சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

24 Jul 2015

சிவில் வானில் தமிழ் மின்னல்கள் !

சாகசப் பயணமாக இருக்கும் 'சிவில் சர்வீசஸ் தேர்வு’களில் இந்த முறையும் அழுத்த முத்திரை பதித்திருக்கிறார்கள் தமிழர்கள். உச்ச ரேங்க் உள்ளிட்ட சிறப்புகள் இருந்தாலும், இவர்களின் தேர்ச்சி, கொஞ்சம் அல்ல... நிறையவே வித்தியாசமானது! 
''தோத்தா... டபுள் சந்தோஜம்!''
அரவக்குறிச்சி பாலகுரு, தொடர் தோல்விகள்... துரத்தல் தேடல்களுக்குப் பிறகு 265-வது ரேங்க்கை எட்டிப்பிடித்திருக்கிறார். அதிலும் கல்லூரி செல்லாமலேயே ஐ.ஏ.எஸ் ஆகியிருக்கிறார்.

''அரசுப் பள்ளியில் படிக்கும்போது தமிழ்நாடு அரசு நடத்திய 'ஊரகத் திறனாய்வுத் தேர்வில்’ தேர்வானேன். அப்போதான் போட்டித்தேர்வுகள் மீது ஆர்வம் உண்டாச்சு. ப்ளஸ் டூ மட்டுமே முடிச்சிட்டு, 'ஐ.ஏ.எஸ் படிக்கப்போறேன்’னு ஊர்ல இருந்து கிளம்பினப்ப, சொந்தக்காரங்க, நண்பர்கள்னு எல்லாருமே சிரிச்சாங்க. ஆனா, அம்மா, அக்கா, அம்மாயி கொடுத்த தன்னம்பிக்கையில் கிளம்பி வந்துட்டேன். சென்னை வந்த பிறகுதான், ஐ.ஏ.எஸ் தேர்வு எழுத பட்டப்படிப்பு முடிச்சிருக்கணும்னு தெரிஞ்சது. உடனே தபால் வழியில் பி.ஏ படிப்புக்கு விண்ணப்பிச்சுட்டு, செக்யூரிட்டி வேலையில் சேர்ந்துட்டேன். ராத்திரியில் வேலை, பகலில் படிப்புனு நாலு வருஷம் ஓடுச்சு. 2011-ம் ஆண்டு தேர்வு எழுதினப்போ, முதல் சுற்றில்கூட தேர்வு ஆகலை. அடுத்தடுத்த முயற்சிகள்லயும் நேர்முகத் தேர்வு வரைதான் வந்தேன். நாலு வருஷங்களும் தோல்விதான் தொடர்கதை. ஆனா, அந்தப் பாடம்தான் இப்போ ஜெயிக்கவெச்சிருக்கு. அதனால உங்க கொள்கையை நோக்கிப் போறப்ப, ஜெயிச்சா சந்தோஷப்படுங்க... தோத்தா, ரொம்ப சந்தோஷப்படுங்க. ஏன்னா, அடுத்த ஸ்டாப்பிங் வெற்றிதான்!''
''விடாமுயற்சி... விஸ்வரூப வெற்றி!''
152-வது ரேங்க் எடுத்திருக்கும் சத்யமங்கலத்தைச் சேர்ந்த வான்மதி, ''ஐ.ஏ.எஸ் தேர்ச்சி என்பது, ஒரு ஆரம்பம்தான். இனிமேதான் ஏதாவது செய்யணும்'' - எடுத்த எடுப்பிலேயே அடக்கமாகப் பேசுகிறார்.
''அப்பா சென்னியப்பன், கார் டிரைவர். அம்மா சுப்புலட்சுமி, மாடு வளர்த்து பால் வியாபாரம் பண்றாங்க. அக்காவை மாதிரியே என்னையும் ப்ளஸ் டூ முடிச்சிட்டு கல்யாணம் பண்ணிக் கொடுத்துடலாம்னு நினைச்சாங்க. நான் உண்ணாவிரதம்  இருந்து போராடி, பேங்க்ல லோன் வாங்கி காலேஜ் சேர்ந்தேன். அப்புறம்தான் எனக்கு 'சிவில் சர்வீசஸ் எக்ஸாம்’ பத்தியே தெரியும். 'என்னால முடியுமா?’னு தயக்கமாத்தான் இருந்தது. ஆனா, என் தோழி ஆர்த்தியும், அவளோட அப்பாவும் என்னை உற்சாகப்படுத்தினாங்க. கையில் 1,500 ரூபாயோடு சென்னைக்கு வந்துட்டேன். என்கிட்ட ஃபீஸ் கட்டப் பணம் இல்லைன்னாலும், என் ஆர்வத்தைப் பார்த்து தன் ஐ.ஏ.எஸ் அகாடமியில் சேர்த்துக்கிட்டார் சங்கர் சார். முதல் முயற்சியில் நேர்முகத் தேர்வில் சொதப்பிட்டேன். 'நீங்க பேசக் கூச்சப்படுறீங்க. பசங்களுக்கு கிளாஸ் எடுத்தா, அந்தக் கூச்சம் போயிடும்’னு சொல்லி வகுப்பு எடுக்கவெச்சார். 'அவங்க சரியாவே கிளாஸ் எடுக்கலை’னு பலரும் சார்கிட்ட புகார் கொடுத்தாங்க. ஆனாலும், என் மீது நம்பிக்கை வெச்சு, தொடர்ந்து பாடம் நடத்த அனுமதிச்சார். அந்த அனுபவம், பல விஷயங்களை 360 டிகிரி தெரிஞ்சுக்க உதவியது. ஆனாலும் இரண்டாவது, மூன்றாவது முயற்சிகளிலும் தோல்வி. 'இதான் கடைசி முயற்சி’னு சொல்லி, இந்த வருஷம் தீவிரமா இறங்கினேன். எக்ஸாம்ல தேர்வாகி இன்டர்வியூவுக்கு வந்தப்ப, மகளிர் மேம்பாடு பற்றி கேட்டாங்க. 'சூப்பர் சான்ஸ்’னு நினைச்சிட்டு, நிறுத்தி நிதானமா என் கருத்துக்களை அழுத்தமா சொன்னேன்... ஜெயிச்சுட்டேன்!''
