சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

10 Feb 2015

வீட்டு சாப்பாடு - ச.தமிழ்ச்செல்வன், எழுத்தாளர்

உணவு
ல்லோருடைய வீட்டிலும் அடுப்பைப் பற்றவைத்ததும், முதலில் துவங்குவது காபி போடும் வேலைதான். மேட்டுப்பட்டி கிராமத்தில் நான் சிறுவனாக வளர்ந்தபோது, காலையில் காபி குடிக்கும் பழக்கம் அந்த ஊரில் இருந்தது இல்லை. எப்பவாச்சும் இரவு வேளைகளில், குறிப்பாக, மழைக்காலங்களில்  கருப்பட்டிக் காபி போடுவார்கள். பெரும்பாலான வீடுகளில் ஆட்டுப்பால் காபிதான். நல்ல கெட்டியாக இருந்ததாக நாக்கில் நினைவு தங்கியிருக்கிறது. அது காபியா... டீயா என்கிற பேதமெல்லாம் எங்களுக்குத் தெரியாது. சின்ன பாக்கெட்டில் டீத்தூள் வரும். காபி என்பது வட்டவட்டமான வில்லைகளில் வரும். ஒரு வில்லை மூணு  பைசா. கடையில் வாங்கி வருவது சிறுவர்களின் முக்கியப் பணி என்பதால், அந்த வில்லைகள் நினைவிருக்கின்றன.

அடுப்பில் வெந்நீரைக் கொதிக்க வைத்து, அந்தத் தூளைப்போட்டுக் கொதிக்கவைத்து மூடி வைப்பார்கள். கருப்பட்டியைத் தனியாக உடைத்துப்போட்டுக் கொதிக்கவைத்து, கருப்பட்டித்தண்ணி தயாரிப்பார்கள். ‘பாலில் கருப்பட்டியை அப்படியே போட்டுக் காய்ச்சினால், பால் திரிந்துவிடும்என்பாள் பாட்டி. பாலைத் தனியாகக் காய்ச்சி, பிறகு மூன்றையும் கலந்து சுடச்சுட ஈய டம்ளர்களில் ஊற்றி (அப்போது எவர்சில்வர் புரட்சி வந்திருக்கவில்லை) சூடு தாங்காமல் துணியைச் சுற்றிப் பிடித்துக்கொண்டு  வட்டமாக உட்கார்ந்து, ஊதி ஊதிக் குடிப்பார்கள். அந்த இரவுகள் இருட்டோடும் வெளிச்சக்கீற்றுகளோடும் மழையின் குளிர்ச்சியோடும், சிரிப்பு கலந்தப் பேச்சுகளோடும் எப்பவும் நினைப்பில் இருக்கிறது. அதுமாதிரியான இரவுகள் வாழ்வில் அபூர்வமாகத்தான் வாய்க்கும்.

அதுபோன்ற சில அபூர்வத் தேயிலை ராத்திரிகள் இந்திய ராணுவத்தில் இருந்த நாட்களில் வாய்த்தது. இமயமலையின் 12000 அடி உயரத்தில் அங்கிட்டி எனப்படும் தணப்பு எரிந்துகொண்டிருக்க, அடுத்தடுத்த அறைகளில் வசிக்கும்  வீரர்கள், ஒரே அறையில் கூடி அரட்டை அடித்தபடி குடிக்கும் அந்தத் தேநீர் ஈடு இணையில்லாத சுவையோடு இருக்கும். மெஸ் சாப்பாட்டுக்குப் பிறகு நடக்கும் தேநீர் கச்சேரி இது. பெரும்பாலும் எங்கள் கமாண்டராக இருந்த பஞ்சாபியான கபூர்சாருடைய அறையில்தான் கூடுவோம். பட்நாகர் என்கிற .பி நண்பர்தான் எப்போதும் அடுப்பைக் கவனிப்பார். அவரது கைப்பக்குவத்தில் எது செய்தாலும் அத்தனை ருசியாக இருக்கும். ராணுவ மெஸ் சாப்பாட்டின் மொண்ணைத்தனம் மறக்க, அவ்வப்போது இந்த வீட்டு சாப்பாட்டையும் தேநீரையும் பட்நாகர் எங்கள் எல்லோருக்காகவும் செய்வார்.

