சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

31 Jul 2015

கலாம்–ன் 2020 கனவு: டாப் 20 வாய்ப்புகள், பிரச்னைகள்!

லாம் அமரர் ஆகிவிட்டார். அவர் விதைத்துச்சென்றவை 2020ல் விருட்சமாகுமா? அவை எந்த நிலையில் உள்ளன? அவர் கனவின் டாப் 20 வாய்ப்புகள் மற்றும் பிரச்னைகள் பற்றிய ஓர் பார்வை இங்கே...
1. கல்வி

வாய்ப்புகள்:

இந்தியாவின் எழுத்தறிவு இன்று பல மடங்கு அதிகரித்துள்ளது. கல்வி நிறுவனங்களும் பன்மடங்கு அதிகரித்துள்ளன. பட்ட மேற்படிப்பு பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நூறு மடங்கு எழுத்தறிவு மிக்க நாடு என்னும் பெருமை அடையும் நாள் வெகு தொலைவில் இல்லை.

பிரச்னைகள்: 


எழுத்தறிவு மட்டும் போதாது. இந்தியாவின் கல்வி நிறுவனங்களின் கல்வித்தரம் கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டிய ஒன்றாக மாறிவிட்டது. அறிவைத்தேடும் இடம் என்பது போய் வேலை பெற்றுத்தரும் வேலைவாய்ப்பு அலுவலகம் போல் மக்கள் எண்ணிக்கொள்ள தொடங்கி விட்டனர். அதற்கேற்றார் போல் கல்வி நிறுவனங்களும் தங்களை மாற்றிக்கொண்டுவிட்டன. புதிதாய் பல போலி பல்கலைக்கழகங்கள் முளைக்கின்றன. கல்வியை காசு பார்க்கும் தொழிலாக பல கல்வி நிறுவனங்கள் ஆக்கிக்கொண்டன. தொழிற்கல்வி பட்டதாரிகள் போதிய கல்வியறிவின்றி, வேலையில்லா பட்டதாரிகளாகி விடுகின்றனர். இந்த ஆண்டிலேயே இந்தியாவில் உள்ள போலி பல்கலைக்கழகங்கள் குறித்த அறிக்கையை யூ.ஜி.சி வெளியிட்டது. அதில் தமிழ்நாட்டில் உள்ள ஒரு பல்கலைக்கழகமும் அடக்கம்.

2. பொருளாதாரம்

வாய்ப்புகள்:

இன்று பொருளாதார கல்வி பயிலும் மாணவர்களும், கல்வி நிறுவனங்களும் நிறையவே வந்துவிட்டன. பொருளாதார இந்தியா கிட்டத்தட்ட ஒரு பொருளாதார வல்லரசாகவே பார்க்கப்படுகிறது. அகிலம் மெச்சும் பொருளாதார வல்லுனர்களை இந்தியா கொண்டுள்ளது. அமர்த்யா சென், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் சி.ரங்கராஜன் மற்றும் இந்நாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம்ராஜன் ஆகியோர் பிரபலமான பொருளாதார வல்லுநர்கள் ஆவர். 

பிரச்னைகள்:

இத்தனை பொருளாதார வல்லுநர்கள் இருந்தும் நம் பொருளாதாரம் எழு எழு என்று எழுப்பினாலும் எழும்பமாட்டேன் என்கிறது. காரணம் பொருளாதார வளர்ச்சிக்கான பல காரணிகள் அரசின் கட்டுபாட்டில் இல்லை என்பதே. எடுத்துக்காட்டாக பெட்ரோல் விலை நிர்ணயம் அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. நம் பொருளாதாரம் எவ்வளவுதான் வளர்ச்சியை நோக்கி சென்றாலும், பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றும் எரிபொருள் விலையும் ஏறிக்கொண்டே செல்கிறது. பானையில் தண்ணீர் நிறைக்க நிறைக்க அதிலுள்ள ஓட்டை வழியே தண்ணீர் வெளியே பாய்ந்து பானை நிரம்பாமலே இருக்கும் கதைதான் இது. மற்றொரு காரணம், பல பொருளாதார வல்லுநர்கள் தங்கள் ஆராய்ச்சியை முடித்ததும் வெளிநாட்டிற்கு ‘சேவை’ செய்ய சென்றுவிடுவதுதான்.

