சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

27 Jul 2015

தன்மானம் தொலைக்கும் தமிழினம் ! ஏன் தமிழா ஏன் ?

பெரியார் மீதான அவதூறு, உணவுப் பழக்கம் மீதான ஆதிக்கம், தாலி அணிவது/அகற்றுவது தொடர்பான சர்ச்சைகள், பிற மொழி வெறுப்பாக மாற்றப்படும் ஆபத்தான தமிழின வாதம், இந்த சமூகக் கசப்புகளைச் சரிசெய்யவேண்டிய பெரியாரிய இடதுசாரிய இயக்கங்களின் தோல்வி, திராவிட அரசியல் கட்சிகள் தங்கள் மூலநோக்கத்தையே மறந்துபோய்விட்டது. மண்டியிடுவதையே தலையாயக் கடமையாகக் கொண்டிருக்கும் தமிழக அமைச்சரவையின் அவலம்... - தமிழக அரசியல் சமூகக் களத்தின் அன்றாட நிகழ்வுகளை ஒரு பறவைப் பார்வையில் பார்த்தால்... அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது! 
உண்மையில் இது நமக்கு  கலக்கமான ஒரு காலம். ஒரு பக்கம் பொருளாதார நெருக்கடிகள் வாட்டி வதைக்க... இன்னொரு பக்கம், இத்தனை ஆண்டுகளாக நம் அரசியல் உரிமைகளைக் காப்பாற்றிவரும் தத்துவங்கள் நம் கண் முன்னே காலாவதி ஆகின்றன. திராவிடம், தமிழ்த் தேசியம் எல்லாமே நிறம் இழந்துகொண்டிருக்கின்றன. விளைவு, சாதிவெறியும் மதவெறியும் விறுவிறுவென சிலுப்பிக்கொண்டு தலை தூக்குகின்றன!
சுருக்கப்படும் அந்தரங்க வெளி, எழுச்சிபெறும் சாதிவெறி
முன்னாள் பேராசிரியரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான அ.மார்க்ஸ் சமூக வலைதளங்களில் தீவிரமாக விவாதிப்பவர். அவரிடம் இணையப்பரப்பின் சுதந்திரங்களும் அத்துமீறல்களும் பற்றிக் கேட்டோம்.

''இணையம் மூலமாக விளைந்துள்ள தீங்குகளைக் காட்டிலும் நன்மைகளே அதிகம். பல வாட்ஸ்அப் குழுக்கள், முகநூல் குழுமங்களில் செய்திகள் பரிமாறிக்கொள்ளப்படுவது தவிர, குறிப்பான தலைப்புகளை அறிவித்து, குறித்த நேரத்தில் விவாதங்களும் நடைபெறுகின்றன. இந்த நவீன சாதனங்களின் ஊடாகச் செய்திகளையும் புகார்களையும் பரப்பி, பல மனித உரிமை மீறல்கள் தடுக்கப்பட்டுள்ளன. வெளியீட்டு வாய்ப்பின்மை, தணிக்கைகள் ஆகியவற்றை மீறி இளைஞர்கள் தம் படைப்புத் திறனை வெளிப்படுத்தும் வாய்ப்பாகவும் இவற்றைப் பார்க்க முடியும்.
எதிர்மறை விளைவுகளும் இல்லாமல் இல்லை. பொறுப்பற்ற முறையில் எழுதுவது, அவதூறுகளைப் பரப்புவது, தரம் குறைந்து தாக்குவது ஆகியவற்றில் தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் ஈழப் போராட்டம் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. இணையச் சுதந்திரத்தில் ஏற்படும் அத்துமீறல்கள் தனி நபர்களை, குறிப்பாகப் பெண்களைப் பாதிப்பது மிகவும் கவலைக்குரியதுதான். ஆனால், இத்தகைய போக்கு திடீரென ஏற்படவில்லை. வெறுப்பை, வன்மத்தை வெளிப்படுத்தும் கட்டற்ற சுதந்திரத்தையும் இணையம் வழங்கியுள்ளது'' என்கிறார்.
மார்க்ஸ் குறிப்பிடும் மற்றோர் அம்சமும் நம் கவனத்துக்குரியது.
