சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

18 Jul 2015

10 பாடங்கள்...நெஞ்சில் நிறைந்த நெல்சன் மண்டேலா !

நம் நெஞ்சத்தில் நிலைத்து இருக்கும் நெல்சன் மண்டேலா சிறுவயதில் கழுதை, மீது சவாரி செய்துகொண்டு இருந்தார் மண்டேலா. அப்போது கழுதை அவரைக் கீழே தள்ளிவிட்டது. மண்டேலாவின் உடலில் முட்கள் குத்தி, ரத்தம் கசிந்தது. சுற்றி இருந்தவர்கள் கிண்டல்செய்து சிரித்தார்கள். ஒருவர் தோற்றால், மற்றவர்கள் எப்படிக் காயப்படுத்துவார்கள் என்பதை அப்போது உணர்ந்தார். நாம் அப்படி யாரையும் வருத்தப்படுத்தக் கூடாது என்று உறுதி எடுத்தார். அவரிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய 10 பாடங்கள்.....
வாழ்க்கையைக் கொண்டாடு!
சிறுவயதில் தேனடை சேகரித்தல், மாடு மேய்க்கும்போது... சக நண்பர்களுடன்  குத்துச்சண்டை விளையாட்டு என வாழ்க்கையின் ஒவ்வொரு நாளையும் மகிழ்ச்சியுடன் எதிர்கொள்வார் மண்டேலா. அவரது 70-வது வயதில் நடைபெற்ற தேர்தலில் வென்றபோது,  ஜாலியாக ஒரு டான்ஸ் போட்டார்.
தோல்விக்குத் துவளாதே!

மூன்று முறை வழக்கறிஞர் ஆக நடந்த தேர்வில் தோற்றார். பெரிதும் முயன்று, அட்டர்னி ஆனார். தோல்விகள் துரத்திய போதும் ஆப்ரிக்க பூர்வக் குடிகளுக்கு இலவச சட்ட உதவி வழங்கி, புகழ்பெற்றார்.
கற்றுக்கொண்டே இரு!
தனிமைச் சிறையில் 27 ஆண்டுகள் இருந்த காலத்தில், அவரைப் பார்க்க வரும் மனைவி வின்னி மூலம் உலக நடப்புகளைக் கேட்டுத் தெரிந்துகொள்வார். ஷேக்ஸ்பியரின் எல்லா நூல்களையும், சர்ச்சிலின் உலகப் போர் நினைவலைகளையும் சிறையில் இருந்த சமயம் படித்து முடித்தார்.
ஊருக்கு உழைத்திடு!
மேற்படிப்புப் படிக்க, தென் ஆப்ரிக்காவின் நகர்ப்புறம் நோக்கி வந்தார் மண்டேலா. அரசரின் மகனான அவர் மீதே எச்சில் துப்பினார்கள். கடைக்காரர்கள் பொருட்களைத் தர மறுத்தார்கள். நன்கு படித்திருந்தும் ஒரு முட்டாளைப் போல அவரை வெள்ளையர்கள் பார்த்தார்கள். இவற்றைத் 'தன்னுடைய சிக்கல்’ என்று எண்ணாமல், 'தன் சக மக்களின் சிக்கல்’ என்று எல்லாருக்காகவும் போராடினார்.
அன்பே அழகானது!
ஜனாதிபதியாக இருந்தபோது மண்டேலா, உலகக் கோப்பை ரக்பி கால்பந்து இறுதிப் போட்டியைப் பார்வையிட வந்தார். பெரும்பான்மையினர் வெள்ளையின வீரர்கள். உற்சாகமாக தன் நாட்டின் அணியை ஊக்கப்படுத்தினார். கறுப்பின மக்கள் என்றால், வெள்ளையர்கள் இல்லாத அணியையே ஆதரிப்பார்கள் என்ற எண்ணத்தைத் தனது அன்பால் உடைத்தார். போட்டியைக் காண வந்திருந்த 60 ஆயிரம் மக்களும் எழுந்து நின்று அவரின் பெயரை உச்சரித்தார்கள்.
தன்னலத்தைத் தவிர்!
வாய்ப்பு இருந்தும் ஜனாதிபதி பதவியை இன்னொரு முறை ஏற்காமல் கம்பீரமாக விலகினார். அவரது சொந்த மகன் எய்ட்ஸ் நோயால் இறந்துவிட, அந்த வலியைத் தாங்கிக்கொண்டு, எய்ட்ஸ் விழிப்பு உணர்வுக்காக பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்தார் மண்டேலா.
வலிகளை வெல்!
50 வயதுக்கு மேலே வந்த காசநோய், இறுதி வரை மண்டேலாவுக்கு இருந்தது. சிறையில் இருந்தபோது, சுண்ணாம்புக் கல் சுரங்கங்களில் வேலைபார்த்தது, கண் பார்வையைப் பாதித்தது. புற்றுநோயும் வாட்டியது. 'நான், கேன்சரால் வெல்லப் பட்டாலும் சொர்க்கம் சென்று, அங்கே நம் கட்சி அலுவலகத்தில் என் உறுப்பினர் அட்டையைப் புதுப்பித்துக்கொள்வேன்!' என்று சிரிப்புடன் சொன்னார்.
வெறுப்பை விடு!
''எதிரிகளை வெல்ல ,அவர்களுடன் இணைந்து பணியாற்றுங்கள்'' என்பார் மண்டேலா. அவர் விடுதலையானதும், நாடு முழுவதும் கலவரங்கள் வெடித்தன. தொலைக்காட்சியில் தோன்றி, மக்களை அமைதிகாக்கச் செய்தார். அமைதியாகத் தேர்தலை நடத்தி, எல்லாருக்குமான அரசை அமைத்தார்.
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு!
கறுப்பின மக்கள் அதிகமாக இருந்தபோதும் தனது அமைச்சரவையில் வெள்ளையர்கள், இஸ்லாமியர்கள், இந்தியர்கள், லிபரல்கள் என்று எல்லாரையும் இணைத்துக்கொண்டார். 'நான் ஆங்கிலேயரின் ஆதிக்கத்தையும் எதிர்க்கிறேன்; கறுப்பின ஆதிக்கத்தையும் நிராகரிக்கிறேன்' என்று உறுதியாகச் சொன்னார்.
இன்று புதிதாகப் பிறந்தோம்!

27 வருட சிறை வாழ்க்கைக்குப் பின் வெளியே வந்ததை எப்படிப் பார்த்தார் தெரியுமா அவர்? 'நான் சிறைக் கதவுகளைக் கடந்து, இறுதி முறையாக நடந்தேன். 70 வயதில் எல்லாம் புதிதாக தொடங்குவதாக உணர்கிறேன். என்னுடைய 10,000 நாட்கள் சிறைவாசம் முடிந்தது. இன்று புதிதாகப் பிறந்திருக்கிறேன்.'


No comments:

Post a Comment