3. சுகாதாரம்

வாய்ப்புகள்:

சுகாதாரம் குறித்த விழிப்புணர்ச்சி இந்திய சுதந்திரத்துக்கு பின் தீவிரமானது. ஊர் ஊராய், கிராமம் கிராமமாய் சுகாதாரம் குறித்த பிரசாரங்கள் இந்திய அரசால் செய்யப்பட்டன. கிராமங்களில் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அரசு கட்டட சுவர்களை அலங்கரித்தன. சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை தனியார் தொண்டு நிறுவனங்கள் தற்போது முன்னெடுத்து செல்கின்றன. சுகாதாரக்கேட்டினால் வரும் மற்றும் பரவும் நோய்களை பற்றி மக்களுக்கு தெரியப்படுத்தப்படுகிறது.

பிரச்னைகள்:

இந்தியாவில் ஐம்பது சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு ஒரு சென்ட் நிலம் கூட இல்லை. இந்தியாவின் மக்கள் தொகை 130 கோடி என்று வைத்துக்கொள்வோம். அப்படியெனில் 65 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பொதுக்கழிப்பறைகளையே பயன்படுத்த வேண்டியுள்ளது. இத்தனை பேருக்கும் கழிப்பறை உள்ளதா என்றால், இல்லை. அவைகளை கட்டமைக்க அரசின் முயற்சியும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை. சிலவற்றுக்கு ஒதுக்கப்பட்ட நிதி, அரசியல்வாதிகளின் கைதாண்டி செல்லும்போதே மெலிந்து நொந்து நூடுல்ஸ் ஆகிவிடுகிறது. சிலபல கழிவுகள் நகரத்துக்கு வெளியே கொண்டு செல்லப்பட்டு எரிக்கவோ, மட்கிபோவதற்கான ரசாயனமோ தெளிக்கப்படுகிறது. இது பெரும் சுகாதாரக்கேட்டை விளைவிக்கிறது. வடசென்னையின் பல இடங்களில் தொழிற்சாலை கழிவுகள் மண்ணுக்குள் புதைக்கப்படுவதால், நிலத்தடி நீர் மஞ்சள் நிறத்தில் வருவதாக சில மாதங்களுக்கு முன்னர் பத்திரிகையில் செய்தி வந்தது. இப்படி இந்தியாவில் பல சம்பவங்கள் உண்டு.
4. மருத்துவம்

வாய்ப்புகள்:

இந்தியாவில் மருத்துவம் இன்று கிட்டத்தட்ட உலகத்தரத்தில் உள்ளது. ஈரான், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து மருத்துவத்துக்காக பலர் இந்தியா வந்து செல்கின்றனர். இதயக்குழாய் மற்றும் இதயமாற்று அறுவை சிகிச்சைகள் சர்வ சாதாரணமாக நடந்தேறுகின்றன. ஒரு நகரத்திலேயே பல மருத்துவமனைகள் உலகத்தரத்திலான கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. போலியோ இல்லாத நாடாக இன்று நெஞ்சை நிமிர்த்தியிருக்கிறது என்றால் அது சாதாரணமான சாதனை அல்ல. இலவச மருத்துவக்காப்பீடுத்திட்டம் ஏழை எளிய மக்களுக்கு மிகுந்த பயனைத்தருகிறது. 108 ஆம்புலன்ஸ் திட்டம் கிட்டத்தட்ட ஒரு சாதனையே. இந்த திட்டத்தால் பிரசவ வேளையில் உயிரிழப்பு கிட்டத்தட்ட பாதியாக குறைந்துள்ளது.

