சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

31 Jul 2015

கலாம் கற்றுத் தந்த பாடம்!

லிமையான இந்தியாவிற்கு கனவு காணச் சொன்ன கதாநாயகர்… ஒரு ஜனாதிபதி, அறிவியல் மேதை, ஒழுக்கத்துடன் வாழ்ந்த எளியவர், ஏழைகளுக்காக சிந்தித்தவர் நம் அருகில் வாழ்ந்தார் என்று நினைக்கும் போது நாம் வாழ்வது கனவுலகிலா என நினைக்கத் தோன்றுகிறது.

கல்வியில் உயர்வோ, வாழ்வில் வெற்றியோ, பணம் சம்பாதிப்பதோ பெரிய சாதனை அல்ல... ஒரு தனி மனிதன் வாழ்வில் உயரத்தில் இருக்கும்போது, எல்லாவிதமான சூழ்நிலைகளிலும் ஒழுக்கமுடன் வாழ்வது, புகழுக்கு மயங்காமல் இருப்பது, உயர்ந்த அந்தஸ்தில் இருந்தாலும் எளிமையாக வாழ்வது, ஏழை எளியவர்களை நினைத்துப் பார்ப்பது, பணம், சொத்துக்களின் பின் மனம் செல்லாமல் வாழ்ந்தது போன்றவை கலாமின் சாதனைக்குரிய விஷயமாகவே பார்க்கத் தோன்றுகிறது.

அந்தச் சாதனையை இந்தியர் அதிலும், தமிழர் நிகழ்த்திக் காட்டி உலகை திரும்பிப்பார்க்க வைத்து விட்டார். அவர் மாணவர்களுக்கு சொன்ன பாடங்களுடன், அவரது வாழ்வே பாடமாகத் திகழ்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

மத நல்லிணக்க மகான்

கலாம் அவர்கள்  பிறந்தது ராமேஸ்வரத்தில், பிறப்பால் இஸ்லாமியர், படித்தது திருச்சியில் உள்ள கிறிஸ்தவ கல்லூரி. மக்கள் மனதில் ஒரு  மகானாகவே மாறி இந்திய நாட்டின் மதச் சார்பின்மைக்கு எடுத்துக்காட்டாக விளங்கி விட்டார். பிறப்பால் இஸ்லாமியர் என்றாலும் பகவத் கீதையை படிக்காத நாளில்லை என்று சொல்லுமளவிற்கு பகவத் கீதையின் பொருள் விளக்கத்தை எளிமையாகச் சொன்னவர். 

இந்தியா முழுக்க திரும்பிய இடமெல்லாம் அப்துல் கலாமிற்கு நினைவஞ்சலி செலுத்துவது சர்வதேச அளவில் இந்தியர்களின் மத நல்லிணக்க ஒற்றுமையையும், மதங்களைத் தாண்டி நல்ல மனிதர்களையே இந்தியர்கள் விரும்புவார்கள் என்பது அப்துல் கலாமின் மூலம் உலகிற்கு இந்தியா சொல்லும் பாடம். ஒற்றுமையான தேசம் என்ற கலாமின் வல்லரசு கனவையும் நினைவாக்கி வருகிறது.

தன்னடக்கம்

பல உயர்ந்த பல்வேறு விருதுகள், இவரை நோக்கி வீறு கொண்டு நடந்து வந்து, இவரிடம் குடியேறிக் கொண்டன. விருதுகள் அவரது எண்ணத்தையும், நடைமுறை வாழ்வையும் வீழ்த்தவில்லை. என்றும் போல எளிமையுடன் சாதாரண குடிமகனாக மக்களிடம், மாணவர்களிடம் பழகினார் என்பது  விருதுகளுக்கும் கூட வியப்பாக இருந்திருக்கலாம். புகழுக்கு மயங்காத மாமனிதர். மாணவர்களின் அன்புக்கு மயங்கிய மகான்.
எளிமை

தான் உயர்ந்த பதவியில் இருந்த போதிலும் எளிமையான வாழ்வையும், யாருக்கும் துன்பம் தராமலும் வாழ்ந்து காட்டியவர். ஜனாதிபதிக்குரிய வீண் ஆடம்பரச் செலவுகளை குறைத்தவர். ஜனாதிபதி மாளிகையின் செலவைக் குறைத்து மக்கள் பணத்தை வீணடிக்காதவர். தன் உறவினர்களே ஆனாலும் தன் கைப்பணத்தில் செலவு செய்து உறவுகள் வேறு, அரசுப்பணி வேறு என்று வேறுபடுத்திக்காட்டி ஒழுக்கத்துடன் வாழ்ந்து காட்டியவர்.

