சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

9 Feb 2015

'அவனோட பைக்குல ரைடுதான் போனேன்... தப்பா?’

இன்று எவ்வளவுக்கு எவ்வளவு ஆண்களும், பெண்களும் கலந்து வாழ்வது அவசியமாகி விட்டதோ, அதே அளவு அவர்களுக்கு இடையிலான உறவுகளின் உணர்வுகளைப் புரியத் தருவதிலும், புரிந்து கொள்வதிலும் குழப்பம் நிலவுகிறது. கேள்விப்படுகிற ஒவ்வொரு சம்பவங்களும்... நிலைகுலைய வைக்கின்றன!

எங்களுடைய பள்ளிக் காலங்களிலும் இருவர் பெயர்களை எழுதிபொருத்தம்பார்ப்பது நடந்திருக்கிறது. அதிகபட்சம் தோழிகளின் பெயர்களோடு பொருத்தம் பார்ப்பது நிகழும். யாருக்கும் தெரியாமல் மாமன், மச்சான் அல்லது தெரிந்த பையன்களின் பெயரைப் போட்டுப் பார்ப்பதுவும், இதுவும் நெருங்கிய தோழிகளுக்குக் கூடத் தெரியாமலேயேதான் நிகழும்.

இன்று ஆணும், பெண்ணும் சேர்ந்து படிக்கும் 6 வது வகுப்பில் நடந்த ஒரு சம்பவம் என்னை யோசிக்க வைத்தது. படிப்பிலும், விளையாட்டிலும், கலகலப்பிலும் முதலிடம் பிடித்திருந்த ஆறாம் வகுப்பு மாணவி, திடீரென மௌனமாகத் தொடங்கியிருந்தாள் வீட்டிலும், வகுப்பிலும். தான் படிக்கும் பள்ளி பிடிக்கவில்லை என்றும், பள்ளியை மாற்றுங்கள் என்றும் வீட்டில் சொல்லத் தொடங்கினாள். பெற்றோர்கள் காரணம் என்னவென்று துருவித் துருவிக்கேட்ட பிறகு, மெள்ள மெள்ள 10 நாட்களுக்கப்புறமாக உரையாடத் தொடங்கினாள்.

இருபாலர் படிக்கும் அந்த ஆங்கில வழிக்கல்வி பள்ளியில் மாணவிகள், தங்கள் பெயர்களை, பையன்களின் பெயர்களுடன் எழுதி அடித்து போட்டுப் பார்ப்பது வழக்கமாக இருந்திருக்கிறது. இங்கே, சகதோழியை விளையாட்டிலும், படிப்பிலும் முந்த முடியாத இயலாமை கொண்டிருந்த இன்னொரு 'அறிவாளி' மாணவி, சகதோழியின் பெயரை, ஒரு பையன் பெயருடன் போட்டு அடித்துப் பார்த்து, அவளுக்கும் அப்பையனுக்கும் லவ் என்று சொல்லிவிட, ‘காதல் தவறுஎன்று போதிக்கப்பட்டிருந்த அக்குழந்தை, குற்றஉணர்ச்சிக்குள் சிக்கி, பேச இயலாது மௌனமாகிவிட்டது. இந்தச் சூழலிலிருந்து வெளி வர விரும்பித்தான், பள்ளி போவதை நிராகரிக்கத் தொடங்கியிருக்கிறது. தனக்கும் அப்பையனுக்கும் அப்படியான உறவு இல்லை என நிரூபிக்க முடியாமல் தடுமாறிய இந்தக் குழந்தை, உளவியல் சிக்கலை எதிர்கொள்கிறது!

குழந்தைப்பருவம், துள்ளித் திரிகிற காலம் என்பது போய், எப்போதும் புத்தகப் பையைச் சுமக்கிற கூட்டமாக மாற்றி விட்டோம் குழந்தைகளை. இப்போதெல்லாம் குழந்தைகள் சொல்ல இயலா மனஉளைச்சலை மனதோடு தாங்குவது மட்டுமல்லாது, பகிர்ந்துகொள்ள ஆளில்லாதவர்களாகவும் ஆகிப்போயிருக்கிற மனநிலையைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. ஏன் இவ்வளவு சிக்கல்களை தாங்குகின்ற பருவமாக குழந்தைப் பருவம் மாறி விட்டதோ என்று மனம் வருந்துகிறது.

