சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

23 Jul 2015

" மோடியை ஆதரிக்கத் தேவை இல்லை !"

முதல்வர் கோட்டைக்கு வருகிறார் என்று தகவல். வருகிறாரா என்று பார்த்துவிட்டு பிறகு வருகிறேன்” - என்று காலையிலேயே வாட்ஸ் அப் தகவல் அனுப்பி இருந்தார் கழுகார். கார்டனில் இருந்து முதல்வர் கிளம்பியதும் அதனை உறுதிப்படுத்தினார். கோட்டை செய்திகளை முழுமையாகத் திரட்டிவிட்டு அலுவலகம் வந்து சேர்ந்தார்.
‘‘உடல்நலம் குறித்த சர்ச்சைகள் எழுந்த நிலையில் கடந்த 15-ம் தேதி கோட்டைக்கு வந்து அரசு திட்டங்களைத் தொடங்கி வைத்தார் முதல்வர் ஜெயலலிதா.  அதன் மறுநாள், மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தில் மாணவிகளுக்கு சைக்கிள்கள் வழங்கும் போட்டோக்கள் மீடியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதாவது, முந்தைய நாள் (15-ம் தேதி) நடந்த மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி, மறுநாள் நடந்த நிகழ்ச்சிபோல தோற்றம் உருவாக்கப்பட்டது. அடுத்து 17 மற்றும் 18 தேதிகள் அரசுத் திட்டங்களை தொடங்கிவைக்கும் புகைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகின. இவை எல்லாமே 15-ம் தேதி எடுக்கப்பட்ட படங்கள்தான். அதாவது ஒரே நாளில் நடந்த நிகழ்ச்சிகளை எல்லாம் தவணை முறையில் ரிலீஸ் செய்து முதல்வர் கோட்டையில் இருப்பது மாதிரியான தோற்றத்தை உருவாக்கினார்கள்!”

