சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

25 Jul 2015

“இது அன்புமணி ஃபார்முலா !”

முதலமைச்சர் பதவியை இலக்கு வைத்துக் களம் இறங்கியிருக்கிறார் அன்புமணி. 'மாற்றம்... முன்னேற்றம்... அன்புமணி’ எனக் கோஷம் போட்டுக் கொடி பிடித்துக் கிளம்பியிருக்கிறது பா.ம.க. 
''எப்படி ஒரு தரப்பில் இருந்து வரவேற்பைப் பார்க்கிறோமோ, அதேபோல இன்னொரு தரப்பில் இருந்து விமர்சனங்களை எதிர்கொள்ளத்தான் வேண்டும். கேலி, கிண்டல்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். சமூக வலைதளங்கள் மூலம் இளைய தலைமுறையினரோடு நேரடித் தொடர்பில் இருக்கிறோம். அவர்களின் மனநிலையைப் புரிந்துகொள்கிறோம். அதுதான் சமூக வலைதளங்களின் அழகு!''
''என்ன மாற்றம், என்ன முன்னேற்றம் திட்டமிட்டிருக்கிறீர்கள்?''
''50 ஆண்டு கால திராவிடக் கட்சிகளின் ஆட்சி, மக்கள் மனதில் பெரும் சலிப்பை உண்டாக்கியிருக்கிறது. காமராஜர் 12,000 பள்ளிகளைத் திறந்தார். தி.மு.க., அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளும் சேர்ந்து 7,000 டாஸ்மாக் கடைகளைத் திறந்திருக்கிறார்கள். தமிழனை போதையிலேயே வைத்திருக்கும் டாஸ்மாக் ஃபார்முலாதான், அவர்கள் தமிழ்நாட்டுக்குச் செய்திருக்கும் ஒரே விஷயம்!