டாக்டர் ஐ.எஃப்.எஸ்!
ராஜபாளையத்தைச் சேர்ந்த விவேகானந்தன் மருத்துவப் படிப்பு முடித்த பின்னர், 'ஐ.எஃப்.எஸ்’ ஆகவேண்டும் என சிவில் சர்வீசஸ் எழுதியிருக்கிறார். காரணம்... அவருடைய மனைவி ரோச்சஸ் சுகன்யா, ஒரு ஐ.எஃப்.எஸ் அதிகாரி.
''ஆமாங்க... அவங்க செம பிரில்லியன்ட். மூணு வருஷத்துக்கு முன்னாடியே ஐ.எஃப்.எஸ் பாஸ் பண்ணிட்டாங்க. அதுவும் ஒரே முயற்சியில். ஆனா, எனக்கு இது நாலாவது அட்டெம்ப்ட். நான் ஐ.எஃப்.எஸ் படிக்க ஆரம்பிச்சப்போ புத்தகங்கள் பரிந்துரைக்கிறது, எக்ஸாம் டிப்ஸ் கொடுக்கிறது, வீட்டைக் கவனிச்சுக்கிறதுனு 'ஆல் இன் ஆல்’ உதவியும் அவங்கதான். ரிசல்ட் வந்ததும், 'சுகன்யா... நான் பாஸ் ஆகிட்டேன்’னு ஓடிவந்து மூச்சுவாங்க சொல்றேன், 'நீ பாஸ் ஆகிடுவனு எனக்குத் தெரியுமே’னு சிரிக்கிறாங்க. நான் ஏன் ஐ.எஃப்.எஸ் படிக்கணும்னு ஆசைப்பட்டேன்னா, அப்போதான் நாங்க ரெண்டு பேரும் ஒரே இடத்துல சேர்ந்து வேலைபார்க்க முடியும். ஏன்னா, சுகன்யாவை என்னால் பிரிஞ்சிருக்க முடியாது!''
''நீங்களும்... நீங்கள் நிமித்தமும்...''
அகில இந்திய அளவில் 767-வது இடம் பிடித்திருக்கும் ராஜேஷ் கண்ணனுக்கு, சொந்த ஊர் தேனி அருகே கோம்பை. படிப்பை உற்சாகப்படுத்தும் விவசாயக் குடும்பப் பின்னணியே இவருடைய வெற்றிக்குக் காரணம். அதனாலேயே தமிழ் வழியிலேயே படித்து தேர்ச்சி பெறும் அசாத்தியமான சவாலைச் சாத்தியப்படுத்தி 'ஐ.பி.எஸ்’  தேர்வாகியிருக்கிறார்.
''ஸ்கூல் படிச்சது எல்லாமே தமிழ் வழியில்தான். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.இ படிச்சேன். இதுக்கு முன்னாடி சிவில் சர்வீசஸ் எழுதினப்ப, நேர்முகத் தேர்வு வரை போனேன். அப்பதான் மத்திய தொழில் பாதுகாப்புப் படையில் போஸ்ட்டிங் கிடைச்சது. அதுக்கான பயிற்சிக் காலத்தை ஒரு வருஷம் அதிகமாக்கிட்டு, மறுபடியும் தேர்வுக்குப் படிச்சேன்; ஜெயிச்சுட்டேன். அப்பா, அம்மா ரெண்டு பேரும் விவசாயிங்க. ரெண்டு அண்ணன்கள். பரீட்சையில, விவசாயம் சார்ந்து நிறையக் கேள்விகள் வந்திருந்தன. அதெல்லாம்தான் நமக்கு தண்ணிபட்ட பாடாச்சே. அதுபோக என் அண்ணி பண்ண பயோகெமிஸ்ட்ரி புராஜெக்ட்டுக்கு நானும் கொஞ்சம் உதவினேன். அதனால, நேர்முகத் தேர்வில் பயோ கெமிஸ்ட்ரி சம்பந்தமா கேள்விகள் கேட்டப்போ, சட்சட்னு தீர்க்கமா பதில் சொல்ல முடிஞ்சது. 'தான் படிக்கலை’னு அப்பாவுக்கு எப்பவும் ஒரு வருத்தம் உண்டு. அதனாலேயே படிப்பின் அருமை தெரிஞ்சவர். வீட்ல சூழ்நிலை எப்படி இருந்தாலும் நான் படிக்கணும்னு சொன்னா, மத்த எல்லாத்தையும் க்ளியர் பண்ணிக் கொடுத்துருவார். பாசக்காரர். தமிழ் வழியில் படிச்சா கஷ்டமா இருக்கும்னு பயமுறுத்துவாங்க. ஆனா, அப்படி எதுவுமே இல்லை. நீங்க உங்களை எப்படித் தயார்படுத்திக்கிறீங்க... சுத்தியிருக்கிறவங்க உங்களை எப்படி உற்சாகப்படுத்துறாங்க... அது ரெண்டும்தான் முக்கியம்!''



No comments:

Post a Comment