சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

9 Feb 2015

அடுத்து கலெக்டர்கள்? மிரட்டும் சகாயம் ஆபரேஷன்

கிரானைட் முறை​கேடுகள் தொடர்​பான ..எஸ் அதிகாரி சகாயத்தின் விசாரணை அடுத்தகட்டத்துக்கு  நகர்ந்துள்ளது.
இதுவரை நேரடியாகவும் தபால் மூலமாகவும் சகாயத்திடம் 430 புகார்கள் வந்துள்ளன. இந்தப் புகார்கள், மூன்றாக வகைப்படுத்தப்பட்டு, புகார்களின் தன்மையைப் பொறுத்து விசாரிக்கப்பட்டு வருகின்றன. மிக முக்கியமான புகார்களை சகாயம் நேரடியாக விசாரிக்கிறார். மற்ற புகார்களை சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகள், புவியியல் மற்றும் சுரங்கத் துறையினர், டாமின் அதிகாரிகள்,  தாசில்தார், பொதுப்பணித் துறை பொறியாளர்கள் என சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி உண்மை நிலையை விசாரிக்க திட்டமிட்டுள்ளார். அதற்கான வேலைகள்  ஜரூராக நடந்து வருகின்றன.

'முன்னாள் முதல்வரின் உதவியாளர்மிரட்டல்!