கொஞ்சம் இந்த வயதிலிருந்து பிளஸ் ஒன், பிளஸ் டூ முடித்த மாணவ, மாணவிகள் பக்கம் வந்தால்... யூகிக்க முடியாத அளவுக்கு ஏதேதோ பிரச்னைகள். அடிக்கடி குற்ற உணர்வுக்குள் மாட்டிக் கொள்ளும் மாணவிகள் ஒருபுறம் என்றால், இன்னொருபுறம் எதையும் செய்யலாம், விரும்பியபடி வாழ்வதுதான் வாழ்வு என சமீபகாலமாக திரைப்படங்களால் சொல்லிக்கொடுக்கப்பட்ட புள்ளியிலிருந்து வாழும் அதீதல்கள்.

மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள அந்த இருபாலர் வகுப்பில் ஒருநாள் தற்கொலை முயற்சி மேற்கொள்கிறான் ஒரு மாணவன். காரணம் கேட்க, உடன் படிக்கும் மாணவி, தனியான பொழுதில் அவளைத் தொட்டுவிட்டதாக அவளாகவே வதந்தியை கிளப்பி விட்டிருக்கிறாள். காரணம் தேடப்போனபோது, அப்பெண்ணுக்கும், அம்மாணவனுக்கும் உள்ள உறவு அவள் நினைத்தது போல் இல்லை என்ற உண்மையும், அவன் இன்னொரு பெண்ணோடு தனக்கிருந்த நட்பை அழுத்தி முன் வைக்க, இரு பெண்கள் ஒரு ஆணை கைகொள்ள நினைக்கிற மிகச்சிக்கலான உறவாக மாறி, அதன் பின்னாலான உளவியல் சிக்கல் இந்த மூன்று பேரையும் படுத்திக் கொண்டிருக்கிறது.

சந்தோஷத்தைத் தராத நட்புகளோடும், உறவுகளோடும்தான் இன்றைய இளம் தலைமுறை பயணித்துக் கொண்டிருக்கிறது. வீட்டில் தொலைபேச அனுமதிக்காத, ஆடவருடன் பேசவும் வாய்ப்பு நல்காத குடும்பத்தைச் சார்ந்த பெண், ஆசிரியர் பார்க்க நேர்ந்த சமயத்தில் உடன் படிக்கும் மாணவனை மடியில் படுக்க வைத்திருந்தாள். ஆசிரியரைப் பார்த்ததும் அதிர்ந்து விலகினார்கள். படிக்க வந்த இடத்தில் ஏன் இப்படி என்று கேட்க, நண்பர்களாகத்தான் பழகினோம் என்றார்கள்.

அப்பாவுடனும் அருகில் அமர்ந்து பேசாத இன்னொரு குடும்பத்தைச் சேர்ந்த பெண், ஒரு நாள் இரவு 9 மணி வரை வீடு திரும்பவில்லை என்று தேடினார்கள். ஊருக்கு வெளியே கருவேலங் காட்டுக்கு இடையில் அவளது டூவீலர் நிறுத்தப்பட்டிருக்க, அவள் தோழி தொலைபேசிக்கு தொடர்ந்து தொடர்பு கொள்கிறார்கள். தொடர்பு துண்டிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. திடீரென அதே எண்ணிலிருந்து அழைப்பு வர, அவளே பேசுகிறாள், நான் இன்னாருடன் இருக்கின்றேன்; அவனை அடிக்கவில்லை என்றால் வந்து சேருகின்றேன் என்று! சரி என்று பெற்றோர்கள் சொல்ல, வந்து சேர்ந்தவள், ‘அம்மா அவனோட பைக்குல ரைடுதான் போனேன். தப்பா?’ என்று கேட்டாள். உறைந்து போய் நின்றிருந்தனர் பெற்றோர்.

