சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

23 Jul 2015

தங்கத்தின் விலை வீழ்ச்சி தொடருமா?

ங்கத்தின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்து வருகிறது. அதாவது, கடந்த பத்து நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.640 குறைந்துள்ளது. ஒரு கிராமின் விலை ரூ.2,400-க்குக் கீழ் குறைந்துவிட்டது. தங்கம் கடுமையாகச் சரிவடைவதற்கு என்ன காரணம் என்பது குறித்துப் பார்ப்போம்.

அமெரிக்க ஃபெடரல் வங்கி விரைவில் வட்டி விகிதத்தை உயர்த்தும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும், உலக நாடுகளில் ஒருவிதமான மந்தநிலை நிலவுகிறது. கிரீஸ், ஈரான் அணுகுண்டு ஒப்பந்தம் போன்றவற்றின் காரணமாக அமெரிக்க டாலரின் மதிப்பு வலிமையடைந்து வருகிறது. டாலர் வலிமையடையும்போது தங்கத்தின் விலை சரிவடையவே செய்யும்.


உலகிலே தங்கத்தை அதிகமாக வாங்குவது சீனா மற்றும் இந்தியாதான். இதில், சீனாவில்  நிலவும் பொருளாதாரப் பிரச்னைகளினால் அங்கு பங்குச் சந்தை வீழ்ச்சி அடைந்துள்ளது. அந்த வீழ்ச்சியினால் ஏற்பட்ட நஷ்டத்தை ஹெட்ஜிங் செய்வதற்கு தங்கத்தை விற்பனை செய்கிறார்கள். மேலும், சீனாவின் தங்க கையிருப்பு எதிர்பார்த்த அளவில் இல்லை. இதன் விளைவாக தங்கத்தின் விலை ஒரேநாளில் 4 சதவிகிதம் அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது. அதாவது, சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,100 டாலருக்கு கீழே வர்த்தகமாகி வருகிறது.

இதுபோன்று, 2013-ம் ஆண்டு இரண்டுநாள் வர்த்தகத்தில் தங்கத்தின் விலை 13 சதவிகிதம் வரை வீழ்ச்சியடைந்தது. அந்தச் சமயத்தில் மக்கள் தங்கம் வாங்க அதிக ஆர்வம் செலுத்தினர். ஆனால், இப்போது அப்படி ஆர்வம் செலுத்தவில்லை. இது, திருமண சீஸன் கிடையாது என்பதால் மக்கள் தங்கம் வாங்குவதில் பெரிய ஆர்வம் செலுத்தவில்லை. மேலும், இன்னும் விலை குறையும் என்றும் பொதுமக்கள் காத்திருக்கிறார்கள்.

பருவமழை சரியாக இல்லாத காரணத்தினால் கிராமப்புற மக்கள் தங்கம் வாங்குவது குறித்து யோசிக்கவே இல்லை. ஏனெனில், மொத்தமாக பணம் கொடுத்து தங்கம் வாங்க முடியாத நிலையில் இருக்கிறார்கள்.

தங்கத்தின் விலை இன்னும் எவ்வளவு வீழ்ச்சியடையும் என்பது குறித்து மும்பை காம்டிரென்ட்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் ஞானசேகர் தியாகராஜன் கூறுகிறார்.
“சர்வதேச சந்தையில் நிலவும் காரணங்களினால் தங்கத்தின் விலை வீழ்ச்சியடையவே செய்யும். அதாவது, 24 காரட் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.24,000 வரை குறைய வாய்ப்புள்ளது. தற்போது 24 காரட் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.25,000க்கு மேல் உள்ளது. ஒரு கிராம் ரூ.2,200 வரை குறைய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் திருமண சீஸன் இல்லை என்பதால் தங்கத்தின் விலை பெரிய அளவில் குறையாது” என்றார்.

22 காரட் ஒரு சவரன் தங்கத்தின் விலை இன்று (22.07.2015)  ரூ.176 குறைந்து ஒரு சவரன் ரூ.18,904-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.2,363-க்கு விற்பனையாகிறது. இதேபோல, ஒரு கிலோ வெள்ளியின் விலையும் கிலோவுக்கு ரூ.240 குறைந்து ரூ.33,790-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.36.20 ஆக உள்ளது. 

சர்வதேச பொருளாதாரத்தின் அடிப்படையில் தங்கத்தின் விலை உயரும் அல்லது குறையும். எனவே, எப்போது குறையும் என்பது யாருக்கும் தெரியாது. தேவை இருப்பவர்கள் இப்போது வாங்கிக்கொள்ளலாம். முதலீட்டு நோக்கில் தங்கம் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில், இந்தியா மற்றும் உலகச் சந்தை முன்னேற்றம் அடையும் நிலையிலே உள்ளது. அதனால், தங்கத்தின் விலை பெரிய அளவில் ஏற்றம் அடைய வாய்ப்பு இல்லை.No comments:

Post a Comment