பிரச்னைகள்:

நம்மூர் மருத்துவமனைகளின் தரம் கிட்டத்தட்ட உலகத்தரத்தில் இருக்கிறதே தவிர, சிகிச்சை உலகத்தரத்தில் இல்லை. நம்மூர் அரசியல்வாதிகளும் சினிமா பிரபலங்களும் இந்தியாவில் சிகிச்சை எடுத்துக்கொள்வதே இல்லை. காரணம் தரமின்மை. இருந்தாலும் மேற்கண்ட ‘கிட்டத்தட்ட உலகத்தர’ வசதிகள் அனைத்தும் தனியார் மருத்துவமனைகளிலேயே இருக்கிறது. இலவச மருத்துவக்காப்பீட்டு திட்ட வசதி சில தனியார் மருத்துவமனைகளில் உள்ளபோதிலும், இந்த பரிசோதனை, அந்த பரிசோதனை என்று சொல்லி காப்பீட்டில் சேராத பல பரிசோதனைகளை நடத்தச்சொல்லி வற்புறுத்தி நோயாளியிடம் ஒரு கணிசமான கட்டணத்தை வசூலித்துக்கொள்கிறது. இதன்காரணமாக தரமான சிகிச்சை ஏழைக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது.

அவசரத்துக்கு 108 ஆம்புலன்ஸ் சேவை பெற நினைப்பவர்கள் சிலநேரம் சென்று நிற்கும் இடம் தனியார் மருத்துவமனையாகவே இருக்கிறது. இதில் கணிசமான தொகை கமிஷனாக ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு வழங்கபடுவதாக ஒரு தனியார் தொலைக்காட்சி சமீபத்தில் சாட்சியுடன் வெளியிட்டது. மருந்துகளின் விலை மலையளவு உள்ளது. இந்தியாவில் மருந்துகளுக்கான ஆராய்ச்சி நடைபெறாததும், மருந்து நிறுவனங்கள் தனியார் வசம் உள்ளதுமே இதற்கு முக்கியமான காரணம். இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படாத இருபதுக்கும் மேற்பட்ட நோய்கள் உள்ளது. ஒரு நோய் பத்தாயிரத்தில் ஒருவருக்கோ, லட்சத்தில் ஒருவருக்கோ வருவதாயிருந்தால், அந்த நோய்க்கான மருந்தை கண்டுபிடிப்பதில் தனியார் மருந்து நிறுவனங்கள் முயற்சி செய்வதில்லை. காரணம், அதை விற்றால் அவர்களுக்கு கொள்ளை லாபம் கிடைக்காது. அரசு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்களும் சரிவர செயல்படுவதில்லை. 

5. இயற்கை விவசாயம் மற்றும் விவசாய உற்பத்தியில் தன்னிறைவு

வாய்ப்புகள்:

சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட இன்று இயற்கை விவசாயத்திற்கான விழிப்புணர்வு அதிகம் பகிரப்படுகிறது. பத்திரிகைகளும், ஊடகங்களும், புகழ்பெற்றவர்கள் இயற்கை விவசாயத்தை முன்னெடுத்து செல்கிறார்கள். நடிகர் அஜீத்குமார் தன் வீட்டு மாடியிலேயே இயற்கை விவசாயத்தோட்டம் ஒன்றை வளர்த்து வருகிறார். சமீபத்தில் திரைக்கு வந்த 36 வயதினிலே திரைப்படமும் இயற்கை விவசாயதைப்பற்றியே பேசுகின்றன.

பிரச்னைகள்:

இந்தியாவில் பாதிக்கு மேற்பட்டவர்களுக்கு ஒரு சென்ட் நிலம் கூட இல்லை. மீதி பாதிபேர் மட்டுமே பங்குகொள்ளும் ஒரு நிகழ்வாகவே பார்க்கவேண்டியுள்ளது. சொந்தமாக நிலம் வைத்திருப்பவர்கள் கூட விவசாய நிலத்தை விற்றுவிட்டு ஓடிப்போய்விட துடிக்கின்றனர். காரணம் விவசாயம் சமீப காலங்களில் பொய்த்துப்போகும் தொழிலாகவே இருக்கிறது. விவசாயத்தை மையமாக கொண்ட நாட்டில், ஒரு விவசாயி தன் நிலத்தை விற்றுவிட்டு ஓடிவிட துடிப்பதைவிட வெட்கிக்குனியவேண்டிய செயல் வேறெதுவும் இருந்துவிடாது.