‘‘ஒரே நாளில் இத்தனை செய்திகளை ரிலீஸ் செய்தால் நாளிதழ்களால் வெளியிட முடியாது என்பதால் இருக்கலாம், அல்லவா?”
‘‘அப்படியும் இருக்கலாம். 15-ம் தேதிக்குப் பிறகு 20-ம் தேதிதான் கோட்டைக்கு வந்தார் ஜெயலலிதா. அன்றைய தினம் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. சொத்துக் குவிப்பு வழக்கில் பதவியை இழந்து மீண்டும் முதல்வர் ஆன பிறகு அமைச்சரவைக் கூட்டம் நடைபெற தேதி குறிக்கப்பட்டு, கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. ‘அமைச்சரவைக் கூட்டம் ஏன் நடத்தவில்லை’ என கருணாநிதியும் தன் பங்குக்குக் கேள்வி எழுப்பியிருந்தார். இந்த நிலையில்தான் அமைச்சரவைக் கூட்டம் நடந்து முடிந்திருக்கிறது. அமைச்சரவைக் கூட்டம் தொடர்பாக வெளியிடப்பட்ட படத்தில் தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் வழக்கத்துக்கு மாறாக நின்றுகொண்டிருந்தார். அமைச்சரவைக் கூட்டம் தொடர்பான படங்கள் அனுப்பும்போது தலைமைச் செயலாளர் அமர்ந்திருக்கும் படங்கள்தான் பொதுவாக ரிலீஸ் செய்யப்படும்!”
‘‘ம்!”
‘‘அமைச்சரவைக் கூட்டம் தொடர்பாக எந்த அறிவிப்பும் வரவில்லை. ஆனால், இரண்டு விஷயங்கள் மட்டும் அலசப்பட்டிருக்கின்றன. ஏ, பி என இரண்டு ஃபைல்களில் அந்த இரண்டு விஷயங்களும் அடங்கியிருந்தன. அது தொடர்பான கத்தை கத்தையான பேப்பர்களும் ஜெயலலிதா முன்பு வைக்கப்பட்டிருந்தன. சட்டசபை கூட்டத் தொடரில் அதுபற்றிய அறிவிப்புகள் வெளிவரலாம் என்கிறார்கள் கோட்டை​வாசிகள். சட்டசபையில் வைக்க வேண்டிய விஷயங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாகச் சொல்கிறார்கள். அமைச்சரவை கூட்டத்தின்போது இன்னொரு விஷயமும் இடம்பெற்றிருந்தது. ஜெயலலிதா டேபிள் முன்பு கத்திரிகோல் ஒன்றை வைத்திருந்தார்கள். அது எதற்கு என தெரியவில்லை”
‘‘ஓஹோ!”
‘‘அமைச்சரவைக் கூட்டம் முடிந்த பிறகு நாடாளுமன்றத்தின் இரு அவைகளைச் சேர்ந்த அ.தி.மு.க எம்.பி-க்கள் கூட்டம் நடைபெற்றது. கோட்டையில் ஜெயலலிதாவின் அறையில்தான் இந்தக் கூட்டம் நடந்தது. ஒவ்வொருவராக உள்ளே வந்தபோது அவர்கள் ஜெயலலிதாவுக்கு வணக்கம் வைத்தனர். பதிலுக்கு ஜெயலலிதாவும் வணக்கம் வைத்தார். ‘சிறப்பாக செயல்படுங்கள். உங்களின் நாடாளுமன்ற செயல்பாடுகளைத் தொடர்ந்து கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன். மோடி ஆட்சி என்பதற்காக எல்லா விஷயங்களிலும் விழுந்தடித்து ஆதரிக்க வேண்டியது இல்லை. தமிழ்நாட்டுக்கும் தமிழக மக்கள் பிரச்னைகளுக்கும் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுங்கள். முக்கியமான மற்ற பிரச்னைகளுக்கு நாடாளுமன்றக் குழுத் தலைவர் மூலம் தகவல்கள் தெரிவிப்பேன். அதன்படி நீங்கள் நடந்துகொள்ளுங்கள்’ என சொல்லியிருக்கிறார் ஜெயலலிதா.”
‘‘ஏன் இந்த மாற்றம்?”
‘‘மத்திய அரசு கொண்டு வந்த நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தை முதலில் ஜெயலலிதா ஆதரித்தார். சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று ஜாமீனில் இருந்தபோதுதான் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, ஜெயலலிதாவை போயஸ் கார்டனில் சந்தித்துப் பேசினார். அதன்பிறகுதான் நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தை ஜெயலலிதா ஆதரித்து நீண்ட அறிக்கைவிட்டார். இந்த அறிக்கை வெளியிட்டதன் பின்னணி பற்றி கருணாநிதி அறிக்கைவிட்டார். அதற்கும் உடனே பதில் அறிக்கை கொடுத்தார் ஜெயலலிதா. அப்போது பி.ஜே.பி-யின் ஆதரவு தேவைப்பட்டது என்பதால் அந்தச் சட்டத்தை ஆதரித்தார். இந்த நிலையில்தான் டெல்லியில் கடந்த வாரம் பிரதமர் மோடி தலைமையில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் மாநில முதல்வர்கள் எல்லாம் கலந்துகொண்டார்கள். ஜெயலலிதா சார்பில் கலந்துகொண்ட ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதாவின் அறிக்கையைப் படித்தார். ‘நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் மத்திய அரசு செய்யவுள்ள திருத்தங்கள் விவசாயிகளுக்கு எதிரானவை. அவை திரும்பப் பெறப்பட வேண்டும்’ என சொல்லியிருந்தார் ஜெயலலிதா.
சொத்துக் குவிப்பு வழக்கை எதிர்கொண்டு வந்த ஜெயலலிதா இந்தச் சட்டத்தை ஆதரித்ததுடன், கடந்த மார்ச் 10-ம் தேதி நாடாளுமன்ற மக்களவையில் நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தை ஆதரித்து வாக்களிக்கும்படி அ.தி.மு.க உறுப்பினர்களுக்கு ஆணையிட்டிருந்தார். அதன்பிறகும் தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் ஜெயலலிதாவும் சட்டத்தைத் தீவிரமாக ஆதரித்து வந்தனர். ‘நிலம் கையகப்படுத்துதல் சட்டத்திருத்த மசோதா 5 வகைத் திட்டங்களுக்கு சில விதிவிலக்குகளை அளிக்க மாநில அரசுக்கு அதிகாரம் வழங்கியுள்ளது. மாநில அரசு தேவை என்று கருதினால் ஒவ்வொரு திட்டத்தின் தன்மைக்கு ஏற்ப, பொதுநலனுக்கு ஏற்ப  விலக்களிக்க முடியும். மாநிலத்துக்கு அதிக அதிகாரம் அளிக்கும் முடிவை எதற்காக எதிர்க்க வேண்டும்’ என்று மார்ச் 15-ம் தேதி வெளியிட்ட அறிக்கையில் சொல்லியிருந்தார் ஜெயலலிதா. இப்போது திடீரென முடிவை மாற்றி ‘நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் செய்யப்படவுள்ள திருத்தங்களுக்குத் தமிழக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிப்பதால், அவர்களின் உணர்வுகளை மதித்து தமிழக அரசு இந்த நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது’ என சொல்லியிருக்கிறார் ஜெயலலிதா!”
‘‘சொல்லும்!”
‘‘இந்தத் திடீர் மனமாற்றத்தின் பின்னணியில் அரசியல் இருப்பதாகவும் சொல்கிறார்கள். அருண் ஜெட்லியிடம் பேசியபோது தமிழக பி.ஜே.பி-யினர் வரம்பு மீறி பேசுவதாகச் சொல்லியிருந்தார் ஜெயலலிதா என்று சில இதழ்களுக்கு முன்பு நான் சொல்லி இருந்தேன். அவர்களை அடக்கி வைக்கிறோம் என வாக்குறுதியும் கொடுத்தார் அருண் ஜெட்லி. ஆனால், எதுவும் நடக்கவில்லையாம். இப்படிப்பட்ட சூழலில்தான் எம்.பி-க்கள் கூட்டத்தில் மோடி அரசை ஆதரிக்க வேண்டியது இல்லை என சொல்லியிருக்கிறார் என்றும் சொல்கிறார்கள்!”
‘‘வழக்கமாக எம்.பி-க்கள் கூட்டம் கோட்டையில் நடக்காதே?”
‘‘ஆமாம்! அ.தி.மு.க எம்.பி-க்கள் கூட்டம் வழக்கமாக போயஸ் கார்டனிலோ, அ.தி.மு.க தலைமை அலுவலகத்திலோ நடைபெறும். ஆனால், கோட்டையில் நடந்ததுதான் ஆச்சர்யம். அது தொடர்பான புகைப்படத்தை அரசின் செய்தித் துறை அனுப்பி வைத்திருக்கிறது. கூட்டம் தொடர்பான செய்தியை அ.தி.மு.க அலுவலகம் அனுப்பியிருக்கிறது.”
‘‘எவ்வளவு நேரம் இருந்தார் முதல்வர்?”
‘‘கடந்த 15-ம் தேதி வந்தவர் மொத்தமே அரைமணி நேரம் இருந்தார். இன்று வந்தவர் சுமார் ஒரு மணிநேரம் இருந்தார்’’ என்றபடி வேறு செய்திகளுக்கு மாறினார் கழுகார்.
‘‘ஸ்டாலினுக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் க்ரீன் சிக்னல் காட்டி இருக்கிறார் கருணாநிதி.’’
‘‘அப்படியா?’’
‘‘கடலூரில் ஸ்டாலின் கலந்துகொண்ட கூட்டத்தில் கூடிய கூட்டம், ஸ்டாலின் பேச்சு ஆகியவற்றைப் பார்த்து மகிழ்ந்த கருணாநிதி ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ‘மகன்தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல்லெனுஞ் சொல்’ என்ற குறளையும் ‘தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல்’ என்ற குறளையும் சொல்லி ஸ்டாலினைப் பாராட்டிய கருணாநிதி, ஒரு விஷயத்தை லேசாக கோடிட்டுக் காட்டி உள்ளார்.