''இன்று 10 வயது சிறுவன்கூட செல்போனின் சாத்தியங்களைப் பயன்படுத்துகிறான். ஒரு tஷீuநீலீ றீஷீரீவீநீ உடன் இன்றைய குழந்தைகள் வளர்கிறார்கள். இந்த நிலையில், நவீனக் கருவிகளால் ஏற்படும் இளம் வயதுப் பிறழ்வுகள் மற்றும் அதன் பாரதூரமான விளைவுகளை நாம் கவனமாகக் கையாள வேண்டும். இந்தப் பொறுப்பை நாம் காவல் துறையிடமோ, அரசிடமோ தந்துவிட இயலாது. எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், ஆசிரியர்கள், சமூக மூத்தோர்கள் இதில் முன் கை எடுக்க வேண்டும். இதுகுறித்த சட்ட நுணுக்கங்கள், சமூகப் பாதிப்புகள், பிறரது அந்தரங்கத்தில் தலையிடுவதில் உள்ள அநாகரிகங்கள் போன்றவற்றை பள்ளிகளில் பாடப் பொருளாக்க வேண்டும். பொதுத்தளங்களில் ஒருவரது அந்தரங்கத்தில் மற்றவர்கள் அத்துமீறிப் பிரவேசிக்கும்போது மற்றவர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டும் ரசித்துக்கொண்டும் இருக்காமல், கண்டிக்க வேண்டும்' என்கிறார்.
இணையம் அந்தரங்கவெளியைச் சுருக்குவது ஒரு பக்கம் என்றால், சாதியை வளர்ப்பதிலும் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. சமூகம் எத்தனை கீழ்மையுடன் இருந்தாலும் அதன் தாக்கத்தை கல்லூரிக்குள் தூக்கிக்கொண்டு வந்தவர்கள் அல்ல, சென்ற தலைமுறை மாணவர்கள். அவர்கள் தங்களின் சுயசாதிப் பற்றை வெளியில் விட்டுவிட்டு, கல்லூரி வளாகத்துக்குள் வந்தார்கள். அதனால்தான் சாதியைக் கடந்த நட்பு அவர்களுக்குச் சாத்தியமானது. ஆனால் இன்று, பள்ளிச் சிறுவர்களே சாதியைத் தூக்கிப் பிடிக்கின்றனர்; சாதிக் கயிறு அணிந்துகொள்கிறார்கள். அறிவியல், கணக்குடன் சேர்த்து சாதியையும் படிக்கிறார்கள். வளரிளம் வயதில் இத்தகைய சூழலில் புழங்கும் அவர்கள் கல்லூரிக்கு வரும்போது, அவர்களுக்குள் சாதிவெறி வீஸீதீuவீறீt-ஆகப் பதிந்திருக்கிறது. ஃபேஸ்புக்கில், ட்விட்டரில் சாதி சங்கம் ஆரம்பித்து, வாட்ஸ்அப் குரூப்பில் சாதிக்கு ஒரு குழு தொடங்கி, 'எல்லாரும் வாழணும். நாங்க மட்டும் ஆளணும்’ என மீம்ஸ் உருவாக்கி... அரதப்பழசான சாதியை டிஜிட்டல் ரீமேக் செய்கிறார்கள். கல்வி தரும் நாகரிகம் காரணமாக வெட்கப்பட்டு, சாதியைக் கைவிடும் ஊசலாட்டத்தில் தள்ளாடுபவர்களைக்கூட கோட்டுக்கு இந்தப் பக்கம் இழுத்து வருகிறது இந்தப் பழக்கம்!
எழுச்சி பெறுகிறதா இனவாதம்?
2009-ம் ஆண்டு ஈழப் போருக்குப் பின்னர், புதிய தலைமுறை இளைஞர்கள் ஈழ ஆதரவுப் போராட்டத்தின்பால் ஈர்க்கப்பட்டனர். அவர்களை அரசியல்ரீதியாக ஒருங்கிணைத்து தலைமை ஏற்கும் விருப்பத்துடன் ஏராளமான தமிழ் அமைப்புகள் கிளம்பின. அவற்றில் எஞ்சியவை மிகச் சில அமைப்புகள்தான். அதில் சில அமைப்புகள் 'தமிழர்களை தமிழர்களே ஆள வேண்டும்’ என்ற இனவாதத்தை முன் வைக்கின்றனர். மீனவர் கொலை, அணு உலை, மீத்தேன் திட்டம்... என எதை எடுத்தாலும் 'தமிழன் ஆட்சியில் இல்லாததன் விளைவு’ என பிரசாரம் செய்கிறார்கள். தமிழகத்தில் வாழும் பிறமொழி மக்களை 'வந்தேறிகள்’ என அடையாளப்படுத்துகிறார்கள்.
