கூடங்குளம் அணு உலைகள், மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டம், கெயில் குழாய் பதிப்புத் திட்டம், கவுத்தி வேடியப்பன் மலையில் இரும்புத்தாது வெட்டி எடுக்கும் திட்டம்... என தமிழ்நாடு, பெரும் திட்டங்களின் வேட்டைக்காடாக மாற்றப்பட்டுவிட்டது! அதில் இன்னும் ஒன்றாக இணைந்திருக்கிறது நியூட்ரினோ ஆய்வு மையம். India
based Neutrino observatory. சுருக்கமாக ஐ.என்.ஓ
(INO).
தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள பொட்டிபுரம் ஊராட்சியைச் சேர்ந்த டி.புதுக்கோட்டை கிராமத்தின் மேற்கு எல்லையாக அமைந்திருக்கும் அம்பரப்பர் மலைதான் திட்டத்தின் அமைவிடம். இது மேற்குத்தொடர்ச்சி மலைகளின் ஒரு பகுதி.
இதுவரை ஆடு-மாடுகளின் மேய்ச்சல் நிலமாகக் கேட்பாரற்றுக்கிடந்த இந்த நிலப்பகுதியில் திடீர் பரபரப்பு. எளிய விவசாயப் பின்னணியைக்கொண்ட இந்த ஊரில் என்ன நடக்கிறது என்பதைக்கூடப் புரிந்துகொள்ள முடியாமல் தவிக்கிறார்கள் மக்கள். தேவாரம், கோம்பை, போடி, கம்பம், உத்தமபாளையம், குமுளி என சுற்றுவட்டாரம் முழுவதுமே அச்சம் பரவிக்கிடக்கிறது.
நியூட்ரினோ ஆய்வு மையத் திட்டத்துக்காக தமிழக அரசு 66 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி உள்ளது. மத்திய அரசு முதல் கட்டமாக 1,450 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. திட்ட அமைவிடத்தைச் சுற்றிலும் இரும்பு வேலி அமைத்து, நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டுள்ளது. சாலை அமைக்கும் பணியும், இடையில் குறுக்கிடும் காட்டு ஓடை மீது பாலம் கட்டும் பணியும் விறுவிறுப்பாக நடைபெறுகின்றன. வாகனங்கள் குறுக்கும் நெடுக்கும் விரைகின்றன. இப்படியாக நியூட்ரினோ திட்டம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்ட நிலையில், திட்டத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு அமைப்புகளின் பிரசாரங்களும் சூடுபிடித்துள்ளன.
நியூட்ரினோ ஆய்வுத் திட்டம் என்றால் என்ன?
படிக்க பள்ளிக்கூட பாடப் புத்தகம்போல இருந்தாலும், இதைப் புரிந்துகொள்ள கொஞ்சம் அறிவியல் அறிவு அவசியம். மனிதர்களாகிய நமக்குத்தான் உயர்திணை, அஃறிணை என்ற பிரிவினை எல்லாம். இயற்பியல் ஆய்வில் உயிருள்ள, உயிரற்ற அனைத்துமே பொருட்கள்தான் (Atoms). இந்தக் கட்டுரையை வாசிக்கும் நீங்கள், எழுத பயன்பட்ட கணினி, புத்தகத்தை அச்சடித்த அச்சு இயந்திரம், மாநில முதலமைச்சர், வட்டச் செயலாளர் வண்டுமுருகன் என அனைத்துமே இயற்பியலின்படி பொருட்கள்தான். இந்தப் பொருட்கள், அணுக்களால் (கிtஷீனீ) ஆனவை. ஒருகாலத்தில் அணுதான் இறுதித் துகள் என கருதப்பட்டது. அதாவது ஒரு பொருளை உடைத்துக்கொண்டே போனால், இறுதியாக மிஞ்சுவது அணு எனக் கருதப்பட்டது. அணுவைக் குறிக்கும் கிtஷீனீ என்ற லத்தீன் மொழிச் சொல்லுக்கு 'பிளக்க முடியாதது’ எனப் பொருள்.