தினபூமி நாளிதழ் ஆசிரியரும் அதன் உரிமையாளருமான மணிமாறன் மற்றும் அவரது மகன் ரமேஷ் ஆகியோர் முதல் நாள் விசாரணைக்கு வந்தனர். 'கிரானைட் முறைகேடுகள் குறித்து எங்கள் பத்திரிகையில் செய்திகள் வெளியிட்டதால், பொய் வழக்குகள் பதிவுசெய்து எங்களை காவல் துறை அதிகாரிகள் கொடுமைப்படுத்தினர். அந்தப் பொய் புகாரில் இருந்து மீண்டுவர நாங்கள் மிகவும் சிரமப்பட்டோம்என்று அவர்கள் விரிவாகப் புகார் அளித்தனர். மேலும் அவர்கள், பி.ஆர்.பி நிறுவனம் நடத்தி வந்த கிரானைட் தொழிற்சாலை பற்றிய மிக முக்கியமான விவரங்களையும் கலெக்டரில் இருந்து காவல் துறை வரை யார் யார் கிரானைட் ஊழலுக்கு உதவினர் என்ற விவரங்களையும் சகாயம் கமிஷனிடம் எழுத்துப்பூர்வமாக அளித்துவிட்டுச் சென்றனர்.
மணிமாறனுடன் கைது செய்யப்பட்ட கீழவளவு முத்தையா என்பவர் விசாரணைக்கு வரவழைக்கபட்டார். ''கீழவளவில் இருந்த தாழ்த்தப்பட்ட மக்களுடைய நிலங்களை கையகப்படுத்தி, அவர்களை குடியிருப்புகளில் இருந்து துரத்தினர். அதனால், பலருக்கும் புகார்களை அனுப்பினோம். ஆனால், யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. அன்றைய முதல்வரின்  உதவியாளர் என்று சொல்லிக்கொண்டு ..எஸ் அதிகாரி ஒருவர் என்னை மிரட்டினார். போலீஸ் அதிகாரிகள்  இரவு நேரங்களில் என்னை கைது செய்து பெரும் சித்ரவதைகள் செய்தனர்'' என்று புகார்களை சொல்லியிருக்கிறார் முத்தையா.
கேள்விக்கு என்ன பதில்?
நிலச்சீர்திருத்த உதவி ஆணையாளரை வரவைத்து, மேலூர் பகுதிகளில் இதுவரை எவ்வளவு  அரசு நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன, அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று கேள்வி எழுப்பிய சகாயம் கமிஷன், சர்வே எண் உள்பட எல்லா விவரங்களையும் தரவேண்டும் என்று கேட்டுள்ளது. அந்த விவரங்கள் அனைத்தும் வருவாய்த் துறையிடம்தான் உள்ளது என்று கூறி உதவி ஆணையர் எஸ்கேப் ஆகிவிட்டார். மறுநாள், மேலூர் பகுதிகளில் உள்ள அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,பொறியாளர்கள் என்று பல அதிகாரிகளை வரவைத்து விசாரணை நடத்தினார் சகாயம்.
'உங்கள் பகுதிகளில் எத்தனை கிரானைட் குவாரிகள் உள்ளன, அரசு புறம்போக்கு இடங்களில் எத்தனை குவாரிகள் உள்ளன, அவற்றின் மீது  என்ன நடவடிக்கை எடுத்து இருக்கிறீர்கள் என்று கேள்வி மேல் கேள்வி கேட்டார் சகாயம். ஆனால், ஒருவரிடம்கூட உருப்படியான பதில் இல்லை. எனவே, அந்த விவரங்களை ஒரு வாரத்துக்குள் அறிக்கையாக அனுப்புமாறு அவர்களிடம் சொல்லி அனுப்பினாராம் சகாயம்.
'இன்னும் ஒரு வாரத்துல அறிக்கை வரணும்!’
மிகவும் சிக்கலான 36 கேள்விகளுக்கான பதில்களை  ஜனவரி 27-ம் தேதி அறிக்கையாகத் தருமாறு  கடந்த ஆய்வின்போது, கனிமவள உதவி இயக்குநர்  ஆறுமுக நயினாருக்கு ஓலை அனுப்பி இருந்தார் சகாயம். அதில், ''மதுரை மாவட்டத்தில் எத்தனை குவாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது? அவற்றில், டாமின் வழங்கிய அனுமதி எத்தனை,  தனியார் நிறுவனத்துக்கு எத்தனை? கிரானைட் குவாரிகளால் ஏற்கெனவே பாதிக்கப்பட்ட, அதிகமாக வெட்டி எடுக்கப்பட்டது தொடர்பான விவரங்கள் தேவை.  2002-ல் மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்தவர் கொடுத்த அனுமதிகளின் எண்ணிக்கை எவ்வளவு? 1994-ம்  ஆண்டு முதல் 2014-ம் ஆண்டுவரை புவியியல் மற்றும் சுரங்கத் துறை, கனிமவளத் துறை ஆகியவை கொடுத்த லைசென்ஸ் குறித்த விவரங்கள், குவாரிகள் பெர்மிட், அனுமதிக்கப்பட்ட லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் குறித்த விவரங்கள் மற்றும் அவற்றின் பதிவு எண்கள், மதுரை மாவட்டத்தில் இயங்கும் பாலிஷ் ஃபேக்டரிகள் மற்றும் அவற்றுக்கான அனுமதி பற்றிய விவரங்கள், பி.ஆர்.பி நிறுவனம் நடத்தும் கிரானைட் பாலிஷ் ஃபேக்டரிகளின் எண்ணிக்கை மற்றும் அவை குறித்த பிற விவரங்கள், இதுவரை எவ்வளவு கற்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளன என்பது பற்றிய விவரங்கள், அரசு பறிமுதல் செய்து வைத்துள்ள கற்கள் குறித்த விவரங்கள், இதுவரை மாவட்ட ஆட்சியர் சார்பாகவும், கனிமவளத் துறை இயக்குநர் சார்பாகவும் கிரானைட் குவாரிகள் மற்றும் பாலிஷ் தொழிற்சாலைகளில் என்னென்ன ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன என்பதை விரிவான அறிக்கையாக அளிக்க வேண்டும்' என்று கேட்டிருந்தார் சகாயம்.

