சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

23 Jul 2015

அந்த நாள் ...

ஜீவநதியாகப் பாயும் ஒரு நதியையும்  கொலைக்களமாக மாற்ற முடியும் என்பதற்கான கொடூரமான உதாரணம் அது. தாமிரபரணி ஆற்று நீரில் கண்ணீரும் ரத்தமும் கலந்த கலவர நாள். 
மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் ஒரு நாள் கூலியை, 150 ரூபாய்க்கு உயர்த்த வேண்டும் எனக் கேட்டு ஊர்வலம் சென்ற மக்களை, அடித்து உதைத்துத் துரத்தி தண்ணீரில் தள்ளிக் கொன்று கோரத் தாண்டவமாடியது தமிழக போலீஸ். அந்தக் கறுப்பு நாளில் என்ன நடந்தது? பல்லாயிரம் மக்கள் கலந்துகொண்ட அந்தப் பேரணியில் ஒரு சிறுவனாகப் பங்கெடுத்த எழுத்தாளர்
மாரி செல்வராஜ் நடந்ததைச் சொல்கிறார்...
''ஆண்டு முழுக்க வற்றாமல் ஓடும் தாமிரபரணி நதியோர வாழ்க்கை எங்களுடையது. திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் வழியில் இருக்கும் எங்கள் புளியங்குளம் கிராமத்தையும் தொட்டு அலசித்தான் ஓடுகிறது நதி. நான் தூத்துக்குடியில் 10-ம் வகுப்பு மாணவன். சமூகத்தின் உணர்வெழுச்சி என்னையும் ஆக்கிரமித்திருந்த தருணம். தென் தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் ஒருங்கிணைந்து, தங்களின் வாழ்வுரிமையை எவருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டோம் எனக் கிளர்ந்து எழுந்து,  அரசியல்ரீதியாக அணி திரளத் தொடங்கிய காலமும் அதுதான். சமூகத்தின் பல தளங்களிலும் அது பிரதிபலித்தது. அரசு நிர்வாகம்
அதை 'சாதிக் கலவரம்’ என அடையாளப்படுத்தியது.
குக்கிராமங்கள் தொடங்கி தூத்துக்குடி, திருநெல்வேலி வரை நடந்த கொடூரங்கள் மக்களிடையே அரசியல் எழுச்சியை உருவாக்கியது. அது, பள்ளி மாணவர்களைக்கூட விட்டுவைக்கவில்லை. திருநெல்வேலியில் ஏதோ ஒரு கோரிக்கைக்காக, ஒடுக்கப்பட்ட மக்கள் ஊர்வலம் போகிறார்கள் என்ற செய்தி தீயாகப் பரவியிருந்தது. ஒடுக்கப்பட்ட, இஸ்லாமிய மக்கள் ஏராளமானோர் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து லாரிகளிலும் வேன்களிலும் கிளம்புகிறார்கள் எனக் கேள்விப்பட்டதும், அதை உடனிருந்து பார்க்க வேண்டும் என்ற சாகச வேகம் என்னையும் தூண்டியது.
அது ஒரு வெள்ளிக்கிழமை. பள்ளிக்குச் செல்லாமல், ஒரு வேனில் ஏறி வீட்டுக்குத் தெரியாமல் ஊர்வலத்துக்குப் போனேன். முதன்முறையாக நான் தனியாக திருநெல்வேலியைப் பார்த்தது அப்போதுதான். கூட்டத்தில் தொலைந்துவிடக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வைத் தவிர, வேறு எந்த உணர்வும் அப்போது என்னிடம் இல்லை. அங்கே வந்திருந்த என் மாமாவிடம், 'இந்த ஊர்வலம் எதுக்கு?’ எனக் கேட்டபோது, 'மாஞ்சோலை எஸ்டேட்டில் வேலை செய்யும் கூலித் தொழிலாளர்கள் சிறையில் இருக்கிறார்கள். அவர்களின் விடுதலைக்காகவும் நியாயமான கூலி உயர்வுக்காகவும் நடைபெறும் போராட்டம் இது’ எனச் சொன்னார்.
மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்காக நடந்த பேரணி என்றாலும், அதில் அவர்கள் குறைவாகவே கலந்துகொண்டார்கள். மாவட்ட நிர்வாகம், ஆயிரக்கணக்கான போலீஸைக் குவித்திருந்தது. ஊர்வலம் செல்லும் மக்களை ஒழுங்குபடுத்தி, அவர்களைப் பாதுகாக்கத்தான் போலீஸ் என அப்போது நினைத்திருந்தேன். திரண்டிருந்த மக்களிடையே ஆண்டாண்டு காலமாக ஒடுக்கப்பட்டுக்கிடந்த உணர்வெழுச்சி ஆவேச முழக்கங்களாக வெடித்தன. ஆனால், சிறிய அளவு வன்முறைகூட இல்லை. திருநெல்வேலி மிகவும் குறுகலான நகரம். தாமிரபரணிதான் அதன் ஆன்மா. ரயில் நிலைய வாசலில் இருந்து தொடங்கிய பேரணி, கொக்கிரக்குளம் ஆற்றுப்பாலம் கடந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அடைவதுதான் பேரணியின் நோக்கம்.

பேரணியை ஒருங்கிணைத்த புதிய தமிழகம், அப்போதைய தமிழ் மாநில காங்கிரஸ், ஐக்கிய ஜமாத், இரு கம்யூனிஸ்ட் கட்சிகள்... என அதன் தலைவர்கள் ஜீப்பில் முன்னால் செல்ல, பின்னால் பெருந்திரளான மக்கள் ஊர்வலமாக வந்தார்கள். கொக்கிரக்குளம் ஆற்றுப்பாலம் முடியும் இடத்தில், கூடுதலாக போலீஸைக் குவித்து ஊர்வலத்தைத் தடுத்து நிறுத்தியது காவல் துறை. ஆற்றுப்பாலம் முழுக்க மக்கள் கூட்டம் அப்படியே ஸ்தம்பித்து நின்றது. ஊர்வலத்தை மறித்த காவல் துறை, 'பேரணியை ஒருங்கிணைக்கும் தலைவர்கள் மட்டும் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு கொடுக்கலாம். ஆனால், அவர்கள் காரில் செல்லக் கூடாது. நடந்துதான் செல்ல வேண்டும்’ எனச் சொல்ல... ஊர்வலத்தில் வந்த மக்களோ, 'எங்கள் தலைவர்களை நடந்து செல்ல அனுமதிக்க மாட்டோம். அவர்கள் காரில்தான் கலெக்டர் அலுவலகத்துக்குள் செல்ல வேண்டும்’ எனப் பிடிவாதமாகச் சொன்னார்கள். இது வாக்குவாதமாக மாறியது.
தங்களுக்காகப் போராடிய தலைவர்கள் மீது மக்கள் காட்டிய அன்பு அது. அதை அந்த மாவட்ட ஆட்சியர் புரிந்துகொண்டிருந்தால், இத்தனை கொலைகளே நடந்திருக்காது. அந்த விவாதம் நடந்துகொண்டிருந்தபோதே, எப்போதும் ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சியின் மீது வந்து விழுகிற ஒரு கல், எங்கிருந்தோ வந்து விழுந்தது. அந்தக் கல் ஒன்றே அந்த மக்களை நரவேட்டையாட போலீஸுக்குப் போதுமான காரணமாக இருந்தது' என ரணமான நினைவுகளை அசைபோடும் மாரி செல்வராஜ், சின்ன இடைவெளி விட்டுத் தொடர்கிறார்.
''கல் விழுந்த உடனே மக்கள் கூட்டம் திமிற, மக்களைத் தாக்கத் தொடங்கியது போலீஸ். எதிரில் காவல் துறை, இன்னொரு பக்கம் மாவட்ட ஆட்சியர் அலுவலகச் சுவர். தப்பியோட வேண்டுமானால் தாமிரபரணி ஆற்றுக்குள்தான் குதிக்க வேண்டும். மக்கள் குதித்தார்கள். கற்கள், லத்திகளைக்கொண்டு சகட்டுமேனிக்கு மக்களைத் தாக்கியது போலீஸ். ஆற்றுக்குள் இறங்கியவர்களைக்கூட கரை ஏறவிடாமல் விரட்டிச் சென்று அடித்தே கொன்றது. தலைமுறை தலைமுறையாக ஊறிய வன்மம் அந்தத் தாக்குதலில் வெளிப்பட்டது. நாங்கள் பாலத்தின் மேல் இருந்து பார்த்தபோது, காவலர்களே ஆற்றில் குதித்தவர்கள் மீது கற்களை வீசித் தாக்கினார்கள். ஆற்றின் அந்தக் கரைக்கு நீந்திச் சென்றவர்களை, அந்தப் பக்கம் இருந்த பொதுமக்களில் சிலரும் தாக்கினார்கள். ஒன்று... ஆற்றில் மூழ்கிச் சாக வேண்டும்; இல்லையெனில் போலீஸிடம் அடிவாங்கிச் சாக வேண்டும். இதுதான் அப்போதைய சூழ்நிலை. அந்தப் பெருங்கலவரத்தின் இறுதியில் ஒரு வயது குழந்தை விக்னேஷ், ஒரு பள்ளிச்சிறுவன் உள்பட 17 பேர் கொல்லப்பட்டார்கள். அதில் மூன்று பேர்தான் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள். மீதிப் பேர் அவர்களுக்காகக் குரல்கொடுக்க வந்த பொதுமக்கள். காவல் துறையின் கொடூரத் தாக்குதலால் பாதிக்கப்பட்டு, அடுத்த சில ஆண்டுகளில் இறந்தவர்களும் உண்டு.