56 சதவிகித தமிழ்நாட்டு மக்களிடம் ஒரு சென்ட் நிலம்கூட இல்லை. 80 சதவிகித மக்களின் மாத வருவாய் 5,000 ரூபாய்க்கும் கீழ். இந்த நிலைமையை மாற்றவே திட்டமிடுகிறோம். தமிழ்நாட்டில் சிந்தனை, ஆட்சி, திட்டச் செயல்பாடுகள் எனப் பல நிலைகளிலும் நிலவும் தேக்கநிலையை உடைத்து, சுறுசுறுப்பான ஓர் அரசு நிர்வாகத்தைக் கொடுக்க எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்றுதான் கேட்கிறோம். நான் ஒன்றும் சும்மா கேட்கவில்லை. மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தபோது 108 ஆம்புலன்ஸ் சேவையை, நான்தான் அறிமுகப்படுத்தினேன். அதற்கு முன்னரும் ஆம்புலன்ஸ் இருந்தது. ஆனால், நான் அமெரிக்க மருத்துவத் துறையில் பயன்படுத்தப்படும் முறையை இந்தியாவுக்கு அறிமுகம் செய்தேன். அதனால் பிரசவத்தின்போது இறக்கும் தாய்மார்களின் எண்ணிக்கை சரிபாதியாகக் குறைந்தது. அதேபோல புகையிலை நிறுவன முதலாளிகளின் லாபியையும் மீறி, புகையிலை தயாரிப்புகளில் 'புகைப்பிடித்தல் உடல் நலத்துக்கு தீங்கு’ என்ற எச்சரிக்கை வாசகத்தை இடம்பெறச் செய்தேன். தொலைக்காட்சி, சினிமாக்களில் மது அருந்தும் காட்சிகளின் போதும், எச்சரிக்கை வாசகங்களை இடம்பெறச் செய்தேன். இப்படிக் கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் என்னை நிரூபித்த பிறகுதான், அதேபோல தமிழ்நாட்டிலும் மாற்றங்களைக் கொண்டுவர வாய்ப்பு கேட்கிறேன்!''
''தேர்தல் வெற்றிக்கு ஒபாமா வியூகங்களை மோடி பின்பற்றியதுபோல, நீங்கள் மோடி ஃபார்முலாவைக் கையில் எடுத்திருக்கிறீர்களா?''
''அப்படி இல்லை... இது அன்புமணி ஃபார்முலா. 'மாற்றம் வேண்டும்’ என்ற மக்களின் மனநிலையை எந்தெந்த வழிகளில் செயல்படுத்த முடியுமோ, அப்படியெல்லாம் செயல்படுத்துவோம். சமூக வலைதளங்கள், போஸ்டர்கள், பேனர்கள், விளம்பரங்கள் என, தமிழ்நாட்டின் தலைமைச் செயலகம் முதல் குக்கிராமங்கள் வரை எங்கள் எண்ணத்தைப் பதியச் செய்கிறோம். என் வழக்கமான பணிகள் தவிர, ஒவ்வொரு நாளும் ஒரு பொதுக்கூட்டம் மூலம் மக்களைச் சந்திக்கிறேன். மற்றபடி இது ஒபாமா ஃபார்முலாவும் அல்ல... மோடி ஃபார்முலாவும் அல்ல; மாற்றத்தை முன்னெடுக்கும் அன்புமணியின் ஃபார்முலா!''
'' 'எங்கள் மீது இருக்கும் குறைகளைச் சுட்டிக்காட்டினால் திருத்திக்கொள்வோம்’ என சமீபத்தில் சொல்லியிருந்தீர்கள். எதை மனதில் வைத்து அப்படிச் சொன்னீர்கள்?''
''இங்கே 100 சதவிகிதம் பெர்ஃபெக்ட் கட்சி என எதுவுமே இல்லை. எங்களிடமும் சில குறைகள் இருக்கலாம். அதைச் சுட்டிக் காட்டினால் சரிசெய்துகொள்கிறோம் எனச் சொன்னேன். கடந்த காலங்களில் செய்த பல தவறுகளைத் திருத்திக்கொண்டுவருகிறோம். நிர்வாகத் திறமையின்மையால் தமிழ்நாடு அரசியலில் உருவாகியிருக்கும் வெற்றிடத்தை நாங்கள் நிரப்பவிருக்கிறோம். தி.மு.க மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டார்கள். அ.தி.மு.க-வுக்கு மீண்டும் ஆளும் வாய்ப்பைக் கொடுக்க மாட்டார்கள். தனக்கு வாக்களித்த மக்களை விஜயகாந்தும் ஏமாற்றிவிட்டார். அதனாலேயே இப்போது தமிழ்நாடு அரசியலில் மாற்றுச் சக்தியாக மக்கள் எங்களைப் பார்க்கிறார்கள்!''
''முதலமைச்சர் ஜெயலலிதாவை வீழ்த்த, தொடர்ந்து நீதிமன்றங்களையே நாடுகிறீர்களே... மக்கள் மன்றத்தில் அவரை வீழ்த்தும் வலிமையோ, பலமோ இல்லையா?''
''நீதிமன்றப் போராட்டம் இப்போது காலத்தின் கட்டாயம். ஆந்திராவில் 20 தமிழர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் நாங்கள் போராடி, ஆந்திரா போலீசார் மீது எஃப்.ஐ.ஆர் பதியவைத்தோம். மக்களிடமும் அந்தப் பிரச்னையை எடுத்துச்சென்றோம். அதேபோல ஜெயலலிதா வழக்கிலும் மேல்முறையீடு செய்து சட்டரீதியாகப் போராடுவதோடு, மக்கள் மன்றத்திலும் அவரை வீழ்த்துவோம்!''
''வழக்கில் இருந்து விடுதலையான பிறகு, முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சி எப்படி இருக்கிறது?''
''முதலமைச்சர் தன் அலுவலகத்துக்கு வருவதே அதிசயம்போல நடக்கும் மாநிலம் தமிழ்நாடுதான். முதலமைச்சர் அலுவலகத்துக்கு வருவது அரசு செய்திக் குறிப்பாக வருகிறது. அவரை வரவேற்க பேனர், கட்-அவுட் என பெரிய விழாவாகக் கொண்டாடுகிறார்கள். இதுபோன்ற கொடுமையை எங்கேயாவது கேள்விப்பட்டிருப்பீர்களா?''
''ஆட்சியைக் கைப்பற்றும் முனைப்போடு இருக்கும் பா.ம.க., தமிழ்நாட்டில் எத்தனையாவது பெரிய கட்சி?''
''இதில் என்ன சந்தேகம்? நாங்கள்தான் மூன்றாவது பெரிய கட்சி. அரசியலில் நாங்கள் செய்த ஒரே தவறு, திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி வைத்துக்கொண்டதுதான்!''
'' 'ஆட்சி, அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்ற கோஷத்தோடு பல கட்சித் தலைவர்களைச் சந்திக்கிறார் தொல்.திருமாவளவன். இது நீங்கள் உருவாக்க விரும்பும் கூட்டணிக்கு இடைஞ்சலாக இருக்குமா?''
''திருமாவுக்கு, கொள்கை... கோட்பாடு என எதுவும் இல்லை. ஆட்சியில் பங்கு கொடுப்பவர்களுடன் கூட்டு என்பது கொள்கை அல்ல. உண்மையில் திருமா தி.மு.க-வுக்காக ஆள்பிடித்துக்கொண்டிருக்கிறார். ஏனென்றால், தி.மு.க-வுடன் கூட்டணி சேர யாரும் தயாராக இல்லை. 'வாங்க... வாங்க...’ எனக் கூப்பிட்டுக் கெஞ்சியும், யாரும் அந்தப் பக்கம் செல்லத் தயாராக இல்லை. அதனாலேயே கலைஞர் திருமாவிடம், 'கூட்டணிக்கு ஆள் பிடிச்சிட்டு வா... கூட்டணியில பங்கு தர்றோம்’ எனச் சொல்லி அனுப்பியிருக்கிறார். திருமாவும் அதைச் சிரமேற்கொண்டு செயல்படுத்திவருகிறார். ஆனால், எங்கள் தலைமையை ஏற்றுக்கொண்டு அமையும் கூட்டணிதான் தமிழ்நாட்டின் மாற்று என்கிறோம். ஆட்சி, கூட்டணி ஆட்சி என்கிறோம்!''
''உங்கள் தலைமையை ஏற்றுக்கொண்டு யாரெல்லாம் கூட்டணிக்கு விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள்?''
''நாங்கள் இன்னும் யாருக்கும் அழைப்பு விடுக்கவில்லை. இப்போது நாங்கள் மக்களிடம் வேலை செய்கிறோம். வரவிருக்கும் காலங்களில் எங்கள் தலைமையை ஏற்றுக்கொண்டு கூட்டணிக்கு வருவார்கள் என நம்பிக்கை இருக்கிறது.
பொதுமக்கள் யாரும் எம்.ஜி.ஆர்., கலைஞர், ஜெயலலிதா ஆட்சி வேண்டும் எனக் கேட்கவில்லை. காமராஜர் ஆட்சிதான் வேண்டும் என்கிறார்கள். கடந்த 50 ஆண்டுகளாக தமிழ்நாட்டை ஆட்சி செய்யும் முதலமைச்சர்கள் திரையரங்கங்களில் இருந்தே வந்திருக்கிறார்கள். ஓர் ஆசிரியரோ, வழக்குரைஞரோ, மருத்துவரோ ஏன் முதலமைச்சராக வரக் கூடாது? படித்தவர்கள் ஆட்சிக்கு வந்தால் இன்னும் சிறப்பாகச் செயல்பட முடியும் என நான் நினைக்கிறேன்!''