அறிவியல் வளர, வளர இந்தக் கருத்து மாற்றம் கண்டது. ஒவ்வோர் அணுவுக்குள்ளும் எலெக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் என மூன்று துகள்கள் இருப்பது கண்டறியப்பட்டது. தற்போதைய நிலையில், நவீன இயற்பியல், ஓர் அணுவுக்குள் 60 வகையான அடிப்படைத் துகள்கள் இருப்பதாக வரையறுத்துள்ளது. அதாவது நாம் காணும் ஒவ்வொரு பருப்பொருளும் இந்த 60 வகையான துகள்களின் விதம்விதமான கூட்டிணைவுதான். இந்த 60-ல் ஒன்றுதான் நியூட்ரினோ
(Neutrino). (நியூட்ரான், நியூட்ரினோ இரண்டும் ஒன்று அல்ல. வேறு, வேறு துகள்கள்).
ஆனால், இது பத்தோடு பதினொன்று அல்ல. இப்போது வரை விஞ்ஞானிகளின் அறிவுக்கு சவால் விட்டுக்கொண்டிருக்கும் நியூட்ரினோ துகள், பிரபஞ்ச வெளியெங்கும் வியாபித்திருக்கிறது. எங்கும் என்றால் எங்கெங்கும். சூரியன், பூமி உள்ளிட்ட கோள்களைக்கொண்ட பால்வீதி முழுவதிலும் நியூட்ரினோ நீக்கமற நிறைந்துள்ளது. ஒளியின் வேகத்துக்கு இணையாகப் பயணிக்கக்கூடிய இந்தத் துகள், தனக்கு எதிரில் உள்ள அனைத்தையும் துளைத்துக்கொண்டு பயணிக்கும் திறன் கொண்டது. பூமியையே துளைத்துக்கொண்டு ஒரு பக்கத்தில் இருந்து மறு பக்கத்துக்குச் செல்லக்கூடியது. 360 டிகிரி கோணத்தில் அனைத்துத் திசைகளில் இருந்தும் இடைவிடாத அடைமழையைப்போல குறுக்கும் நெடுக்குமாகப் பொழிந்துகொண்டே இருக்கிறது. நம் உடலின் ஒவ்வொரு சதுர சென்டிமீட்டர் பரப்பளவிலும் 60 லட்சம் நியூட்ரினோ துகள்கள் ஊடுருவிக்கொண்டே இருக்கின்றன.
ஆனால், இந்தத் துகள் மிக, மிக, மிகச் சிறியது. கண்களுக்கும் கருவிகளுக்கும் புலப்படாதது. நியூட்ரினோக்கள் அண்ட சராசரம் எங்கும் அலைந்து திரிகின்றன என்பதால், அதுகுறித்த ஆய்வு முடிவுகள் புதிய திறப்புகளை வழங்கலாம் என விஞ்ஞானிகள் கருதினர்/கருதுகின்றனர். ஆனால், இது கடும் சவாலான பணி. நியூட்ரினோ துகள், வேறு எதனுடனும் வினைபுரிவது இல்லை. அரிதினும் அரிதாக எங்கோ ஓரிரு நியூட்ரினோ துகள்கள் வினைபுரிந்தாலும்கூட, மற்ற சிலவற்றின் வினைகளும் அதனுடன் கலந்திருப்பதால், ஆய்வு முடிவில் துல்லியம் இல்லை. அறிவியல் ஆய்வுகளில் துல்லியம் முக்கியமானது. எனவே இதரத் துகள்களையும் காஸ்மிக் கதிர்களையும் வடிகட்டியாக வேண்டும். அப்போதுதான் துல்லியமான நியூட்ரினோ ஆய்வை அடைய முடியும். அப்படி ஒரு வடிகட்டியாக, கடும் பாறைப்பரப்பு விளங்க முடியும் என முடிவுசெய்து தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் இடம்தான், பொட்டிபுரம் அம்பரப்பர் மலைப் பகுதி.