6. உள்நாட்டு மற்றும் எல்லை பாதுகாப்பு, ராணுவ பலம்

வாய்ப்புகள்:

எல்லை பாதுகாப்பிலும், ராணுவத்திலும் நாமும் உலகத்தரத்திற்கு வந்துவிட்டோம். அப்துல் கலாம் இட்ட விதை இன்று விருட்சமாய் மாறி, நாமே போர்க்கப்பல்கள், போர் விமானங்கள் மற்றும் இன்னபிற போர்க்கருவிகள் என தொழில்நுட்பத்தில் தன்னிறைவை அடைந்து கொண்டிருக்கிறோம்.

பிரச்னைகள்:

உள்நாட்டு பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. நமது புலனாய்வுத்துறையின் செயல்பாடுகள் மெச்சும்படி இல்லை. நக்சல்கள் மற்றும் மாவோயிஸ்ட்களின் தாக்குதல்களை நம்மால் முன்கூட்டியே அறிந்து முறியடிக்க முடிவதில்லை. சில தினங்களுக்கு முன்பு பஞ்சாபில் நடந்த தீவிரவாத தாக்குதலே இதற்கு எடுத்துக்காட்டு. உள்நாட்டு கலவரங்களை நம்மால் முன்னுணர்ந்து, எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க முடிவதில்லை.
 
7. மாற்று எரிசக்தி

வாய்ப்புகள்:

மாற்று எரிசக்தியை நாம் கண்டுகொண்டுவிட்டோம். மாநில அரசுகள் மாற்று எரிசக்தி திட்டங்களை வகுக்கின்றன. நிலக்கரிக்கு மாற்றான எரிசக்திக்காக சூரியமின்சக்தியை மாநில அரசுகள் கண்டுகொண்டுள்ளன.

பிரச்னைகள்:

மாற்று எரிசக்தி திட்டத்தில் அணுமின்சக்தியும் ஒன்று. ஆனால், அதன் பக்கவிளைவுகளும், பின்விளைவுகளும் மிகவும் ஆபத்தானவை. சின்ன எசகுபிசகு ஆகிவிட்டால் ஒரு மாநிலமே காணாமல் போய்விடக்கூடிய வாய்ப்புண்டு. ஹிரோஷிமா-நாகசாகியின் கதி நம் கண்முன்னே தெரிகிறது. இருந்தும் ரஷ்யாவுடன் இருபது வருடங்களுக்கு முன்பு போட்ட ஒப்பந்தங்களுக்கு பயந்து இன்று நாம் அணுமின்நிலைய கருவிகளை வாங்கி நிறுவித்தான் ஆகவேண்டுமா? இதைவிட சிறந்த பாதுகாப்பான திட்டம் ஏதும் அரசு யோசிக்கலாமே.
  
8. உணவு பதப்படுத்துதல் தொழில்நுட்பத்தில் மேம்பாடு

வாய்ப்புகள்:

உணவு பதப்படுத்துதல் தொழில்நுட்பத்தில் நாம் தன்னிறைவு அடைந்துவிட்டோம்.

பிரச்னைகள்:

உணவு பதப்படுத்துதல் தொழில்நுட்பத்தில் நாம் தன்னிறைவு அடைந்துவிட்டாலும், தொழில் மேம்படாததற்கு காரணம், உற்பத்தி செய்யும் இடத்திற்கு பக்கத்திலேயே பதப்படுத்துதல் கிடங்கு இல்லாததே. மட்டுமல்லாமல், நாம் நமது உணவிற்கு போதுமான சந்தையை வெளிநாடுகளில் உருவாக்கவேண்டியுள்ளது.

