சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

28 Jul 2015

நாங்கள் வாழ உயர்ந்த இந்தியாவை படைத்த நாயகனுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!

''என் கதை என்னோடு முடிந்துவிடும். உலக வழக்கப்படி எனக்கு எந்தப் பரம்பரை சொத்தும் இல்லை. நான் எதையும் சம்பாதிக்கவில்லை. எதையும் கட்டிவைக்கவில்லை, என்னை மற்றவர்கள் உதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என நான் விரும்பவில்லை. என் கதையால் சில ஆத்மாக்களாவது உத்வேகம் பெறக்கூடும் என நம்புகிறேன்” - அக்னிச் சிறகுகள் நூலின் முடிவு.
கோயிலடியில் குடியிருந்த ஞான ஆசிரியரிடம் பாடம், பல மைல் நடையில் அரபுப்பள்ளி, செய்தித்தாள் விநியோகம், அப்பாவின் வியாபாரத்துக்கு மாலை உதவி என்று ஓயாத ஒவ்வொரு நாளும் ஓடிய அந்தச் சிறுவனின் பாதங்கள் தனக்கான இலக்கில் தேசத்துக்கான எழுச்சியைத் தந்தது. அசைவ உணவு, அழகான தலைமுடி வெட்டல் துறந்து உதவித்தொகையும், அக்காவின் நகைகளின் அடமானமும் தந்த பணத்தில் மேற்படிப்புப் படித்த கல்விக்காலம் வறுமையில் வானத்தைத் தொட எத்தனிக்கும் அத்தனை பேருக்கும் ஆன்ம பலம்.


வினாத்தாள் வெளியாகி ஒரு வருடக்கல்லூரி வாழ்க்கையை இழந்தார். ஒன்பதாவது இடம் பெற்று தவறவிட்ட விமானியாகும் கனவுக்காகக் கங்கையில் மூழ்கி கண்ணீர் விட்டார். எழுந்து நின்று இந்தியாவின் ஏவுகணைப் புரட்சிக்கு வழிகோலினார். எப்பொழுதும் அயல்நாட்டுப் பல்கலைகளில் படிக்காத அப்துல் கலாம் திருச்சி புனித வளனார் கல்லூரி, குரோம்பேட்டை எம்.ஐ.டி. ஆகியவற்றின் வார்ப்பு. 'நான் முழுக்க இந்தியாவில் தயாரான அற்புதம்!' என்று பெருமிதம் பொங்கச் சொன்ன பாரத ரத்தினம் அவர். அயல்நாட்டுப் பல்கலைகளில் பாடம் நடத்த அழைப்புகள் வந்தாலும் சொந்த நாடே சொர்க்கம் என்று சிலிர்க்க வைத்தவர்.
"குடியரசுத் தலைவராக நல்ல நேரத்தில் பொறுப்பேற்கிறீர்களா?" என்று வந்த கேள்விக்கு, "எனக்குச் சூரிய மண்டலம் இயங்கும் எல்லா நேரமும் நல்ல நேரம்தான்" என்ற வள்ளுவரின் மகன் அவர். குறளோடு உறவாடி உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என உரமேற்றியும், எண்ணிய எண்ணியாங்கு எய்துப என்று திண்ணிய தீரர்களைத் திக்கெட்டும் புடம் போட்டார்.

எண்பத்தி நான்கு ஆண்டுகளில் எழுச்சி தீபங்களை ஏற்றியபடியே இருந்த எளிமைச் சூரியன். புயலால், பெருமழையால் ராமேஸ்வரம் சிதறுண்டதை அப்பாவின் கண்களின் வழியாகக் கண்டவர் சிறுவன் கலாம். எஸ்.எல்.வி.ராக்கெட்டை விண்வெளியில் செலுத்திய முதல் முறை கடலில் விழுந்தது. அடுத்தடுத்த முயற்சிகளை மழையும், புயலும் தடை செய்து கொண்டே இருந்தன. கேலி, கிண்டல், அவநம்பிக்கையால் விமர்சகர்கள் நிறைத்தார்கள். "இயற்கையின் ஆற்றல் எல்லையில்லாதது. கடலை நம்பி வாழ்ந்ததால் அதன் வலிமை எனக்குத் தெரியும். அதன் ஆற்றல், வலிமை நம்முடைய இலக்குகள், திட்டங்களை ஆகியவற்றைக் கண் சிமிட்டும் நேரத்துக்குள் அழித்துவிடும். இவற்றை எதிர்கொண்டு நம்முடைய வாழ்க்கையை மீண்டும் கட்டமைக்க வேண்டும்." என்று சொன்னவர் அந்த ராக்கெட்டையும், எண்ணற்ற ஏவுகணைகளையும் அயராத உழைப்பால் செலுத்தி பாடங்கள் நடத்தினார்.
அக்னி ஏவுகணையின் பொறுப்பில் இருந்த பொழுது எண்ணற்ற தோல்விகள் துரத்தின. பாக்கெட்டில் பதவி விலகல் கடிதத்தை வைத்துக்கொண்டே இன்னல்களை இமாலய வெற்றிகள் ஆக்கியவர் அவர். 