விஞ்ஞானிகளின் கருத்துப்படி, இமயமலையில் இதைவிட பெரிய மலைகள் இருக்கின்றன என்றபோதிலும், அவை இளமையான மலைகள். மேற்குத்தொடர்ச்சி மலைகள், உலகின் தொன்மையான மலைப் பகுதிகளில் ஒன்று. இதன் பாறைப்பரப்பு கடும் இறுக்கத்தன்மைகொண்டது. வடிகட்டியாகச் செயல்பட ஏற்றது. ஆகவே, இது தேர்வுசெய்யப்பட்டது என்கிறார்கள். உண்மையில் முதலில் தேர்வுசெய்யப்பட்டது, நீலகிரி மாவட்டம் சிங்காரா பகுதி. அங்கே மின் வாரியத்துக்குச் சொந்தமாக உள்ள ஒரு கி.மீ. நீளமுள்ள சுரங்கம்தான் முதலில் தேர்வுசெய்யப்பட்டது. ஆனால், அங்கு ஐ.என்.ஓ-வை அமைத்தால் புலிகள், யானைகள் போன்ற வனவிலங்குகளின் இருப்புக்கு பிரச்னை வரும். சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என எழுந்த எதிர்ப்புகளால், திட்டம் இங்கு நகர்த்தப்பட்டது.
உலகில் இங்கு மட்டும்தான் நியூட்ரினோ ஆய்வு நடைபெறப்போகிறதா?
இல்லை! ஜப்பானில் உள்ள சூப்பர் கம்யோகாண்டே நியூட்ரினோ ஆய்வகம், கனடாவில் உள்ள சட்பெரி நியூட்ரினோ ஆய்வகம், இத்தாலியில் கிரான் சாசோ ஆய்வகம், தென் துருவத்தில் உள்ள ஐஸ் கியூப் நியூட்ரினோ ஆய்வகம்... என உலகில் பல நியூட்ரினோ ஆய்வுக்கூடங்கள் ஏற்கெனவே செயல்பட்டுவருகின்றன. ஒவ்வோர் இடத்திலும் ஒருவிதமான நில அமைப்பில், வேறுபட்ட முறைகளில் ஆய்வு நடைபெறுகிறது. பொட்டிபுரத்தில் அமைக்கப்படவிருக்கும் ஆய்வு மையம், மற்ற நாடுகளில் இருந்து வேறுபட்டது. இங்கு 50 ஆயிரம் டன் எடை உள்ள உலகின் பிரமாண்டமான காந்தத்தை நிறுவி, அதன் மூலம் நியூட்ரினோ துகளை ஈர்த்து ஆய்வு செய்யவிருக்கின்றனர். இதற்காக மலையில் கிடைமட்டமாக இரண்டு கி.மீ நீளம் உள்ள சுரங்கப்பாதையைத் தோண்டவிருக்கின்றனர். அந்தச் சுரங்கத்தின் இறுதியில் 130 மீட்டர் நீளமும், 26 மீட்டர் அகலமும், 30 மீட்டர் உயரமுமாக ஒரு குகை அமைக்கப்படும். அதன் உள்ளே ஆய்வுக்குரிய கருவிகள் பொருத்தப்படும். இந்தச் சுரங்கப் பணிகள் மொத்தம் 800 வேலை நாட்கள் நடைபெறும் எனச் சொல்லப்படுகிறது. எனில், கட்டுமானப் பணிகளே குறைந்தது, மூன்று ஆண்டுகளுக்கு அதிகமாகும்.
'இத்தனை பிரமாண்ட சுரங்கப் பணிகள் நடைபெறும்போது நிச்சயம் சூழல் சீர்கேடு ஏற்படும். நூற்றுக்கணக்கான வாகனங்கள் சுரங்கக் கழிவுகளைச் சுமந்து அலைவதால், இந்தப் பகுதியே தூசி மண்டலமாக மாறும். வெடிமருந்து பயன்படுத்தித் தகர்ப்பதால் மேற்குத்தொடர்ச்சி மலையின் பல்லுயிர்ச் சூழல் மிக மோசமாகப் பாதிக்கப்படும். அருகில் உள்ள அணைகளுக்குப் பாதிப்பு ஏற்படும்’ என்பது சூழலியலாளர்கள் முன்வைக்கும் முக்கியமான கருத்து. அரசுத் தரப்பு இதை மறுக்கிறது.
இந்த ஆய்வின் நோக்கம்தான் என்ன?