9. புதுப்புது தொழில்களை உருவாக்குதல்

வாய்ப்புகள்:

புதுப்புது தொழில்கள் உருவாகும் சூழல் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது உருவாகியுள்ளது. கல்லூரி மாணவர்களே இருவர் இணைந்து ஒரு தொழில் நிறுவனத்தை ஆரம்பிக்கும் அளவுக்கு இன்றைய காலகட்டம் உள்ளது. இந்த புதிய தொழில்களுக்கு நிதியுதவி செய்ய இன்று பல நிறுவனங்கள் வந்துவிட்டன. இவை வென்ச்சர் கேபிடல் நிறுவனங்கள் எனப்படுகின்றன. இத்தகைய நோக்கத்தில் கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங், யுவி கேன் வென்ச்சர்ஸ் என்ற நிறுவனத்தை துவங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. புது தொழிலதிபர்களிடம் ஐடியாக்களும் பழைய தொழிலதிபர்களிடம் அனுபவமும் இருக்கும். இவை ஒன்றிணைந்தால் இவர்களை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.

பிரச்னைகள்:

புது தொழில்கள் வரவர தங்கள் தொழிலை மேம்படுத்தாத தொழிலதிபர்களின் லாபம் குறைகிறது. 'பழையன கழிந்து, புதியன புகும்' என்பதுதானே பொன்மொழி.
 
10. அனைவருக்கும் வேலைவாய்ப்பு

வாய்ப்புகள்:

வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுக்கும் சமுதாயக்கல்லூரிகள் நம் ஊரில் தேவையான அளவு தொடங்கப்பட்டுள்ளன. சிறப்பு தொழிற்பயிற்சி தரும் நிறுவனங்களும் இன்று ஊருக்கொன்று உள்ளன.

பிரச்னைகள்:

இந்த நிறுவனங்களில் படித்து முடித்து வெளியே வரும் மாணவர்கள் அனைவரும் வேலைக்கு தகுதியானவர்களாக இருப்பதில்லை. அறிவில், திறமையில் இவர்கள் மெச்சும்படி இல்லை என்பதே வேலைக்கு சேர்க்கும் பல நிறுவனங்களின் பதில்.

11. தகவல் தொழில்நுட்பத்தில் உலகத்தரம்

வாய்ப்புகள்:

தகவல் தொழில்நுட்பத்தில் நாம் தன்னிறைவை அடைந்து விட்டோம். உலகின் டாப் 10 நிறுவனங்களுள் நம் நாட்டின் மூன்று நிறுவனங்கள் இருப்பதே இதற்கு சாட்சி. 

பிரச்னைகள்:

நாம் ஒரு தொழில்நுட்பத்தை பின்பற்றுபவர்களாகவே இருந்து வருகிறோம். அதனாலேயே இத்துறையில் நம் வளர்ச்சி தடைபட்டிருக்கிறது. நாம் ஒரு தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து முன்னெடுத்து செல்லும் நேரம் வந்துவிட்டது. ஆனால், பூனைக்கு மணி கட்டுவது யார் என்பது தான் கேள்வியே. 

12. உலகத்தர ஆராய்ச்சி மையங்கள்

வாய்ப்புகள்:

உலகத்தர ஆராய்ச்சி மையங்களை நிறுவுவதற்கான சூழல் இன்று பல பல்கலைக்கழகங்களும் உருவாக்கிக்கொண்டுள்ளன. அதற்கான பண உதவியும், திட்ட உதவியும் உருவாக்கித்தர அரசு தயாராய் உள்ளது. 

பிரச்னைகள்:

உலகத்தரத்தில் ஆராய்ச்சி மையங்களை உருவாக்குவதற்கு அரசு தரும் உதவிதொகை சிலநேரங்களில் போதுமானதாக இருப்பதில்லை. 

13. காடு வளர்ப்பு மற்றும் மழைநீர் சேகரிப்பு

வாய்ப்புகள்:

இன்றைய அறிவியல் தொழில்நுட்பவுலகில் காடு வளர்ப்பு மற்றும் மழைநீர் சேகரிப்பின் தேவை பற்றிய அறிவு பலருக்கும் உள்ளது. சில வருடங்களுக்கு முன், மழைநீர் சேகரிப்பை தமிழக அரசே கட்டாயமாக்கியது. சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இவற்றின் முக்கியத்தை செயல்வடிவம் கொடுத்து பரப்பி வருகிறது. சென்னையின் கோட்டூர்புரத்தில் இருக்கும் மரப்பூங்கா (Tree park) இதற்கான சாட்சி. 