ஒரிசாவில் இயற்கை பேரிடரால் வீடிழந்து, முகவரி தொலைத்துக் கண்ணீர் துளிர்க்க நின்று கொண்டிருந்த மக்கள் கூட்டத்தை ஆறுதலால் அவர் நிறைத்துக் கொண்டிருந்தார். ஒரு அழகிய சிறுவன் கலாமின் கண்களில் பட்டான். அவனுக்கு ஆறுதல் சொல்ல அப்துல் கலாம் அருகே அழைத்தார். "அடுத்த முறை எங்களின் புதிய வீட்டுக்கு நீங்கள் அவசியம் வரவேண்டும்!" என்ற அந்தச் சிறுவனின் நம்பிக்கை சுடர் , "உங்களைப் போலவே நானும் ஜனாதிபதி ஆவேன்." என்ற அக ஒளியர் ஸ்ரீகாந்தின் பெருங்கனவு என்று அத்தனை இளைஞர்களின் உயர்ந்த எண்ணங்களையும் இந்தியா முழுக்கக் கொண்டு சேர்த்த கரைகளற்ற நம்பிக்கை பேரண்டம் அவர்.
ஆயுதங்கள் செய்த அவர், நிம்ஸ் மருத்துவமனையில் உறுப்புகளை இழந்த பிள்ளைகளுக்காக அரைக் கிலோவுக்கும் குறைவான எடையில் செயற்கை கால்கள் செய்து அணிய வைத்து அவர்கள் பட்டாம்பூச்சி போலச் சிறகடித்து நடக்க வைத்து அழகு பார்த்த தருணத்தில், 'இதுவே நிறைவான தருணம்!' என்றவர் சொன்னது எத்தனை நெகிழ்ச்சியான கணம்? இதய நோயாளிகளுக்கு உதவக் கலாம்-ராஜூ ஸ்டென்ட்டை லாபம் எதிர்பார்க்காமல் வடிவமைத்த மனித நேயர்.

பறவைகளைக் கண்கள் விரிய பார்க்க வைத்து விமானங்களின் செயல்பாட்டைப் புரிய வைத்த ஆசிரியர் சுப்பிரமணியம், விமான வடிவமைப்பை மூன்று நாட்களுக்குள் முடிக்காவிட்டால் உதவித்தொகை ரத்து என அச்சுறுத்தி சாதிக்க வைத்த பேராசிரியர்.சீனிவாசன், உட்கரு இயற்பியல் எடுத்த பாதிரியார். சின்னத்துரை வரை அத்தனை ஆசான்களின் நினைவுகளையும் நித்தமும் சொல்லிக்கொண்டே இருந்த மாணவன் அவர்.

அடிப்படை வசதிகளைக் கிராமங்கள் பெற 'PURA' திட்டம், வளமான இந்தியாவுக்கான இலக்குகளை எண்ணற்ற புத்தகங்கள் மூலம் வடித்த தொலைநோக்கு தோழர்.

விகடனில் ஒரு சுட்டி 'விஞ்ஞானி, ஆசிரியர், குடியரசுத் தலைவர் - உங்கள் மனதுக்கு நெருக்கமாக இருந்த பொறுப்பு எது?'' என்று கேள்வி எழுப்பிய பொழுது ''ஆசிரியர்!" என்று அத்தனை விருப்பத்தோடு பதில் சொன்ன அந்த ஆசான் அண்ணா பல்கலையில் ஆசிரியராக அயராது பணியாற்றினார். ஷில்லாங்கில் மாலை 6:15க்கு 'அனைவரும் வாழ உகந்த உலகம்' என்கிற தலைப்பில் பாடம் நடத்திக் கொண்டிருக்கையில் இதயம் சற்றே சலிக்கச் சரிந்தார். நாங்கள் வாழ உயர்ந்த இந்தியாவைப் படைத்த நாயகனுக்குச் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

ராமேஸ்வரத்து படகோட்டியின் மகன் ராஷ்ட்ரபதி பவனைத் தொட்ட வரலாறு இது. எளிமையைத் தாங்கியபடி ஏவுகணைகளால் எழுச்சி தந்த பெருங்கதை இது. ஆடம்பரத்தின் சாயல் படாத அற்புதம் அது. அவருக்குப் பிடித்த பகவத் கீதை வாசகமே அவருக்கு உரிய சமர்ப்பணமாக இருக்கக்கூடும்:

'அந்த மலரைப் பாருங்கள். அது நறுமணமும், தேனும் தாரளமாகத் தருகிறது. அதன் பணி முடிந்ததும் சலனமில்லாமல் அது சரிகிறது. அதைப்போல அகந்தை இல்லாமல் அத்தனை நற்குணங்களோடு இருங்கள்!'.


No comments:

Post a Comment