சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

24 Jul 2015

தெரிந்த புராணம்... தெரியாத கதை!

நாடு, நகரம், வளம் மிக்க பூமி அனைத்தையும் தனதாக்கிக் கொண்டு, பாண்டவர்களுக்கு ராஜாங்கப் பகுதியாக காண்டவ வனம் எனும் காட்டையே தரச்செய்தான் துரியோதனன் என்பது நமக்குத் தெரியும். ஆனால், பாண்டவர்களோ ஸ்ரீகிருஷ்ணனின் துணையுடன் காண்டவ வனத்தைத் திருத்தி, தேவலோக சிற்பி விஸ்வகர்மா மற்றும் மயனின் கைவண்ணத்தால் இந்திரப்பிரஸ்தம் எனும் அழகிய நகரை நிர்மாணித்தனர். அதைத் தலைநகராகக் கொண்டு தனது ஆட்சியைத் துவங்கினான் தருமன்.
மாடமாளிகை, கூடகோபுரங்களோடு, நீரென்றும் நிலமென்றும், நிழலென்றும் நிஜமென்றும் பிரித்தறிய முடியாத காட்சிகள் நிறைந்த மாயாலோகம் அங்கே உருவாகியிருந்தது. பளிங்குத் தரைகள், கண்கவர் சிற்பங்கள், நவரத்தினங்கள் இழைத்த தூண்கள், சுவரெல்லாம் சித்திர வேலைப்பாடுகள், விருந்தினர் மாளிகை, கடை வீதிகள், யாக சாலைகள்... இப்படி அற்புதங்களைப் படைத்து, இந்திரப்பிரஸ்தத்தை தேவலோகமாக மாற்றியிருந்தனர் பாண்டவர்கள்.
தொடர்ந்து, ஸ்ரீகிருஷ்ணனின் அருளாசி யுடன் பிரமாண்டமான ராஜசூய யாகத் துக்கும் ஏற்பாடுகள் செய்த பாண்டவர் கள், மன்னர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்தனர். சகோதரர்களான துரியோதனாதிகளுக்கும் அவனைச் சார்ந்த தாயாதியருக்கும் சிறப்பு அழைப்பு விடுத்திருந்தான் தருமன்.