பிரச்னைகள்:

அரசின் சில திட்டங்களால் காடுகள் அழியும்படி ஆகிவிட்டன. இந்தியாவின் வட மாநிலங்களில் தாதுகளுக்காக காடுகள் அழிக்கப்பட்டு, மலைகள் குடையப்படுகின்றன. மழைநீர் சேமிப்பு திட்டத்தை அரசே கட்டாயமாக்கிய பின்பும் ஊருக்கு ஒன்றோ இரண்டோ வீடுகள் மட்டுமே செயல்படுத்தின.
 
14. நீர்நிலைகளை மேம்படுத்துதல்

வாய்ப்புகள்:

நதிகள் இணைப்பு திட்டம் அரசால் முன்மொழியப்பட்டுள்ளன.

பிரச்னைகள்:

நாட்டின் நீர்நிலைகள் ஆபத்தான சூழ்நிலையில் உள்ளன. புதிதாய் நீர்நிலைகள் கட்டப்படுவதில்லை. பழைய நீர்நிலைகளுக்காக மாநிலங்கள் சண்டைபோட்டு உச்சநீதிமன்றம் வரை செல்கின்றன. காவேரிக்காக கர்நாடகத்திடமும், முல்லை பெரியாருக்காக கேரளத்திடமும் நாம் குடிமிப்பிடி சண்டை மட்டும் தான் போடவில்லை. பிரச்னை இன்னும் தீர்ந்தபாடில்லை. அதற்குள் பாலாற்றின் குறுக்கே அணை கட்டும் சண்டை வந்துவிட்டது. நதிகள் இணைப்பு தான் நாட்டின் தண்ணீர் பிரச்னைக்கு ஒரே வழி என்றானபின், மாநிலங்கள் ஒத்துக்கொள்ளாமல் பிரச்னையை இழுத்தடிக்கின்றன.

 
15. இளைஞர்கள் கையில் அரசியல்

வாய்ப்புகள்:

இளைஞர்கள் அரசியலுக்கு வர உகந்த சூழல் நாட்டில் நிலவுகின்றது. கட்சிகள் பலவற்றிலும் சில வருடங்களில் இளைஞரணி பதவிகள் காலியாக போகின்றன.

பிரச்னைகள்:

இளைஞர்களுக்கு பதவி கிடைப்பது கட்சியில் மூத்தவர்களுக்கு சிலநேரம் பிடிப்பதில்லை. தாங்கள் ஒதுக்கப்படுவதாக உணர்கிறார்கள். தங்கள் அரசியல் இருப்பை காட்டிக்கொள்ளவே தங்கள் பெயரில் ஒரு கட்சியை ஆரம்பிக்கிறார்கள்.
 
16. ஊழல், போதை மற்றும் உள்நாட்டு அமைதி குழப்பங்கள்

வாய்ப்புகள்:

ஊழலுக்கு எதிரான குரல் இன்று உயரத்துவங்கியுள்ளது. மக்கள் இன்று பல வழிகளில் அமைதியை தேடிக்கொள்ள முற்படுகின்றனர். இன்றைய இளைய சமுதாயம் நிறைய வாசிக்கிறார்கள், கருத்துக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொள்கிறார்கள்.

பிரச்னைகள்:

ஊழலுக்கு எதிரான குரல் வலுத்தாலும், ஊழல் குறைந்தபாடில்லை. கருப்புப்பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வருவது அவ்வளவு எளிதல்ல என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்திலேயே பதிலளிக்கிறது. முக்கால்வாசி இந்தியர்கள் குடிக்கும் புகைக்கும் அடிமையாய் வாழ்கிறார்கள். இந்த பழக்கங்கள் தவறு என்று எண்ணாத அளவிலேயே விளம்பரங்கள் அவர்களை மாற்றிவைத்திருக்கின்றன.