‘என் எண்ணம் ஈடேற, வர இருக்கின்ற பொதுத்தேர்தலில் நான் எதை விரும்புகிறேன் என்பதையும் எந்த இளைஞர் சமுதாயத்தை ஏற்றமிகு திராவிடர் இயக்கத்தின் ஒளிவிளக்குகளாக ஏற்றி வைத்திட விரும்புகிறேன் என்பதையும் என்னை உணர்ந்தவர்களும்...’ என்று வார்த்தைகளை நீட்டி முழக்கி உள்ளார். இதை உன்னிப்பாகக் கவனித்த கட்சிக்காரர்கள், ‘அடுத்து தளபதிதான் என்பதை தலைவர் விரைவில் அறிவிக்கப் போகிறார்’ என்று சொல்ல ஆரம்பித்துள்ளார்கள்.”
‘‘இப்படி எத்தனையோ பீடிகைகளை கருணாநிதி போட்டு​விட்டாரே?”
‘‘இது வலிய வந்து கருணாநிதி சொல்லி இருப்பது என்பதால் முக்கியமாக நினைக்கிறார்கள்.”
‘‘ம்!”
‘‘திருச்சி ராமஜெயம் கொலைவழக்கில் மீண்டும் காவல் துறை அவகாசம் கேட்க இருப்பதாகச் சொல்கிறார்கள். ராமஜெயம் கொலைவழக்கை விசாரிக்க மதுரை நீதிமன்றம் வழங்கிய கால அவகாசம் வரும் 24-ம் தேதியோடு முடிகிறது. மூன்று முறை அவகாசம் வாங்கிவிட்ட சி.பி.சி.ஐ.டி போலீஸார், மிச்சமிருக்கும் இரண்டு நாட்களில் எதையும் கண்டுபிடிக்க முடியாது என்பதால்தான் மீண்டும் அவகாசம் கேட்க உள்ளதாகச் சொல்கிறார்கள்.”
‘‘கிடைக்குமா?’’
‘‘அது நீதிமன்ற முடிவைப் பொறுத்தது. ராமஜெயம் கொலை செய்யப்பட்டபோது தனிப்படை அதிகாரிகளாக இருந்த உதவி ஆணையர்களான ஜெயச்சந்திரன், மாதவன், சீனிவாசன் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் கோடிலிங்கம், மரகதம் ஆகியோரை அழைத்து விசாரணை நடத்தினார்கள் சி.பி.சி.ஐ.டி போலீஸார். ‘இவர்களை விஞ்ஞான முறையில் உண்மை அறியும் சோதனைக்கு உள்ளாக்கப் போகிறோம். எப்படியும் உண்மையைக் கண்டுபிடித்துவிடுவோம்’ என அவகாசம் கேட்பார்களாம்.”

