சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

24 Jul 2015

பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளியில் அரண்மனை

சபதத்தை நிறைவேற்றுவதற்காகத் தான் கட்டிய கால்வாயில் இருந்து இன்றுவரை தண்ணீரைப் பயன்படுத்தாமல் சபதத்தை நிறைவேற்றி வருகின்றனர் காலிங்கராயர் பரம்பரையினர்.

பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளியில் அரண்மனை என்றாலே சிறு குழந்தையும் கை காட்டும் இடமாக உள்ளது 5 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கும் அரண்மனை.

காலிங்கராயர் வழியில் வந்த இந்த ஜமீனின் காலம் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன். கொங்கு நாட்டை ஆண்ட வீரபாண்டியனின் படையில் சேர்ந்த லிங்கையன், தன் மதிநுட்பத்தாலும், தளபதியாகிப் பதவி உயர்வுடன் அமைச்சராகி காலிங்கராயன் என்ற உயர் பட்டத்தைப் பெற்றதாக ஒரு கருத்து நிலவுகிறது.

அத்தை மகளைப் பெண் கேட்டுச் சென்ற போது மாமாவின் பேச்சால் மனமுடைந்து, தன் பகுதியை தண்ணீர் வசதியுடன் கூடிய நன்செய் நிலமாக மாற்றுவேன் என்று உறுதி பூண்ட காலிங்கராயன், வாய்க்கால் வெட்டுவதற்கு எடுத்த முயற்சிகள் பலப்பல.

அதற்கு எதிர்ப்புகளும் அதிக அளவில் இருந்தன. கால்வாய் வெட்டுவதால் காலிங்கராயனுக்குத்தான் லாபம் அதிகம் என்று உறவினர்கள் கூறியதையும் பொருட்படுத்தாமல் கால்வாய் வெட்டப்பட்டது.

சுமார் 800 ஆண்டுகளுக்கு முன் வெட்டப்பட்ட அந்தக் கால்வாய் இப்போதும் ஈரோடு மாவட்டத்தில் காலிங்கராயன் கால்வாய் என்ற பெயருடன் ஓடுகிறது. கி.பி. 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சுமார் 60 மைல் நீளமுள்ள இந்தக் கால்வாய் சுமார் 12 ஆண்டுகளில் முடிக்கப்பட்டது. இதற்கு ஏற்பட்ட எதிர்ப்புகளைப் பாண்டிய மன்னன் உதவியுடன் காலிங்கராயன் முறியடித்தான் என்றும் கூறப்படுகிறது. பவானியில் அணை கட்டி அங்கிருந்து கொடுமுடி நொய்யல் ஆறுவரை சுமார் 17,000 ஏக்கர் பயனுறும் வகையில் கால்வாய் வெற்றிகரமாக முடிக்கப்பட்டது. கால்வாயும் அணையும் கட்டிய தொழில் நுட்பம் இன்றும் பொதுப்பணித்துறையினரைப் பிரமிப்புக்கு உள்ளாக்கியுள்ளது. இந்தக் கால்வாய் அமைப்பு அனைத்திலும் எந்த இயந்திரமும் பயன்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கால்வாய் வெட்டும் பணிக்காக பாசனப் பகுதி நிலங்களுக்கு அப்போதே தீர்வை வசூலிக்கப்பட்டது.

கால்வாய் வெட்டி முடிக்கப்பட்ட பின் தன் குடும்பத்தார் அனைவருடனும் அங்கிருந்து வெளியேறி ஜமீன் ஊத்துக்குளிக்கு வந்து பாண்டிய மன்னனின் உதவியுடன் ஆட்சி செய்தார் காலிங்கராயர்.


தான் கட்டிய வாய்க்கால் நீரைத் தன்னுடைய சந்ததியினர் யாரும் பயன்படுத்த மாட்டார்கள் என்று அன்று கொடுத்த வாக்குறுதியை காலிங்கராயரின் வாரிசுகள் இன்றும் கடைப்பிடித்து வருகின்றனர்.

இக்கால்வாய்ப் பணிகளை 1800-ல் புக்கானர் பாதிரியார் மிகச் சிறந்த முன்னோடித் திட்டம் என்று பாராட்டியுள்ளார்.

இவர்கள் கொடுத்த நிலத்தில் ஈரோட்டில் இன்றும் பொதுப்பணித்துறை விருந்தினர் மாளிகையான காலிங்கராயன் இல்லம் கம்பீரமாக வீற்றுள்ளது.