அறிவியல் ஆய்வுகளுக்கு குறிப்பான நோக்கங்களை ஆரம்பகட்டத்திலேயே வரையறுக்க முடியாது. அறிவியல் என்பதே அனுமானங்களைச் சோதித்துப் பார்ப்பதுதான். 1897-ல் ஜெ.ஜெ.தாம்ஸன் எலெக்ட்ரானைக் கண்டறிந்தார். அதன் பயன் என்ன என்று அப்போது சொல்லியிருக்க முடியாது. ஆனால், இன்று டி.வி முதல் கணினித் திரை வரை அனைத்தும் எலெக்ட்ரான் மூலம்தான் இயங்குகின்றன. ஆகவே, 'என்ன பயன்?’ எனக் கேட்பது அறிவியலில் அறமற்றது. எனினும், இதன் மூலம் பல நன்மைகள் விளையும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
இந்திய அரசின் 'விஞ்ஞான் பிரசார்’ நிறுவனத்தில் பணியாற்றும் த.வி.வெங்கடேஷ்வரன், 'நியூட்ரினோவை வெற்றிகரமாகக் கையாளும் சாத்தியத்தைப் பெற்றுவிட்டால், நாம் யூகிக்க முடியாத முற்றிலும் புதியதோர் உலகத்துக்குள் பிரவேசிக்க முடியும்' என்கிறார்.
நியூட்ரினோ ஆய்வில் என்னதான் பிரச்னை?
இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி நிலையத்தில் ஆய்வுசெய்தவரும், இந்திய அறிவியல் கழகத்தில் பணிபுரிந்து, தற்போது நார்வே நாட்டில் இயற்பியல் ஆராய்ச்சியாளராக இருப்பவருமான தமிழ்நாட்டைச் சேர்ந்த விஜய் அசோகன் இதுகுறித்து விரிவாகப் பேசினார்...
''நியூட்ரினோ ஆய்வு என்பது, இந்தியாவில் மட்டும் தனித்து நடைபெறுகிற ஒன்று அல்ல. உலக அளவில் நடைபெற்றுவரும் நியூட்ரினோ ஆய்வின் ஒரு பகுதியே இந்தியாவில் நடப்பது. India
based Neutrino observatory என்ற திட்டத்தின் பெயர் மூலமே இதை உணர்ந்துகொள்ளலாம். உலகின் பல நாட்டு அரசுகளும், ஏராளமான பல்கலைக்கழகங்களும் இதில் இணைந்துள்ளன. ஆகவே, இதை இந்தியாவின் சுயேச்சையான அறிவியல் ஆய்வு என வரையறுக்க இயலாது. அறிவியல் ஆய்வில் தேசபக்தியைத் தாண்டி ஆய்வுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் இந்தப் புள்ளியை நாம் கடந்துவிடலாம்.
பிரபஞ்சம் எங்கும் விரவியிருக்கும் இயற்கையான நியூட்ரினோவால் மனிதகுலத்துக்கு எந்தவித ஆபத்தும் இல்லை. ஆனால், நியூட்ரினோ ஆய்வு என்ற பெயரில் தேனியிலும் உலகின் பிற பகுதிகளிலும் செயற்கை நியூட்ரினோ கற்றைகளை உருவாக்கி ஆய்வு செய்யப்போகின்றனர். இது ஆபத்தைத் தோற்றுவிக்கலாம்.
இயற்கை நியூட்ரினோவை ஆய்வுசெய்வது பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தபோதிலும், நியூட்ரினோவை உற்பத்திசெய்து ஆய்வுசெய்வது என்ற சிந்தனைக் கோட்பாடு 1990-ல்தான் உருப்பெற்றது. அதாவது தொழிற்சாலைகளில் அதிக அடர்த்திகொண்ட செயற்கை நியூட்ரினோக்களை உற்பத்திசெய்து, அவற்றை பூமியின் வழியே ஊடுருவச்செய்து ஆய்வுசெய்வது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நியூட்ரினோவை உற்பத்திசெய்து, 295 கி.மீ தொலைவில் உள்ள காமியாகோ நியூட்ரினோ ஆய்வு மையத்துக்கு அனுப்பிவருகின்றனர். இதேபோல சுவிட்ஸர்லாந்து நாட்டின் ஜெனிவாவில் உற்பத்தி செய்யப்படும் நியூட்ரினோ கற்றைகளை, 732 கி.மீ தூரத்தில் உள்ள இத்தாலியின் கிரான் சாசோ நகரின் நியூட்ரினோ ஆய்வு மையத்தில் ஆய்வுசெய்கின்றனர்.
