சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

22 Jul 2015

'கிவ்அப்' பண்ணுங்க... நச்சரிக்கும் எண்ணெய் நிறுவனங்கள்!

வீடுகளில் டிவி பெட்டியை ஆன் செய்தால் "விறகு வைத்து சமைத்து கண் எரிச்சலால் பாதிக்கப்படும் கேஸ் இணைப்பு இல்லாத ஏழை குடும்பத்தினருக்காகவும், அவர்களின் குழந்தைகளுக்காகவும் உங்களது கேஸ் மானியத்தை விட்டுக் கொடுங்கள். நீங்கள் விட்டு கொடுக்கும் (கிவ்அப்) கேஸ் மானியத்தால் இலவச கேஸ் இணைப்பு வழங்க முடியும். நோய்நொடியிலிருந்து அந்த குடும்பத்தை காப்பாற்ற முடியும்" என்று  பிரதமர் மோடி பேசும் விளம்பரத்தை பார்க்க முடியும்.
 
கேஸ் மானியத் தொகையை எண்ணெய் நிறுவனங்களுக்கு கொடுக்காமல், பயனாளிகளுக்கு நேரடியாக வழங்கும் என்ற பஹல் திட்டத்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரதமர் மோடி அறிவித்தார். இந்த திட்டத்தில் சேர கேஸ் வாடிக்கையாளர்கள் தங்களின் கேஸ் ஏஜென்சி அலுவலகங்களில் முண்டியடித்தனர். இதற்கான கால அவகாசம் கடந்த ஜூன் மாதத்தோடு முடிவடைந்து விட்டது. நேரடி மானியத்திட்டத்தில் சேர்ந்தவர்களுக்கு அவர்களது வங்கிக்கணக்கில் பணம் வரவு வைக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் சேராதவர்களுக்கு மானியம் வழங்கப்படுவதில்லை.

ஜூலை மாதத்தில் கேஸ் சிலிண்டரை வீட்டுக்கு கொண்டு வரும் ஊழியர்கள், 'நீங்கள் வசதியாகத்தானே இருக்கிறீர்கள், மானியத்தை விட்டுக் கொடுக்கலாமே' என்று மினி கிளாஸ் எடுத்து வருகிறார்கள்.
இதுகுறித்து சென்னை பணகுடியை சேர்ந்த டி.பொன்சேகர் கூறுகையில், "அரசின் நேரடி கேஸ் மானியத்திட்டத்துக்கு (பஹல்) விண்ணப்பித்து மானியமும் பெற்று வருகிறேன். இந்த மாதம் சிலிண்டர் சப்ளை செய்ய வந்தவர்கள் 'நீங்கள் வசதியாகத்தான் இருக்கிறீர்கள். உங்களுக்கு எதற்கு மானியம். மானியத்தை விட்டுக் கொடுங்கள்' என்று சொன்னார்கள். என்னுடைய வீடு மட்டுமல்ல எல்லா இடங்களிலும் இதுபோன்று மானியத்தை விட்டுக் கொடுக்க அவர்கள் சொல்லி இருக்கிறார்கள். இதுகுறித்து சம்பந்தப்பட்ட கேஸ் ஏஜென்சியிடம் கேட்டால் அங்கேயும் இருக்கும் ஊழியர்கள் 'மானியத்தை நீங்கள் விட்டுக் கொடுக்கலாமே' என்ற பல்லவியை பாடுகிறார்கள். மானியத்தை விட்டுக் கொடுப்பது என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம். ஆனால் வாடிக்கையாளர்களை கட்டாயப்படுத்துவதில் எந்தவிதத்தில் நியாயம்?" என்றார். 