இப்போதைய ஜமீன் ஊத்துக்குளியில் காலிங்கராயன் பரம்பரையினர் 10 ஊர்களுக்கு அதாவது ஊத்துக்குளி, முத்தூர், போடிபாளையம், குளத்தூர், சேர்வைக் காரன்பாளையம், ராசிசெட்டிபாளையம், ஐயம்பாளையம், நல்லூத்துக்குளி, குமாரபாளையம், திம்மங்குத்து ஆகிய ஊர்களுக்கு வரி வசூல் செய்யும் உரிமையைப் பெற்றிருந்தனர். ஊத்துக்குளி அருகே அகத்தூர் அம்மன் கோயில் என்ற கோயிலையும் காலிங்கராயன் உருவாக்கினார்.

காலிங்கராயன் பரம்பரையில் 31-வது தலைமுறையைச் சேர்ந்த முத்துசாமி காலிங்கராயர் தனது எல்லையை விரிவுபடுத்தினார். 1913-ல் முத்துராமலிங்க காலிங்கராயரின் தாத்தாவுக்கு கோவை மாவட்ட ஆட்சியர் துரை, திவான்பகதூர் பட்டம் வழங்கினார். புதுதில்லியில் நடந்த ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் முடிசூட்டு விழாவுக்கு கோவை மாவட்டப் பிரதிநிதியாகச் சென்று வந்தார். பயிருக்கு விதிக்கப்படும் வரிகள், ஜமீன் சார்பில் அரசுக்குக் கட்ட வேண்டிய வரி உள்ளிட்ட அனைத்துக்கும் கணக்கு வழக்குகள் உண்டு.

கடந்த 1911-1912-ம் ஆண்டில் ஜமீன் ஊத்துக்குளியின் நிதி நிலை அறிக்கை ரூ.43 ஆயிரத்து 803-க்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அப்போது ஜமீன் ஊத்துக்குளிக்கு உள்பட்ட மொத்த மக்கள் தொகை 8367.

காலிங்கராயர் மற்றும் சமத்தூர் ஜமீன்களுக்கு இடையில் பெண்ணெடுத்துப் பெண் கொடுக்கும் வழக்கம் இருந்துள்ளது.

இப்போது ஜமீன் ஊத்துக்குளி அரண்மனையில் அகத்தூர் அருண்குமார் காலிங்கராயர் வசித்து வருகிறார். அவருடைய சகோதரர்கள் கிருஷ்ணராஜ் காலிங்கராயர், வெற்றிவேல் காலிங்கராயர், மோகன்குமார் காலிங்கராயர் ஆகியோர் வெளியூர்களில் வசிக்கின்றனர்.

அருண்குமார் காலிங்கராயரின் கட்டுப்பாட்டில் உள்ள அரண்மனையில் ஒரு பகுதி மட்டும் இப்போதும் மிகச் சிறப்பாகப் பராமரிக்கப்படுகிறது.

அரண்மனைக்குள் நுழைந்தவுடன் நம்மை வரவேற்பது பாடம் செய்யப்பட்ட சிறுத்தையும், கரடியும்தாம். ஊத்துக்குளி ஜமீன் முத்திரை இரு தந்தங்களுக்கு நடுவில் வைக்கப்பட்டுள்ளது.

அந்தக் காலத்திய ஜமீன் முத்திரை, தங்கக் காசுகள், அந்தக் காலத்தில் பயன்படுத்தப்பட்ட காசுகள், பல்வேறு வகையான மான் கொம்புகளுடன் கூடிய பழங்காலக் கத்திகள், பாடம் செய்து வைக்கப்பட்ட யானையின் துதிக்கை, பல்வேறு வகையான மான் கொம்புகள், குத்தீட்டிகள், பழங்காலத்தைப் பறைசாற்றும் கார், ஜமீன்தாரரின் மாட்டு வாகனங்கள், ஆங்கிலேயர் வழங்கிய சிம்மாசன இருக்கைகள், 12-8-1897-ல் சென்னை அரசாங்கத்திடம் இருந்து வழங்கப்பட்ட சான்றிதழ்கள் ஆகியவை இன்றும் மெருக்குலையாமல் பாதுகாக்கப்படுகின்றன.

அகத்தூர் அம்மனை கோயிலில் இன்றும் நவராத்திரி பூஜைகள் சிறப்பாக நடந்து வருகின்றன. அந்தக் காலத்தில் எடைக்குப் பயன்படுத்தப்பட்ட கற்கள் இன்னமும் அப்படியே வைக்கப்பட்டுள்ளன.

இப்போது அரண்மனையில் வசித்து வரும் அருண்குமார் காலிங்கராயர் கூறியது:

அப்போது கட்டப்பட்ட காலிங்கராயன் கால்வாயில் இருந்து கிடைக்கும் தண்ணீரை இப்போதும் எங்கள் பரம்பரையினர் பயன்படுத்துவதில்லை. இப்போதும் அகத்தூர் அம்மன் கோயிலில் பூஜை வழக்கம்போல நடந்து வருகிறது. எங்களால் முடிந்த அளவுக்கு இந்நிலை தொடரும் என்று தெரிவித்தார்.



No comments:

Post a Comment