சரி, அந்தச் சம்பவத்துக்குக் காரணமான கல் எங்கு இருந்து வந்தது? 'அது அடங்க மறுத்த மக்களே வீசிய கல்’ என்றது மோகன் கமிஷன். 'பாலத்தின் கீழ் இருந்து சமூக விரோதிகள் வீசிய கல்’ என்றது போலீஸ். 'போலீஸ் குவிக்கப்பட்டிருந்த பகுதியில் இருந்து வந்த கல்’ என்றார்கள் அப்பாவி மக்கள். இறுதியில் தொழிலாளர்களின் கோரிக்கையும் நிறைவேறாமல் அவர்களின் சடலங்கள்கூட ஒப்படைக்கப்படாமல் முடிந்துபோனது அந்தத் துயரம். எப்போதெல்லாம் ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களின் உரிமைக்காகக் குரல் எழுப்பி ஒன்றுகூடுகிறார்களோ, அப்போதெல்லாம் அவர்களுக்கு மிகப் பெரிய இழப்பைக் கொடுத்து, அவர்களின் குடிசைகளுக்கே திருப்பி அனுப்பும் அதிகாரத்தின் படுபாதகச் செயல்தான் அது. அந்தப் போராட்டமும் கோரிக்கைகளும் தோல்வியில் முடிந்திருக்கலாம். ஆனால், அந்த எழுச்சிதான் தென் தமிழக ஒடுக்கப்பட்ட மக்களை விழித்தெழச் செய்தது. இன்று எழுத்தையும் சினிமாவையும் ஆயுதமாக்கி ஒடுக்கப்படுகிற மக்களுக்காகப் பேச வேண்டும் என்ற எண்ணத்தை என்னிடம் உருவாக்கியது, அந்த 17 பேரின் தியாகமும், என் கண் முன்னால் அவர்களை இரையென விழுங்கிய அதிகாரத்தின் அகோரப் பசியும்தான்'' என்கிறார் மாரி செல்வராஜ்.
'தேயிலைக் கொழுந்து பறிக்க ஒரு நாள் கூலியாக 150 ரூபாய் வேண்டும்’ எனப் போராடியதால் கைதுசெய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்த 198 பெண்கள் உள்பட 653 தொழிலாளர்களை விடுதலை செய்ய வேண்டும், கூலி உயர்வு வேண்டும் என்பது உள்ளிட்ட 18 கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த அந்த ஊர்வலம், அரசாலும் போலீஸாலும் நசுக்கி நாசமாக்கப்பட்டது.
17 பேரின் உடல்களையும் மறு பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் என்றார்கள் மக்கள். 'அரசு ஊழியர்களை அநாவசியமாகச் சந்தேகப்படக் கூடாது’ என அந்தக் கோரிக்கையை நிராகரித்தார் நீதிபதி சம்பத். கடைசியில் 17 பேரின் உடல்களையும் மூன்று வெவ்வேறு இடங்களில் புதைத்துவிட்டார்கள். ஆனால், யார் உடல் எங்கு புதைக்கப்பட்டது என்ற விவரம் இன்றுவரை எவருக்கும் தெரியாது. பின்னர், போனால் போகிறது என கைதுசெய்யப்பட்ட 653 பேரையும்
52 நாட்களுக்குப் பிறகு ஜாமீனில் விட்டது அப்போதைய தி.மு.க அரசு. ஆனால், அவர்கள் கேட்ட கூலி உயர்வுக் கோரிக்கை, இறுதி வரை ஏற்றுக்கொள்ளப்படவே இல்லை.
தாமிரபரணிப் படுகொலையை விசாரிக்க தி.மு.க அரசு நியமித்த மோகன் கமிஷன்,
'17 பேரும் நீச்சல் தெரியாமல் தண்ணீரில் விழுந்து இறந்துபோனார்கள்’ எனச் சொன்னது. அரசு இயந்திரமும் காவல் துறையும் இணைந்து நடத்திய கொலைத் தாண்டவத்தை மறைக்க, பழியை தாமிரபரணி ஆற்றின் மீது போட்டது.