கேஸ் ஏஜென்சிகளிடம் பேசினோம். "வாடிக்கையாளர்கள் சொல்வது உண்மைதான். எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து எங்களுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில், உங்களது வாடிக்கையாளர்களில் யார் யாரெல்லாம் மானியத்தை விட்டுக் கொடுக்க (கிவ்அப்) தகுதியானவர்கள் என்பதை கண்டறிய வேண்டும். பிறகு சிலிண்டர் சப்ளை செய்யும் ஊழியர்களைக் கொண்டு அவர்களிடம் மானியத்தை 
விட்டுக் கொடுப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதற்கான  விண்ணப்பப் படிவத்தில் கையெழுத்து வாங்கி எங்களுக்கு அனுப்ப வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
அதன்படி அனைத்து கேஸ் ஏஜென்சிகளும் இப்போது மானியத்தை விட்டு கொடுப்பது தொடர்பான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். இது வாடிக்கையாளர்கள் மத்தியில் கடும் எரிச்சலை ஏற்படுத்துகிறது. ஏற்கெனவே எண்ணெய் நிறுவனங்களில் வேலைபார்க்கும் ஊழியர்களுக்கு மானியம் கிடையாது என்று சொல்லிவிட்டார்கள். எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், வசதியான வாடிக்கையாளர்களிடம் மானியத்தை விட்டுக் கொடுக்க வலியுறுத்தும்படி எண்ணெய் நிறுவன அதிகாரிகள் சொல்கிறார்கள். அதிகாரிகள் சொல்வதை வாடிக்கையாளர்களிடம் சொன்னால் அவர்கள் எங்கள் மீது கோபப்படுகிறார்கள்.
நேரடி மானியத்திட்டம் தொடக்கப்பட்ட நாளிலிருந்து ஏகப்பட்ட பிரச்னைகள். புதிய இணைப்பு பெற வருபவர்கள், 10 நாட்களுக்குள் மானியம் பெறுவதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். இல்லையெனில் அவர்களுக்கும் மானியம் கிடையாது. வாடிக்கையாளர் புகார் தொடர்பாக எண்ணெய் நிறுவன அதிகாரிகளிடம் பேசினால்,   'இன்றைக்கு எத்தனை பேரை மானியத்தை விட்டுக் கொடுக்கும் 'கிவ்அப்' திட்டத்தில் சேர்த்துள்ளீர்கள்?'  என்று முதலில் கேட்கிறார்கள். யாருமில்லை என்று சொன்னால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தரப்பிலிருந்து எங்களுக்கு பிரஷர் கொடுக்கப்படுகிறது" என்றனர்.

இதுதொடர்பாக ஐ.ஓ.சி. நிறுவன உயரதிகாரி ஒருவர் நம்மிடம், "ஜூலை மாதத்துடன் மானியத்தில் சேருவதற்கான காலக்கெடு முடிவடைந்து விட்டது. மானியத் திட்டத்தில் சேராத பலர் அதற்கான விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்கவில்லை. அவர்களிடம் கிவ்அப் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்கும்படி கேஸ் ஏஜென்சிகளிடம் சொல்லி இருக்கிறோம். மானியத் திட்டத்தில் இருப்பவர்கள் மானியம் தேவை இல்லை என்று கருதினால் அவர்களும் கிவ்அப் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்கலாம். மானியம் விட்டுக் கொடுப்பது தொடர்பாக யாரையும் கட்டாயப்படுத்த நாங்கள் சொல்லவில்லை" என்றார்.

இந்நிலையில் கேஸ் சிலிண்டரை முன்பதிவு செய்யும் போது பூஜ்ஜியத்தை அழுத்தினால் உங்களது மானியம் ரத்தாகி விடும் என்ற தகவல் சில நாட்களாக பரவி வருகிறது. இதனால் மக்கள் குழப்பம் அடைந்துள்ளார்கள். இதுகுறித்து விளக்கமளித்த ஐ.ஓ.சி உயரதிகாரி ஒருவர், 'பூஜ்ஜியத்தை அழுத்தினால் மானியம் ரத்தாகாது' என்றார். இதன்பிறகே கேஸ் வாடிக்கையாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

'கிவ்அப்' என்ற சொல் வாடிக்கையாளர்களுக்கு அலர்ஜியாக இருக்கிறது!No comments:

Post a Comment