சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

23 Jul 2015

பட்டம் மட்டும் வாங்கினால் பயன் இல்லை ! இழுத்து மூடப்படும் இன்ஜினீயரிங் கல்லூரிகள்...

‘சென்னையில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு பரோட்டா மாஸ்டர் தேவை. சம்பளம் 20 ஆயிரம். தங்குமிடம் இலவசம்!’
‘பிரபல ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிய கம்ப்யூட்டர் இன்ஜினீயரிங் படித்தவர்கள் தேவை. சம்பளம் 8 ஆயிரம்!’ - கடந்த சில தினங்களுக்கு முன்பு நாளிதழ் ஒன்றில் ஒரே பக்கத்தில் வெளியான விளம்பரங்கள் இவை.

இன்ஜினீயரிங் படித்தவர்களின் நிலையை அப்பட்டமாகச் சொன்னது அந்த விளம்பரம்.
இந்த நிலைதான் பொறியியல் படிப்பு மீதான ஆர்வத்தைக் குறைத்திருக்கிறது. அதுதான்  இன்று தமிழ்நாட்டில் ஏராளமான பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர்கூட அட்மிஷனுக்கு வராமல் காத்தாட வைத்திருக்கிறது. ‘பொறியியல் கல்லூரிகள் விற்பனைக்கு’ என்ற விளம்பர வாசகங்கள் அடிக்கடி நாளிதழ்களில் தென்​படுகின்றன. ஆனால், வாங்கத்தான் ஆள் இல்லை.