பிப்ரவரி பிறந்துவிட்டது. ஆனால் ஆறுமுக நயினார் இன்னமும் அறிக்கை எதுவும் அளிக்கவில்லை. அவரை அழைத்த சகாயம், 'இன்னும் ஒரு வார காலத்துக்குள் அறிக்கை வரவில்லை என்றால் உங்கள் மீது கமிஷனில் புகார் கொடுக்கப்படும்என்று எச்சரித்து அனுப்பி இருக்கிறார்.
சிக்கலில் பொதுப்பணித் துறை அதிகாரிகள்!
பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு சிக்கலான சிறப்பு ஓலை அனுப்பப்பட்டு உள்ளது. ''பெரியார் கால்வாய்களின் முழு விவரம் தேவை. அவற்றின் குறுக்கே தண்ணீர் போகவிடாமல் கற்கள் போடப்பட்டுள்ள இடத்தின் நீளம், அகலம் என்ன, ஆக்கிரமிப்பு செய்ததால் எத்தனை ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன, விவசாய அழிப்பு நடந்த இடங்கள் எவை, இதுவரையில் விவசாயிகள் அளித்துள்ள புகார்களும் அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும் என்ன?' இப்படியாக 40க்கும் மேற்பட்ட கேள்விகளை சகாயம் கேட்டுள்ளார். இந்தக் கேள்விகளுக்குப் பதில் அளிக்க முடியாமல் அவதியில் அலைகிறார்கள், பொதுப்பணித் துறை பொறியாளர்கள்.

குழப்பத்தில் காவல் துறை!
மதுரை மாவட்ட காவல் துறைக்கு  வளைத்து வளைத்து கேள்விகளை அனுப்பி இருப்பதால், குழம்பிப் போய் கையைப் பிசைந்துகொண்டிருக்கின்றனர் காவல் துறை அதிகாரிகள். மதுரை மாநகர கமிஷனருக்கும்,  எஸ்.பிக்கும் ஏகப்பட்ட கேள்விகளை அனுப்பியிருக்கிறார். பழைய கோப்புகளைத் தூசிதட்டி எடுத்துக்கொண்டிருக்கிறது மாவட்ட காவல் துறை நிர்வாகம். 1990 முதல் 2014 வரை கிரானைட் சம்பந்தமாக எத்தனை புகார்கள் வந்தன? அதில், ''தனிநபர் மீது வந்த புகார்கள், கிரானைட் முதலாளிகளின் மீது வந்த புகார்கள், எத்தனை எஃப்..ஆர்  பதிவுசெய்யப்பட்ட விவரங்கள், சார்ஜ் ஷீட் போடப்பட்ட வழக்குகளின் விவரங்கள் தேவை. புகார் கொடுக்கப்பட்டவர்களின் மீது நடந்த தாக்குதல்கள் விவரங்கள் வேண்டும்' என கேள்விகள் விரிகிறது. இதனால் நிம்மதியைத் தொலைத்துவிட்டு பரபரக்கிறது மதுரை மாவட்ட காவல் துறை.
விழிபிதுங்கும் தொல்லியல் துறை!
மதுரையில் இரண்டாம் நூற்றாண்டுகளில் இருந்த புராதனச் சின்னங்களையும், மலைகளையும் சின்னாபின்னமாக்கியுள்ளனர் கிரானைட் புள்ளிகள்.
இதில் பாதிக்கப்பட்ட பழைமையான இடங்களையும், அதற்கு மாநில தொல்லியல் துறை சார்பில் மத்திய தொல்லியல் துறைக்கு புகார்கள் அனுப்பப்பட்ட விவரங்களையும் கேட்டிருக்கிறார் சகாயம். கோயில் குளங்களை உடைக்கும்போது காவல் துறைக்குக் கொடுக்கபட்ட புகார்கள், துறை சார்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என 30க்கும் மேற்பட்ட கேள்விகளை தொல்லியல் துறைக்கு சகாயம் அனுப்பியுள்ளார். அந்தக் கேள்விகளுக்கு எப்படி பதில் அனுப்புவது என்று தெரியாமல் விழிபிதுங்கிக் கிடக்கிறார்கள் தொல்லியல் துறை அதிகாரிகள்.

மதுரையில் யாரெல்லாம் கலெக்டர்களாக இருந்தார்கள் என்ற லிஸ்ட் சகாயம் கையில் இருக்கிறது. விரைவில் அவர்களுக்கும் சம்மன் அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து நரபலி குறித்த ஆய்வு ஆரம்பமாகும். அப்போது இன்னும் பல திகில் கிளப்பும் விவகாரங்கள் வெளியாகலாம்!No comments:

Post a Comment