‘‘இது எல்லாமே உண்மையைக் கண்டுபிடிக்கும் முயற்சிகளாகத் தெரியவில்லை.”
‘‘காத்திருந்து கவனிப்போம்.’’
‘‘விஜயகாந்த்துக்குச் சொந்தமான ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் பேராசிரியர்களுக்குச் சம்பளம் வழங்கப்படவில்லை என்றும் இதனை தட்டிக் கேட்டதால் தன்னை குண்டர்களை வைத்து அடித்ததாகவும் அந்தக் கல்லூரி உதவிப் பேராசிரியர் விக்ரம் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், ‘இந்த வருட மாணவர் சேர்க்கைக்கு தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் பேராசிரியர்களை அனுப்பி, குறைந்தது இரண்டு மாணவர்களையாவது கல்லூரியில் சேர்க்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் வேலையில் இருந்து நீக்கப்படுவதாகவும் நிர்வாகம் அச்சுறுத்தல் விடுத்தது. இதனை கல்லூரி பட்டமளிப்பு விழாவில் துண்டுப் பிரசுரமாக விநியோகித்ததால் என்னை மிரட்டினர்.
அப்போதே அனைத்து ஆசிரியர்களுக்கும் பணத்தையும் செட்டில் செய்தனர். அதன்பின்னர் என்னை சஸ்பெண்ட் செய்தனர். சான்றிதழ்கள் வாங்கச் சென்ற என்னைக் குண்டர்களை வைத்து, ‘கேப்டன் காலேஜிலேயே அரசியல் பண்றீயா?’ என்று கேட்டு என்னை சரமாரியாக அடித்து உதைத்தனர். இதனால், நான் படாளம் காவல் நிலையத்தில் கல்லூரி முதல்வர் ஜஸ்டிஸ் ரவி, நிர்வாக இயக்குநர் மீது புகார் அளித்துள்ளேன்’ என்று சொல்லி பீதியைக் கிளப்பி உள்ளார். மேலிடத்தின் கவனத்துக்கு இதனைக் கொண்டு போயுள்ளார்கள்” என்று சொல்லிவிட்டு எழுந்த கழுகார், ‘‘ரவி சுப்பிரமணியம் புகார் சம்பந்தமாக காஞ்சி ஜெயேந்திரரை அழைத்து விசாரிக்க போலீஸ் முடிவெடுத்துள்ளதாம்” என்றபடி பறந்தார்!