இந்த உலகு தழுவிய ஆய்வை ஒருங்கிணைத்து செயல்படுகிறது அமெரிக்காவில் உள்ள ஃபெர்மி ஆய்வகம் (திமீக்ஷீனீவீ றீணீதீ). ஐ.என்.ஓ செயல்பாட்டில் பங்கெடுத்துவரும் இந்திய அணுசக்திக் கழகம், டாடா ஆராய்ச்சி நிறுவனம், இந்தியக் கணித அறிவியல் கழகம், டெல்லி பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் ஃபெர்மி ஆய்வகத்துடன் சந்திப்புகளை நடத்தியுள்ளன. ஆனால் ஐ.என்.ஓ நிர்வாகம், 'ஃபெர்மி ஆய்வகத்தில் உருவாக்கப்படும் நியூட்ரினோ கற்றைகளை ஒருபோதும் ஐ.என்.ஓ-வுக்கு செலுத்த முடியாது. அப்படி ஒரு திட்டமே இல்லை’ என மறுக்கிறது. எனில், ஃபெர்மி ஆய்வகத்துடனான சந்திப்புகளின் நோக்கம் என்ன? ஃபெர்மி ஆய்வகத்துடன் ஏன் உடன்பாடு போடப்பட்டது?
ஐ.என்.ஓ-வில் மிகவும் முக்கியமானது
50 ஆயிரம் டன் எடை உள்ள காந்த மையப்படுத்தப்பட்ட உணர்த்துக் கருவி. (50k ton
magnetised iron caloriemeter detector). உலகிலேயே இங்கு மட்டும்தான் இது அமைக்கப்படுகிறது. ஏன் இவ்வளவு சக்தி வாய்ந்த கருவியைப் பொருத்த வேண்டும்? தற்போது ஐ.என்.ஓ-வின் திட்ட இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள கே.மாண்டல் 2004-ம் ஆண்டு எழுதிய கட்டுரை ஒன்றில், 'வருங்காலத்தில் உலகமெங்கும் உள்ள நியூட்ரினோ தொழிற்சாலைகளில் இருந்து நியூட்ரினோக்களைப் பெற வசதியாகத்தான் காந்தமையப்படுத்தப்பட்ட உணர்த்துக் கருவியை உருவாக்குகிறோம்’ எனக் குறிப்பிட்டுள்ளார். (Proc
Indian natn Sci Acad,70,A,No.1,January 2004,pp.71-77). இயற்பியல் ஆராய்ச்சியாளர்களிடையே புகழ்பெற்ற Institute
of Physics–ல் 2006-ம் ஆண்டு இதுகுறித்து எழுதப்பட்டுள்ளது. அதே ஆண்டு ஜெனிவாவின் புகழ்பெற்ற CERN
ஆய்வகத்தில் நடைபெற்ற சந்திப்பு ஒன்றிலும் இது பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது.
இயற்கை நியூட்ரினோவினால் ஆபத்து எதுவும் இல்லை. இயற்கை நியூட்ரினோவின் ஆற்றல் 2.2 எலெக்ட்ரான் வோல்ட் முதல் 15 மெகா எலெக்ட்ரான் வோல்ட் வரை. ஆனால், செயற்கை நியூட்ரினோ இதைவிட 10 கோடி மடங்கு அதிக ஆற்றல்கொண்டது. இதனால் பாதிப்பு ஏற்படுமா என்பதை இப்போது அறுதியிட்டு கூற முடியாது. ஆனால், அதிகத் திறன்கொண்ட செயற்கை நியூட்ரினோ கற்றைகளில் இருந்து கதிர்வீச்சு வெளிப்படும் அபாயம் உள்ளதாக Hirotaka,sugawara,
Hiroyuki hagura, Toshiya sanamiஆகிய ஜப்பான் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். செயற்கை நியூட்ரினோக்களின் கதிர்வீச்சு அபாயம் குறித்து எண்ணற்ற ஆய்வறிக்கைகள் வெளிவந்தபடியே இருக்கின்றன. 2013-ம் ஆண்டு ஆல்ஃப்ரெட் டாங்க் என்கிற அமெரிக்க விஞ்ஞானி எழுதிய இது தொடர்பான கட்டுரையை http://arxiv.org/pdf/0805.3991.pdf என்ற இணைப்பில் படிக்கலாம்.
