சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

31 Jul 2015

போதையில் மாற்றம்....சுடுகாட்டிற்கு அனுப்புவதில் முன்னேற்றம் … யாரோ ?

'டாஸ்மாக்  உங்கள் அருகிலேயே..இனி எப்போதும் உங்களுடன்!' என்று சொல்லுமளவிற்கு  நவீன வடிவில் அரசின்  "மதுபான  சேவை " நம்மை நெருங்க ஆரம்பித்துள்ளன .
ஏற்கனவே உள்ள கடைகள் மூலம் பெண்களின் வாழ்க்கையை கெடுத்து கோடிக்கணக்கில் லாபம் பார்க்கும் நிலையில், அரசின் இலவச தாலி வழங்கும் திட்டத்திற்கு பணப்பற்றாக்குறை ஏற்படாமல் தடுக்க,  நவீன மதுபானக் கடைகளை, வணிக வளாகங்களில் திறக்க முடிவு செய்துள்ளது அரசு. 

'எல்லாமே இலவசமாக கொடுக்கும் அரசு, கண்ணீர் அஞ்சலி போஸ்டர்  கொடுக்குமா?' என பெண்கள் கேட்கும் அளவிற்கு குடிகார சமூகத்தை உருவாக்கி, பெண்களை விதவையாக்கி, ஆண்களை போதையில் முடக்கி  கோடிகளில் மிதந்து வருகிறது. 

அரசுக்கு நல்ல வருமானம் கொட்டப் போகும் நிலையில், வேறு யார் யாருக்கு மது உதவியாக இருக்கும் என்று பார்க்கலாம்.... 

நவீன வணிக வளாகங்களில் மதுபானக் கடைகள் திறப்பால் போலீசுக்கு அதிகப்படியான அடிதடி, கட்டபஞ்சாயத்து, கொலை, கொள்ளை வழக்குகள் ஏற்பட்டு என்றும் பணப் பிரச்னை ஏற்படாமல் அரசின் மது பானக்கொள்கை, போலீசுக்கு  “நண்பனாக” திகழும். 

ஏற்கனவே ஹெல்மெட் சட்டம் மூலம் கடுமையாக வேலை செய்யும் போக்குவரத்து போலீசார், இனி குடி போதை வாகன ஓட்டிகளின் போதை விபத்துக்களை "கட்டப்பஞ்சாயத்து  பேசி"  சமரச நாயகனாக திகழ்வார்கள். இதனால் போக்குவரத்து போலீசுக்கு மனம் சந்தோஷத்தில் இருக்கும்.

இதய நோய், சர்க்கரை நோய் ,மலட்டுத் தன்மைக்கு மருந்து மாத்திரைகள் அதிகம் விற்பனையாகி, மருந்து விற்பனை நிறுவனங்கள் கோடிக்கணக்கில் கல்லா கட்டும்.  மதுவால் அதிகப்படியான நோயாளிகள் உருவாவதும், விபத்துக்கள் ஏற்படுவதால் 108 வண்டியின் எண்ணிக்கை அதிகமாகும். தெருவில் ஆட்டோக்கள் போல, 108 வண்டி திரும்பிய இடமெல்லாம் நிறுத்தப்படும். மேலும்  இலவச அமரர் ஊர்தியும் மக்களுக்காக வழங்கப்படும். இதனால் மக்களுக்கு ஓட்டுனர் வேலை வாய்ப்பு கிடைக்கும்.

மதுவால் கடனாகி, தாலியைக் கூட அடகு வைக்கும் நிலைக்கு மக்கள் ஆளாவதால் அடகுக் கடைகளின் ஆதிக்கம் அதிகமாகும்.  பாதிப்பேர் மதுவால் கடன்பட்டு, நாட்டை விட்டு வெளியேறுவதால் வாடகை வீடுகள் எளிதில் கிடைக்கும்.
விவசாயக் கூலிகள் குடித்து நோய் வாய்ப்பட்டு படுத்த படுக்கையாக கிடப்பதால், விவசாயம் செய்ய ஆளில்லாமல்  விலை நிலங்களை கூறு போட்டு விற்கும் நிலைமையும் ஏற்படும். இதனாலும் அரசுக்கு பத்திரப் பதிவின் மூலம் லாபம், சிலருக்கு லஞ்சமும் அமோகம்.