அரசே சகாயவிலையில் ‘சரக்’கை விற்பதால், நாட்டின் குடி கேட்டு, வீடுகளில் மரண ஓலம் அதிகரித்திருக்கிறது. புகை பிடிப்பவர்களும், ‘புகை நமக்கு பகை’ என்பதை மறந்து விட்டனர். கருத்து பெறுதலும், பரிமாறப்படும் கருத்துக்களும் மாற்றுக்கருத்து உள்ளவர்களிடம் ஒரு வெறுப்பை ஏற்படுத்துகிறது. மீண்டும் அமைதியின்மைக்கு வழிவகுக்கின்றன. சமீபத்தில் நடந்தேறிய ‘கிஸ் ஆப் லவ்’ இதற்கு ஒரு எடுத்துகாட்டு.
 
17. சிறந்த வெளியுறவுக்கொள்கை மற்றும் அண்டை நாடுகளுடன் நட்புறவு

வாய்ப்புகள்:

இன்றைய தேதியில் அண்டை நாடுகளுடன் நம் நாடு நட்பு பாராட்டி வருவது நாட்டிற்கு நன்மை பயக்கும்.

பிரச்னைகள்:

நட்பு நாடு என்பது ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்காமல் இருப்பதாகும். நட்பு நாடு என்பதாலேயே அவர்கள் என்ன செய்தாலும் கண்டுகொள்ளாமல் இருப்பது, நம்மை நாமே வலுவற்றவர்களாக காட்டிக்கொள்வதாகும். சமீபத்தில் இலங்கைக்கெதிராக ஐ.நா. சபையில் ஓட்டளிக்காதது ஒரு உதாரணம். 

18. குழந்தைத்தொழிலாளர்கள் மற்றும் பெண் சிசுக்கொலைகள்

வாய்ப்புகள்:

குழந்தைத்தொழிலாளர்களை காப்பாற்றும் பொறுப்பை அரசு தனி சட்டம் வகுத்து செயல்படுத்தி வருவதால், சில வருடங்களாக குழந்தைத்தொழிலாளர் முறை பல இடங்களில் தடுக்கப்பட்டு, குற்றம் புரிந்தவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர். கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை கண்டறியும் செயலுக்கு அரசு தடைவிதித்து சட்டம் இயற்றியுள்ளது. பெண் குழந்தைகள் பிறந்தால் தனியே உதவித்தொகை என்ற பெயரில் பண உதவியும் அரசே செய்கிறது.

பிரச்னைகள்:

இத்தனைக்கும் மூலக்காரணம் என்ன என்பதை அரசு கண்டுபிடித்து களையவில்லை. பெண் குழந்தை சுமை என்று நினைக்கும் சமூகத்தின் மனப்பான்மையை மாற்ற எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. குழந்தைத்தொழிலாளர்கள் உருவாகக்காரணமான வறுமை இன்னும் ஊருக்குள் உலா வருகிறது. 

19. பெண்ணுரிமை மற்றும் பெண் கல்வி

வாய்ப்புகள்:

இன்று பெண்ணுக்கு தனியுரிமை வழங்கப்பட்டுள்ளன. இடஒதுக்கீட்டால் பெண் கல்விக்கு ஒரு தனி உற்சாகம் கிடைத்துள்ளது. 

பிரச்னைகள்:

பெண்கல்வியை ஊக்குவிக்க பல திட்டங்கள் இயற்றப்பட்டாலும், நாட்டின் கடைக்கோடி பெண் வரை திட்டங்கள் சென்று சேர்வதில்லை.

20. சாதி, மத, வர்க்க ரீதியிலான பிரிவினைகள்

வாய்ப்புகள்:

இன்றைய இளைய சமுதாயம் இந்த பிரிவினைகளை கடந்து பழகுகிறது. சாதி மத வர்க்கங்கள் இன்று இளைய சமுதாயத்தின் சான்றிதழில் மட்டுமே உள்ளது.

பிரச்னைகள்:

பல விஷமிகள் அரசியல் காரணங்களுக்காக மக்களை சாதி, மத, வர்க்க ரீதியாக பிரித்தாளும் முயற்சியை மேற்கொள்கின்றன. சாதி வெறியையும், மத வெறியையும் தூண்டிவிட்டு குளிர்காய்கின்றன. அதில் அரசியல் ஆதாயத்தை அடையப்பார்கின்றன.


No comments:

Post a Comment