''தலித் மக்களை எதிரிகளாக்கி வன்னியர்களை ஒருங்கிணைக்கிறீர்கள் என, உங்கள் மீது தொடர்ந்து குற்றச்சாட்டு வைக்கப்படுகிறதே?''
''இது முழுக்கவே தவறான பிரசாரம். கடந்த காலங்களில் தலித் மக்களுக்கு நாங்கள் செய்த சேவைக்காக விருது கொடுத்தவர்களும், அரசியல்ரீதியாக எங்களை வீழ்த்த முடியாதவர்களுமே இப்படி பொய், புரட்டுகளைப் பரப்புகிறார்கள். எங்கள் கட்சியின் பொதுச் செயலாளரே ஒரு தலித்துதான். எங்களின் முதல் மத்திய அமைச்சர் பதவியை, நாங்கள் தலித் எழில்மலைக்குத்தான் கொடுத்தோம். நான் மத்திய அமைச்சராக இருந்தபோது எய்ம்ஸ் இயக்குநர் வேணுகோபாலுக்கும் எனக்கும் மோதல் வந்தது. அவர் தலித்துகளுக்கு எதிராக இருந்தார். நான் தலித் மாணவர்களுக்கு ஆதரவாக இருந்தேன். அதனால்தான் பிரச்னையே. ஆக, எப்போதுமே நாங்கள் தலித் மக்களுக்கு எதிரிகளாக இருந்தது கிடையாது. தலித் மக்களிடம் வன்முறையைத் தூண்டும் சில அமைப்புகளைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம்!''


No comments:

Post a Comment