தாய் மொழிப்பற்று

மொழிகள் பல அறிந்தாலும் தமிழ் மீது தணியாத ஆர்வம் கொண்டவர். திருக்குறள் விளக்கத்தை மாணவர்களிடம் சொல்லி திருக்குறளின் முக்கியத்துவத்தை உணரச் செய்தவர். ஜனாதிபதி என்ற உயர்ந்த பதவியில் இருந்த போதும் தாய் மொழியான தமிழை மறக்காதவர்.

கரை படியாத கரம்

இன்றைய பண வெறி கொண்ட உலகில் வாழ் நாள் முழுவதிலும் லஞ்சம், ஊழல் குற்றசாட்டிற்கு ஆளாகாமல் நேர்மையுடன் வாழ்ந்து சொத்துக்களை விட மக்களிடம், மாணவர்களிடம் அன்பாக வாழ்ந்து அவர்களது அன்பே தனக்கு பெரிய சொத்து என்று நிருபித்துக் காட்டியவர்.

விவசாயம் மறக்காத விஞ்ஞானி

ஏவுகணையை விண்ணுக்குச் செலுத்துவதை விட வறுமையை மண்ணில் இருந்து விரட்ட விவசாய உற்பத்தி அதிகரிக்க வேண்டும் என கொள்கை கொண்டவர். வறுமையில் கஷ்டப்பட்டு முன்னேறியதால், வறுமையே இந்தியாவின் முதல் எதிரி என்று விவசாய மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் கொடுத்தவர். என்னதான் மாளிகைக்கு சென்றாலும் பாரம்பரியமான மூலிகையின் மருத்துவக் குணம் மக்களுக்கும் தெரிய வேண்டும் என மூலிகைத் தோட்டம் அமைத்தவர். நாட்டின் வறுமை ஒழிய விவசாய உற்பத்தியே அவசியம் என்ற உண்மையை உலகம் அறியச் சொன்னவர்.

நேர்மறையான எண்ணம்

வாழ்வின் வெற்றிக்கு அடிப்படையானது நேர்மறை எண்ணங்களே என்று மாணவர்களிடம் அந்த சிந்தனைகளை மலர்ச் செய்தவர். வயதனாலும் வயது உழைப்பிற்கு தடையில்லை என்றும்,   நேர்மறையான சிந்தனைகளை கொண்டு மக்களிடம் அதை வலியுறுத்தி வந்ததிலும் கலாமிற்கு நிகர் கலாம் அவர்கள் தான்.

புத்தகம் வாசிக்கும் பழக்கம்

எத்தனை பணிகள் இருந்தாலும் ஒரு சில மணி நேரமாவது நல்ல புத்தகங்களை தேர்தெடுத்து படித்து, மாணவர்களிடம் அதை விவாதக் களமாக மாற்றி, மாற்றத்தை ஏற்படுத்த கனவு கண்டவர் அப்துல் கலாம்.

தலைமைப் பண்பு

தலைவர்களுக்கான முதல் தகுதியே ஆடம்பரமில்லாத எளிமையும், பொருளுக்கு ஆசைப்படாத நெஞ்சமும் தான்  என்பதை நிருபித்துக் காட்டியவர்.

ஒரு மனிதன் கெட்டுப்போக வாய்ப்பும், சூழ்நிலையும், பணத்தை அள்ளித்தரும் அரசாங்க உயர் பதவி கிடைத்தும், தலைக்கனம் ஏற வைக்கும் விருதுகள் காலில் குவிந்த போதும் கலாம் நேர்மையுடன், எளிமையுடன் மக்களுக்காக இறுதி மூச்சு உள்ள வரை வாழ்ந்து காட்டியது, 'தான் மனிதரல்ல, மனிதர்களை நல்வழிப்படுத்த பிறந்த மகான்' என்பதை நிருபித்து விட்டார்.


No comments:

Post a Comment