முந்திக்கொண்ட கருணாநிதி!
தேர்தல் சமயத்தில் மதுவிலக்கை அமல்படுத்தும் அறிவிப்பை வெளியிடலாம் என்று ஜெயலலிதா திட்டமிட்டிருந்தார். மதுவுக்கு எதிராக தொடர்ந்து பல்வேறு அமைப்பினரும் பிரசாரம் செய்து வரும் நிலையில், தி.மு.க தலைவர் கருணாநிதி, ‘‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சமுதாய மாற்றத்துக்கும் ஏற்றத்துக்கும் வழிவகுக்கும் வகையில் மதுவிலக்கை அமல்படுத்துவோம்!’’ என்று அறிவித்துள்ளார்.

‘‘தினசரி கதறி  அழுவது யார்?”
‘‘ஓ.பன்னீர்செல்வம் என்னை தனிமையில் பார்த்தால் அழுதுவிடுவார். அந்த அளவுக்குக் கஷ்டப்படுகிறார்” என்று சமீபத்தில் கருணாநிதி பேசி இருந்தார். இதற்கு அமைச்சர் பன்னீர்செல்வம் பதில் சொல்லி இருக்கிறார். கடந்த 7-ம் தேதி ஆலந்தூரில் நடந்த பொதுக்கூட்டத்தில்,  பேசிய அவர், ‘‘ஆலந்தூர் பொதுக்கூட்டத்தில் கருணாநிதி என்னை வம்புக்கு இழுத்திருக்கிறார். கருணாநிதியை நான் பார்த்தால் ‘ஓ’ வென கதறி அழுவேன் என்று கூறியிருக்கிறார். தினசரி கதறி அழுவது யார்? அவரது இடதுகாலில் ஒரு மகனும் வலது காலில் ஒரு மகனும் இருக்கிறார்கள். ஒரு கையில் ஒரு மகளும் மற்றொரு கையில் இன்னொரு மகளும் இருக்கிறார்கள். கட்சியில் கோஷ்டி மோதல் உப்பு மூட்டைபோல் அவரது முதுகில் ஏறி அமுக்கிக்கொண்டு கிடக்கிறது. கதறி அழுவது யார் என்பது மக்களுக்கு நன்றாகத் தெரியும். கருணாநிதிதான் அன்று கூட்டத்தில் அழுது கதறி இருக்கிறார். என்னை மக்கள் ஏமாற்றிவிட்டனர் என்று கதறி அழுதிருக்கிறார். என்னதான் அழுது புரண்டாலும் மக்கள் இனி கருணாநிதியை மன்னிக்க மாட்டார்கள். நம்ப மாட்டார்கள்’’ என்று பொரிந்து தீர்த்தார்.

அரசு வக்கீல் பெயரை நீக்கிய போலீஸ்!
சென்னையில் அரசு வழக்கறிஞராக இருப்பவர் எம்.எல்.ஜெகன். இவரை அரசியல்வாதிகள் அனைவரும் அறிவார்கள். ஜெயலலிதா சொல்லும் அவதூறு வழக்குகளைத் தாக்கல் செய்பவர் இவர்தான். இவர் மீது ராயபுரம் சட்டமன்றத் தொகுதி அ.தி.மு.க செயலாளராக இருக்கும் சண்முகம், கடந்த வெள்ளிக்கிழமை ராயபுரம் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில், ஜெகன் மற்றும் அவருடைய மனைவி சவீதா, மகன் கார்த்திக், தம்பி தமிழ்வாணன் ஆகியோர் 20 பேருடன் வந்து தன்னையும் தன் குடும்பத்தினரையும் தாக்கியதாகக் குறிப்பிட்டிருந்தார். புகாரைப் பெற்றுக்கொண்டு வழக்குப் பதிவு செய்த போலீஸ், எஃப்.ஐ.ஆரில் இருந்து ஜெகன் பெயரை நீக்கிவிட்டது. போலீஸ் தரப்பில் இதுபற்றி விசாரித்தபோது, ‘‘ஜெகன் அரசு வழக்கறிஞர். சம்பவம் நடைபெற்றதாக சொன்ன நேரத்தில் அவர் நீதிமன்றத்தில் இருந்தார். அவருடன் ஒரு சப்-இன்ஸ்பெக்டரும், எங்கள் டிரைவரும் கூடவே இருந்தனர். ஆனால், அந்த நேரத்தில்தான் தன்னை ஜெகன் நேரில் வந்து தாக்கியதாக சண்முகம் சொன்னார். பிறகு தீர விசாரித்த போது, ஜெகன் நேரடியாக வரவில்லை. அவருடைய ஆட்கள் வந்து தாக்கினார்கள் என்றார். முன்னுக்குப் பின் முரணாக சண்முகம் பேசியதால், நாங்கள் அரசு வழக்கறிஞர் ஜெகனின் பெயரை நீக்கிவிட்டோம்” என்று சொல்கிறார்கள்.
‘‘சண்முகம் கட்சிக்காரர்தான். ஆனால், அவர் செயல்பாடுகள் எல்லாம் கட்சி விரோதமானது. அதில் போலீஸ் எடுக்கும் நடவடிக்கைகளில் என்னைத் தலையிடச் சொல்வார். நான் தலையிடமாட்டேன். சட்டப்படிதான் செயல்படுவேன் என்று சொல்லிவிடுவேன். அதில் கடுப்பாகிப் போன, சண்முகம் என் மீது பொய்ப் புகார் அளித்துள்ளார். சண்முகத்தின் தவறான நடவடிக்கைகள் பற்றி தலைமைக் கழகத்தில் புகார் அளிக்க உள்ளேன்” என்று சொல்லிவருகிறாராம் ஜெகன்!

