சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

7 Jul 2015

மஹேந்திரசிங் தோனி எனும் கிரிக்கெட் புத்தன்!

வெற்றி பெற்றால் மகிழ்ச்சி,  தோற்றால் வருத்தம் அடைவது  சாதாரண மனிதனின் இயல்பு. இதனை மாற்றி எந்தநிலையிலும் நிதானமாகச் செயல்படுபவர்களே சிறந்த தலைவர்களாக மாறுவார்கள். அப்படிப்பட்ட ஒருவர்தான் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மஹேந்திரசிங் தோனி.
ஜூலை 7, 1981-ல் ராஞ்சியில் பிறந்த தோனி, சிறுவயதில் மிகவும் ஏழ்மையான குடும்பப் பின்னணியில் வளர்ந்தவர். சிறுவயதில் இருந்தே கால்பந்தாட்டத்தில் கோல் கீப்பராக வேண்டும் என்று அவருக்கு ஆசை. ஒருநாள் அவரது நண்பர்கள் விளையாடும் கிரிக்கெட் அணியில் விக்கெட் கீப்பருக்கு காயம் ஏற்பட, தோனி விக்கெட் கீப்பராக அழைக்கப்பட்டார். அதிலிருந்து கிரிக்கெட் ஆர்வம் அவரைத் தொற்றிக்கொண்டது. பீகார் அணியில் இடம்பிடித்த தோனி, நன்கு ஆடினாலும், அவரது அணி தோல்வியைச் சந்தித்ததால், தோனியின் திறமை வெளிச்சத்துக்கு வராமலேயே இருந்தது.

இந்திய 'ஏ' அணியில் இடம் பிடித்த தோனி, கென்யாவுக்கு எதிராக அடித்த சதம் அப்போதைய கேப்டன் கங்குலியின் கண்ணில் பட்டது. பங்களாதேஷ் தொடரில் இந்திய அணியில் வாய்ப்பு வழங்கினார் கங்குலி. முதல் ஆட்டத்தில் ‘டக் அவுட்’ ஆகி தோனி வெளியேற, இனி அவர் இந்திய அணியில் இடம் பிடிப்பது கனவுதான் என எல்லோரும் நினைத்தார்கள். ஆனால், பாகிஸ்தான் தொடரில் ஆடக் கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக்கொண்ட தோனி, 148 ரன்களையும், இலங்கைக்கு எதிராக 183 ரன்களையும் அடித்து உலக கிரிக்கெட் ரசிகர்களின் பார்வையைத் தன்பக்கம் திருப்பினார்.

பின்னர் டி20 உலகக் கோப்பையிலிருந்து முக்கிய வீரர்கள் விலக, தோனி கேப்டன் ஆனார். 2011-ல் ஒருநாள் போட்டிக்கான  உலகக் கோப்பையை வென்றார். அடுத்து அவர் தலைமையில்தான் இந்திய அணி அதிகளவில் வெற்றி பெற்றது. உலகக்கோப்பையை வென்ற பின் பேசிய தோனி, " 2003ம் ஆண்டு உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தின் போது கரக்பூர் ரயில் நிலையத்தில் ஸ்கோரை எட்டி பார்த்து கொண்டிருந்தேன். அப்போது ஒருவர்,  'ஆமாம்... இவர் ஸ்கோர் பார்த்து இந்தியாவுக்கு உலகக்கோப்பையை ஜெயித்து தரப்போறாரு!' என கிண்டல் செய்தார். ஆனால் இன்று அது நிஜமாகவே நிறைவேறிவிட்டது" என்றார்.

தோனியின் ஏழு முகங்கள்

பேட்ஸ்மேன்:
உலகமே கண்டு நடுங்கிய முதல் வரிசை ஆட்டக்காரர். மூன்றாவது வீரராக களமிறங்கி பத்துகளை மைதானத்துக்கு வெளியே பறக்கவிடும் அதிரடி ஆட்டக்காரர். அணியின் செயல்பாடு. இளம் வீரர்கள் நடுவரிசையில் திணறுவதால் தனது மூன்றாம் இடத்திலிருந்து கோலி, ரெய்னா, ரஹானே, ஜடேஜா என அனைவருக்கும் வாய்ப்பளித்து தன்னை ஆறு அல்லது ஏழாம் இடத்துக்கு மாற்றிக்கொண்ட பேட்ஸ்மேன். எந்த நிலைக்கு சென்றாலும் தனது சராசரியை 50க்கு மேலாக வைத்திருக்கும் உலகின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர்.

விக்கெட் கீப்பர்:
இந்திய அணியில் நல்ல விக்கெட் கீப்பர்கள் வந்து போயினர். ஆனால் அவர்கள் பேட்டிங்கில் சோபிக்கவில்லை. ஆஸ்திரேலியாவின் கில்கிரிஸ்ட், தென் ஆப்பிரிக்காவின் மார்க் பவுச்சர், இலங்கையின் சங்ககாரா போன்ற கீப்பர் பேட்ஸ்மேனை தேடி கொண்டிருந்த இந்திய அணிக்கு தோனி ஒரு வரப்பிரசாதம். கண் இமைக்கும் நேரத்தில் ஸ்டெம்புகளை சிதற விட்டு, பேட்ஸ்மேனை வெளியேற்றுவது தோனியின் ஸ்டைல்.