காய்ச்சுவார் காய்ச்சினால், கழுதை மூத்திரமும் நல்லா இருக்கும்எனக் கரிசல் காட்டில் ஒரு சொலவடை உண்டு. இந்த சொலவடைக்கு இரண்டு அர்த்தங்கள் சொல்லலாம். ஒன்று, ‘தொழில் தெரிந்தவர் சமைத்தால், ருசியாக இருக்கும்என்பது. இன்னொரு அர்த்தம்நம் மனதுக்குப் பிரியமானவர்கள் சமைத்தால், எதுவானாலும் நல்லா இருக்கும்என்பது.

எங்கள் ராணுவ முகாமைச் சுற்றி  புதினாச் செடிகள் மண்டிக்கிடக்கும். அதனால் எங்கள் மெஸ் கமாண்டர் தேயிலையோடு புதினாவைச் சேர்த்துக் கொதிக்கவைத்து, புதினா டீ கொடுப்பார். இப்போதுவிதவிதமான வாசனைகளோடு இயற்கைத் தேநீர்கள் வந்துவிட்டன. எங்கள் வீட்டில் என் இளைய தம்பி எழுத்தாளர் கோணங்கி தன் மாடி அறையில் இதுபோன்ற வண்ண வண்ண  இயற்கைத் தேநீர் தயாரித்து வரும் நண்பர்களுக்கு அதை வண்ண வண்ணக் கோப்பைகளில் வழங்குவான். எந்தெந்த நாடுகளிலிருந்தோ அவனுக்கு நண்பர்கள் தேயிலைத்தூள்கள் வாங்கி அனுப்புவார்கள். சிலருக்குத்தான் இது எல்லாம் வாய்க்கும்போல.
கௌரவத்தின் அடையாளமாக நம் பண்பாட்டுக்குள் நுழைந்த காபி, இன்று தண்ணீரைப்போல தாகமெடுக்கிறது என்று சொல்கிற அளவுக்கு நம் வாழ்வில் ஊடுருவிவிட்டது. காபியில் காஃபின் (caffeine) என்கிற ரசாயனப் பொருள்தான், நமக்கு சுறுசுறுப்பைத் தருவது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. அது பக்க விளைவுகளை உண்டாக்கும் என்றெல்லாம் சொல்லப்பட்டாலும் காபியை விட முடியவில்லை. உப்பு, சர்க்கரை, பால் ஆகிய மூன்றும் வெள்ளை எமன்கள் என்று சொல்லியும் பார்த்தாச்சுகாபியைவிட டீயில் விஷம் குறைவு என்பதால், நாங்கள் குடும்பத்தோடு கொஞ்ச காலம் தேநீரில் கிடந்தோம். அதில் இஞ்சி, ஏலக்காய் போட்டு குடித்துப்பார்த்தோம். அப்புறம் ஆரோக்கியம் குறித்த தன்னுணர்வு பீறிட, காபி, டீ இரண்டையுமே தவிர்த்து, அதிகாலையில் காய்கறி சூப் குடித்துப் பார்த்தோம். ஒருவாரத்துக்கு மனசில் நல்லுணர்வுகள் பொங்கஉடம்பே புதுசான மாதிரி இருக்குல்லஎன்று பேசிக்கொண்டோம். அப்புறம் ஒரு திடீர்் திருப்பத்தில் மீண்டும் காபியிடம் மாட்டிக் கொண்டோம்.
பீபரி எனப்படும் ஒருவகைக் காபிக்கொட்டையும் சிக்கரியும் 80:20 என்ற கலவையில் அரைத்து வாங்கி ஃபில்டர் எனப்படும் வடிப்பானில் டிகாக்ஷன் எனப்படும் விஷத்தை இறக்கி பால் என்னும் எமனுடன் கலந்து (முன்பு சர்க்கரை போட்டும் இப்போது உடம்பிலேயே சர்க்கரை அதிகமாக இருப்பதால் சர்க்கரை இல்லாமலும்) காலையில் ஒரு கப் ஏத்திக்கிட்டாத்தான் அன்றைய பொழுது நல்லா இருக்கு.