தாமிரபரணிப் படுகொலைகள் தி.மு.க அரசு மீது அதிருப்தியை உருவாக்கினாலும், அந்தப் பேரணியை நடத்திய புதிய தமிழகம் கட்சி, அடுத்துவந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-வுடன் கூட்டணி வைத்து 10 தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்திலும் தோல்வி அடைந்தது. அரசு நிர்வாகத்தின் அடக்குமுறையால் தாமிரபரணிப் படுகொலை பெரிதாகப் பேசப்படவில்லை. ஆனால், ஆவணப்பட இயக்குநர்
ஆர்.ஆர்.சீனிவாசன் அப்போது இயக்கிய 'நதியின் மரணம்’ ஆவணப்படம், அந்தப் படுகொலைகளின் முக்கியச் சாட்சியம் ஆனது.
தாமிரபரணிப் படுகொலைகள் நடந்து 15 ஆண்டுகள் கழிந்துவிட்ட நிலையில், மாஞ்சோலை தேயிலைத் தோட்டமும் அதன் தொழிலாளர்களும் எப்படி இருக்கிறார்கள்? சுமார் 35 ஆண்டுகள் தேயிலைத் தோட்டத்தில் வேலைசெய்த இருதயமேரி- இம்மானுவேல் தம்பதி இப்போது வாழ்வது மதுரையில். எஸ்டேட் வேலையில் நீண்ட கால அனுபவம் உள்ள இருதயமேரி, அந்த வாழ்க்கையை நினைவுகூர்ந்தார்.
''திருநெல்வேலி அம்பாசமுத்திரம் மலைப்பகுதியில் மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, குதிரைவெட்டினு அஞ்சு எஸ்டேட்கள். அதில் மாஞ்சோலை, நாலுமுக்கு ரெண்டும் பெரிசு. நானும் என் கணவரும் நாலுமுக்கு எஸ்டேட்டில் வேலை பார்த்தோம். அஞ்சு தலைமுறைக்கு முன்னால கங்காணிகள் மூலம் தேயிலை பறிக்கக் கொண்டுபோகப்பட்டவங்க நாங்க. அங்க இருந்த அதிகாரிகளை 'ஐயா’னும், மேனேஜர்களை 'தொர’னும் கூப்பிடுவோம். அஞ்சு எஸ்டேட்களிலும் சேர்த்து மொத்தம்
5,000 பேர் வேலை பார்த்தோம். காலையில 7 மணிக்கு வேலைக்குப் போனா, மதியம் சாப்பிடக்கூட நேரம் இருக்காது. முதுகில் கட்டியிருக்கும் கூடையில் தேயிலைக் கொழுந்து பறிச்சுப் போடுறதைத் தவிர, வேறு எதுவும் தெரியாது. அப்போ ஒரு நாளைக்கு 16 கிலோ தேயிலைக் கொழுந்து பறித்தால், 33 ரூபாய் கூலி. பிறகு, 22 கிலோவுக்கு 53 ரூபாய் கொடுத்தாங்க. 2009-ல் 30 கிலோவுக்கு 76 ரூபாய் கூலி. மேற்பார்வையாளரா இருந்த எனக்கு, 90 ரூபாய் சம்பளம்.
நாள் முழுக்க உழைச்சுட்டு வந்தா, தங்குறதுக்கு நல்ல வீடு இருக்காது. நாங்க தங்குறதுக்கு அவங்க கட்டிக்கொடுத்த கட்டடங்களை 'லைன் வீடு’னு சொல்வோம். ஒரு வராந்தா, ஒரு ஹால், ஒரு கிச்சன்... அவ்ளோதான் லைன் வீடு. ஹால்ல ரெண்டு குடும்பங்கள், கிச்சன்ல ரெண்டு குடும்பங்கள், வராந்தாவில் சில குடும்பங்கள்னு ஒரு லைன் வீட்டுக்குள்ள ஆறேழு குடும்பங்கள் இருக்கும். சமைக்கிறது, குடும்பம் நடத்துறது எல்லாமே அங்கேதான். உழைச்சுக் களைச்சு வந்தா அக்கடானு கை, காலை நீட்டிக்கூட உட்கார முடியாது. அதைப் பத்தி எங்கேயும் யார்கிட்டயும் குத்தம் குறை சொல்ல முடியாது. நாங்க எப்பவுமே உரிமைகளுக்காகப் போராடினது இல்லை; ஒரு பஸ்ல ஏறினது இல்லை; கால்ல செருப்பு போட்டது இல்லை; நல்ல சாப்பாடு சாப்பிட்டது இல்லை. எங்களுக்குத்தான் கூலியைப் ரூபாயாக் கொடுத்தாங்க. ஆனா, எங்க முன்னோர்களுக்கு கூலி வெறும் சாப்பாடுதான்'' - துன்பம் மிகுந்திருந்த கடந்த காலம் பற்றி பேசும்போதே குரல் கம்முகிறது இருதயமேரிக்கு.