கேப்டன்:
கங்குலிக்கு பிறகு இந்தியாவுக்கு கிடைத்த சிறந்த கேப்டன். கபில்தேவுக்கு பிறகு இந்திய அணிக்கு உலகக்கோப்பையை வென்று தந்த கேப்டன். ஐசிசி போட்டிகளில் இவர் வெல்லாத கோப்பை என்று ஒன்று கிடையவே கிடையாது. டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய மூன்று வடிவிலான போட்டியிலும் இந்தியாவை ஒரே நேரத்தில் முதலிடத்துக்கு கொண்டு வந்த கேப்டன் தோனி மட்டுமே. களத்தில் அவர் எடுக்கும் முடிவுகளும், கண் காட்டும் திசையில் வீரர்கள் மாறி நிற்பதும் எந்த கேப்டனிடமும் இல்லாத தனி சிறப்பாகும்.

தலைவன்:
தோனியை மேலாண்மை படிப்புகளோடு ஒப்பிடுவது எப்போதும் வழக்கம். அவரது தலைமை பண்பு என்பது களத்தில் அவ்வளவு உதவியாக இருக்கும் என்று சீனியர் வீரர்கள் சச்சின், கங்குலி துவங்கி இளம் வீரர்கள் கோலி,ரெய்னா வரை அனைவருமே கூறியுள்ளனர். ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டும், எப்படி பேச வேண்டும் என்பதை தோனியை பார்த்து கற்றுக் கொள்ளலாம் என்கின்றன மேலாண்மை படிப்புகள். பெரும்பாலான வெற்றிகளில் அணியின் பெயரையும், தோல்விகளில் தன் பெயரையும் முன்னிலை படுத்துவது தோனியின் தலைமை பண்பை காட்டுகிறது.

ஃப்ரான்சைஸி:
கிரிக்கெட் மற்ற விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் தராமல் தடுக்கிறது என அனைவரும் கூறும் போது,  ஐஎஸ்எல் கால்பந்து லீக் போட்டியில், சென்னையின் எஃப்சி அணியை வாங்கி, கால்பந்தையும் இந்தியாவில் வளர்க்க தோனி முன்வந்தது அவரை ஒரு ஃப்ரான்சைஸியாகவும் சென்னை மக்கள் மனதில் விசில் போட வைத்தது.

பணக்கார வீரர்:
தோனி இந்திய,  ஏன் ஆசிய விளையாட்டு வீரர்களிலேயே அதிக சம்பளம் பெறுபவர். சர்வதேச அளவில் முதல் 30 இடங்களுக்குள் இருக்கும் தோனி, விளம்பரம் வருவாய் அடிப்படையில் பணம் கொழிக்கும் பொன்முட்டையிடும் வாத்து.

மிஸ்டர் கூல்:
எல்லாவற்றுக்கும் மேலாக களத்தில் எந்த மாதிரியான சூழல் இருந்தாலும் சரி, வெற்றியோ, தோல்வியோ அனைத்தையும் ஒரே மாதிரி எடுத்துக்கொள்ளும் தன்மை தோனியிடம் மட்டுமே உள்ளது. அதனால்தான் அவர் மிஸ்டர் கூலாகவே இருக்கிறார்.

தோனி பற்றி பிரபலங்கள்

தோனி vs தோனி

எப்போதும் தோனி மற்ற நாடுகளின் கேப்டன்களோடு ஒப்பிடப்பட்டது கிடையாது. தோனிக்கு இருக்கும் பலமும் அதுதான், பலவீனமும் அது தான். காரணம் தோனியை இந்திய மண்ணிலும், அந்நிய மண்ணிலும் ஒப்பிட்டு பார்த்து சர்ச்சைகள் கிளம்புவதுதான் அதிகம்.
இந்திய மண்ணில் மூன்று வடிவிலான போட்டிகளில் கலக்கும் சிங்கம் என்றால், அந்நிய மண்ணில் ஒருதின போட்டியில் கர்ஜிக்கும் தோனி, டெஸ்ட் போட்டிகள் என்றால் உடனடியாக அமைதியாகி விடுகிறார் என்ற குற்றச்சாட்டு உள்ளது. அதற்கு காரணம் தோனி மட்டுமல்ல, டி20 போட்டிகளின் தாக்கம் அதிகரித்து, வீரர்கள் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக ஆடாதது. அனுபவம் இல்லாத வீரர்கள் என பல்வேறு காரணங்களை கூறினாலும், அந்நிய மண்ணில் இந்தியாவின் டெஸ்ட் சரித்திரம் கொஞ்சம் இறங்கிதான் உள்ளது.
ஆனாலும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் தோனி களமிறங்கி பேட்டை சுழற்றும் ஒவ்வொரு பந்தும், ஹெலிகாப்டர் ஷாட்டாக மைதானத்தை விட்டு வெளியே பறந்துவிடுமோ என்ற பயத்தை பந்துவீச்சாளர்கள் கண்ணில் பார்க்கலாம்.
2019ம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை, 2016ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை ஆகிய இரண்டையும் வாங்க, இந்த 7ம் நம்பர் ஜெர்சி காரரின் கைகள் தயாராகி கொண்டிருக்கின்றன. இதனை வாங்கும் போதும் கூட போட்டோவுக்கு ஏதோ ஒரு மூலையில் போய் நின்று கொண்டுதான் இருப்பார் மிஸ்டர் கூல். அவருக்கு இன்று பிறந்தநாள். நம் வாழ்த்துக்களை பகிர்வோம்.



No comments:

Post a Comment