இந்தச் சூழல் குறித்து, 2009-ம் ஆண்டுக்குப் பிறகு உருவான தமிழ்த் தேசிய அமைப்புகளில் ஒன்றான மே-17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் காந்தி என்ன சொல்கிறார்?
''ஒருகாலத்தில் தமிழ், தமிழர் என்றால் தி.மு.க என்ற நம்பிக்கை தமிழகத்தில் இருந்தது. அதன்பால் பல்லாயிரம் இளைஞர்கள் ஈர்க்கப்பட்டனர். அதில் நானும் ஒருவன். ஆனால், அணு உலை எதிர்ப்புப் போராட்டம், ராஜீவ் கொலை வழக்கு, மூவர் தூக்குப் போராட்டம், மீனவர் படுகொலைகள்... என தமிழகத்தின் பிரச்னைகள் எழுச்சி பெற்றபோது, அவற்றில் மக்களின் மனநிலைக்கு எதிர்நிலை எடுத்தது தி.மு.க. அந்தக் கட்சிக்கு எதிராகத் திரும்பவேண்டிய கோபத்தை, சிலர் திராவிட இயக்கத்தின் மீதும் பெரியார் மீதான கோபமாகவும் கட்டமைத்தார்கள். விளைவு, குறுகிய இனவெறியாக தமிழ்த் தேசியத்தை சுருக்கிவிட்டார்கள். இணையத்தில் புழங்கி, இணையத்தில் கருத்து எழுதும் இந்த வகை நபர்களில் கணிசமானவர்கள் தமிழ்த் தேசியத்தின் வரலாற்றைப் புரட்டிக்கூடப் பார்த்திராதவர்கள். அரைகுறைப் புரிதல்களோடு தங்களின் தனிப்பட்ட பிரச்னைகளையும் போட்டுக் குழப்பி, தமிழ்த் தேசியத்தை இனவாதமாகச் சுருக்கிவிட்டார்கள்.
இன்னொரு பக்கம் பெரியாரை ஓர் அடையாளமாக எடுத்துக்கொண்ட சில திராவிட இயக்கங்கள், அரசியல் நீக்கம் செய்யப்பட்ட பெரியாரை வைத்து பிழைப்பு நடத்தினார்களே தவிர, அவருடைய பணிகள் என்ன, அவருக்கும் தமிழ்த் தேசியத்துக்குமான தொடர்பு என்ன என்பது பற்றி பேசியதே இல்லை.
பெரியாரை ஓர் அறங்காவலர்போல மாற்றி ஆங்காங்கே சிலை வைத்ததைத் தவிர வேறு எதுவுமே செய்யாததன் விளைவை, இப்போது தமிழ்ச் சமூகம் அனுபவிக்கிறது. பெரியார், பெருஞ்சித்திரனார், கி.ஆ.பெ.விசுவநாதம், புலவர் கலியபெருமாள்... போன்றவர்கள் பேசிய முற்போக்கு தமிழ்த் தேசியம் மறைக்கப்பட்டு சாதி, மதம் சார்ந்த தமிழ்த் தேசியம் முன் வைக்கப்படும் சூழல் உருவாக, பெரியாருக்குப் பிந்தைய திராவிட இயக்கங்களே காரணம்.
மொழித் தூய்மை பேசுவதே தமிழ்த் தேசியம் என்றாக்கிவிட்டார்கள். இவர்களின் ஒரே வசிப்பிடம், இணையவெளிதான். அதே சமயம், இணையத்தில் இவர்கள் முன்வைக்கும் இனவாதத்தால் கடுமையான பாதிப்பு இருக்கிறது என்பதை மறுக்க முடியாது'' என்கிறார் திருமுருகன்.