'இத்தனைச் செல்வமும் பாண்டவர்களுக்கு எப்படி வந்தது? அதனை எப்படி அழிப்பது?’ என  சிந்தித்தபடியே, பரிவாரத்துடன் அங்கு வந்தான் துரியோதனன். அங்கே, அவனுக்காக ஒதுக்கப்பட்டிருந்த சிறப்பு மாளிகையில் தங்கினான்.
ஒருநாள் காலையில், மயன் உருவாக்கியிருந்த மாளிகையைக் காணப் புறப்பட்டான் துரியோதனன். அதன் சிறப்பு துரியோதனனை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. மாளிகையின் ஓரிடத்தில் தண்ணீர் எனக் கருதி மெதுவாகக் காலை வைத்தான். ஆனால், அது வெறும் தரையாக இருந்தது. மற்றோர் இடத்திலோ, தரையெனக் கருதி அலட்சியமாகக் காலை வைக்க, அது தண்ணீர் நிறைந்த தடாகமாக இருந்தது. இதைச் சற்றும் எதிர்பாராததால், தவறி விழுந்தான் துரியோதனன். எனினும் ஒருவழியாகச் சமாளித்து எழுந்தான். அப்போது உப்பரிகையில் இருந்து சிரிப்பொலி கேட்டது. உயரே நோக்கினான். அங்கே பாண்டவர்களின் மனைவி திரௌபதி நின்றுகொண்டிருந்தாள். அவன் விழுந்ததைப் பார்த்துத்தான் அவள் சிரித்தாள். ஆனாலும், அது தவறென உணர்ந்து சட்டென சிரிப்பை அடக்கிக் கொண்டாள். துரியோதனனோ அதை பெரும் அவமானமாக எடுத்துக் கொண்டான். பாஞ்சாலியை பதிலுக்குப் பதில் அன்றே அவமானப்படுத்த நினைத்தான்.
மறுநாள் யாகம் ஆரம்பமாக இருந்ததால், முந்தைய நாள் விழாவுக்கு வந்த உறவினர் களுக்குச் சிறப்பு விருந்து ஏற்பாடாகி இருந்தது. பாண்டவர்களும் திரௌபதியும் எல்லோரையும் பந்தியில் உபசரித்து உணவு பரிமாறினார்கள். துரியோதனன், துச்சாதனன், கர்ணன், சகுனி முதலானோர் வரிசையாக அமர்ந்திருந்தனர். திரௌபதி பரிமாறிக் கொண்டே துரியோதனன் இலைக்கு அருகில் வந்தாள். அவளை அவமானப்படுத்த எண்ணிய துரியோதனன், ''ஐவரின் பத்தினியே... இன்று யாருடைய முறை?'' என்று கேட்டான். திரௌபதிக்குத் தூக்கி வாரிப்போட்டது. நாடி நரம்புகளெல்லாம் தளர்ந்தன. அவளால் அந்தக் கேள்வியை ஏற்க முடியவில்லை. செய்வதறியாது, பரிமாறுவதை நிறுத்திவிட்டு உள்ளே ஓடினாள். கண் கலங்கினாள். அதேநேரம் அங்கு தோன்றினார் ஸ்ரீகிருஷ்ணர்.
'கலங்காதே திரௌபதி! நடந்ததை நானும் கவனித்தேன். எல்லோர் முன்னிலையிலும் உன்னை அவமானப்படுத்தி அழவைக்க நினைத்திருக்கிறான் துரியோதனன். அவனுக்கு பாடம் கற்பிக்கலாம். நான் சொல்வது போல் செய். நீ மீண்டும் உணவு பரிமாறப் போ! துரியோதனன் மீண்டும் உன்னிடம் அதே கேள்வியைக் கேட்டு, 'ஏன் பதில் கூறவில்லை?’ என்பான். உடனே நீ, 'தக்ஷகன் முறை’ என்று சொல். அதன் பிறகு துரியோதனன் அந்த இடத்திலேயே இருக்கமாட்டான்'' என்றார் பகவான்.
கிருஷ்ணனின் வார்த்தையைத் தட்டமுடியாமல் விருந்து மண்டபத்துக்குச் சென்றாள் திரௌபதி. துரியோதனன் இலை அருகில் அவள் வந்ததும், விஷமத்துடன் அதே கேள்வியை மீண்டும் கேட்டான். 'எனக்குப் பதில் கூறவில்லையே... இன்று யாருடைய முறை?'
ஸ்ரீகிருஷ்ணன் சொல்லியனுப்பியது போலவே,  ''இன்று தக்ஷகன் முறை' என்று பளிச்சென பதில் தந்தாள் திரௌபதி. அதைக் கேட்டு விஷ நாகம் தீண்டியது போன்று அதிர்ந்தான் துரியோதனன். சட்டென எழுந்து அங்கிருந்து வெளியேறினான்.
திரௌபதிக்கு ஆச்சரியம். கண்ணனிடம் ஓடோடி வந்தாள். ''கண்ணா! இதென்ன மாயம்? யாரந்த தக்ஷகன்? அவன் பெயரைக் கேட்டதும் துரியோதனன் ஏன் இப்படிப் பேயறைந்தாற்போல் பதறி, பயந்து ஓடுகிறான்?'' என்று கேட்டாள். கண்ணன் அதற்கான காரணத்தையும் கதையையும் சொன்னான்.