வீட்டில் ஆண்களுடன் பழகுவதற்கு அனுமதிக்கப்படாத பெண்கள், வெளியில் ஆண்களுடன் பழகும்போது, எது சரி, எது பிழை என்று அறியாமல் போகிறார்கள். அவளைரைடுஅழைத்துச் சென்றவனோ, அந்தப் பொழுதுகளை சுவாரஸ்யம் கூட்டி, நண்பர்களிடம் பெருமை பேசி வருவதும், பொய்களை அவிழ்த்து விடுவதும் தெரிய வரும்போது, தாம் எள்ளலாகப் பயன்படுத்தப் பட்டிருக்கின்றோம் என்று அறிந்து, பின் அவனையும், அவன் நண்பர்களையும், ஏன் சக தோழிகளையும் கூட சந்திக்கப் பயந்து ஒடுங்கிப் போய்விட்டாள். தவறு செய்துவிட்ட குற்றவுணர்வு அதற்கு பிறகு அவளது ஒவ்வொரு நடவடிக்கையிலும் இயக்கத்தை தொந்தரவு செய்தபடியே இருக்கிறது. வாழ்வு முழுவதும் அதன் சுவடு தொடருமோ என்ற கேள்விகளுடன் நகருகிறது.

உணர்வுகளும், உறவுகளும் ஒருவரை ஒருவர் மகிழ்விப்பதற்காக அல்லாது, போலி பெருமைகளுக்கும் போலி கௌரவத்துக்கும் பயன்படுத்தப்பட்டு வருவது இன்றைய காலத்தின் சோகம். அன்றும் பதின்ம காலக் காதல் இருந்தது. அது பார்த்தும் காதலித்தும் மகிழ்ந்தது... மகிழ்வித்தது. இன்று காதலெனப்படுவது கௌரவ நடவடிக்கைகளின் சம்பவமாக மாறித் தொலைத்திருக்கிறது. உறவுகளை, உறவுகளின் உணர்வுகளை வீட்டிலிருந்து பயிற்றுவிக்கத் தவறவிட்ட தவறை, தொடர்ந்து செய்துகொண்டிருக்கும் பெற்றோர்களும் இதற்குக் காரணம்.

அம்மாவின் கடமை சோறாக்குவதிலும் வீட்டைப் பராமரிப்பதிலுமாக மாறிவிட, அப்பாவின் கடமை சம்பாதிப்பதாக இருக்க, இருவரும் இவற்றை பிள்ளைகளுக்காக செய்வதாகச் சொல்வது பொய் என்பதை, பிள்ளைகள் உறவுகளை புரிதலோடு அணுகாமல் போவதின் சாட்சியத்திலிருந்து புரிந்து கொள்ளலாம்.

கட்டுரையாளர் பற்றி...

திலகபாமா, 'மதி ஒருங்கிணைந்த சுகாதார மையம்' எனும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின்  இயக்குநராக சிவகாசியில் பணியாற்றுகிறார். ‘கூர் பச்சையங்கள்’, ‘கூந்தல் நதிக்கதைகள்’, ‘புதுமைப் பித்தனில் பூமத்திய ரேகை’, ‘திசைகளின் தரிசனம்என பல சிறுகதைத் தொகுப்புகளையும், கட்டுரைத் தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார். இவரின்மறைவாள் வீச்சு’, புத்தகம், சிறந்த சிறுகதை தொகுப்பிற்கான பரிசு பெற்றது. பாரதி இலக்கியச் சங்கச் செயலாளர், சிவகாசி ஆர்ட்ஸ் கிளப் தலைவர் என பல பொறுப்புகள் வகிக்கும் திலகபாமா, சிற்பி இலக்கிய விருது, அரிமா சங்க விருது, ஜெயந்தன் விருது, வாழ்நாள் சாதைனையாளர் விருது என பல விருதுகளைப் பெற்றவர்.



No comments:

Post a Comment