ஆகவே, நியூட்ரினோ ஆய்வு என்பது ஆக்கத்துக்கான அறிவியலாக இல்லாமல், அழிவுக்கான அறிவியலாகவே இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது'' என்கிறார் விஜய் அசோகன்.
மக்கள் என்ன நினைக்கின்றனர்?
'நியூட்ரினோவில் இருந்து கதிரியக்கம் வரலாம், குழந்தைக்குட்டிங்க ஊனத்தோட பொறக்கும், அந்தப் பக்கம் மாடு, கன்னு மேய்க்கக்கூட விட மாட்டாங்க, ராணுவம் உள்ளே வந்து எங்களை நிம்மதியா வாழவிட மாட்டாங்க, நிலத்தடித் தண்ணி குறைஞ்சுபோயி விவசாயம் செய்ய முடியாது... இப்படி எங்களுக்கு எக்கச்சக்க பயம் இருக்குதுங்க. விளக்கம் சொல்ல வர்ற அதிகாரிங்க எல்லாம் அவங்களுக்குத் தெரிஞ்சதைப் பேசிட்டுப் போயிடுறாங்க. எங்களுக்கு ஒண்ணும் வெளங்க மாட்டேங்குது. இந்த அரசாங்கத்துக்காரன் என்னைக்கு நம்மளுக்கு நல்லது பண்ணியிருக்கான், இதுல மட்டும் செய்ய? அதான் பயமாக் கெடக்கு. ஏதாவது ஒரு அரசியல் தலைவர் முன்ன நின்னாருன்னா, நாங்க எல்லாம் பின்னாடி வந்திருவோம்'' என்றார்கள் பல கிராமங்களில்.
அரசியல் கட்சிகளின் நிலைபாடு என்ன?
நியூட்ரினோ ஆய்வு மையத்துக்குத் தடை கேட்டு மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் வைகோ மனுதாக்கல் செய்திருக்கிறார். மற்ற அரசியல் கட்சிகள் எந்தக் கருத்தையும் சொல்லாமல் மௌனம் காக்கின்றன. ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஈழப்போர், கூடங்குளம் அணு உலை போலவே இதிலும் சர்ச்சைக்குரிய நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது. வெளிப்படையாக நியூட்ரினோவை ஆதரித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் சி.பி.எம் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன். (ஆனால், கேரளா சி.பி.எம்-மின் முக்கியத் தலைவர் அச்சுதானந்தன், 'அணுக்கழிவைக் கொட்டும் சாத்தியம் உள்ளது’ என்கிறார்). அந்தக் கட்சியின் சார்பு அமைப்பான தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் நியூட்ரினோ திட்டத்தை ஆதரித்து பிரசாரமே செய்கின்றனர். தேவாரம், மதுரை உள்ளிட்ட இடங்களில் விளக்கக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
'இதற்காகச் செலவுசெய்து மண்டபத்தைப் பிடித்து கூட்டம் நடத்துகின்றனர். கலவரத் தடுப்பு காவல் துறையினர் வாகனங்களுடன் வந்து பாதுகாப்பு தருகிறார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் கூட்டத்துக்குக்கூட இத்தனை போலீஸ் பாதுகாப்பைப் பார்த்தது இல்லை. ஓர் அரசியல் கட்சி இப்படிச் செய்வதற்கான அவசியம் என்ன? நியூட்ரினோ திட்டத்துக்கு மக்களிடையே கடுமையான எதிர்ப்பு நிலவும் நிலையில், அரசு நேரடியாகக் களம் இறங்கினால் நிலைமை இன்னும் மோசம் அடையும். ஆகவே, மக்கள் எதிர்ப்பை மழுங்கடிப்பதற்கான வேலையைத்தான் இத்தகைய பிரசாரங்கள் மூலம் செய்கிறார்கள் என்ற சந்தேகம் எழுகிறது. இந்தக் கூட்டங்களுக்கு ஐ.என்.ஓ அதிகாரிகளோ, மத்திய, மாநில அரசு அதிகாரிகளோ வருவது இல்லை. அவர்கள், மக்களைச் சந்திக்க பயந்து ஓடி ஒளிகின்றனர். இது, சந்தேகத்தை இன்னும் அதிகப்படுத்துகிறது'' என்கிறார் விவசாயிகள் விடுதலை முன்னணி அமைப்பைச் சேர்ந்த தேவாரம் மாறன்.