துரியோதனனின் மனைவி பானுமதி மகா பதிவிரதை. கணவனையே தெய்வமாகக் கருதும் உத்தமி. ஆனால், துரியோதனனோ பாண்டவர்களின் ராஜ்ஜியத்தை அடைவதில் குறியாக இருந்தான். மனைவியிடம் அன்புடன் பேசக்கூட அவனுக்கு நேரம் இல்லை. திருமணமாகி மாதங்கள் பல கடந்தும், மண வாழ்க்கையின் பயனை அடையும் பாக்கியம் பானுமதிக்குக் கிட்டவில்லை. அவனது அன்புக்காக ஏங்கினாள். தெய்வங்களை வேண்டினாள். அவள் தவம் பலிக்கும் வேளை வந்தது.
ஒருமுறை, முனிவர் ஒருவர் பானுமதியின் துயர் நீக்கும் வழி ஒன்றைக் கூறினார். மகிமை மிக்க மூலிகை வேர் ஒன்றை மந்திரித்து அவளிடம் கொடுத்து, அதைப் பாலில் இட்டு கணவனுக்குக் கொடுக்கும்படி கூறினார் முனிவர். பானுமதியும் அதன்படியே பால் காய்ச்சி, அதில் இனிப்பும் இன்சுவையும் சேர்த்து, முனிவர் தந்த வேரையும் அதில் இட்டு, கணவனின் வருகைக்காகக் காத்திருந்தாள். அன்று பௌர்ணமி. இரவின் இரண்டாம் யாமத்தில் அந்தப்புரம் வந்தான் துரியோதனன். அப்போது அவன் மது அருந்தியிருந்தான். பால் அருந்தும் மனோநிலையில் அவன் இல்லை. ஆசையுடன் மனைவி நீட்டிய பால் கிண்ணத்தைப் புறங்கையால் ஒதுக்கினான். கை தவறிய கிண்ணத்தில் இருந்த பால் தரையில் சிந்தியது. அப்போது அங்கே சென்றுகொண்டிருந்த  'தக்ஷகன்’ எனும் நாகம் அந்தப் பாலைச் சுவைத்தது.
தக்ஷகன் சர்ப்பங்களின் ராஜன். பாலைப் பருகியதும் அதிலிருந்த வேரின் வசிய சக்தியால், அவனுக்குப் பானுமதி மீது ஆசையும் நேசமும் பிறந்தது. உடனே அவன் அவள் முன் தோன்றித் தன் ஆவலை வெளியிட்டான். தன்னை வருந்தி அழைத்தது அவள்தான் என்றும் வாதாடினான். பதிவிரதையான பானுமதி பதறினாள்; துடிதுடித்தாள்.
துரியோதனனுக்குத் தன் மனைவியின் உயர்ந்த கற்பு நெறி பற்றி நன்கு தெரியும். தான் அவளது அன்பையும் பிரேமையையும் புரிந்து நடக்காததால் விளைந்த விபரீதத்தை எண்ணித் தவித்தான். தக்ஷகன் கால்களில் விழுந்து தன் மனைவியின் கற்பைக் காக்க வேண்டினான். தக்ஷகன் பாம்பு எனினும் பண்பு மிக்கவன். பாலில் கலந்திருந்த வேரின் சக்தியால் உந்தப் பெற்றதால்தான், அவன் உள்ளம் பானுமதியை விரும்பியது. எனினும், அவளுக்குக் களங்கம் விளைவிக்க அவன் விரும்பவில்லை. அதே நேரம், அவளின் அன்பை இழக்கவும் தயாராக இல்லை. எனவே ஒரு நிபந்தனை விதித்தான். 'அந்தப்புரத்தில் அமைந்துள்ள அரச விருட்சத்தின் அடியில் உள்ள புற்றுக்கு, பௌர்ணமிதோறும் பானுமதியைக் காண வருவேன். பானுமதி புற்றில் பால் ஊற்றி என்னை உபசரித்து, வணங்கி அனுப்ப வேண்டும். அப்போது அவள் கற்புக்குக் களங்கம் இல்லை என்பதற்குச் சாட்சியாக அவளின் கணவனான துரியோதனனும் என்னை வணங்க வேண்டும்’ என்று கூறிவிட்டு மறைந்தான் தக்ஷகன்.
''அன்று முதல் இன்றுவரை பௌர்ணமி தோறும் பாம்புக்குப் பாலூற்றி வருகிறாள் பானுமதி. துரியோதனனும் பயபக்தி யோடு பங்குகொள்கிறான். இந்தச் சம்பவம் துரியோதனனுக்கும் பானுமதிக்கும் தக்ஷகனுக்கும் மட்டுமே தெரியும். 'இதனை வெளியே யாரிடமும் சொல்வதில்லை’ என்பது அவர்களுக்குள் செய்து கொண்ட ஒப்பந்தம். இதை நீ கூறியதுதான் துரியோதனனின் அதிர்ச்சிக்குக் காரணம்'' என்றார் ஸ்ரீகிருஷ்ணர்.

துரியோதனனால் தனக்கு நேர்ந்த அவமானத்தைத் துடைத்து ஆறுதல் கூறிய கண்ணனுக்கு நன்றி கூறினாள் திரௌபதி.


No comments:

Post a Comment