சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

24 Feb 2015

பருந்தாக மாறிய ஊர்க்குருவி!

சூழ்நிலைதான் பலரையும் சாதனை யாளராக்குகிறது. அதில் ஒருவர்தான், சாந்தி!
திருப்பூர் மாவட்டம், பல்லடம் நகரில் வசிக்கிறார் சாந்தி. கணவர் கணேசமூர்த்தி, வீட்டு கட்டுமானப் பொருட்கள் விற்பனை செய்யும் அங்காடி நடத்தி வந்தார். கடையைக் கணவர் பார்த்துக் கொள்ள, குழந்தைகள், குடும்பம் என்றிருந்த சாந்தியை, எட்டு வருடங்களுக்கு முன் சுழற்றிப் போட்டது கணேசமூர்த்தியின் திடீர் மரணம். சோகம் வடிந்து தெம்பு திரும்பிய நாட்களில், கடையின் முதலாளி ஆனார் சாந்தி.

ஊர்க்குருவியாக இருந்தவர், மெள்ள பருந்தாக பறந்த கதை... லட்சிய விதை!
ஊர்க்குருவியாக இருந்தவர், மெள்ள பருந்தாக பறந்த கதை... லட்சிய விதை!
''கடையை வந்த விலைக்கு வித்துட்டு, பணத்தை டெபாசிட் பண்ணிட்டு, குழந்தைகளைப் படிக்க வைனு ஆலோசனைகள் கிடைச்சது. கம்பி, கதவு, சிமென்ட், பெயின்ட்னு விக்கிற இந்தத் தொழில்ல லட்சக்கணக்கில் பணம் புழங்கணும். ஆம்பளைங்களே திணறுற இடம்னு சிலர் எச்சரிச்சாங்க. எதையும் காதுல வாங்காம, கடையை தொடர்ந்து நடத்த முடிவு பண்ணினேன்.
கணவர் இருந்தவரைக்கும் கடைப்பக்கமே எட்டிப்பார்த்தது இல்ல. இருந்தாலும் அவர் கிட்ட வேலை பார்த்த விசுவாசமான ஊழியர் கள் சிலரோட வழிகாட்டுதலோட, தொழிலைக் கத்துக்கிட்டேன். கட்டுமானத்தொழில் சம்பந்தப்பட்ட கடைங்கிறதால, நிறைய பேர் கடன்லதான் வாங்குவாங்க. பால் காய்ச்சறதுக்குள்ள சிலர் நாணயமா பணத்தைக் கொண்டுவந்து கொடுத்து கணக்கை முடிப்பாங்க. நிலுவைத் தொகையைக் கொடுத்தவங்க யாரு, கொடுக்க வேண்டியவங்க யாருங்கிற விவரம் அவருக்கு மட்டும்தான் தெரியும். அவர் திடீர்னு போனதுக்கு அப்புறம், சிலர் தானே முன்வந்து கடனை முடிச்சாங்க. சிலர், 'எல்லாம் அவருகிட்ட கொடுத்துட்டேம்மா!’னு சொல்லிட்டாங்க. நிறைய நஷ்டப்பட்டாலும், யாரோடும் முகம் சுளிக்காம, ஜெயித்துக் காட்டணும்கிற வைராக்கியத்தோட ஓடினேன்.
'ஒவ்வொரு மனுஷனுக்கும் சொந்தமா ஒரு வீடு கட்டுறதுங்கிறது, பல்லாண்டுக் கனவு. பலருக்கும் அதுதான் வாழ்க்கையின் லட்சியமா இருக்கும். குருவி சேர்க்கிற மாதிரி உழைச்ச பணத்தை சேர்த்து, கடனை உடனை வாங்கி அவங்க கட்டுற வீடு, தலைமுறைக்கும் நிக்கணும். அதனால, நம்ம கட்டுமானப் பொருட்கள் தொழில்ல, லாபத்தைவிட தரத்துக்குதான் முக்கியத்துவம் கொடுக்கணும்’னு கணவர் அடிக்கடி சொன்னதை, தாரக மந்திரமா எடுத்துக்கிட்டேன். கதவு, டைல்ஸ், கண்ணாடினு வீட்டுச் சாமான்கள் தேர்வு செய்ய மனைவி, குழந்தைனு கூட்டிட்டு வரும்போது, அந்த எண்ணம் பலப்படும்.
என் தொழிலில் நான் கடைப்பிடிச்ச நேர்மை, ஒவ்வொரு படியா ஏற வெச்சது. வியாபாரம் சூடு பிடிச்சது. டெலிவரியில் தாமதம், வாராக்கடன், பொருட்களைப் பாதுகாக்குறதுனு இதில் நான் சந்திச்ச சவால்களும் நிறைய. அப்போவெல்லாம், ஒரு பொண்ணா நினைச்சு சுயபச்சாதாபப் படாம, ஒரு தொழிலதிபரா மட்டுமே இருந்து தைரியமா முடிவெடுப்பேன். நான் பொருட்களைக் கொள்முதல் செய்யும் நிறுவனங்கள், எங்கிட்ட பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்கள், கடை ஊழியர்கள்னு கம்பீரமா நடந்துக்கிட்டேன். அதெல்லாம்தான், சிமென்ட் ஷீட் போட்டிருந்த கடையை கான்கிரீட் பில்டிங்கா மாத்தி, வீடு கட்டத் தேவையான ஏ டு இஸட் பொருட்களை விற்கும் அளவுக்குக் கடையை விரிவுபடுத்தி, பக்கத்துல இடம் வாங்கி கட்டடம் கட்டி வங்கி, அலுவலகம், ஏஜென்ஸினு வாடகைக்கு விட்டு... என்னை வெற்றியாளர் ஆக்கினது!'' என்று ஆச்சர்யப்படுத்திய சாந்திக்கு, ஒரு பெண், ஒரு பையன் என்று இரண்டு பிள்ளைகள்.

''பொண்ணுக்கு கல்யாணம் ஆயிடுச்சு. பையன் சிவில்  இன்ஜினீயரிங் படிக்கிறான். கணவருக்கு ரெண்டு ஆசைகள் இருந்துச்சு... நியாயமான விலையில் தரமான வீடுகள் கட்டி நடுத்தர மக்களுக்கு விக்கணும்; சில ஏக்கர் விவசாய நிலம் வாங்கி விவசாயம் பண்ணணும். என் மகனை அவரோட முதல் ஆசைக்காகதான் சிவில் இன்ஜினீயரிங் படிக்க வைக்கிறேன். அவன் படிப்பை முடிச்சதும், கன்ஸ்ட்ரக்‌ஷன் வேலைகளைத் தொடங்கிட வேண்டியதுதான். அதேபோல, விவசாய நிலமும் பார்த்தாச்சு!'' என்றவர், ''என்னை மாதிரி, சூழலோட நெருக்குதல்ல சிக்கிகிட்ட பெண்களாலதான் முன்னுக்கு வரமுடியும்கிறது இல்ல. எந்தச் சூழல்ல இருந்தாலும் வரலாம். மிரண்டோ... தளர்ந்தோ போகாதீங்க. உங்க உள்ளத்தில் கனன்று கொண்டிருக்கும் நெருப்பிலேயே, உங்களை உருக்கிச் செதுக்குங்க. வெற்றிக் கோட்டைத் தொடும்வரை, நெருப்பு அணையாம பார்த்துக்கோங்க!''
வலிமையான வார்த்தைகள் தந்த சாந்தியிடம், விடைபெற்றோம்!


No comments:

Post a Comment