மேலும், அடிப்படைத் தேவைகளே நிறைவேற்றப்படாமல், வருமான வாய்ப்புகள் இல்லாமல் மக்கள் வறுமையிலும் பட்டினியிலும் தத்தளித்துவருகின்றனர். கல்வி, மருத்துவம், போக்குவரத்து, குடிநீர் போன்ற தேவைகளே இன்னும் நிறைவேற்றித் தரப்படவில்லை. நிலைமை இவ்வாறு இருக்க, ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் செலவழித்து இத்தகைய ஆய்வு அவசியம்தானா? இந்தியா போன்ற ஓர் ஏழைநாடு எதற்கு முன்னுரிமை தர வேண்டும்? என்ற விவாதங்களும் நடக்கின்றன. இதற்கு விஞ்ஞானிகள் கூறும் பதில், 'மக்களின் வறுமை தீர்க்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும் என்பது சரியான கோரிக்கை. ஆனால், அதையும் இதையும் முடிச்சுப் போடக் கூடாது. ஒரு நாடு அறிவியல் ஆய்வில் சுயேச்சையான நிலையை அடைய, இதுபோன்ற ஆய்வுகள் அவசியமானவை' என்கிறார்கள்.
எனில், அறிவியலே தவறா?
இது ஓர் ஆபத்தான வாதம். 'புராண காலத்திலேயே இந்தியாவில் விமானங்கள் இருந்தது. ஸ்டெம் செல் அறிவியலும், உறுப்பு மாற்று சிகிச்சையும் நடந்தது’ என கேலிக்குரிய வகையில் பழம்பெருமை பேசப்படும் நிலையில், அறிவியலே தவறு என, கற்காலத்தை நோக்கி யாரும் நகர முடியாது. அப்படிப் பேசினால் அது ஆபத்தானது; அறிவீனமானது. ஆனால், அறிவியலின் பிடி யாரிடம் இருக்கிறது என்பதை விவாதிக்கத்தான் வேண்டும். நியூட்ரினோ என்ற அறிவியலில் பிழை இல்லாமல் இருக்கலாம். அதேநேரம் அறிவியல் ஆய்வுகள் இங்கு சுயேச்சையானதாக இல்லை. அது நிறுவனங்களுக்கு இசைவானதாக அவற்றின் லாபத்தை உறுதிப்படுத்தும் கருவியாக இருக்கிறது. அரசே, அரசின் கட்டுப்பாட்டில் இல்லாமல், தனியார் நிறுவனங்களின் உள்வாடகைக்கு விடப்படும் சூழலில் அறிவியலும், தொழில்நுட்பமும் இதற்கு விதிவிலக்கு அல்ல. எனினும், அறிவியலை நம்பலாம்; விஞ்ஞானத்தை நம்பலாம்; இந்த அரசை எவ்வாறு நம்புவது?
''நியூட்ரினோவுக்கு ஆதரவு கொடுப்போம். ஆனால்..?!''
தேனி வட்டாரத்தில் நியூட்ரினோ திட்டத்தை ஆதரிப்பவர்கள், சில கோரிக்கைகளைமுன்வைக்கின்றனர். 18-ம் கால்வாய் விவசாயிகள் சங்கச் செயலாளர் திருப்பதிவாசன், '1,450 கோடி ரூபாய் செலவழித்து நியூட்ரினோ ஆய்வு செய்யும் முன்பு, சில கோடிகள் செலவிட்டு நிறைவேற்ற வேண்டிய பல முக்கியமான திட்டங்கள் இந்தப் பகுதியில் பல்லாண்டுகளாகக் காத்திருப்பில் உள்ளன. தமிழ்நாட்டையும் கேரளாவையும் இணைக்கும் 4.5 கி.மீ தூரமுள்ள சாக்குலூத்து மெட்டு சாலையையும், 5 கி.மீ நீளமுள்ள ராமக்கல் மெட்டு சாலையையும் அமைத்துத் தந்தால், ஏராளமான மக்கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள். தொழில் வாய்ப்புகள் பெருகும். அதேபோல, திண்டுக்கல்-குமுளி ரயில் பாதை அமைக்கவும், மதுரை-தேனி அகல ரயில்பாதை அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவற்றைச் செய்து தந்துவிட்டு பிறகு அவர்கள் நியூட்ரினோ பக்கம் போகட்டும்' என்கிறார்!