‘வயசானாலே எல்லாம்  வரத்தானே செய்யும்!’
கடந்த சில மாதங்களாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார் சோ. மருத்துவமனையில் இருந்து வீட்டுக்குத் திரும்பியவருக்குத் திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடியாக அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதே அப்போலோ மருத்துவமனையில் தைராய்டு பிரச்னைக்காக அட்மிட் ஆகி, கனிமொழிக்கு ஆபரேசன் செய்யப்பட்டிருந்தது. கனிமொழியைப் பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு வந்தார் கருணாநிதி. அப்போது சோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தகவல் அவருக்குச் சொல்லப்பட்டது. ஏற்கெனவே, சோ உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தபோது, அவரது வீட்டுக்குப் பார்க்க வருவதாக கருணாநிதி தரப்பில் இருந்து சொல்லப்பட்டது. ‘அவரு எதுக்கு கஷ்டப்பட்டு என்னை வந்து பார்க்கணும்... வேண்டாம் என்று சொல்லிவிடுங்கள்!’ என மறுத்துவிட்டாராம் சோ. அதனால், கனிமொழியைப் பார்த்துவிட்டு சோ தங்கியிருந்த அறைக்குச் சென்றிருக்கிறார் கருணாநிதி. ராஜாத்தி அம்மாள், துரைமுருகன், ஆ.ராசா, எ.வ.வேலு ஆகியோரும் அவருடன் சென்றிருக்கிறார்கள். சோவிடம் அவரது உடல்நலம் பற்றி கருணாநிதி விசாரித்திருக்கிறார். ‘வயசானாலே எல்லாம் வரத்தானே செய்யும்!’ என்று சொன்ன சோ, கனிமொழியின் உடல்நிலை குறித்தும் கேட்டிருக்கிறார்.

கழுகாரின் வாட்ஸ் அப்!
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை ஜூலை 27-ம் தேதி நடக்க இருக்கிறது.
கடலூர் கூட்டத்தைத் தொடர்ந்து, அடுத்து சேலத்தில் கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளாராம் ஸ்டாலின்.
அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், வைத்திலிங்கம் இருவருக்கும் துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பும் பழனியப்பனுக்குப் பொருளாளர் பதவியும் அ.தி.மு.க-வில் தரப்போவதாகத் தகவல்.
கடலூர் கூட்டத்தை முடித்துவிட்டு புறப்பட்ட ஸ்டாலினுக்குத் திடீரென நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டுள்ளது. புதுச்சேரியில் வைத்து மருத்துவப் பரிசோதனை செய்துள்ளார்கள்.
கழுத்தில் தைராய்டு ஆபரேஷன் செய்துகொண்ட கனிமொழியைப் பார்த்ததும் கருணாநிதி கண்கலங்கி உள்ளார்.
 அதானி குழுமத்தைப் பற்றி மீடியாக்களிடம் தமிழிசை செய்த விமர்சனத்தை ஒரு குரூப், டெல்லிக்கு அனுப்பி வைத்துள்ளது.


No comments:

Post a Comment