென பிரத்யேகமாக உள்ள அலுவலரிடம் சமர்பிக்க வேண்டும்.இதனையும் கடந்தால் அடுத்த நாளில் குழந்தையோடு பள்ளி  இண்டர்வியூவில் பங்கேற்கவேண்டும்.அதில் பள்ளி நிர்வாகம் வைத்துள்ள அவர்களுக்கு மட்டுமே புரியும் `கட்டுப்பாடு`களை  நம் மீது செலுத்துவார்கள்.
அதில் குழந்தையும் நாமும் பாஸ் செய்தால் 50 ஆயிரம் ரூபாய் கொடுத்து அடுத்த ஆண்டிற்கான அட்மிஷன் ஸ்லிப்பை பெற்றுக் கொள்ள சொல்வார்கள். இல்லையென்றால் `கால் பண்ணுகிறோம் போய் வாருங்கள்` என்று அனுப்பிவிடுவார்கள்.அத்தோடு முடிந்துவிடும் நமக்கான அட்மிசன்".. என்கிறார்கள் ஏமாற்றத்தோடு.

அதே போல இந்திரா நகரின் பிரபல பள்ளியிலும் 2 நாளுக்கு முன்பு விண்ணப்பங்கள் கொடுத்தனர்.160 விண்ணப்பங்களோடு நிறுத்திவிட்ட பள்ளி நிர்வாகம், அலைமோதிய பெற்றோர் கூட்டத்தைப் பார்த்து அதிர்ச்சியாகி, ஆன் லைனில் விண்ணப்பங்களை டவுன்லோடு செய்து விண்ணப்பிக்க அனுமதித்துள்ளது.
பள்ளி நிர்வாகம் தந்த விண்ணப்பம் ஒன்றின் விலை ரூ.160 ஆகும்.டவுன்லோடு செய்து விண்ணப்பித்தால் ரூ.100 பதிவுக் கட்டணம். இந்தப் பள்ளியும் காலை 9.30 மணியில் இருந்து மதியம் 1.30 மணிக்குள் விண்ணப்பங்களைச்  சமர்ப்பிக்க நேரம் கொடுத்து, நீண்ட வரிசையில் 3 மணி நேரம் வரையும் காத்திருக்க வைத்து விண்ணப்பங்களை பெற்றுக் கொண்டுள்ளது.

இதே போல சைதாப்பேட்டையில்  உள்ள இண்டர்நேஷனல் பள்ளி உள்ளிட்ட தனியார் பள்ளிகள் ஆண்டுக்கு ஒரு லட்சம் வரையிலும் நன்கொடை வசூலித்து அட்மிஷன் வேலையைத் தொடங்கியுள்ளன. நன்கொடையோடு ஆண்டுக்கு 3 தவணையாக 60 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் நிர்ணயித்துள்ளன. இதே போன்றுதான் சென்னையில் அனைத்து பகுதிகளிலும் உள்ள தனியார் பள்ளிகள் தீவிர மாணவர் சேர்க்கையில் ஆர்வம் காட்டி, அதற்கான பணிகளை விரைவுப் படுத்தியுள்ளன.

விண்ணப்பப்படிவங்கள் பெறுவதற்கு பெற்றோர்களை மணிக்கணக்கில் வரிசையில் நிற்க வைப்பது, நன்கொடை வசூலிப்பது என்று,  பெற்றோர்களின் தனியார் பள்ளி மோகத்தையும், தணியாத ஆர்வத்தையும் தங்களுக்குச் சாதகமாக்கி வசூல் வேட்டையை முடித்து வருகின்றன.

மாணவர் சேர்க்கைக்குப் பிறகு அபரிமிதமான கட்டணங்கள், ஏதாவது ஒரு காரணம் காட்டி நிதி வசூல்கள் என்று முற்றிலும் வணிக ரீதியில் பள்ளிகள்  இயங்கி வருவது அனைவருக்கும் தெரியும். ஆனால் ஆளும் அரசின் கண்களுக்குத் தெரியாது... காதுகளுக்குக் கேட்காது...!

நல்லா இருக்கு தமிழகத்தில் கல்வி புரட்சி!



No comments:

Post a Comment