தமிழகத்தில் மொத்தம் உள்ள 568 பொறியியல் கல்லூரிகளில், 2 லட்சத்து 658 இடங்கள் உள்ளன. ஆனால், கலந்தாய்வுக்காக விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கையோ, ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 238 மட்டுமே. அந்த மாணவர்களிலும் பலர் கலந்தாய்வுக்கு வரவில்லை. கடந்த 16-ம் தேதி வரை வெறும் 50 ஆயிரம் இடங்கள்தான் நிரம்பி இருந்தன. 25 தனியார் பொறியியல் கல்லூரி​களில் இதுவரை ஒரு இடம்கூட நிரம்பவில்லை. பல கல்லூரிகளில் 10-க்கும் குறைவான இடங்களிலேயே மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இதனால் பொறியியல் படிப்புகள் குறித்து அண்ணா பல்கலைக்கழகம் மறு சீராய்வு மேற்கொள்ள வேண்டும் என்ற கருத்து வலுப்பெற்றுள்ளது.
மூன்று ஆண்டுகளுக்கு முன் சாஃப்ட்வேர், மெக்கானிக்கல் உள்ளிட்ட பொறியியல் பிரிவுகள் படித்த மாணவர்களுக்கு உடனுக்குடன் வேலை கிடைக்கும் நிலை இருந்தது. உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட பின்னடைவு போன்ற காரணங்களால், பணியாளர்களின் எண்ணிக்கையை பல நிறுவனங்கள் குறைத்து வருகின்றன. சில ஆண்டுகளுக்கு முன் கல்லூரி வளாகங்களில் பிரபலமாக இருந்த ‘கேம்பஸ் இன்டர்வியூ’ இப்போதெல்லாம் நடப்பதே இல்லை.
எனவே, பொறியியல் படிப்புகளில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டவில்லை. கலைக் கல்லூரிகளில் பி.காம் போன்ற பட்டப்படிப்புகளில் சேரவே விரும்புகிறார்கள். லட்சங்கள் செலவழித்து பொறியியல் பட்டம் பெறுவதைவிட, சில ஆயிரங்களில் பட்டப்படிப்பை முடிக்கலாம் என்ற சிந்தனையும் மாணவர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. 2014-ம் ஆண்டு, 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொறியியல் படிப்புக்கான இடங்கள் காலியாக இருந்தன. வரும் 30-ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெற உள்ள நிலையில், இந்த ஆண்டு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்கள் காலியாகும் என்று தெரிகிறது.
பொறியியல் கல்லூரிகளில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டுவதில்லையா என்று கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தியிடம் கேட்டோம். ‘‘பொறியியல் படிப்பு மீது மாணவர்களுக்கு மோகம் குறைந்துவிட்டது என்பதைவிட, பொறியியல் கல்வியை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை என்பதுதான் உண்மை. 50 ஆயிரம் ரூபாய் கல்விக் கட்டணம் செலுத்தி இதைப் படிக்கும் மாணவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்ற வருத்தம் இருக்கலாம். ஆனால், பொறியியல் பாடத்திட்டத்தைத் தாண்டி இன்றைக்குத் தொழில் துறையின் தேவை எப்படி இருக்கிறது என்​பதைக் கல்லூரிகள் மாணவர்களுக்குக் கற்றுத்தர வேண்டும். பாடத்திட்டத்தைத் தவிர தொழில்நுட்பங்களைக் கற்றுத் தருவதற்காகப் பல கல்லூரிகள், மையங்​களை அமைத்துள்ளன.
இங்கு படித்த மாணவர்களுக்கு வேலையும் கிடைக்கிறது. அனைத்துக் கல்லூரிகளும் இதுபோல கற்றுத்தர வேண்டும். வெறும் பொறியியல் பட்டம் மட்டும் பெற்றால் பயன் கிடைக்காது.
‘பொறியியல் பாடத்திட்டத்தில் 30 சதவிகித மாற்றம் செய்ய வேண்டும்’ என்று முன்னாள் ஜனாதிபதி அப்துல் காலம் கூறியதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். எனவே, பொறியியல் பாடத்திட்டத்தை மாற்ற அரசு முயற்சி எடுக்க வேண்டும். 4 வருடங்கள் பொறியியல் கல்வியும் 6 மாதங்கள் தொழில் பயிற்சியும் அளிக்கும் வகையில் பொறியியல் படிப்பு காலத்தை நீடிக்க வேண்டும். ஆசிரியர் உள்ளிட்ட பணிகளுக்குத் தகுதித் தேர்வு நிர்ணயிக்கப்பட்டிருப்பது போல பொறியியல் பணிகளுக்கும் தகுதித்தேர்வு நிர்ணயிக்க வேண்டும். பொறியியல் பாடத்திட்டத்தைத் தாண்டி இன்றைய தொழில் துறையின் தேவை என்ன என்பதை அறிந்துகொள்வதற்கு மாணவர்களுக்கும் அக்கறை தேவை’’ என்று சொன்னார்.
கடந்த ஆண்டு 7 கல்லூரிகளும் இந்த ஆண்டு 5 கல்லூரிகளும் மூடுவதற்கு அனுமதி கேட்டு ஏ.ஐ.சி.டி.இ-க்கு விண்ணப்பித்துள்ளன. இது குறித்து கல்வியாளர் மாறனிடம் பேசினோம். ‘‘தகுதியானவர்களை பொறியியல் கல்லூரிகள் உருவாக்கப்படவில்லை என்பது ஒரு காரணம். கட்டமைப்பு வசதிகள் இல்லாததாலும், தகுதியான பேராசிரியர்கள் இல்லாததாலும் பல கல்லூரிகளில் மாணவர்கள் சேரவில்லை. இடங்கள் காலியாக இருப்பதால் 100 கல்லூரிகள் மூடப்படும் நிலையில் உள்ளன. பலர் வங்கிகளில் கடன் வாங்கி பொறியியல் கல்லூரிகளைக் கட்டி உள்ளனர். மாணவர்கள் சேராத நிலையில் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல், கல்லூரியையும் நடத்த முடியாமல் திண்டாடி வருகின்றனர்’’ என்றார்.
‘‘தேவைக்கு அதிகமான கல்லூரிகள், அடிப்படை வசதிகள் இல்லாத கட்டமைப்புகள், மாணவர்களுக்கு பொறியியலில் நாட்டம் இல்லாமை, முன்னாள் மாணவர்கள் பலரும் வேலையின்றி இருப்பது, மாணவர்கள் தேர்ந்தெடுக்கும் பொறியியல் பிரிவுகள் மற்றும் தேர்வுகளின் கடினத் தன்மை... இவையெல்லாம் மாணவர்களின் ஆர்வத்தைக் குறைத்துள்ளன’’ என்கிறார், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் சந்திரசேகரன்.
பொறியியல் படிக்க வேண்டும் என்றால், கல்லூரி நிர்வாகம் கேட்கும் நன்கொடையைக் கொடுத்தாக வேண்டும் என்ற நிலை இருந்தது. ஆனால் இன்றைக்கோ, ‘அரசு நிர்ணயித்த கட்டணத்தைச் செலுத்தினால் போதும். எங்கள் கல்லூரியில் வந்து சேருங்கள்’ என்று வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கிறார்கள்.
‘பொறி’யில் சிக்கியதுபோல தவிப்பது அந்தக் கல்லூரிகள் மட்டும் அல்ல, மாணவர்களும்தான்.
கைமாறும் கல்லூரிகள்!
மூடப்படும் நிலையில் உள்ள கல்லூரி​களை, சில புகழ்பெற்ற கல்லூரிகள் விலைக்கு வாங்குகின்றன. அதனை தங்களது வளாகக் கல்லூரிகளாக மாற்றிவிடு​கின்றனர். விலைக்கு வாங்கப்பட்ட வளாகங்களில் மாணவர்களைச் சேர்க்க, செல்வாக்கைப் பயன்படுத்தி, அண்ணா பல்கலைக்கழகத்திடம் கூடுதல் இடங்களுக்கு அனுமதி பெற்றுவிடுகின்றனர். 
 No comments:

Post a Comment