“மனு” கொடுப்பவருக்கு “மது கொடுக்கும் திட்டம்: மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மிகப்பெரிய மதுக்கடைகளை திறந்து,  மனு கொடுப்பவர்கள் மனம் நோகாதவாறு  மக்களின் புண்பட்ட மனதிற்கு மது மூலம் போதை கொடுத்து வீட்டிற்கு அனுப்பும் திட்டம் அரசிடம் வரலாம். 

குறிப்பு: மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்திலேயே உள்ள மதுக்கடை என்பதால் சரக்கு புதிதாகவும் ,கலப்படம் இல்லாமல் கிடைக்கும் என்ற உறுதிமொழி வழங்கப்படும்.

மாணவர்களை  மது குடிக்க அழைக்கும்   திட்டம்  : இன்றைய மாணவர்களே நாளைய   டாஸ்மாக்  சமூகம் என்பதால் கல்லூரி காண்டீனில் மது வழங்க அரசு சிறப்பு ஏற்பாடு செய்யலாம். இதன் மூலம் "சாராய  பாரம்பரியம்" பாதுகாக்கப்படும். 
குறிப்பு: அனைத்து மாணவர்களும் ஒரே நேரத்தில் வருவதால் கூட்ட நெரிசலைத்  தவிர்க்க அரசு இரவிலும் கல்லூரியில் கடைகளை திறக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்   கொள்கிறது. 

அரசு மருத்துவ மனையில் மதுபானக் கடைகள் திட்டம் : இங்கு உள்ள மதுபானக் கடைகள் மூலம் டோக்கன் பெற்று, குடிப்பவர்களுக்கு அரசே இலவசமாக நோயாளிகள் படுக்கை வசதி செய்து தரும். அரசு சிறப்பு சலுகையாக மாத்திரைகள் உடனுக்குடன் வழங்கப்படும்.

குறிப்பு:  இங்கு வந்து தொடர்ந்து குடித்து செத்துப் போனால் உடனுக்குடன் இலவச அமரர் ஊர்தி வண்டி சேவை உண்டு. 

சூப்பர் சுடுகாட்டு சரக்கு சரக்கு திட்டம்: அரசு மக்களை அனுப்ப விரும்பும் ஒரே இடம் இது. பெரும்பாலான மக்கள் குடியால் செத்துப்போவதால் அவர்தம் நண்பர்கள்,உறவினர்கள் சுடுகாட்டிற்கு வரும் நிலையில், 'சூப்பர் சுடுகாட்டு சரக்கு திட்டம்' மூலம் அங்கேயும் ஒரு பார் வசதி ஆரம்பிக்க அரசு திட்டமிடும்.  இதன் மூலம் அரசுக்கு வருவாயும், சுடுகாட்டு ஊழியர்களுக்கு வேலை வாய்ப்பில் நம்பிக்கையும் பிறக்கும். 

குறிப்பு: அங்கேயே இரவு பகலாக குடித்து செத்துபோனவர்களுக்கு அரசே எரிக்க இலவசமாக விறகு கொடுக்கும். கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டித் தரும். இந்த வாய்ப்பு வேறு எங்கும் கிடையாது. முந்துங்கள். குடிக்க வைத்து போதையில் படுக்க வைப்பதில் மாற்றம்....சுடுகாட்டிற்கு தமிழர்களை அனுப்புவதில் முன்னேற்றம்.

இதற்கு காரணம்  யாரோ ?.   



No comments:

Post a Comment