சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

31 Jul 2015

'நாம் இருவர்... நமக்கு ஒருவர்!' - இவர்களுக்கு சொல்வது எவர்?

சித்து அழும் குழந்தையை வாரி அணைத்து பால் கொடுக்க முடியாத சூழல் எந்த தாய்க்குமே வரவே கூடாது. பேருந்தில் இருந்து இறங்கும் வரை அதுதான் உச்சக்கட்ட கொடுமை என்று நினைத்திருந்தேன். இறங்கிய பிறகு, இன்னொரு செய்தியை கேட்டதும் கோபமாகவே திட்டிவிட்டேன்.

அன்று ஒரு நீண்ட பயணமாய் பேருந்தில் வந்து கொண்டிருந்தேன். ஆசையாய் தொட்டு முத்தம் கொடுக்க வேண்டும் போல் இருந்தது ஒரு குழந்தையின் குறும்பு. என் தலைமுடியை இழுப்பதும், வளையல்களையும், செல்போனையும் இழுத்து விளையாடுவதுமாய் தொடர்ந்த, அவன் சேட்டைக்கு நடுவில் நானும் குழந்தையாகவே மாறியிருந்தேன்.

'பாப்பாவுக்கு என்ன வயசிருக்கும்?’ என்று அவன் அம்மாவிடம் கேட்க, சம்மந்தமே இல்லாமல், 1 வயது 1 மாதம் என்று சொல்ல, நம்ப முடியாமல் இருந்தது. 3 மாத குழந்தைக்கான உடல் வளர்ச்சியிலும், 1 வயதுக்கான மூளை வளர்ச்சியிலும் இருந்த அந்த குழந்தையின் அம்மாவைப் பார்த்தால் பள்ளி மாணவி போல இருக்கிறார். மூன்று புறமும் கடல் சூழ்ந்தது போல் நாங்கள் அமர்ந்திருந்த இருக்கைக்கு அருகில் ஆண்கள் சூழ்ந்திருக்கிறார்கள். எப்போதோ 4 மணி நேரத்துக்கு முன்பாக கொண்டு வந்திருந்த புட்டிப்பாலை குடிக்க மறுக்கிறது அந்த குழந்தை. இப்போது விடாமல் அழுது கொண்டிருந்த குழந்தைக்கு ஒரு நிறுத்தத்தில் புதியதாய் பால் வாங்கிக் கொடுக்க, அதோடு அழுகை நின்றது. ஆனால் இதோடு செய்தி முடிந்துவிடவில்லை.


ஆந்திராவில் இருந்து கைக்குழந்தையுடன் கணவனோ, இல்லை உறவினரோ யாருமே துணைக்கு இல்லாமல் தனியாக வந்து கொண்டிருக்கும் அவளிடம் கைப்பேசியும் இல்லை. போக வேண்டிய இடமும் தெரியாது. 'கோயம்பேடு வந்ததும் இறக்கிவிடுறீங்களா?’ என அப்பாவியாய் கேட்டதோடு என் செல்போனில் இருந்து அவள் கணவனின் எண்ணை சொல்லி, போன் போட்டு தரச்சொல்லி மணிக்கு ஒருதரம் பேசிக் கொண்டிருந்தாள். 'மாமா வந்துடுவேன்னு சொல்லிச்சி... அவர் வர வரைக்கும் என்கூட இருந்து விட்டுட்டுப் போறீங்களா?’ என்றாள்.

'முன் பின் தெரியாத ஊரில், கணவன் வேலைப் பார்க்கிறார் போல..’ என்று நினைத்து அந்த பெண்ணுக்கு துணையாக பயணித்துக் கொண்டிருந்தேன். கோயம்பேடு இறங்கினோம். 10 நிமிடத்தில் வருகிறேன் என்று சொன்ன அவள் கணவன் வரவே இல்லை. அரை மணிநேரம் ஒரு மணிநேரம் போய் 2 மணி நேரம் வரை ஒரே இடத்தில் உட்கார்ந்திருந்தோம். நான் போய்ச் சேர வேண்டிய இடம் தொலைதூரம் என்பதால் அந்த இடத்தில் இருந்து உடனே கிளம்ப வேண்டிய கட்டாயம் எனக்கு. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பாதுகாப்பு காவல்துறையினரிடம் அந்த பெண்ணை ஒப்படைத்துவிட்டு செல்வதென முடுவு செய்து, அவளை அருகில் இருந்த போலீஸ் பூத்தில் விவரம் சொல்லி விட்டுவிட்டு திரும்பினேன். அப்போதுதான் அவள் அதுவரை சொல்லாமல் இருந்து சொன்ன செய்தி பகீர் என தூக்கிப் போட்டது.

‘ரொம்ப மயக்கமா இருக்குக்கா... 5 மாசம் முழுகாம இருக்கேன்.. இன்னொரு தரம் மாமாவுக்கு போன் பண்றீங்களா?’

'ஒரு குழந்தையே இப்படி சத்தில்லாம இருக்கு... இதுல இன்னொன்னா?’

திட்டிவிட்டு போன் போட்டு கொடுத்துவிட்டு கிளம்பிவிட்டேன். நான் வீடு வந்ததும் அவள் புருஷனின் எண்ணுக்கு மறுபடியும் போன் போட்டுப் பார்த்தேன். இரவு பத்து மணி இருக்கும். நாட் ரீச்சபிள் என்று வந்தது. அவள் பத்திரமாக சேர்ந்திருப்பாளோ என்ற நினைப்பு என்னை தூங்க விடவில்லை. தொடர்ந்து நாட் ரீச்சபிள். 12.15 இருக்கும். அவள் புருசன் பேசினான். 'ரொம்ப தாங்க்ஸ்ங்க’ என்றான். சரமாரியாக திட்டியப் பிறகுதான் மெதுவாய் தூங்க ஆரம்பித்தேன்.

’முதல் குழந்தைக்கும் இரண்டாம் குழந்தைக்கும் இடையில் 2 வருடம் இடைவெளி தேவை...’, ‘நாம் இருவர் நமக்கு ஒருவர்’ இப்படியான வாசகங்களையெல்லாம் நான் குழந்தையாய் இருக்கும் போதிலிருந்தே கேட்டுக் கொண்டிருக்கிறேன். இப்போதும் கேட்டுக் கொண்டே தான் இருக்கிறேன்!




No comments:

Post a Comment