கல்லறையில் கருத்துரிமை
ஒரு கருத்தைச் சொல்ல உரிமை இருப்பதைப்போலவே, அதற்கான எதிர்க்கருத்தை வெளியிடவும் உரிமை உண்டு. இதுதான் ஜனநாயகம். இதற்கான வெளி, இந்தியாவில் காலம் காலமாக இருந்து வந்தது. அதுதான் நமது பன்முகப் பண்பாட்டின் வேர். ஆனால் இப்போது, இந்த அரசு எதிர்க்கருத்துகளை அடியோடு அழிக்க நினைக்கிறது; எதிர்க்கருத்து வெளியிடுபவர்களை ஒடுக்குகிறது; எதிர்க்கருத்துகள் கொண்ட போராட்டங்களுக்கு அனுமதி மறுக்கிறது. ஓர் அரங்கக் கூட்டம் நடத்துவதற்குக்கூட அனுமதிப்பது இல்லை தமிழக போலீஸ். விவசாயிகள் போராட்டம், மாணவர் போராட்டம், இயக்கங்களின் கோரிக்கைகள் என எதையுமே தெருவுக்கு வந்து உரத்த குரலில் பேச முடிவது இல்லை.
உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், பேரணிகள் நடத்த அனுமதி கேட்டால், 'மக்களுக்கு தெரியாமல் மக்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் போராட வேண்டும்’ என்கிறார்கள். போராட்டம் என்பதே மக்களுக்காகத்தானே... போராடுவதே மக்கள் நலனுக்குத்தானே... மக்கள் போராட்டங்களை மக்களிடம் இருந்து அப்புறப்படுத்துவது அப்பட்டமான அரச அடக்குமுறை.
''போராட்டம் நடக்கிறது என்பதுகூடத் தெரியாத ஒதுக்குப்புறமான வள்ளுவர் கோட்டத்தின் ஓரத்தில்தான் பல போராட்டங்களுக்கு அனுமதி கொடுக்கிறார்கள். அந்த அனுமதியும் அரசின் அனுசரணை உள்ளவர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. மக்களும்கூட போராட்டம் என்றாலே, ஏதோ ஓர் இடைஞ்சலாகத்தான் பார்க்கிறார்கள். ஏனெனில், அப்படி நம்புவதற்கு பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறோம்.

நமக்கு உவப்பு இல்லாத விஷயங்களை பொய் என நம்புவதும், நம் வாழ்க்கைமுறையில் இல்லாத ஒன்றை நிராகரிப்பதுமான நச்சுக்குணங்கள் அதிவேகமாகப் பரவிவருகின்றன. மிகப் பெரிய ஆபத்தை தமிழ்ச் சமூகம் சந்திக்கவிருப்பதன் ஆரம்ப அறிகுறிகள் இவை. இடதுசாரிகள், முற்போக்காளர்கள், திராவிட இயக்கத்தவர்கள் அனைவரும் தங்களைச் சுயபரிசோதனை செய்துகொள்ளவேண்டிய காலகட்டம் இது'' என்கிறார் எழுத்தாளரும், த.மு.எ.க.ச. அமைப்பின் மாநிலத் தலைவருமான ச.தமிழ்ச்செல்வன்.
அவலமான அரசியல் சூழல்!
தமிழ்நாட்டுக்கு வெளியில் இருக்கும் ஒருவர் இணையம் மூலம் தமிழகத்தின் ஆளும் கட்சி அமைச்சர்கள் என்ன செய்கிறார்கள், எதிர்க்கட்சித் தலைவர் என்ன செய்கிறார் என்பதை அறிந்துகொள்ள விரும்பித் தேடினால், முழுநீள நகைச்சுவைத் திரைப்படத்தைப் பார்த்த திருப்தியுடன் சிரிக்கலாம். அந்த அளவுக்கு தமிழக முதலமைச்சர் தொடங்கி அமைச்சர்கள் வரை எல்லோரும் பொம்மைகளைப்போல நடந்துகொள்கிறார்கள். 'இத்தனை சுயமரியாதை இல்லாமல், தன்மானம் இழந்து மனிதர்கள் இருக்க முடியுமா?’ என எண்ணும் அளவுக்குத் தாழ்ந்து பணிந்து போகிறார்கள். பணிவு என்பது, அவர்களின் விருப்பம், அவர்கள் தனிமனிதர்களாக இருக்கும் வரை. ஆனால், இவர்களோ அமைச்சர்கள். ஏழு கோடி தமிழர்களின் நல்லதுகெட்டதுகளை முடிவெடுக்கும் பொறுப்பு அவர்களிடம் இருக்கிறது. அதை ஒரு கணம்கூட உணர மறுக்கின்றனர்.
சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதாவை விடுதலை செய்வதற்காகவே இவர்களுக்கு மக்கள் வாக்களித்ததுபோல, சதாசர்வ காலமும் அதே வேலையாகக்
கிடக்கிறார்கள்; காவடி எடுக்கிறார்கள். தீச்சட்டி தூக்குகிறார்கள். கோயில் பிராகாரங்களில் உருண்டு புரள்கிறார்கள். எல்லா நடிப்பையும் முடித்துவிட்டு, அதிகாரிகளை மிரட்டி தற்கொலை செய்யவைக்கிறார்கள்!
சரி, ஆளும் கட்சிதான் இப்படி என்றால், எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்தின் நிலை என்ன? அவர், ஒரு வாக்கியத்தைக்கூட அர்த்தச் செறிவுடன் பேசியதே இல்லை என்பதே நிலைமை. பிறர் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்கும் பொறுமையோ, நாட்டில் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளும் ஆர்வமோகூட அவருக்கு இல்லை. ஒருபுறம் முதலமைச்சரும் அமைச்சரும் செய்தியாளர்களையே சந்திப்பது இல்லை. செய்தித் துறை அமைச்சர்கூட இதுவரை செய்தியாளரைச் சந்தித்தது இல்லை. இன்னொரு பக்கம் எதிர்க்கட்சித் தலைவரோ செய்தியாளர்களைச் சந்தித்தாலும், 'தூக்கி அடிச்சுப்புடுவேன் பார்த்துக்க’ என தாறுமாறாக நடந்துகொள்கிறார். இதுதான் தமிழ்நாட்டின் அரசியல் சூழல் என்றால், தமிழ்நாட்டைப் பற்றிய மற்றவர்களின் பார்வை எப்படிப்பட்டதாக இருக்கும்?
பத்திரிகையாளார் ஞாநி இதுபற்றி என்ன சொல்கிறார்? ''ஒரு நல்ல ஜனநாயகச் சூழலில் அரசியல் தலைவர்கள் தங்களின் தரத்தை தாழ்த்திக்கொள்கிறார்களே தவிர, மக்கள் தரம் தாழ்ந்துபோவது இல்லை. ஆனால், கடந்த
10 ஆண்டுகளில் நமது அரசியல் தலைவர்கள், தமிழக மக்களின் தரத்தையும் தாழ்த்திவிட்டார்கள். அதில் முதன்மையானது டாஸ்மாக். அடுத்தது, இலவசங்கள். மூன்றாவது, பணம் கொடுத்து தேர்தலில் வாக்குகளைக் கவர்வது. இந்த மூன்றும் மிகப் பெரிய சீரழிவுக்கு வித்திட்டுள்ளன. நேர்மையான ஒரு தலைவர் என்கிற அளவில் நல்லகண்ணுவால் ஏன் இங்கு அரசியல் தலைமைக்கு வர முடியவில்லை? ஏனென்றால், 'அவரால் பிரயோஜனம் இல்லை’ என நினைக்கிறான் சராசரி தமிழன். 'நாடு எப்படியோ போகட்டும். இன்றைக்கு என் பாக்கெட்டில் சில ஆயிரம் ரூபாய்களை திணிப்பவனே நல்ல தலைவன்’ என மக்கள் நினைக்கிறார்கள். மக்களையே ஊழல் மயமாக்கியிருக்கும் இந்த ஆபத்தான சூழல் மாற வேண்டும். அதற்கு, மாற்றம் மக்களிடம் இருந்தே தொடங்க வேண்டும்!' என்கிறார்.
மாற்றம்தான் தேவை. அனைத்துக் களங்களிலும் அனைத்துத் தளங்களிலும்!



No comments:

Post a Comment