''திருநெல்வேலி போராட்டத்துக்குப் பிறகு தொழிலாளர்கள் பிளவுபட்டாங்க. ஆனா, கடைசி வரை நாங்க கேட்ட கூலியை நிர்வாகம் உயர்த்தவே இல்லை. அதுக்குப் பதிலா பசியும் பட்டினியும்தான் நிரந்தரம் ஆச்சு. பிள்ளைகளை தோட்ட வேலைக்கு அனுப்பக் கூடாதுனு நானும் என் கணவரும் உறுதியா இருந்தோம். கஷ்டத்துக்கு மத்தியிலும் பசங்களை நல்லா படிக்கவெச்சோம். என் பசங்க ஓரளவு நல்ல நிலைக்கு வந்ததும், குடும்பத்தோடு 2009-ம் வருஷம் எஸ்டேட்டைவிட்டு வெளியேறினோம். 5,000 பேர் வேலை பார்த்த இடத்துல இன்னைக்கு 500 பேர்கிட்ட இருப்பாங்க. நாங்க ஆறேழு குடும்பங்களா வசித்த லைன் வீடுகள்ல இப்போ அசாம் தொழிலாளர்கள் ஆளுக்கு ஒரு வீட்டுல இருக்காங்க. கங்காணிகள் அசாம்ல இருந்து தொழிலாளர்களை இறக்குமதி செய்றாங்க. ஆனா, இப்போ 200 ரூபாய் கூலி, ஒரு மணி நேரம் மதியச் சாப்பாட்டு இடைவேளை, வருஷத்துக்கு 15 நாள் லீவுனு நிலைமை இப்போ கொஞ்சம் பரவாயில்லை. பாவம்... அந்த அசாம் தொழிலாளர்கள், நல்லா இருக்கட்டும். அவங்களும் நம்மளை மாதிரி மனுஷங்கதானே'' - ஆதங்கத்தில் ஆரம்பித்து ஆதுரமாக முடிக்கிறார் இமானுவேல்.
படுகொலைகளின் மௌனசாட்சியாகச் சலசலத்துக்கொண்டு ஓடுகிறது தாமிரபரணி ஆறு!
மாஞ்சோலையின் வரலாறு!
சுமார் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த பதவிப் போட்டியில், தனக்கு உதவியதற்காக சிங்கம்பட்டி ஜமீனுக்கு திருவிதாங்கூர் மன்னன் சேரன் மார்த்தாண்ட வர்மனால் கொடையாக வழங்கப்பட்டதுதான்
மாஞ்சோலை வனப் பகுதி. அது அம்பாசமுத்திரத்துக்கு மேலே ஆயிரக்கணக்கான ஏக்கருக்குப் பரந்து விரிந்திருக்கும் வனப் பகுதி. 1918-ல் ஒரு கொலை வழக்கில் சிக்கிய தன் வாரிசுகளைக் காப்பாற்ற, தன்னிடம் இருந்த நிலத்தில் 8,374 ஏக்கர் நிலத்தை 99 வருடக் குத்தகைக்கு, பார்சி இனத்தவரான நுஸ்லே வாடியாவின் 'பாம்பே பர்மா டிரேடிங்’ நிறுவனத்துக்கு 1930-ம் ஆண்டு விற்றார் சிங்கம்பட்டி ஜமீன்.

நிலத்தை வாங்கிய நிறுவனம், காடுகளை அகற்றி தேயிலை பயிரிட்டது. ஜமீன்தாரி முறை ஒழிக்கப்பட்ட பின்னர், அந்த நிறுவனம் தமிழக அரசுடன் ஒப்பந்தத்தைப் புதுப்பித்துக்கொண்டது. அதுதான் மாஞ்சோலை உள்பட ஐந்து எஸ்டேட்களாகப் பரந்து விரிந்துள்ளது. 1930-ம் ஆண்டு செய்துகொண்ட
99 வருடக் குத்தகை, 2029-ம் ஆண்டு முடிவடையும். அப்போது அரசு என்ன செய்யும்?
பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

No comments:

Post a Comment