என் மாமியார் கடையில் காபிக்கொட்டையை வாங்கிவருவார். அன்றன்றைக்கு தேவையான காபிக்கொட்டையை வாணலியில் பக்குவமாக வறுப்பார். அதை, அம்மியில் அரைத்துப் பொடியாக்கி, வெந்நீரில் கொதிக்கவைத்துச் சாறு இறக்கி பாலும் வெல்லமும் கலந்து கொடுப்பார்கள். சிக்கரி கலந்த காபியைவிட இது விஷம் கம்மிதான். ருசியும் வேறாக இருக்கும். தினசரி அரைத்துக்கொண்டிருக்க நம்மால் முடியாதே. ஆனால் அதற்காக இன்ஸ்டன்ட் காபித்தூள் போட்டும் குடிக்க முடியவில்லை. ஃபில்டர் காபியைப் போன்றே சுவையானது என்பது விளம்பரத்துக்கு மட்டும்தான். ஃபில்டர் காபி குடித்துக் குடித்துத் தளும்பேறிய நாக்கும் மூக்கும் இன்ஸ்டன்ட் காபி வாசனைக்கே குமட்டல் லெவலுக்குப் போய்விடுகின்றன. கூட்டமாக விருந்தினர் வந்துவிட்டால் மட்டும் மொத்தமாக  சர்க்கரையையும் பாலையும் இன்ஸ்டன்ட் தூளையும் கலந்து, எப்படியும் சாகட்டும் என்று அன்போடு சாவா மருந்துபோல சிரித்த முகத்தோடு ட்ரேயில் பேப்பர் கப்பில் ஊற்றி வழங்கிவிடுகிறோம். இன்ஸ்டன்ட் காபி போட்டு விருந்தினருக்கு வழங்குவதைவிடக் கேவலமான  விருந்தோம்பல் உலகத்தில் கிடையாது.
இப்போது, ஆங்காங்கே கும்பகோணம் டிகிரி காபிக் கடைகள் முளைத்து சம்பளத்துக்கு ஆள் போட்டு ரோட்டில் நின்று கொடி அசைத்து  நம்மை அழைக்கிறார்கள். டிகிரி காபி என்றால் என்ன? அந்தக்காலத்தில் பாலின் அடர்த்தியை அளந்து பார்க்கப் பால்மானியை வைத்துப் பார்க்கும் பழக்கம் இருந்திருக்கிறது. அப்பேர்ப்பட்ட பாலில் போட்ட காபி என்பதுதான் டிகிரி காபி. இந்தக் கடைகளில் எல்லாம் பவுடர் பாலில் காபியைப் போட்டு அதுக்கு டிகிரி விளம்பரம் செய்து நம் நாக்கை அறுக்கிறார்கள். ஒரு நல்ல தங்கமான டீக்காக காடு மேடு மலையெல்லாம் அலைந்த நம் விளம்பர நாயகன் ஒரு நல்ல காபிக்காக அலைந்தது இல்லை. நல்ல காபிக்காக நாம்தான் அலைய வேண்டியிருக்கிறது.
டீ... காபி... வர்க்கம்...
மிழ்நாட்டில் வெள்ளைக்காரன் காலத்தில் பஞ்சாலைத் தொழிலாளர்களுக்கு தினசரி இலவசமாகத் தேநீர் வழங்கி அவர்களை டீ-க்கு அடிமை ஆக்கிய கதையை நைனா கி.ராஜநாராயணன் எழுதியிருக்கிறார். கோபல்லபுரத்து மக்கள் நாவலில்தான் என்று ஞாபகம். ‘அந்தக் காலத்தில் காபி இல்லைஎன்று ஒரு அருமையான ஆய்வுப் புத்தகத்தை ஆய்வாளர் .இரா.வேங்கடாசலபதி எழுதியுள்ளார். ‘காபி என்பது நம் நாட்டுப் பயிர் அல்ல. அது எத்தியோப்பியாவிலிருந்து வந்தது. காபி குடிப்பது மேல்தட்டு வர்க்கப் பண்பாடாகவும் டீ குடிப்பது கூலிகள் எனப்படும் உழைக்கும் வர்க்கப் பண்பாடாகவும் வளர்ந்த கதையை சுவைபட விளக்கியுள்ளார். காபியா டீயா என்பதை வைத்து, ஒருவருடைய வர்க்க அடையாளத்தைக் கண்டுபிடித்துவிடலாம் என்பது சுவாரஸ்யமானதுதான்.
என் அம்மாவழித் தாத்தாவான மதுரகவி பாஸ்கரதாஸ் அவர்களின் நாட்குறிப்புகளை என் கடைசித் தம்பி முருகபூபதி பெரிய தொகுப்பாகக் கொண்டுவந்துள்ளார். அதில் தாத்தாவின் அன்றாடச் செலவுகளில் ஒன்றாக காபி, சோடா செலவு ஓரணா என்று குறிப்பிட்டிருப்பார். 40-களில் நாடக ஆசிரியராக செல்வாக்காக வாழ்ந்த அவருடைய அன்றாடத்தில் காபிக்கு ஒரு முக்கிய இடம் இருந்திருப்பதைப் பார்க்க முடிகிறது.


No comments:

Post a Comment