''அடிப்படை ஆய்வுகள் அவசியம்!''
நியூட்ரினோ திட்டத்தை ஆதரித்து பிரசாரம் செய்யும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலத் தலைவர் முனைவர் நா.மணியிடம் பேசியபோது, 'மூட நம்பிக்கைகளை அறிவியல்போல முன்வைப்பதும், அறிவியலே தவறு என நிராகரிப்பதும் சமகாலத்தின் ஆபத்தான போக்குகள். இந்தப் போலி அறிவியல்வாதம் முறியடிக்கப்பட வேண்டும். அதற்கு அறிவியல் திட்டங்களை மக்களிடம் விளக்கிக் கூற வேண்டியுள்ளது. நியூட்ரினோ துகள் ஆய்வு என்பது அடிப்படை அறிவியல் தொடர்பானது. இதனால் தீங்கு ஏற்படும் என்பதற்கு ஆதாரங்கள் இல்லை. எனவே நாங்கள் ஆதரிக்கிறோம். தமிழகம் முழுக்க 50 இடங்களிலேனும் இதுகுறித்து கூட்டம் நடத்தவிருக்கிறோம். அடிப்படை அறிவியல் ஆய்வுகள்தான் மனிதகுல வளர்ச்சியை அடுத்த அடிக்கு நகர்த்தக்கூடியவை. அவை நடைபெற வேண்டும்; ஊக்குவிக்கப்பட வேண்டும். கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஒவ்வோர் ஆண்டும் 5.32 லட்சம் கோடி ரூபாய் வரிச் சலுகையாகவே வழங்கப்படும் இந்தியாவில், அடிப்படை அறிவியல் ஆய்வுக்கு ஒதுக்கப்படும் தொகை 1 சதவிகிதத்துக்கும் குறைவானதே!''
''இது பித்தலாட்டத்துக்கான முன்னோட்டம்!''
''தேவாரத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நியூட்ரினோ திட்டம் தொடர்பாக நடத்திய விளக்கக் கூட்டத்தில் முக்கியமான ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதாவது, சென்னை தரமணியில் செயல்படும் கணிதவியல் ஆய்வு நிறுவனம்தான், தேனி நியூட்ரினோ ஆய்வு மையத்துக்கான ஆரம்பக்கட்டப் பணிகளைச் செய்தது. இந்த நிறுவனம், நியூட்ரினோ ஆய்வுக்கான சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்காக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்குச் செய்த விண்ணப்பத்தில் 'அணு உலை/அணு உலை எரிபொருள்/அணு உலைக் கழிவுகள்’ என்ற பிரிவின் கீழ் ஐ.என்.ஓ-வை வகைப்படுத்தி உள்ளது. இதைப் பற்றி கேட்டதற்கு விளக்கம் அளித்த விஞ்ஞானி த.வி.வெங்கடேஷ்வரன், 'அது தெரியாமல் நடந்துவிட்ட கிளரிக்கல் தவறு. ரேஷன் கார்டில் பெயரைத் தவறாக எழுதிவிடுவது இல்லையா... அதுபோலதான். தவறைச் சரிசெய்துவிட்டோம்’ என மிகச் சாதாரணமாகச் சொல்கிறார். அணுக்கழிவைக் கொட்டுவதற்கு அனுமதி கேட்டு விண்ணப்பிப்பது ஒரு கிளரிக்கல் தவறினால் நடக்கும் எனச் சொல்வதே, ஏதோ பித்தலாட்டம் நடைபெறுவதற்கான முன்னோட்டம்'' என்கிறார் விவசாயிகள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த தேவாரம் மாறன்.
No comments:
Post a Comment