புற்றுநோயாளிகளுக்கு இலவச இயற்கை 'விக்’ தயாரிப்பதற்காக, க்ரீன் டிரெண்ட்ஸ் அழகு நிலையம், ரோட்டராக்ட் கிளப் மற்றும் சென்னை மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி மாணவிகள் கைகோத்து சென்ற ஆண்டு தொடங்கிய முடி தான நிகழ்ச்சியான 'டேங்கல்ட்', (Tangled) இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது!
'டேங்கல்ட்’ பற்றி கொஞ்சம்... புற்றுநோய் சிகிச்சையில் மேற்கொள்ளப்படும் கீமோதெரபி, ரேடியேஷன் போன்ற மருத்துவ முறைகளால், கேன்சர் செல்கள் மட்டுமல்லாமல், நல்ல செல் களும் சேர்த்து அழிக்கப்படுகின்றன. இதனால் ஏற்படக்கூடிய தற்காலிக பாதிப்புதான், முடி உதிர்வது. 'நாமும் இப்படி மொட்டைத் தலையாகிவிடு வோமா!’ என்கிற கலக்கத்திலேயே கேன்சர் நோயாளிகள் சிலர் சிகிச்சைக்கு முன்வருவதில்லை. 'அழகைவிட உயிர்தானே முக்கியம்!’ என்று சொல்வது நமக்கு எளிது. ஆனால், அழகு சார்ந்த மதிப்பீடுகள் உள்ள இந்த சமூகத்தில், மொட்டைத் தலையாக, பிறருக்கு வேடிக்கை பொருளாகிவிடுவோமோ என்கிற அவர்கள் மனதின் ரணத்தை அவர்கள் மட்டுமே அறிவார்கள்.
'விக்’ எனும் செயற்கை முடியை வாங்கி அணிந்து கொள்ளும் வசதி, அனைவருக்கும் வாய்ப்பதில்லை. இதைக் கருத்தில்கொண்டு, சென்ற வருடம் ரெனி என்ற மாணவியால் ஒருங்கிணைக்கப்பட்ட கேன்சர் புரோகிராம்தான், 'டேங்கல்ட்!’ இதிலிருந்து பெறப்படும் முடி, இயற்கை விக் ஆகி, கேன்சர் நோயாளிகளின் கைகளில் பரிசளிக்கப்படுகிறது!
இந்த வருடம் பல இன்ச் அளவுகளில் முடிதானம் செய்துள்ள கல்லூரிப் பெண்களிடம் பேசினோம்.
''எனக்கு என்னோட லாங் ஹேர் ரொம்பப் பிடிக்கும். ஆனா, இப்படி ஒரு தானம் பற்றிக் கேள்விப்பட்டதும், என் 11 இன்ச் முடியை வெட்டி தானம் கொடுத்துட்டு, பாப் கட் பண்ணிக்கிட்டேன். இந்த முடி என் தலையில் இருக்குறதைவிட, ஒரு புற்றுநோயாளியின் தலையில் இருக்குறதுதான் இன்னும் அழகு!'' என்று பாப் கூந்தல் சிலுப்புகிறார், ஜெனிட்டா.
''எத்தனை தடவை வெட்டினாலும் வளரப் போற முடியால, ஒரு நோயாளியோட சந்தோஷத்தை வளர வைக்க முடியும்னா, இதைவிட எளிமையான சேவை எதுவும் இல்ல. போன வருஷமே ஹேர் டொனேட் பண்ண முன் வந்தேன். ஆனா, அப்போ என் முடி நீளம் பத்தாததால, முடியாதுனு சொல்லிட்டாங்க. இதுக்காகவே ஒரு வருஷமா முடி வளர்த்தேன். இப்போ என்னோட 10 இன்ச் முடி, யாரோ ஒருத்தரோட முகத்தில் நிம்மதியைப் படரச் செய்யப் போகுது!'' என்றார், மெரியா நெகிழ்ச்சியுடன்.
''விதவிதமான ஹேர்ஸ்டைல், ஹேர் ஃபால் ட்ரீட்மென்ட்னு இந்த முடியை ரொம்பப் பத்திரமா பார்த்துட்டு வந்தேன். ஆனா, கேன்சர் நோயாளிகள் பற்றியும், அவங்களுக்குத் தேவைப்படுற இயற்கை 'விக்’ பற்றியும் தெரிஞ்சதும், அவங்க கண்ணீரைத் துடைக்கிற ஒரு விஷயம் நம்மகிட்ட இருக்குனு சந்தோஷமா இருந்துச்சு. இப்போ 8 இன்ச் முடிதானம் பண்ணினதோட, வருஷா வருஷம் முடி தானம் பண்ணவும் உறுதிமொழி எடுத்திருக்கேன்!''
கண்கள் மின்னச் சொன்னார், காயத்ரி.
''சமூக சேவையில் எனக்கு எப்பவுமே ஆர்வம். பள்ளி நாட்களிலேயே ஆசிரமக் குழந்தைகள், முதியோர்கள்னு உதவியிருக்கேன். உடலுறுப்பு தானத்துக்கும் பதிவு பண்ணிட்டேன். முடிதானம் பத்தி தெரிய வந்தப்போ, இளம் சமுதாயத்தோட இந்த முயற்சி ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. பொண்ணா பொறந்ததுக்காக சந்தோஷப்பட நிறைய காரணங்கள் இருக்கு. இப்போ, நீளமான முடி கிடைச்சதும் அதில் ஒண்ணா சேர்ந்திருக்கு. தேங்க்ஸ் கடவுளே!'' என்று சிலிர்க்கிறார், காயத்ரி சேஷாத்ரி.
க்ரீன் டிரெண்ட்ஸ் நிறுவனத்தின் மேனேஜர் பிரவீன், ''பிப்ரவரி 4 உலகப் புற்றுநோய் தினத்தை முன்னிட்டு ஜனவரி 29-ல் ஆரம்பித்த இந்த நிகழ்வு, பிப்ரவரி 13 வரை நாடு முழுவதிலும் நடக்கவிருக்கிறது.
குறைந்தது ஒரு இன்ச் அடர்த்தி மற்றும் எட்டு இன்ச் நீளம் முடி இருக்கும் யாரும் முடிதானம் செய்யலாம். இதற்காக பயிற்சி கொடுக்கப்பட்ட நிபுணர்கள் நீங்கள் குறிப்பிடும் அளவு முடியை தானமாக வெட்டுவார்கள். கடந்த வருடம் சென்னையிலிருந்து மட்டும் 2,500 பெண்களிடமிருந்து பெறப்பட்ட முடிதானம் மூலமாக 200 விக்குகள் செய்ய முடிந்தது. இந்த வருடம் இந்தியா முழுக்க இந்தச் சேவையைப் படரவிருக்கிறோம்!'' என்றார் பெருமையுடன்.
அழகு என்பது, பிறர் வாழ்க்கையை அழகாக்கு வதும்தானே!
No comments:
Post a Comment